குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !

kid_medicine.jpg

(இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

நமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன.

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைகளில் சென்று நோயைச் சொல்லி மருந்து வாங்கிச் செல்வது நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண நிகழ்ச்சி.

இத்தகைய பழக்கம் பல வேளைகளில் பெரும் சிக்கல்களில் நம்மைக் கொண்டு போய் விட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான பரிசோதனையின்றி மருந்துகள் வழங்குவது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடுகிறது.

மருத்துவரிடம் குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது நிதானமாகவும், கவனமாகவும் நமது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.

சுமார் ஐம்பது விழுக்காடு பெற்றோர் ஏதேனும் ஒரு சந்தேகத்துடன் தான் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

மருத்துவரிடம் மீண்டும் ஒரு முறை நமது சந்தேகத்தைக் கேட்பது நமது தரத்தைக் குறைக்குமென்றோ, மருத்துவரை சிரமப்படுத்துவதும் என்றோ நினைப்பது குழந்தைகளின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பது அனைவருக்கும் பயன் தரும்.

1.        முதலில் மருந்தின் “கடைசி நாள்“ என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலோ அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அது எத்தனை விலையுயர்ந்ததாய் இருந்தாலும்.

2.        மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எனில் ஒரு நாள் ஆறு முறை அளிக்கவேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது தவறு.

3.        எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக குழந்தைகளுக்கு இன்னல்களை உருவாக்கி விடக் கூடும். எனவே சரியான அளவு மருந்து மட்டுமே அளிக்க வேண்டும்.

 சில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என பல வகைகள் உண்டு. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4.        மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவர் காய்ச்சலுக்காக ஐந்து நாள் ஆண்டிபயாடிக் கொடுத்தால், குழந்தையின் நோய் குறைந்து விட்டது என்பதற்காக மூன்றாவது நாளே நிறுத்தக் கூடாது. இது குழந்தைக்கு மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

5.        பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.

6.        மருந்து உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலையில் ஏதேனும் பிழை இருப்பது போல உணர்ந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும்.
 முக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காய் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

7.        மருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேளுங்கள். பின் மருந்து கடைகளில் அதை வாங்கும் போது அங்கும் அதே கேள்வியைக் கேளுங்கள். மருத்துவரின் பதிலும், மருந்து கொடுப்பவரின் பதிலும் ஒத்திருக்க வேண்டும்.

 மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்தை பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றுடன் கலந்து அளிக்கக் கூடாது.

8.        மருத்துவர் உங்கள் குழந்தைகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில் நியாயம் இல்லை. நாமே பழைய மருந்து சீட்டுகள், குறிப்புகள், வேறு மருத்துவரிடம் சென்றிருந்தால் அந்த தகவல்கள் போன்றவற்றைத் தயாராய் வைத்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற ஒரு நோய்க்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் ஒன்றாய் இருந்தாலும் உண்மையில் வேறு நோயாய் இருக்கலாம். மருத்துவரை அணுகாமல் ஒருவருக்கு தரப்பட்ட மருந்தை இன்னொருவருக்காய் பயன்படுத்தக் கூடாது.

9.         மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுடன் கொடுக்கலாமா, ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, மருந்து வேலை செய்கிறது, நலமடையத் துவங்கியதும் மருந்தை நிறுத்தலாமா என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

10.      வேறு ஏதாவது மருந்தை குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறீர்கள் எனில் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

சிறு சிறு நோய்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் பெற்றோரே மருத்துவராய் மாறி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அலட்சியமாகவோ, அல்லது சோம்பலாகவோ இருக்கலாம்.

இத்தகைய பிழைகள் தரும் விளைவுகள் வாழ்நாள் காயங்களை உருவாக்கிவிடக் கூடும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருத்தல் அவசியம்

11 comments on “குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !

 1. தெளிவாகவும், விவராமகவும் சொல்லியிருக்கீங்க.

  மிக்க நன்றி

  Like

 2. மருத்துவர்களும் இதைக்கொஞ்சம் மதித்தால் பரவயில்லை.!
  அன்புடன்
  கமலா

  Like

 3. //மருத்துவர்களும் இதைக்கொஞ்சம் மதித்தால் பரவயில்லை.!
  அன்புடன்
  கமலா

  //

  மருத்துவர்கள் இதை மதிக்கவில்லையெனில் அவர்கள் மருத்துவப் பணிக்கே தகுதியற்றவர்கள்

  Like

 4. சேவியர் சார்,

  நலமா? ஹெல்த்கேரின் நவம்பர் இதழில் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். அனைவருக்கும் மிகவும் உபயோகமான அறிவுரைகள்.

  நன்றி,
  ராஜா,
  ஹெல்த்கேர் மாத இதழ்

  Like

 5. அய்யா வணக்கம் ,தாங்கள் சித்தமருத்துவத்தில் இருந்து குழைந்தைகளுக்கு சரியான்மருந்து தருவீர்கள் என்று இந்த தலைப்பினை படிக்க எடுத்தேன் ஆனால் ஏமாந்தேன்.தயவு செயது பிறந்த குழ்ந்தை முதல் 5 வயது உள்ள குழ்ந்தை வரை கொடுக்க வேண்டிய மருந்துகளை தரும்படி வேண்டுகிறேன் .நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.