ஒரு நுரையீரல் சுவாசம் கேட்கிறது.

smoke2.jpg

நிறுத்துங்கள்.

என்
நெஞ்சக்கூட்டுக்குள்
நிகோடின் நிறைப்பதை
நிறுத்திவிடுங்கள்.

டீசல் புகைக்கிடையிலும்
புழுதிக் காற்றுக்கிடையிலும்
பிராணவாயுவைப் பிரித்தெடுப்பதிலேயே
என்
பிராணன் போய்விடுகிறது.

சுத்தமான காற்று
எனக்குள் சுரம் மீட்டி
என்னை நடனமாடவைத்த நாட்கள்
நின்றுபோய்
வருடங்களுக்கே வயதாகிவிட்டது.

இந்த நெரிசல் யுகத்தில்
கலப்படம் இல்லாமல்
காற்றும் காதலும்
கிடைப்பதேயில்லை !!

ஓளிச்சேர்க்கை செய்ய முடியாதபடி
அசோகர் நட்ட மரங்களுக்கு
இன்று
முதுமக்கள் தாழியின் வயசு.

வாடவே கூடாதென்று
வேர்கள் இல்லாத
ஆலைப் பூக்கள் மட்டுமே
இன்று
வாசல் தோறும் ஒட்டிநிற்கின்றன.

கிராமத்து ஜன்னல்களிலும்
கானகக் கதவுகளிலும்
மட்டும் தான் இன்னும்
காற்றுக்கு வாசமிருக்கிறது.

நகரங்களில்
கணிப்பொறியும் கருத்துக்கணிப்புகளும்
தேடிய மக்கள்
பிராணவாயு தேடாததில்
ஆச்சரியப் படுகிறேன்.

இதற்கிடையில் ஏன்
புகையிலைப் புகையையும்
எனக்குள்
புகுத்துகிறீர்கள் ?

சுகாதாரத்தின் மாளிகையாய் இருக்க
ஆசைப்பட்டேன்
என்னை
வியாதிகளின்
விற்பனை நிலையமாக்கி விடுகிறீர்கள்.

சோகம் கொன்றாலும்
என்னைக் கொளுத்துகிறீர்கள்
மகிழ்ச்சி வென்றாலும்
என்னைக் கொளுத்துகிறீர்கள்.

இப்போதெல்லாம்
எனக்கு பூமி பழகுவதற்கு முன்னே
புகை பழகிவிடுகிறது.

பள்ளிக் கூடங்கள்
புகைக்குள்ளும்
பல்கலைக் கழகங்கள்
பெத்தடினுக்குள்ளும் தான்
படுத்துக் கிடக்கின்றன.

அரசியல் சண்டையிட்டு
கோடிகளைக் கொளுத்தி விட்டு
தெருக்களைச் சலவை செய்து
காற்றை மட்டும்
கருப்பாக்கி விடுகிறீர்கள்.

புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவைகள்
ஆயிரம் இருக்கலாம்.
எனக்குத் தேவை உயிர்வளி மட்டும் தான்.
உங்களுக்கு ஒருவேளை
வானவில் தேவைப்படலாம்
எனக்குத் தேவை
புகை படராத சுவர்கள் மட்டும் தான்.

மூச்சுத்திணறும் காற்றுக்கு
சுருக்குக் கயிறு நெய்வதை விட
கலங்கல் காற்றைக் கொஞ்சம்
சலவை செய்யுங்கள்.

இல்லையேல் நாளை
ரோஜாக்கள்
மலர் விளைவதை நிறுத்திவிட்டு
மலர் வளையங்கள் விளைவிக்கத்துவங்கும் !!!

19 comments on “ஒரு நுரையீரல் சுவாசம் கேட்கிறது.

 1. dhum adikira friends ku anupinalum thirundha maatenguranga lae .. ena panradhu…. engaludaiya vizhipunarvu pirachaarathil kandippaha idamperum ik kavidhai… vaazhthukkal nanbare….

  snehamudan
  Baby Aruna

 2. நீங்களும் இந்த புகைக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கீங்க. பலன் இல்லாமல் போகாது. தொடரட்டும் உங்கள் குரல்!தொடட்டும் சில நெஞ்சங்களையாவது. வாழ்த்துக்கள் சேவியெர்.
  அன்புடன்
  கமலா

 3. நல்ல கருத்தை சொல்ல விளைந்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்

 4. Ungal kavidaiyavathu makkalai sinthikka vaikattum.

  நகரங்களில்
  கணிப்பொறியும் கருத்துக்கணிப்புகளும்
  தேடிய மக்கள்
  பிராணவாயு தேடாததில்
  ஆச்சரியப் படுகிறேன்.

  Really superb!!!🙂

  Bala

 5. ம்…ம்….ம்…. அருமையாக உள்ளது நுரையீரல் பேச்சு.

  என்னுடைய ஹெல்த்கேர் மாத இதழில் வெளியிடலாம் போல்

  உள்ளதே! உங்களின் அனுமதி இருந்தால்….!

 6. வருகைக்கு நன்றி.
  //என்னுடைய ஹெல்த்கேர் மாத இதழில் வெளியிடலாம் போல்

  உள்ளதே! உங்களின் அனுமதி இருந்தால்….!
  //

  தாராளமாக வெளியிடுங்கள். வெளியிட்ட பின் லிங்க் கொடுங்கள், நானும் பார்க்கிறேன்😀

 7. மிக அருமையாக இருந்தது…

  காதலும் அன்புமே கலப்படமாகி விட்டிருக்கிற காலத்தில், சுவாசிக்கும் காற்று மாசுபட்டு இருப்பது ஒன்றும் பெரிய விந்தை அல்ல…

  எதிர்பார்ப்பு எதுவுமே இல்லாமல் கிடைக்கப்பெறும் தாயன்பு போல, இயற்கை அன்னை எந்த வித ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் இலவசமாக தரும் உயிர்க்காற்றை மாசு படுத்தியவர்கள் நம்மவர்கள் தானே…

  கொளுத்தக்கூடாததை கொளுத்தி விட்டு, புகைக்கக் கூடாதவற்றை புகைத்து விட்டு, இறுதியில் தாங்கள் அழ வைப்பது தங்கள் நுரையீரலை தான் என்பதை மறந்து விடுகிறார்கள்..

  இதில் கொடுமை என்னவென்றால், புகைப்பவர்கள் தங்களின் நுரையீரல்களை அழவைப்பது மட்டும் அல்லாமல் தங்களை சுற்றி இருக்கும் சில புகைக்காதவர்களின் நுரையீரல்களையும் “Passive Smoking” என்ற பெயரில் அழவைக்கிறார்கள்…

  புகைத்துப் புகைத்து கருகிப்போன நுரையீரல்களுக்கு அஞ்சலி செலுத்துவதாய் இருந்தது உங்கள் கவிதை..

  இப்பொழுது தான் மெல்ல மெல்ல உங்கள் படைப்புகளை வாசித்துக் கொண்டு இருக்கிறேன்..

  இலக்கிய சேவையுடன் கலந்த உங்களது சமூக சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

  மஹாலக்ஷ்மி.

 8. அன்பின் மகாலஷ்மி. உங்கள் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் மனதுக்கு தெம்பளிக்கின்றன.

  தொடர்ந்து வாசியுங்கள். நேசியுங்கள்

 9. மிக அருமை!
  புகை பிடிப்பவர்கள் வருந்தினால் திருந்தினால் நல்லது,
  கெட்டது எதுவும் நடக்கும் முன்னே.

 10. oru cigrate pidithal vaalnalil 5 nodi kuraikirathu… enni paarungal indru varai ethanai pugai pidithirupeergal endru…. plz avoid this… thank u.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s