நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை

light.jpg

‘நம்பவே முடியவில்லை. நிஜமாவா சொல்றீங்க ?’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப்? ம் தேவையில்லை. எந்தவிதமான அறிவியல் கருவிகளும் தேவையில்லை. கடவுள் அதி அற்புதமாய்ப் படைத்திருக்கின்ற மனிதனின்  மூளையே போதும்’ சித்தார்த் பெருமையுடன் சொன்னான்.

‘இப்படி ஒரு யோசனை உங்களுக்கு எப்படி வந்தது ? அதுவே ஆச்சரியமாக இருக்கிறது’ அதிகாரி கண்களில் இருந்த வியப்பில் ஒருதுளி கூட குறையாமல் பேசினார்.

திடீரென நம்ம வீட்டுக்கு விருந்தாளி வரப்போறாருன்னு தோணும். பார்த்தா தூரத்துச் சொந்தக்காரங்க யாராவது வந்து நிப்பாங்க. யாரோ நமக்குப் போன் பண்ணப் போறாங்கன்னு நினைப்போம், அப்போ பார்த்து யாராவது போன் பண்ணுவாங்க. இப்படி நடக்கிற அனிச்சைச் செயல்களோட காரணத்தைத் தான் கடந்த பல வருடங்களா ஆராய்ச்சி செய்திட்டே இருந்தேன். அதோட வளர்ச்சி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

‘இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..’

சொல்றேன். நம்ம மூளை ஒரு அற்புதம். அதோட போட்டி போட நம்முடைய எந்த அறிவியல் கருவிக்கும் வலு இல்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா மூளையை விட சிறப்பானதா நாம எதையும் கண்டுபிடிக்கவேயில்லை.

அடுத்த நிமிடம் ஏதோ நடக்கப் போகுதுன்னு நமக்குச் சொல்ற அந்த வேலையை மூளையோட ஒரு குறிப்பிட்ட பாகம் தான் செய்யுது. அந்த இடத்திலே தான் என்னோட ஆராய்ச்சி ஆரம்பமாச்சு.

அந்த பாகத்துல மூளைக்கு ஏற்படக் கூடிய மாற்றங்களை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தினா, அதாவது அந்த எண்ணம் தோன்றும் போது ஏற்படக் கூடிய அதிர்வலைகளை அதிகப்படுத்தினா, அடுத்த நிமிடம் ங்கிறது அதிகமாகி அடுத்த மணி நேரத்துல என்ன நடக்கும்ங்கிறதை நாம கண்டு பிடிக்க முடியும். அப்படித் துவங்கின
ஆராய்ச்சியோட வளர்ச்சி தான் இப்போ அடுத்த நாள் என்ன நடக்கும்ங்கிறதை கண்டு பிடிக்கக் கூடிய நிலமைல வளர்ந்திருக்கு.

‘ஆச்சரியமா இருக்கு சித்தார்த். பெருமையாவும் இருக்கு. அப்போ நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை நாம் இன்னைகே தெரிஞ்சுக்க முடியும் இல்லையா ?’

‘நிச்சயமா !. நாளைக்கு நடக்கிறதை அறிந்து கொள்ளக் கூடிய வகைல ஒரு மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கிறேன். அதுதான் இப்போதைய வெற்றி. இதையே இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தினா, இந்த நாள் என்பது வாரம், மாதம், வருடம் என்ற நிலைக்கு நீட்டிக்க முடியும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை’

‘வாட்… மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கீங்களா ?. இது நம்ம விதிகளுக்கு எதிரானது. மனிதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன் விலங்குகளை ஆராய்ச்சில உட்படுத்தினீங்களா ? ‘ அதிகாரியின் கண்களில் திகில் அதிகமானது.

‘மன்னிக்கணும். நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறதை விலங்குகள் அறிந்து கொண்டாலும் அதை நமக்குச் சொல்லக் கூடிய அறிவு அவற்றுக்குக் கிடையாது இல்லையா ?.  அதனால இந்த ஆராய்ச்சில விலங்குகளை ஈடுபடுத்திப் பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பதால் நமக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. என்னுடைய உதவியாளர் நாதனைத் தான் ஈடுபடுத்தியிருக்கிறேன்’ சித்தார்த் அமைதியாகச் சொன்னான்.

மனிதர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் உயர்மட்டக் குழுவிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஏதானும் தவறு நடந்திருந்தால்…’ அதிகாரியின் குரல் கோபமடைந்தது.

‘மன்னியுங்கள். என்னுடைய ஆராய்ச்சியில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததுண்டு. மனித ஆராய்ச்சி என்று சொல்லும்போது நிச்சயமாக நம்முடைய குழு அதை அனுமதிக்காது. அதனால் தான் அதைப்பற்றி குழுவுக்குத் தெரிவிக்காமல் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கிறேன்’ சித்தார்த் குரலை தாழ்த்திப் பேசினான்.

அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாமல் கையிலிருந்த பேனாவை உள்ளங்கையில் வைத்து இருகைகளாலும் உருட்டினார்.

‘சார். இதனால் நம்முடைய நாட்டுக்குக் கிடைக்கப் போகும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. நாளைக்கு காஷ்மீர் செல்லும் பிரதமரின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ? நாளை ஏதேனும் விமானம் சியர்ஸ் டவர்சை தகர்க்குமா, எதிர்பாராத நிலநடுக்கம் எங்கேனும் நிகழுமா ? என்பதையெல்லாம் நம்மால் கண்டு பிடிக்க முடியும். ஏன் நாளைக்கு எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்யுங்கிறதைக் கூட நம்மால கண்டுபிடிக்க முடியும்.’

‘எதை வச்சு சொல்றீங்க ?’

‘நீங்க இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி அளிப்பீங்கங்கறது எனக்குத் தெரியும். அதை வெச்சுத் தான் நான் உங்க கிட்டயே பேசிட்டு இருக்கேன்..’ சித்தார்த் மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.

‘ஓ… காட்… இதுலே இருக்கக் கூடிய பிரச்சனைகளையும், விளைவுகளையும் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ?’ அதிகாரி வேகம் குறைக்காமல் கேட்டார்.

‘என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?’ சித்தார்த் முகத்தில் மெல்லிய கேள்விகள் முளைத்தன.

நாளைக்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ல யார் ஜெயிக்கப் போறாங்க, நாளைக்கு எந்த குதிரை பந்தயத்துல ஜெயிக்கும் ஏன் நாளைக்கு எந்த லாட்டரிக்குப் பரிசு விழும்கிறது கூட கண்டுபிடிக்க முடியுமே ? அப்படின்னா அதை வெச்சு பெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம். இதை ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்றேன். வாழ்க்கையோட சுவாரஸ்யமே நமக்கு இல்லாம போயிடுமே சித்தார்த்.

‘சார்.. நாம இதை எல்லா மூளையிலேயும் செய்யப் போறதில்லை. சில நம்பிக்கைக்குரிய,
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணிக்கக் கூடிய, சிலருக்குத் தான் நாம் இந்த மாற்றத்தைச் செய்யப் போறோம். இதையே வேற விதமா யோசிக்கலாமே சார். இப்படி ஒரு வசதி இருந்திருந்தா, நாம கோட்சே கையிலிருந்து காந்தியைக் காப்பாற்றியிருக்கலாம், பாதுகாவலன் கைலயிருந்து இந்திராகாந்தியைக் காப்பாற்றியிருக்கலாம்.. ஏன், சுனாமியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கலாமே…’

‘சரி… லீவ் நாள் அதுவுமா இன்னிக்கு அவசரமா என்னைக் கூப்பிட்டுப் பேசிட்டிருக்கீங்களே.. என்ன விசயம் ?’ அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாத மனநிலையில் கேட்டார்

‘சார்… மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் ஒண்ணு நாளைக்கு நடக்கப் போகுது. நாளைக்கு நாம அனுப்பப் போற ராக்கெட் கிளம்பற பத்தாவது நிமிசமே செயலிழந்துபோய் கடல்ல விழப் போகுது. இந்த ராக்கெட் கிளம்பாம இருந்தால் நமக்கு ஏற்படக் கூடிய கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை நாம தடுத்திடலாம். நான் இதை இப்போ யார் கிட்டேயும் சொல்ல முடியாது. ஆனா நீங்க நினைச்சா… ஐ.எஸ்.ஆர்.ஓ தலைமையைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல முடியும்’

‘நோ..நோ…நோ… அது முடியாது சித்தார்த். நான் என்ன சொல்லித் தடுப்பேன். காரணம் கேப்பாங்க, விளக்கம் கேப்பாங்க, நான் பதில் சொல்லியாகணும். பிள்ளையை பிக்னிக் அனுப்பாதீங்கன்னு சொல்றமாதிரி ஈசியா நான் இதைச் சொல்ல முடியாது’ அதிகாரி தலையை வேகவேகமாய் ஆட்டிப் பேசினார்.

‘அதுக்கும் வழி சொல்றேன் சார்’ சித்தார்த் புன்னகைத்தான்.

‘என்ன வழி’

‘சார். ராக்கெட் ஏன் பழுதடையுதுங்கிற விஷயம் கூட தெரியும் சார்’ சித்தார்த் சொல்ல அதிகாரி தளர்ந்து போய் பேசினார் ‘சித்தார்த்.. உன்னுடைய கண்டுபிடிப்பை நினைச்சா பயமா இருக்கு. ‘

‘இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை சார். அணு ஆயுதங்களை தேசத்தோட மடியிலே கட்டி வெச்சிருக்கோம், தற்கொலைப்படைகளை நாட்டோ ட எல்லைகளிலே உலவ விட்டிருக்கோம், அதைவிடப் பயமூட்டக் கூடிய விஷயம் இதுல எதுவுமே இல்லை சார்’

‘சரி.. ராக்கெட் செயலிழக்கக் காரணம் என்ன ? தொழில் நுட்பக் கோளாறா, இல்லை வேறேதும் காரணமா ?’

‘சார்.. நான் அதோட காரணத்தைச் சொன்னா நீங்க சிரிப்பீங்க.’

‘சொல்லுங்க. சிரிக்காம இருக்க டிரை பண்றேன்’

‘சார்.. ராக்கெட்ல வரப்போறது பெரிய தொழில் நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. சின்ன புரோக்ராமிக் குளறுபடி தான். அதுவும் வேரியபிள் டிக்ளரேஷன் எறர்’

‘என்ன சொல்றே… சின்ன வேரியபிள் டிக்ளரேஷன் எரர் ராக்கெட்டை செயலிழக்கச் செய்யுமா ? புரியும்படியா சொல்’

‘சொல்றேன் சார். இன்னும் நம்ம ஆராய்ச்சிக் கூடத்துல ஃபோர்ட்ரான் புரோக்ராம் லாங்குவேஜ் தான் பயன்படுத்தறாங்க. அதுல ராக்கெட்டோ ட டைரஷனை தீர்மானிக்கக் கூடிய ஒரு வேரியபிள் லெங்க்த் சின்னதா குடுத்திருக்காங்க. ராக்கெட் எல்லையைத் தாண்டறதுக்கு முன்னாடியே அந்த வேரியபிள் ஓவர் புளோ ஆகி ரீசெட் ஆகப் போகுது. அதுக்கு அப்புறம் அது பாசிடிவ் வேல்யூவுக்குப் பதிலா நெகட்டிவ் வேல்யூவுக்குப் போகும். அப்போ ராக்கெட்டோ ட டைரஷன் மேலே போறதுக்குப் பதிலா கீழே வரும்’ சித்தார்த் சொல்லச் சொல்ல அதிகாரி திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘எ..என்னால எதையும் நம்பவே முடியலை சித்தார்த். அப்படியெல்லாமா தப்பு பண்ணுவாங்க ?’ அதிகாரியின் குரல் குழறியது.

‘எனக்கே அதிர்ச்சியா தான் இருந்தது. காரணத்தைக் கேட்டபோது. ஆனா அதுதான் உண்மை. நீங்க நினைச்சா மட்டும் தான் இந்த ராக்கெட் புறப்படறதைத் தடுக்க முடியும்’ சித்தார்த் சொன்னான்.

‘உனக்கு எப்படித் தெரியும் ? . விஞ்ஞான ரகசியங்கள் வெளியே போகுதா ? ந்னு ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும் சித்தார்த்…’ அதிகாரி இழுத்தார்.

‘உங்ககிட்டே நான் விஷயத்தைச் சொல்லிட்டேன். இனிமே உங்க கைல தான் சார் இருக்கு எல்லாமே’ சித்தார்த் சொல்லி விட்டு அமைதியானான்.

இதை எப்படிச் சொல்லி எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்னும் கவலையில் தலையில் கைவைத்து அமர்ந்தார் அதிகாரி.

மறுநாள் காலை 7.45 மணி.

சித்தார்த்… என்னால அவர்களைக் கன்வின்ஸ் பண்ணவே முடியவில்லை. எத்தனையோ தடவை ராக்கெட் அனுப்பியிருக்கோம், அதே டீம் தான் வர்க் பண்ணியிருக்கு, நாட்டுல ஜனாதிபதி துவங்கி, கன்யாகுமரி கிராமம் வரைக்கும் ராக்கெட் லாஞ்ச் பத்தி தான் பேசிட்டிருக்காங்க… இது கண்டிப்பா சக்சஸ் தான் ஏதாச்சும் கனவு கண்டுட்டு உளறாதீங்க. உங்க டிப்பார்ட்மெண்ட் வேற எங்க டிப்பார்ட்மெண்ட் வேற ந்னு சொல்லிட்டாங்க.

‘அப்படின்னா…’ சித்தார்த் திகைப்புடன் கேட்டான்.

‘இன்னிக்கு எட்டு மணிக்கு ராக்கட் லாஞ்ச் பண்ண போறாங்க’

‘சார்….’ சித்தார்த் சோர்வுடன் அமர்ந்த போது அவனுடைய செல்பேசி கிணுகிணுத்தது.

‘எஸ்..’

‘சார் நான் தான் நாதன் பேசறேன்.’

‘சொல்லு நாதன் ஏதாச்சும் தகவல் இருக்கா ?’

‘ஆமா சார்.. இன்னிக்கு சாயங்காலம் நல்ல மழை பெய்யப்போகுது.

‘இது தானா… இதுக்குப் போய் ஏன் அவசரமா கூப்பிட்டே ?’

‘அது மட்டும் இல்லே சார். திடீர்ன்னு தலை வலிக்குது. நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை என்னால கணிக்க முடியலை. மழை சாயங்காலம் ஆறுமணிக்கு ஆரம்பிச்சு பத்து மணி வரைக்கும் விடாம பெய்யும். நகரத்துல எல்லாமே ஸ்தம்பிக்கும். அதுக்குமேல யோசிக்க முடியலை. நம்ம ஆராய்ச்சில ஏதோ பிரச்சனைபோல தோணுது’ நாதனின் குரலில் இருந்த பதட்டத்தை சித்தார்த் வாங்கிக் கொண்டபோது

“எதிர்ப்பாராத விதமாக சற்று முன்னர் கிளம்பிய ராக்கெட் பழுதடைந்து கடலில் விழுந்தது” என்று தொலைக்காட்சி தற்போது வந்த செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

சித்தார்த் திரும்பி அதிகாரியைப் பார்க்க, அவர் வெலவெலத்துப் போய் எதுவும் செய்ய இயலாதவராய் நடுங்கும் கீழுதட்டைக் கடித்தார்.

மாலை ஆறுமணி.

சொல்லி வைத்தார்போல கொட்டத் துவங்கியது மழை. அதிகாரி நேரத்தோடு வீடு போய்விட்டிருந்தார்.

சித்தார்த்தும், நாதனும் ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

‘நாதன். நீ பதட்டப்படறமாதிரி ஒண்ணும் இல்லை. இந்த ஆராய்ச்சி மூளையை எதுவும் செய்துவிடாது. சில மாற்றங்கள் மட்டும் தான் செய்யும். உன்னால் சாதாரணமாக இருக்க முடிகிறது தானே…’

‘அதுல ஏதும் பிரச்சனை இல்லை.. ‘

மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

நாதனும் சித்தார்த்தும் ஆரவாரமாகப் பெய்து கொண்டிருந்த  மழையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘நாம கண்டுபிடிச்சும், நம்மால ராக்கெட்டைக் காப்பாத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி அங்கீகரிக்கப் பட்டால் மட்டுமே நம்முடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும். அதற்குரிய முயற்சிகளை நாளைக்கே துவங்கப் போறேன்’ சித்தார்த் பெருமூச்சுடன் சொல்ல நாதன் புன்னகைத்தான்.

‘இதனால என்னுடைய உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாதே ?’ நாதன் இலட்சத்து மூன்றாவது முறையாகக் கேட்டான்.

‘இத்தனை வருடமா என்னுடன் ஆராய்ச்சியில் இருந்தும் நீ இப்படிக் கேட்கிறாயே’ சித்தார்த் அதே பதிலை சொல்லி நாதனின் தோளில் கைவைத்தான்.

திடீரென்று… வானத்தில் தோன்றிய மின்னல் ஒன்று கணநேரத்துக்கும் குறைவான நேரத்தில் அவர்களை நோக்கிப் பாய்ந்தது. சுதாரித்து நிமிர்வதற்குள் அவர்கள் பற்றியிருந்த கம்பி அந்த மின்சாரத்தை அப்படியே வாங்கி அவர்களுக்குக் கொடுக்க இருவரும் மரணத்துக்குள் விழுந்தார்கள்.

உள்ளே கடிகாரம் அடிக்கத் துவங்கியது. பத்து மணி !

0

7 comments on “நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை

 1. //நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை என்னால கணிக்க முடியலை//
  இங்கேயே முடிவ கணிக்க முடியுது.. முதலில் இருந்த விறுவிறுப்பு அப்புறமா போயிடுச்சு.. இன்னும் Crisp பா சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.

  சுஜாதாவுக்கு சமர்ப்பணமா?

  Like

 2. வாங்க சிரில்.. அத்தி பூத்தார்போல அப்பப்போ வரீங்க 🙂 வருகைக்கு நன்றி.
  //சுஜாதாவுக்கு சமர்ப்பணமா?//

  அவர் நினைவாக !

  Like

 3. //இன்னும் Crisp பா சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.
  //

  முக்கியமான விஷயம் என்னன்னா இந்த கதையில் வருகிற ராக்கெட் மேட்டர் + காரணங்கள் + புரோக்ராம் மிஸ்டேக் எல்லாம் உண்மை !. ISRO விஞ்ஞானி ஒருவரிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன பல சிலிர்ப்பூட்டும் செய்திகளில் இந்த மென்பொருள் பிழையும் ஒன்று ! அப்படீயே கதையாக்கிப் பார்த்தேன் 🙂

  Like

 4. கதை நல்லாயிருக்கு! ஆக்ஷனின் நீட்சி குறித்து யோசித்திருக்கிறீர்கள். வித்தியாசமான சிந்தனை!! ஆனாலும் நிறைய கேள்விகள் எழுகிறது. மடல் முகவரி கொடுத்தால், கேட்பதற்கு ஏதுவாக இருக்கும்.;-)

  Like

 5. நண்பரே, ரஜினி, கமல் என துதி பாடுவதை விட்டு விட்டு… இப்போதுதான் உருப்படியாக ஒரு சிறுகதையைப் படைக்கத் தொடங்கியுள்ளீர்கள். மீண்டும் பழைய சாக்கடையில் விழுந்து விடாமல்,
  தொடர்ந்து படைப்பில் ஈடுபடுங்கள்!!!

  Like

 6. //நண்பரே, ரஜினி, கமல் என துதி பாடுவதை விட்டு விட்டு… இப்போதுதான் உருப்படியாக ஒரு சிறுகதையைப் படைக்கத் தொடங்கியுள்ளீர்கள். மீண்டும் பழைய சாக்கடையில் விழுந்து விடாமல்,
  தொடர்ந்து படைப்பில் ஈடுபடுங்கள்!!!

  //

  நண்பரே.. எனது கவிதைச் சாலையில் எப்போதுமே நீங்கள் சினிமாச் செய்திகளைப் பார்க்கவே முடியாது 🙂 வேண்டுமானால் பழைய அனைத்து படைப்புகளையும் அலசுங்கள்.

  ( அப்படிப்பட்ட ஜனரஞ்சகம் அலசல் பக்கத்துக்காக 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.