படமெடுக்கும் பாம்மை
முருங்கை மரம் ஒடித்து
அடித்தால்
அது மயங்கிவிழுமாம்.
தாத்தா தான் சொன்னார்.
செத்தபாம்பை எரித்தால்
அந்தப் பிரதேசங்களை
அரவம் தீண்டாதாம்.
இதையும்
சொன்னது தாத்தா தான்.
என் சிறுவயதில்,
படமெடுத்த பாம்பை அடிக்க
அண்ணண் ஒடித்த முருங்கைக்கிளை,
ஒரே அடியில்
ஒடிந்த ஞாபகம் எனக்கு.
பாம்பு மயங்காமல் ஓடிவிட்டது.
அடிபட்ட பாம்பு
பழி தீர்க்குமாம்,
கொத்தாமல் ஓயாதாம்.
ஜாமத்தில் வெளிவர விடவில்லை
பாட்டி.
ஆயிற்று…
இரட்டை இலக்க வருடங்கள்
ரயிலோ, பேருந்தோ பிடித்து
எப்போதேனும்
வீட்டுக் கொல்லையில்
வந்து நிற்கும்போது
தவறாமல் வந்து நினைவுகளைக்
கொத்திச் செல்கிறது
பழைய அடிபட்ட பாம்பு.
நல்லவேளை
அன்று அடித்தபோது
பாம்பு இறக்கவில்லை.
0