( இந்த வார களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)
பட்டினியின் கரங்களுக்குள் உலகம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் விலைவாசி ஏற்றம் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வரலாறு காணாத இந்த சர்வதேச அச்சுறுத்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் அத்தனை தெருக்களிலும் எதிரொலிக்கிறது.
சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உணவுத் தேவை அதிகரித்திருப்பதையும், தாவர எரிவாயு உற்பத்தியையும், இயற்கைச் சீற்றங்களையும், பருவநிலை மாற்றங்களையும், விளை நிலங்களின் அழிவையும் இந்த விலையேற்றத்தின் முக்கியமான காரணங்களாக அடுக்குகின்றனர் ஆய்வாளர்கள்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) அடுத்த பத்தாண்டுகளுக்கு விலை ஏறிக்கொண்டே இருக்கும் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணையின் வெளியேற்றம் இந்த விலையேற்றத்தின் மிக முக்கியமான ஒரு காரணியாகும். எண்ணை விலையேற்றம் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்து விதமான போக்குவரத்து நிலைகளிலும் தொடர்புடையதாய் இருப்பது விலையேற்றத்தின் முக்கிய காரணி என இந் நிறுவனம் கருதுகிறது.
எகிப்து நாட்டில் ரொட்டியின் விலை முப்பத்து ஐந்து மடங்கு, சமையல் எண்ணையின் விலை நான்கு மடங்கு என எகிறியிருக்கிறது.
சீனாவில் இறைச்சி தேவை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 150 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. பன்றி இறைச்சியின் விலை கடந்த ஆண்டு 58 விழுக்காடு உயர்வைச் சந்தித்திருக்கிறது.
கச்சா எண்ணையின் விலையேற்றத்தின் காரணமாக பல நாடுகள் தாவரங்களிலிருந்து உயிர் எரி பொருட்கள் (biofuel) தயாரிப்பில் இறங்கியிருக்கின்றனர். இவற்றை பெட்ரோலியப் பொருட்களுடன் கலந்து உபயோகிக்க முடியும் என்பதால் இது எண்ணை இறக்குமதியைக் கட்டுப்படுத்தும். அதே வேளையில் உணவுப் பொருட்களின் தேவையை அதிகரிக்கும். சோளம், சர்க்கரை, சோயா பீன்ஸ் போன்றவற்றின் விலை ஏறிக் கொண்டே இருக்கும் அபாயகரமான சூழல் இதனால் உருவாகியிருக்கிறது.
இதன் நீட்சியாக சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் மயோனிஸ், மிசோ போன்ற சாஸ் களின் விலை அதிகரிக்கிறது. மேலை நாடுகள் பலவற்றிலும் இது உணவுடன் சேர்க்கும் முக்கிய உணவுகள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜப்பானில் கடந்த இரண்டு மாதங்களில் இவற்றின் விலை பத்து மடங்கு அதிகரிப்பது அவர்களிடையே அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
இத்தாலியில் அவர்களுடைய முக்கியமான உணவான பாஸ்தா பயங்கரமான விலையேற்றத்தைச் சந்தித்து மிகப்பெரிய போராட்டத்துக்கும் வழி வகுத்திருக்கிறது.
பிரிட்டனில் பிரட் விலை பெருமளவு உயர்ந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் விலையேற்றம் அதிகரித்திருப்பதால் அதன் காரணங்களை ஆராய சிறப்புக் குழுக்களை அந்நாடுகள் அமைத்துள்ளன.
இத்தகைய உலகளவிலான விலையேற்றங்களுக்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய அழிவுகளும் முக்கியமான காரணமாய் கருதப்படுகிறது. உதாரணமாக அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட வெள்ள அழிவும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயிர் அழிவும் பிரான்ஸ் நாட்டின் நெய் விலையை கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 37 விழுக்காடு உயர்த்தியுள்ளன.
வளர்ந்த நாடுகளுக்கே இந்த விலையேற்றம் பெரும் அச்சுறுத்தலாய் அமைந்திருக்கும் இந்த சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே அச்சமாய் இருக்கிறது.
உதாரணமாக ஆப்பிரிக்க நாடான ஹெய்தியில் மக்கள் வறுமையினால் மண் ரொட்டிகளை உண்டு வந்தனர், இப்போது அதுவும் கிடைக்காத நிலை உருவாகியிருக்கிறது.
தினம் ஒரு டாலர் என்பது கனவு வருவாயாக இருக்கும் அவர்களுடைய கற்பனைகளில் மட்டுமே பெருமூச்சுடன் வந்து போகிறது கல்வியும், வாழ்க்கை முன்னேற்றமும். இவர்களுடைய வருமானத்தில் சுமார் அறுபது விழுக்காடு உணவுக்கே செலவிட வேண்டிய கட்டாயம் இந்த விலையேற்றத்தினால் ஏற்பட்டிருக்கிறது.
ஹெய்தியின் சோகத்தின் ஒரு முக்கியமான காரணம் உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடையாததே. எல்லா உணவுப் பொருட்களையும் இறக்குமதி மூலமே சமாளித்துக் கொண்டிருக்கும் ஹெய்தி விலையேற்றத்தினால் பட்டினியைச் சந்தித்திருக்கிறது. இங்கே பட்டினியால் கடந்த சில வாரங்களில் பலர் மடிந்திருக்கின்றனர்.
இந்த பட்டினியின் விளைவினால் உணவுப் பொருட்களுக்காக நாட்டின் தலைநகரில் வன்முறையும், படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது வேதனையிலும் வேதனை. இந்த வன்முறை பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலக அளவில் சமாதானமற்ற சூழல் உருவாகலாம் என்றும், எனவே வளர்ந்த நாடுகள் விரைவில் தலையிட்டு வறுமை நாடுகளுக்கு உதவ வேண்டும் எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
இந்த விலையேற்றத்தின் முக்கிய மூன்று காரணிகள் மூன்று என்கின்றனர் வல்லுனர்கள். ஒன்று உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பது. இரண்டு, எண்ணை விலையேற்றமும், தாவர உயிர் எரிபொருள் தயாரிப்பும். மூன்றாவது, இயற்கைச் சீற்றம் மற்றும் மோசமான காலநிலை.
சுமார் 232 கிலோ சோளம் தேவைப்படுகிறது ஐம்பது லிட்டர் கொள்ளளவுள்ள காருக்கு எரிவாயு நிரப்ப!. ஒரு குழந்தையின் ஒரு வருட உணவு இது ! பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு குடும்பத்தின் தினசரி உணவு இரண்டு சோளம் மட்டுமே.
இந்நிலையில் 2017 க்குள் அமெரிக்காவின் 15 விழுக்காடு வானகங்கள் இத்தகைய எரிபொருளில் ஓடவேண்டும் எனவும், ஐரோப்பாவின் 5.75 விழுக்காடு வாகனங்கள் 2010ல் இத்தகைய எரிபொருளில் ஓட வேண்டும் எனவும் அந்தந்த நாட்டின் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஒருவகையில் உலகின் வயிறுகளைக் காயவைத்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் கார்களுக்கு உணவளிக்கப் போகிறார்கள் என்பதே உண்மை.
உலகில் 37 நாடுகள் பட்டினியின் பிடியில் விழுந்து விட்டதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி தலைவர் ராபர்ட் சோலிக் 540 மில்லியன் டாலர்களை உதவிக்காய் செலவிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். எனினும் இவையெல்லாம் தற்காலிகமான நிவாரணங்களே.
பொதுவாக இந்த விலையேற்றம் சுமார் முப்பது நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் கொள்முதல் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
உலக அளவில் இந்த விலையேற்றம் சுமார் நாற்பத்து ஐந்து விழுக்காடு என்கிறது புள்ளி விவரம்.
சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலர் தனது மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது. அது நம்பகத்தன்மையை இழப்பதனால் உலகச் சந்தையில் சமநிலையற்ற நிலை உருவாகிறது. எப்போதும் நம்பகத் தன்மையில் இருக்கும் தங்கம் விலையேற்றம் அடைவதற்கு இது மிக முக்கியமான காரணமாகும். இன்னும் சில ஆண்டுகளில் தங்கம் மூன்று மடங்கு விலையேற்றத்தைச் சந்திக்கும் என கருதப்படுகிறது.
பணத்தின் மீதான நம்பிக்கை சரியும் போது வங்கிகளில் மக்கள் பணத்தைச் சேமிக்காமல் அசையாப் பொருட்கள் மீதும், தங்கத்தின் மீதும் பணத்தைச் செலவிடுகின்றனர். இதனால் பணத்தின் இயக்கம் இறுக்கமடைகிறது. மட்டுமன்றி வங்கிகளும் இந்த விலைவாசியின் தாக்கம் காரணமாக பணத்தின் வட்டி வீதங்களையும் குறைத்து வருகின்றன.
தன்னிறைவடைந்த நாடுகள் தங்களுடைய உணவு உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் குறைத்திருக்கின்றன. கொலம்பியா, சீனா, வியட்னாம், பாகிஸ்தான் எனும் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உண்டு.
ஏற்றுமதி, இறக்குமதியிடையே ஏற்பட்டுள்ள இந்த தடைகள் உலக நாடுகளிடையே பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அரிசி தரமுடியாது என வியட்னாம் மறுத்திருக்கிறது. அரிசி ஏற்றுமதியில் 22 விழுக்காடு அளவு குறைக்கப் போவதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.
எகிப்தும் சிரியாவும் கோதுமைக்குப் பதிலாக அரிசி எனும் பண்டமாற்று ஒப்பந்தம் இட்டிருக்கின்றன. எகிப்து நாடு, உள் நாட்டுத் தேவையைச் சமாளிக்க மற்ற நாடுகளுடனான அரிசி ஏற்றுமதியை ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்தும், அதிகரித்திருக்கும் ஏற்றுமதித் தேவையைச் சமாளிக்க முடியாமல் உள்நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
பீஜிங் நாடு தனது விவசாயிகளுக்கு அதிக பணத்தைக் கொடுத்து விலையேற்றத்தைச் சமாளிக்க உதவப் போவதாய் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் உணவு உற்பத்திப் பாதிப்படையாதிருக்க அந்நாடு திட்டம் வகுத்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் உணவுப் பொருட்கள் பதுக்கல் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் இருபது ஆண்டுகளில் உணவுத் தேவை இரண்டு மடங்காகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். விளை நிலங்களோ பாதியாகப் போகின்றன. எப்படித் தீரும் தேவைகள் ?
இது ஒரு உலகளாவிய சிக்கல். இந்த பிரச்சனையை உலகளாவில் அணுக வேண்டும் என வலியுறுத்துகிறார் உலக சுற்றுப்புறச் சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரெய்ன் ஹால்வேய்.
நவீனத்தின் வால் பிடித்து நடந்து, விளை நிலங்களை சுமைகளாகக் கருதி இறக்கி வைத்து விட்டு, அவற்றில் குடியிருப்புகளையும், ஆலைகளையும், நகரங்களையும் நிறுவியதன் விளைவு என்ன என்பதை உலகம் உணர வைத்திருக்கிறது இந்த உணவுப் பற்றாக்குறை.
இது இருபத்தோராம் நூற்றாண்டின் மாபெரும் சோகமாக மாறிவிடும் ஆபத்தும் இருவாகியிருக்கிறது. இந்த உலகளாவிய சிக்கலுக்கு ஒருங்கிணைந்த பதில் வருமா அல்லது வளர்ந்த நாடுகளின் பாராமுகம் வறுமை நாடுகளை அழிக்குமா என்பது மாபெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
கேள்விக்குறியுடனேயே..முடிந்துவிடுமோ..சில..முடிவுகள்..?
தேவையான…அருமையான்..பதிவு..
LikeLike
மனமார்ந்த நன்றிகள்
LikeLike