கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்

bed.jpg

சில நினைவுகள்
மூழ்கித் தொலைகின்றன,
சில
தூண்டில்களை மூழ்கவிட்டு
மிதவைகளாய் மிதக்கின்றன.

கல்லூரிக்குச் சென்றபின்
நான்
மறந்து விட்டேனென்று
என் ஆரம்பகால நண்பன்
அலுத்துக் கொண்டான்,

வேலைக்குச் சென்றபின்
நட்பை
மறந்து விட்டதாய்,
கல்லூரி நண்பன்
கவலைப் பட்டான்.

திருமணத்துக்குப் பின்
சந்திப்பதில்லையென்று
என்
சக ஊழியன்
சங்கடப்பட்டான்.

ஒவ்வோர்
முளைக்கு முன்னும்
சில
இலைகளை உதிர்த்துக் கொண்டே
மரம் வளர்கிறது.

ஆனாலும்
வேர்களுக்குள் இருக்கின்றன
உதிர்ந்த இலைகள்
உதிரம் ஊற்றிய ஈரப் பதிவுகள்.

7 comments on “கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்

  1. கலக்கிட்டீங்க. இந்த வரியை சேர்த்தால் எப்படி இருக்கும்?

    பணம் வந்ததும் மறந்து விட்டதாய்,
    உறவினர்கள் திட்டினார்கள்!!!!

    Like

  2. Pingback: கிறுக்கல்கள் » Blog Archive » படித்ததில் பிடித்தது

  3. மனமார்ந்த நன்றிகள் குகன். கவிதையை ரசித்தமைக்கும், கவிதையாய் ரசித்தமைக்கும். உங்கள் விமர்சனங்கள் உரமூட்டுகின்றன, தொடர்ந்து வருகை தாருங்கள்.

    Like

  4. கவிஞர் சேவியருக்கு ,
    வாழ்க்கையின் மாறாத நிதர்சனங்களை , எதார்த்தக் கூறுகளின் இலக்கணங்களை , இயற்கையின் இயல்போடு ஒப்பிட்டு , மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி , அவற்றை சரியான அணுகுமுறையில் எதிர் கொள்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்து உள்ளீர்கள் !

    “பள்ளி முடியும் நாளில்
    கையொப்பம் வாங்கும்
    யாருக்கும் தெரிவதில்லை
    அது ஒரு
    நட்பு முறிவிற்கான
    சம்மத உடன்படிக்கை ”

    என்று கவிஞர் அறிவுமதி அவர்கள் “நட்பு” என்னும் நூலில் எழுதி இருக்கும் கவிதை நினைவுக்கு வந்தது.

    கடைசிப் பத்திகள் இரண்டும் , அதன் முன் கவிதை வடிவில் கூறி வந்த வாழ்வியல் விடுகதைக்கான விடையை குறிப்பால் உணர்த்தும் பாங்கு அருமை !!!!!!

    அன்புடன்
    குகன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.