வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் !!

( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் நாளிதழில் வெளியான கட்டுரை )

ap071225013144.jpg 

வறுமை விவசாயிகள் எலியை சமைத்து உண்டார்கள் என்னும் செய்தி கேட்டு பதறிய தமிழக மனது நமது. வறுமை, மனிதனை எந்த நிலைக்கும் தள்ளும் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டியது அந்தத் துயரச் சம்பவம்.

அதை விட பல மடங்கு வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நலிவுற்ற வாழ்க்கையை வாழும் சமூகம் ஒன்று இருக்கிறது என்பதை அறியும் போது உயிர் பதறுகிறது.

ஹெய்தி அப்படிப்பட்ட வறுமையின் உச்சத்தை சுவாசித்து நகரும் ஓர் நாடு. இங்குள்ள மக்களுக்கு உணவாக இருப்பது மண் !

மிதித்து நடக்கும் மண்ணையே இங்குள்ள மக்கள் உணவாக உண்ணும் கொடுமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதை அறியும் போது மனித நேயம் உள்ள எந்த உயிருமே பதறிப் போகிறது.

ap071225013086.jpg

மண்ணை தூய்மைப்படுத்தி அதனுடன் உப்பைச் சேர்த்து வெயிலில் காய வைத்து அதை உண்டு தங்கள் பசியை அடக்கிக் கொள்ளும் ஒரு துர்பாக்கிய வாழ்க்கையை ஹெய்தி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

செல்வத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவிலிருந்து வானூர்தி மூலம் பயணித்தால் ஒன்றரை மணி நேரத்தில் ஏழ்மையின் பள்ளத்தாக்கில் கிடக்கும் இந்த நாட்டை அடைந்து விடலாம்.

ஒரு பக்கம் அறிவியலின் உச்சத்திலும், அதிகாரத்தின் உச்சத்திலும், பொருளாதாரத்தின் உச்சத்திலும் நாடுகள் வளர்ந்து கொண்டிருக்க, அதே யுகத்தில் இன்னோர் கோடியில் குறைந்த பட்ச தேவையான உணவு கூட கிடைக்காமல் மக்கள் உழல்வது உலகளாவிய மக்களின் மனித நேயத்தை ஒட்டு மொத்த கேள்விக்குள்ளாக்குகிறது.

இஸ்பேனியாவிலுள்ள கரீபியத் தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த ஹெய்தி. இதன் மொத்தப் பரப்பளவு 27,750 சதுர கிலோமீட்டர்கள். இது கியூபாவிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

hispaniolamap.gif

கரீபியன் தீவுகளில் மூன்றாவது பெரிய நாடு இது என்பது குறிப்பிடத் தக்கது. இங்கே சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர்.

சுமார் எழுபது விழுக்காடு மக்களும் வேலையில்லாமல் அலைபவர்களே. ஹெய்தி மக்களின் சராசரி குடும்ப வருமானம் தினம் ஒன்றுக்கு சுமார் ரூபாய் நாற்பது மட்டுமே.

மிகவும் பின் தங்கிய நாடுகளின் பட்டியலில் அமைந்துள்ள இந்த நாட்டில் வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டும் மக்கள் சுமார் எண்பது விழுக்காட்டினர்..

ஹெய்தி நாட்டின் 95 விழுக்காடு பகுதிகளில் இன்னும் மின்சாரம் எட்டிப்பார்க்கவில்லை. சரியான தண்ணீர் வசதி இல்லை. ஹெய்தியின் வறுமையும், வசதியின்மையும் அவர்களை சுகாதாரமற்ற வாழ்க்கை வாழ நிர்ப்பந்தித்துள்ளது.

ஹெய்தியில் எல்லா நோய்களும் காணக்கிடைக்கின்றன. உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் உட்பட.

நிலையற்ற அரசியல், வறுமையினால் விளைந்த வன்முறைக் கலாச்சாரம், ஊழல் என அனைத்து நிலைகளிலும் கைவிடப்பட்ட சூழலில் தவிக்கிறது இந்த நாடு.

 outside.jpg

ஒருகாலத்தில் இந்த நாடு உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புடன் இருந்ததாகவும், 1750 களில் பிரஞ்ச் நாட்டின் செல்வத்தின் பாதி இந்த நாட்டிலிருந்தே பெறப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

அடிமைத் தனத்தை விரும்பாமல் சுதந்திர வாழ்க்கை வேண்டுமென போராடிய முதல் ஆப்பிரிக்க நாடு ஹெய்தி என்பது குறிப்பிடத் தக்கது.

1804 ம் ஆண்டு இந்த நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது. ஆனால் அடிமைத் தனத்தில் இருந்த ஆப்பிரிக்க நாடு சுதந்திரத்தைப் போராடிப் பெற்றுக் கொண்டதைப் பொறுக்க முடியாத அனைத்து மேலை நாடுகளும் ஹெய்தியின் பொருட்களை வாங்காமல் கதவடைத்தனர். இதனால் சுதந்திரமடைந்த ஹெய்தி சிக்கலுக்குள் விழுந்தது.

இது மட்டுமன்றி ஹெய்தியின் நிலமையை சீரிழக்கை வைத்த பிரஞ்ச் நாடு 1838ல் 150 மில்லியன் பிராங்க் களைக் கடனாகக் கொடுத்து, சுமார் எண்பது ஆண்டுகள் அதற்குரிய வட்டியை வசூலித்தும் ஹெய்தியின் பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

ஹெய்தி ஒன்றிணைந்து போராடவில்லை. ஹெய்தியில் நிலவிய குழு மனப்பான்மையும், பிரிவினை சிந்தனைகளும் அதன் வளர்ச்சியைத் தடுத்தன.

இன்றும் கூட ஹெய்தியின் மொத்த செல்வத்தின் 50 விழுக்காடும், அங்குள்ள 1 விழுக்காடு மக்களின் கையிலேயே இருக்கிறது. எனவே செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிரப்பிட முடியாத ஒரு மாபெரும் இடைவெளி நிலவுகிறது.

300px-haitiangirl.jpg

வழங்கப்படும் உதவிகள் உரியவர்களுக்குச் சென்று சேராதபடி அரசியல் அமைப்பு ஊழலின் இறுக்கமான பிடிக்குள் இருக்கிறது என்பது இன்னோர் துயரம்.

பிரஞ்ச் கல்வி முறை அடிப்படையில் இங்கே கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சுமார் 60 விழுக்காடு மக்கள் படிப்பறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். உயர் கல்வி என்பதெல்லாம் அபூர்வக் காட்சிகள். பெரும்பாலான மக்கள் பிரஞ்ச் மொழியையே பேசுகிறார்கள். பிரஞ்ச் மொழி தவிர்த்தால் ஹெய்த்தியன் கிரயோல் எனும் மொழியும் பயிற்றுவிக்கப்படுகிறது.

மக்கள் தொகையும் இங்குள்ள வறுமைக்கு ஓர் முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும், மக்கள் பண்ணைகளில் வேலை செய்து பொருளீட்டவும், குழந்தைகளுடன் வாழும் ஒரு மகிழ்ச்சிக்காகவும் அதிக குழந்தைகளைப் பெறுகிறார்கள்.

சுமார் 95 விழுக்காடு மக்களும் ஆப்பிரிக்க வழித்தோன்றல்களாகவே இருக்கின்றனர். எனவே இங்குள்ள கலாச்சாரத்தில் ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது.

சரியான ஊட்டச் சத்து இன்மையும், கக்கல் கழிச்சல் நோயும் ஹெய்தியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஐவருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

மண் பிஸ்கெட்களை உண்பது உடல் நலத்திற்குக் கேடானது எனவும், ஊட்டச் சத்து இழப்புக்கும், வயிற்று வலி, கக்கல் கழிச்சல் நோய்க்கும் இது இட்டுச் செல்லும் எனவும் ஹெய்தியின் சுகாதார அமைச்சர் கபிரியேல் திமோத்தி தெரிவித்துள்ளார்.

ap071225013243.jpg

உலகளாவிய விலை வாசி உயர்வினால் ஹெய்தி பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. மக்களின் வருமானத்திற்கும், பொருட்களின் விலைக்கும் இடையே சமநிலையற்ற சூழல் உருவாகி விட்டதால் மக்கள் மண் உணவை சார்ந்து வாழும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இரண்டாயிரத்து ஏழில் நிகழ்ந்த சூறாவளிச் சீரழிவிற்குப் பின் ஹெய்தியில் பொருட்களின் விலை நாற்பது விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மக்களின் ஒரு நாள் சராசரி வருமானமான ஒரு டாலரை வைத்துக் கொண்டு அங்கே மூன்று கப் அரிசி வாங்க மட்டுமே முடிகிறது.

இந்த மண் பிஸ்கெட் செய்வதற்குரிய மண் கூட இப்போது அங்கே விலை உயர்வை சந்தித்திருக்கிறது ! நூறு மண் பிஸ்கெட்கள் செய்ய சுமார் ஐந்து டாலர்கள் செலவிட வேண்டியிருக்கிறதாம். எனினும் பிற பொருட்களுடன் ஒப்பிடுகையில் மண் பிஸ்கெட் விலை குறைவு என்பதால் மக்கள் அதை வேறு வழியின்றி உண்கின்றனர்.

ஒற்றுமையும், சரியான அரசியல் அமைப்பும் இல்லாத நாடு எந்த நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்கு சோகமான ஒரு உதாரணமாக இருக்கிறது ஹெய்தி.

20 comments on “வறுமையின் உச்சம் : மண்ணை உண்ணும் மக்கள் !!

 1. வைரமுது தண்ணீர் தேசம் கவிதையில் மண் தின்பதுஒரு வரி வரும் ஆனால் இப்பொழுது நேரில் பார்த்தது போல மனதை கன்னக்க வைத்து உள்ள்து
  Raams

  Like

 2. நல்ல கட்டுரை சேவியர். பிரஞ்சு மட்டும் திருடவில்லை, மேலை நாடுகளின் வேலையே இதுதான். உலகின் அத்தனை செல்வங்களையும் களவாடிச் சென்றனர். இப்போதும் வல்லரசு என்ற போர்வையில் அது நடக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்!

  Like

 3. //வைரமுது தண்ணீர் தேசம் கவிதையில் மண் தின்பதுஒரு வரி வரும் ஆனால் இப்பொழுது நேரில் பார்த்தது போல மனதை கன்னக்க வைத்து உள்ள்து//

  உண்மை. இன்னும் கனம் விலகவில்லை.

  Like

 4. இது ரொம்ப கொடுமை.அதை கண்கூடாக பார்த்துக்கொண்டு
  மற்றவர்கள் அங்கு எப்படி இருக்கின்றார்கள்?
  கடவுள் தான் கருணை காட்டவேண்டும்.

  Like

 5. நண்பர் சேவியருக்கு,

  சாவின் முத்தங்கள்
  தவணை முறையில்
  வருமானால்
  அதன் பேர்
  வறுமை

  என்று அதிமுக கட்சியை சேர்ந்த கவிஞர் (பெயர் மறந்து விட்டது ) ஒருவர் எழுதி படித்துள்ளேன் .

  “கொடிது கொடிது ,வறுமை கொடிது ,அதனினும் கொடிது, இளமையில் வறுமை “என்று தமிழ் பாட்டி அவ்வை மொழிய திரைப்படம் ஒன்றில் பாடலாக கேட்டிருக்கோம்.

  வளர்ச்சியின் சிகரத்தில் இருக்கும் ஒரு நாட்டினுடைய தேசியக் கொடி பறக்கும் இதே உலகத்தில் தான் மரணத்தை நோக்கிய பயணத்தை மண்ணை தின்று தொடங்க முற்பட்டு விட்டது ஹெய்தி என்ற இடத்தில் பிறந்த மனித இனம் என்று நினைக்கும் போது கனக்கிறது நெஞ்சம் .

  அமெரிக்கப் பொருளாதார சரிவின் தாக்கமும் , ரிலையன்ஸ் பங்குச் சந்தை வீழ்ச்சியும் மட்டுமே பெரிதாய் தோன்றும் படி இதயங்களை வளர்த்து
  விட்டது இன்றைய வாழ்க்கை சூழல் நமக்கு .
  இருட்டில் வாழும் கருப்பு மனிதர்களை உங்கள் கட்டுரை கண்ணீரோடு வெளிச்சம் போட்டு வெளிக்கொணர்ந்து இருப்பதை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

  அன்புடன்
  குகன்

  Like

 6. //அமெரிக்கப் பொருளாதார சரிவின் தாக்கமும் , ரிலையன்ஸ் பங்குச் சந்தை வீழ்ச்சியும் மட்டுமே பெரிதாய் தோன்றும் படி இதயங்களை வளர்த்து
  விட்டது இன்றைய வாழ்க்கை சூழல் நமக்கு//

  மிக மிக உண்மை ! இவை இரண்டையும் விட்டால் கிரிக்கெட், சினிமா !!

  Like

 7. பணக்காரர்கள் திருடுவதால் தான் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு மாறாக, ஏழைகள் திருடுவது பாவம் என்று நம்புகிறார்கள். அதனால் தான் சாப்பிட எதுவும் இல்லா விட்டாலும் மண்ணையாவது உண்டு உயிர்வாழ்கிறார்கள். உலகம் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு மாறாக தான் இருக்கின்றது. பாவம் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். புண்ணியம் செய்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எங்கேயோ கோளாறு இருக்கின்றது. இவை எனது கருத்துகள் மட்டுமல்ல. அன்னை தெரேசா கூட சொல்லியிருக்கிறார். தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஏழைகள்(பாவம் செய்யாமல், நேர்மையாக வாழ்பவர்கள்) ஏழைகளாகவே இருப்பதை பார்த்து, ஒருவேளை கடவுள் இல்லையோ என்று கூட சஞ்சலமடைந்துள்ளார்.

  உலக ( உணவுக் கலவர) வங்கி
  http://kalaiy.blogspot.com/2008/04/blog-post_12.html

  Like

 8. // உலகம் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு மாறாக தான் இருக்கின்றது//

  இதுதான் மனிதம் மீதான பல கேள்விகளை எழுப்ப வைக்கிறது. 😦

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.