பெண்களும், மன அழுத்தமும்.

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது.

சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணியாகி விடுகிறது.

ஒரு ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ, அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகின்றான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

அவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல், அதே அட்டவணைக்குள் தான் வாழ வேண்டி இருக்கிறது. இத்தகைய வரையறைகளைத் தாண்டும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதுவும் சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் ஒருவர்.

தனக்குள்ளேயே வெடித்துத் தன்னை அழிக்கும் மனக் கண்ணி வெடி ஒரு ரகமான மன அழுத்தத்தைப் பெண்களுக்குத் தருகிறது என்றால், தொழில் அழுத்தம், பணி சுமை, சுதந்திரமின்மை என பல செயல்கள் வெளியிலிருந்து தாக்குகின்றன.

பெண்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியாகவும் காரணங்களும் பல உள்ளன. பெண்களுடைய ஹார்மோன்களின் சமநிலை ஆண்களைப் போல இருப்பதில்லை, வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் மாதவிலக்கு சுழற்சிகள் இதன் முக்கிய காரணமாய் இருக்கின்றன.

தான் பெண்ணாய் பிறந்து விட்டோமே எனும் சுய பச்சாதாபம் பல பெண்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம். அதற்குக் காரணம் சமூகத்தில் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத் தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க முயலும்போது அவள் முரட்டுத் தனமான கருத்துக்களால் முடக்கப்படுகிறாள் என்பதுமே.

நேரடியான மன அழுத்தம் பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டது. நம் மீது திணிக்கப்படுபவையோ, நம்மால் உருவாக்கப்படுபவையோ உள்ளுக்குள் உருவாக்கும் அழுத்தம் அது.

மகிழ்ச்சியாய் இருக்க முடியாத மன நிலை இத்தகைய மன அழுத்தத்தின் ஒரு முகம். ஆனந்தமாய் சுற்றுலா செல்லலாம் என அழைத்தாலும் சலனமில்லாமல் பதிலளிக்கும் மனம் அழுத்தத்தின் படிகளில் அமர்ந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

மறை முகமாய் தாக்கும் மன அழுத்தம் உடல் வலிகளின் காரணமாக வரக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக முதுகுவலி, கழுத்துவலி, வயிற்று வலி என வரும் வலிகள் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கின்றன. நிம்மதியற்ற சூழலையும், பல உபாதைகளையும் தந்து கூடவே மன அழுத்தத்துக்கும் விதையிடுகின்றன.

பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய உடல் பலவீனமும் ஒரு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு மன அழுத்தத்தையும் எந்த ஒரு மருந்தும் முழுமையாய் குணமாக்கி விட முடியாது.

நம்மைச் சார்ந்து வாழும் சகோதரிகளின் மன அழுத்தத்திற்கான விதை நம் வார்த்தைகளிலிருந்தோ, செயல்களிலிருந்தோ விழுந்து விடாமல் கவனமாய் இருப்பது ஆண்களின் கடமை.

பெண்களும் சமூகம் என்பது ஆண்கள் மட்டுமான அமைப்பல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி மனப்பான்மையிலிருந்து தைரியமாக சமூகத்தின் வீதிகளில் பழமை வாதிகளின் எதிர்ப்புகளுக்குப் பலியாகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட, தேவையற்ற அழுத்தளுக்கு இடம் தராத, சின்ன சுவர்க்கங்களாக குடும்பங்கள் விளங்கினால், மன அழுத்தம் விடைபெற்றோடும் என்பதில் ஐயமேதும் இல்லை.

8 comments on “பெண்களும், மன அழுத்தமும்.

  1. Thank you Jayalakshmi. I agreed with your points. வேற்றுமை பாராட்டுதல் எப்போதுமே கோழைகளின் செயல். மற்றவர்களை வேற்றுமையின்றி ஏற்றுக் கொண்டால் தங்கள் செங்கோல் சரிந்து விடுமே எனும் அங்கலாய்ப்பின் வெளிப்பாடு.

    எல்லாம் மறையும் எனும் கனவுகள் மறையாதிருக்கட்டும்.

    Like

  2. Even after all the economic freedom, edcatuion etc, woman within a family is still subjected to verbal and physical abuse. It is so sad, but true. No wonder more and more women are questioning the abusive family members.

    As you suggested, dialogues, and listening to each other plays a major role in bringing peace. But how may men or mothers in law are prepared to listen to the woman’s voice?.

    It is changing, woman are making their off springs see the choices available. But we have a long way to go in this society.

    Your blog is thought provoking. Thanks.

    Like

  3. உண்மை. சகோதர மனப்பான்மை வரவேண்டும். பார்வையில் புனிதம் இருந்தாலே வாழ்வின் பெரும்பாலான இன்னல்கள் விலகிவிடும்.

    Like

  4. //நிறைய பேசுதல் வேண்டும். பகிர்ந்துக் கொள்தலும் மிக முக்கியமானது.
    //

    நன்றி தோழி. பேசுவது மட்டுமல்ல. உண்மையான அக்கறையுடன் கேட்பது அதை விட முக்கியம் !

    Like

  5. எத்தனை பேர் ஒத்துக் கொள்வார்கள் பெண்களுக்கும் மனது உண்டு என்பதை. அதன் பின்னால் தான் மன அழுத்தம் என்பது எல்லாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முயற்சிச் செய்தால் தான் ஒருவருக்கு மன அழுத்தம் போகும்.புரிந்துக் கொள்தல் மிக முக்கியம். நிறைய பேசுதல் வேண்டும். பகிர்ந்துக் கொள்தலும் மிக முக்கியமானது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.