காட்சிக் கவிதை : அழகின் சிரிப்பு – ஒரு அனுபவப் பகிர்வு

village-life.jpg
தமிழோசையில் பணிபுரியும் நண்பர் யாணன் அவர்கள் கடந்த வாரம் நட்பு ரீதியாக என்னைச் சந்தித்தபோது “அழகின் சிரிப்பு” என்னும் குறுந்தகடு ஒன்றை அளித்துச் சென்றார்கள்.

இந்த வார இறுதியில் தான் அதை பொறுமையுடன் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பனை, பூ, ஏரி, மலை பற்றிய காட்சிக் கவிதைகள் என்னும் அடைமொழியுடன் அமைந்திருந்தது அந்த குறுந்தகடு.

பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி தான் அதைப் பார்க்கத் துவங்கினேன். பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக ஈர்த்துக் கொண்டது படைப்பு.

கவிஞர் பச்சியப்பனின் கவிதைகளும், “சந்தனக் காடு” வ.கெளதமனின் இயக்கமும், அன்புச் செல்வன் அவர்களின் இசையும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து கிராமத்தின் தெருக்களில் இறக்கி விட்டன.

பனை குறித்த காட்சிக் கவிதையில் பனைமரம் பள்ளிச் சிறார்களுடன் நெகிழ்ச்சிக் கதைகள் பேசியது.

மலை குறித்த கவிதையில் மலையும், மலை சார்ந்த இடமும் மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கப்பட்டு பின் அது எப்படி கல்குவாரியாய் போனது என்பதை கனக்கக் கனக்கச் சொல்லியிருந்தனர்.

மண்ணின் இரத்த நரம்புகளாய் பாய்ந்து கொண்டிருந்த நதி எப்படி மண்ணில் மரணித்து காங்கிரீட் வனங்களை முளைப்பித்தது எனும் கதை கிராமத்து மணத்தை நாசியில் ஏற்றியது. குழந்தைகள் கூட்டமாக கும்மாளமிடுவதும், நவீன யுகத்தில் மொட்டை மாடியில் அளந்து வைத்த சதுர அடிகளில் கிரிக்கெட் விளையாட நிர்ப்பந்திக்கப்படுவதுமாய் வாழ்வின் துயர மாற்றங்களும், இழப்புகளும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

கடைசியாக வந்த பூ என்னும் கவிதை கலங்க வைத்தது. பாட்டி ஒருத்தியின் வாழ்க்கை வரலாறாய் விரிந்த அந்த கவிதை, கிராமத்துப் பெண் ஒருத்தியின் வாழ்வியல் எல்லைகளையும், அவளுடைய ஆழ்மனக் கிடங்குகளில் எரியும் அமிலக் காடுகளையும் அழகாய் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

பாசத்தின் உச்சத்தில் உட்கார்ந்திருந்த பெண் கணவனை இழந்தபின் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிராகரிப்புகள் என்னவென்பதை பார்வையாளர்களின் கண்கள் பனிக்கப் பனிக்க சொல்லியிருந்தனர். பார்த்து முடித்தபின் வேறேதும் செய்யத் தோன்றாமல் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.

எல்லா கவிதைகளுமே இயற்கையை விட்டு மனிதன் விலகிச் சென்ற தூரங்களின் அவஸ்தைகளையும், இட்டு நிரப்பப்பட முடியாத இழப்புகளின் பள்ளத்தாக்குகளையும், தொலைந்ததையே அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் இயலாமையையும் அழகுற படம் பிடித்திருந்தன.

இப்படி ஒரு  ‘காட்சிக் கவிதை’ பார்த்ததில்லை எனுமளவுக்கு என் மனதை வெகுவாகக் கனக்கச் செய்த அந்த குறுந்தகடைப் பரிசளித்த நண்பருக்கு எப்படித் தான் என் நன்றிகளைத் தெரிவிப்பதோ ?

குறுந்தகடு வேண்டுவோர் அணுக வேண்டிய முகவரி :

பதனிச கம்யூனிகேசன்ஸ்.
தொ,பே : 2472 4848
மின்னஞ்சல் sowmiyaanbu@yahoo.co.in

Advertisements

4 comments on “காட்சிக் கவிதை : அழகின் சிரிப்பு – ஒரு அனுபவப் பகிர்வு

 1. அழகான விமர்சனம்.
  எப்படி உங்களுக்கு மாத்திரம்
  இப்படி அழகான வார்த்தைகள்
  உதையமாகின்றன.

  கற்பனையில் நான் குருந்தகடையே பார்த்துவிட்டேன்.
  அதனால் அதை வாங்கவேண்டாம் என்று
  முடிவுஎடுத்துவிட்டேன்.
  (இது எப்படி இருக்கு?)

  Like

 2. பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙂

  முடிந்தால் வாங்கிப் பாருங்கள் விலை ரூ.75 தான் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s