இந்நூல் பாரதி பற்றியும், பாரதி ஆய்வு பற்றியும் சில அடிப்படையான பிரச்சனைகளைக் கிளப்புகிறது. முக்கியமாக வரலாற்றுப் பொருள்முதல் வாத நோக்கில் பாரதி அணுகப்படுகின்ற பொழுதும் தெளிவுபடுத்தப் படுகின்ற பொழுதும் ஏற்படும் ஆய்வுச் சிக்கல்கள் பிரக்ஞை பூர்வமாகப் புலப்படுகிறது. பாரதியின் மதக் கோட்பாடுகள், மார்க்சியப் பரிச்சயமின்மை ஆகியவற்றை அழுத்தமாய் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.
எனும் பலத்த பீடிகையோடு வந்திருக்கும் “பாரதி – ஒரு சமூகவியல் பார்வை” எனும் நூலை வாசிக்க நேர்ந்தது.
தேர்ந்த விமர்சகர்களான அ.மார்க்ஸ், பெ. மணியரசன் ஆகியோர் பாரதி பற்றி பல கோணங்களில் இந்நூலில் அலசியிருக்கிறார்கள்.
1982 களில் இந்த நூல் வெளியாகி இப்போது இரண்டாம் பதிப்பை தோழமை பதிப்பகம் மூலம் காண்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கலை இலக்கியம், மதம், சமூகம் என்னும் மூன்று தளங்களில் முக்கியமாக பாரதி இந்த நூலில் ஆராயப்படுகிறார். பாரதியின் பாடல்களை விட அதிக இடங்களில் பாரதியின் உரைநடையே மேற்கோள் காட்டப்பட்டிருப்பது போல ஒரு தோற்றமும் எழுகிறது.
பெரும்பாலும் இந்த நூலில் முழுக்க முழுக்க பாரதியை சரியான, மிகச்சரியான நபராய் மட்டுமே காட்டவேண்டும் எனும் ஆசிரியர்களின் நோக்கு ஆழமான வாசிப்பில் தெரியவருகிறது. அந்த பார்வையுடன் அணுகும் போது முழுமையான திருப்திக்குள் நுழைய முடிகிறது..
சில கட்டுரைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்த்த இடங்களைப் பற்றிய அலசல் ஆசிரியர்களின் நோக்கத்தை இன்னும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
பாரதி பற்றி சமீபகாலமாக வாசிக்க நேர்ந்த எதிர் நூல்கள் எனக்கு அறிமுகமாகாமல் போயிருந்தால் பாரதி குறித்த இந்த நூல் பிரமிப்பூட்டியிருக்கும்.
ஆனால் சமீப காலமாய் வெளியான சில நூல்கள் பாரதியின் இன்னோர் பார்வையாய், அல்லது உள்ளார்ந்த சிந்தனை இப்படி இருந்திருக்கலாமோ எனும் ஐயத்தைக் கிளறுவதாய் அமைந்திருந்தன. அத்தகைய ஒரு வாசிப்புப் பின்னணியில் இந்த நூலை அணுகும் போது விமர்சக வட்டத்தில் கைதேர்ந்த இருவர் பாரதிக்கு வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரமாகவே வெளிப்படுகிறது.
பாரதியை ஒரேயடியாகப் பாராட்டிவிடவோ, அவருடைய படைப்புகளின் வீரியத்தை முழுமையாக மறுதலித்து விடவோ முடியாத சூழலே இன்று நிலவுகிறது. அத்தகைய பின்னணியில் இந்த நூல் பாரதியின் பலவீனங்களையும் சேர்த்தே அலசியிருந்தால் இன்னும் சிறப்பானதாய் இருந்திருக்கும்.
பதிப்பகம் : தோழமை
விலை : 75/-
9444302967
பாரதியின் பார்ப்பன சார்புத்தன்மையை அம்பலப்படுத்தி தோழர். வே.மதிமாறன் எழுதிய “‘பாரதி’ய ஜனதா பார்ட்டி” எனும் நூலைப் பற்றிய மதிப்புரையையும் தாங்கள் வெளியிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
http://yekalaivan.blogspot.com
LikeLike
நன்றி நண்பரே. இன்னும் நான் அந்த நூலை படிக்கவில்லை. வாங்கிப் படித்துவிட்டு எழுதுகிறேன்.
LikeLike