கி.மு : நோவாவின் பேழை

 

நோவா ! உலகின் முதல் மனிதனான ஆதாமின் எட்டாவது தலைமுறையில் வாழ்ந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர். கடவுளின் அருளையும், அன்பையும் பெற்றவர். உலக வரலற்றில் மிக மிக முக்கியமானவர்.

நோவாவின் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வன்முறைகளிலும், தீய வழிகளிலும் நாட்டம் உடையவர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல், அவருடைய விருப்பத்துக்கு மாறாக வாழ்ந்து வந்தார்கள். மக்கள் தன்னைவிட்டு விலகி தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்ட கடவுள் வருத்தமும் கோபமும் அடைந்தார். தான் படைத்த மனிதன் தன்னை மதிக்காமல் இருக்கிறானே என்னும் கோபம் அவருக்குள் கொழுந்து விட்டெரிந்தது. பாவம் செய்யும் மனிதர்களுக்குத் தரவேண்டிய தண்டனை மரணம் ஒன்றே என்று கடவுள் தீர்மானித்தார். அதன்படி உலகை முழுவதுமாக அழிக்கவேண்டும் என்னும் ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்தார்.

அவருடைய கண்களுக்கு ஒரே ஒரு நீதிமான் மட்டும் தென்பட்டார். அவர் நோவா.

நோவா குற்றமற்ற மனதோடும், இறை பக்தியோடும் வாழ்ந்து வந்தார். உலகை அழித்தாலும் நோவாவை அழிக்கக் கூடாது என்று கடவுள் தீர்மானித்தார். நோவானின் மூலமாக உலகில் குற்றமற்ற ஒரு சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்று எண்ணி அவர் நோவாவிடம் பேசினார்.

‘நோவா…. நான் தான் உன் கடவுள் பேசுகிறேன்’

‘ஆண்டவரே பேசும்..’ கடவுளின் குரலைக் கேட்ட நோவா தரையில் மண்டியிட்டார்.

‘நான் உன்னிடம் ஒரு மிகப் பெரிய பணியை ஒப்படைக்கப் போகிறேன்.’

‘பேசும் ஆண்டவரே… கேட்கிறேன்’ நோவா பணிவாய்ச் சொன்னார்.

‘உலகில் எல்லா மனிதர்களும் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள். அவர்களின் மனதுக்குள் இப்போது வன்முறை எண்ணங்களும், சிற்றின்ப ஆசைகளும் தான் நிறைந்து வழிகின்றன. இப்படி ஒரு மனித இனத்தைப் படைத்ததற்காக நான் வேதனைப் படுகிறேன். எனவே எல்லோரையும் அழிக்கப் போகிறேன்’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே.. எல்லா மனிதர்களையுமா ?’ நோவா அதிர்ச்சியுடன் கேட்டார்.

‘ஆம்… உன்னைத் தவிர எல்லா மனிதர்களையும்’ கடவுள் சொன்னார். கடவுளின் திட்டத்தைக் கேட்ட நோவா நடுங்கினார்.

‘உன்னையும் உன் குடும்பத்தினரையும் நான் அழிக்கமாட்டேன். உங்கள் மூலமாக இனிமேல் உலகில் ஒரு பாவமற்ற மனித இனத்தை உருவாக்கப் போகிறேன்.’ கடவுள் சொன்னார்.

நோவா அமைதியுடன் கேட்டுக் கொண்டிருக்க, கடவுள் தொடர்ந்தார்.

‘நான் உலகை தண்ணீரால் மூழ்க வைத்து அழிக்கப் போகிறேன். தண்ணீருக்குள் மூழ்கி மனித இனமும், மற்ற எல்லா உயிரினங்களும் அழிந்து போகட்டும்’ கடவுள் கோபமாய்ச் சொன்னார்.

‘கடவுளே… தண்ணீரால் உலகை அழிக்கப் போகிறீர் என்றால் நாங்கள் எப்படித் தப்புவது ? தப்பிப் பிழைத்தபின் உலகில் மற்ற உயிரினங்களே இல்லையென்றால் எப்படி உயிர்வாழ்வது ?’ நோவா கேட்டார்.

‘நான் சொல்கிறேன். நீ ஒரு மிகப்பெரிய பேழையைச் செய்யவேண்டும். பேழை செய்ய கோபர்மரத்தைப் பயன்படுத்து, அதுதான் நீண்ட நாள் தண்ணீரில் கிடந்தாலும் வீணாகாது. பேழையில் மூன்று அடுக்குகள் இருக்குமாறு பார்த்துக் கொள். பேழையினுள் தண்ணீர் புகாமலிருக்க உள்ளே கீல் பூசு.’ கடவுள் பேசுவதையெல்லாம் நோவா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘நீ உன்னுடைய குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு பேழைக்குள் செல்ல வேண்டும். ஜோடி ஜோடியாக பல இன விலங்குகளையும், பறவைகளையும் பேழைக்குள் எடுத்துப் போ. நீயும், உன் குடும்பத்தினர் மற்றும் விலங்குகள், பறவைகள் எல்லோருக்கும் தேவையான அளவு உணவை மறக்காமல் எடுத்துச் செல்.’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே… எப்போது நான் பேழை செய்ய ஆரம்பிக்க வேண்டும் ?’ நோவா கேட்டார்.

‘இப்போதே… இன்னும் ஏழே ஏழு நாட்கள் தான் அதற்குப் பிறகு பூமி தண்ணீரில் மூழ்கும்’ சொல்லிவிட்டுக் கடவுள் அகன்றார்.

நோவா உடனே பேழை ஒன்றை செய்யத் துவங்கினார். அவர் கோபர் மரங்களை வெட்டிச் சேகரித்து அவற்றை சரியான அளவில் வெட்டி பேழைக்கான வேலைகளில் மூழ்கினார். நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. அப்போது நோவாவின் வயது அறுநூறு. இரவு பகலாக உழைத்து நோவா கடவுள் சொன்ன அளவில் பேழையைச் செய்து முடித்தார். கடவுள் சொன்னபடியே விலங்குகளையும் பறவைகளையும் உணவுகளையும் கொண்டு தன்னுடைய குடும்பத்தினரோடு பேழைக்குள் சென்றார். நோவாவின் குடும்பத்தினர் யாரும் அவருடைய பேச்சை மறுக்கவில்லை. எல்லோரும் பேழையின் உள்ளே புகுந்ததும் கடவுள் நோவாவின் பேழையைப் பாதுகாப்பாய்ப் பூட்டினார்.

சரியாக ஏழாவது நாள். வானம் தன் மதகுகளைத் திறந்து பெருமழையைக் கொட்டியது. மழை… மழை… பெரும் மழை. நிற்காமல் பெய்துகொண்டே இருந்தது கனத்த மழை. இதற்கிடையில் பூமியிலும் ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்பின. பூமி கொஞ்சம் கொஞ்சமாய் நீரில் மூழ்கத் துவங்கியது. பூமியிலிருந்த மக்கள் எல்லால் செய்வதறியாமல் திகைத்தார்கள். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களையும், விலங்குகளையும் மனிதர்களையும் மூழ்கடித்தது. மரங்களும், மலைகளும் கூட மூழ்கிப் போயின. பறவைகள் அடைவதற்கு இடமில்லாமல் தண்ணீரில் தத்தளித்து மாண்டுபோயின. நோவாவின் பேழை மட்டும் தண்ணீரின் மேல் மிதக்கத் துவங்கியது.

தண்ணீர் தன் பிரம்மாண்டக் கரங்களால் பூமியை அழுத்திப் பிசைந்தது. தண்ணீரின் கால்களில் பூமியின் உயிரினங்களெல்லாம் மிதிபட்டு உயிர்விட்டன. செடிகள், மரங்கள், மலைகள் எல்லாம் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிப் போக, பெரிய மலைகளுக்கும் பதினைந்து முழம் மேலே தண்ணீர் நின்றது. மழை நாட்கள், வாரங்கள், மாதங்கள் என நீண்டு, பூமி நூற்று ஐம்பது நாட்கள் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்தது. நாசியால் சுவாசித்து வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி இறந்தே போயின. மனிதர் எவரும் மிச்சமிருக்கவில்லை.

அத்தனை உயிரினங்களும் மடிந்தபின் வானம் மழைபொழிவதை நிறுத்தியது. பூமியிலிருந்த ஊற்றுகளும் அடைபட்டன. பூமியில் காற்று வீசத் துவங்கியது. பூமியிலிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கியது. நோவாவின் பேழை அராத்து மலையின் மேல் வந்து இறங்கியது.

மீண்டும் நாற்பது நாட்கள் யாரும் பேழையைத் திறக்கவில்லை. பேழைக்குள் இருந்த நோவா, தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிய விரும்பினார். அதற்காக தன்னுடைய பேழையில் இருந்த சாளரத்தைத் திறந்து காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். காகம் வெளியே போய்விட்டு வந்து பேழையின் மேல் அமர்ந்தது. மீண்டும் பறந்து சென்றுவிட்டு வந்தது, இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததைக் கண்ட நோவா, பூமியில் தண்ணீர் வற்றிவிடவில்லை, காகம் அமர மரங்கள் ஒன்றும் வெளித்தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

சிறிது நாட்களுக்குப் பின், புறா ஒன்றை வெளியே அனுப்பினார். அதுவும் வெளியே பறந்து திரிந்து தான் அமர கிளைகள் ஏதும் தென்படாததால் மீண்டும் பேழைக்கே வந்து சேர்ந்தது. ஏழு நாட்களுக்குப் பின் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினார் நோவா. அது வெளியே போய்விட்டு பேழைக்குத் திரும்பி வந்தபோது அதன் அலகில் ஓர் ஒலிவ இலை இருந்தது. அதன் மூலம் பூமியில் தண்ணீர் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதை நோவா புரிந்து கொண்டார். மீண்டும் ஏழு நாட்கள் கடந்தபின் நோவா புறாவை மீண்டும் வெளியே அனுப்பினார். அந்த புறா அதன்பின் பேழைக்குத் திரும்பவே இல்லை ! தண்ணீர் முழுமையாய் வற்றி விட்டது என்பது நோவாவிற்கு விளங்கியது.

கடவுள் நோவாவின் பேழையைத் திறந்தார். பூமியில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. பூமி வெறுமையாய்க் கிடந்தது பறவைகளின் ஒலியோ, விலங்குகளின் சத்தமோ எதுவும் பூமியில் இல்லை. மனிதர்கள் யாருமே உயிரோடு இல்லை. கடவுள் நோவாவிடம், ‘ போதும் வெளியே வாருங்கள். வெளியே பூமி தன்னுடைய பாவங்களைக் கழுவி தூய்மையாய் இருக்கிறது. இனிமேல் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள். பாவம் இல்லாத ஒரு உலகத்தைப் படையுங்கள்’ என்றார். நோவாவின் குடும்பத்தினரும், பேழைக்குள் இருந்த அனைத்து உயிரினங்களும் மீண்டும் பூமிக்குத் திரும்பின. அப்போது பூமியில் அவர்களைத் தவிர யாருமே இல்லை.

உலகம் முழுவதும் அழிந்தாலும் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிய கடவுளுக்கு நோவா நல்ல விலங்குகள், பறவைகளை எரிபலி செலுத்தினார்.

கடவுள் நோவாவின் பலியில் மகிழ்ந்து, ‘இனிமேல் நான் பூமியைத் தண்ணீரால் அழிக்கமாட்டேன். நீயும் உன் சந்ததியினரும் பூமியை ஆளுங்கள். விரும்பும் உயிரினங்களை உண்ணுங்கள், ஆனால் இரத்தத்தோடு உண்ணாதீர்கள். ஒரு மனிதனின் இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதராலேயே சிந்தப்படும். உங்களோடு மீண்டும் என் உடன்படிக்கையை நிலை நாட்டுகிறேன். இனி பூமி தண்ணீரால் அழிக்கப் பட மாட்டாது. இந்த உடன்படிக்கையின் அடையாளமாக வில் ஒன்றை வானத்தின் மீது வைக்கிறேன். மழைநாட்களில் அது நம் உடன்படிக்கையை நினைவு படுத்தும். நான் இனி பூமியை வெள்ளப்பெருக்கினால் அழிக்கவே மாட்டேன்.’ என்றார்.

நோவா கடவுளுக்குப் பணிந்து அவருடைய வழிகளில் வாழ்ந்து வந்தார். அவர் மரணமடைந்தபோது அவருடைய வயது தொள்ளாயிரத்து ஐம்பது.

18 comments on “கி.மு : நோவாவின் பேழை

 1. xavier,
  Ennakku oru sendhegam, niverthi seiveergal endru nambugirean….
  Nova 950 aandugal vazhdhar endral, endraya manidhan yen athanai aandugal vazha mudiya villai?

  Karthick

  Like

 2. எனக்குத் தெரியவில்லை கார்த்திக் 🙂
  (நல்ல வேளை அத்தனை ஆண்டுகாலம் வாழவில்லை. இல்லாவிட்டால் வீட்டு லோண் 500 வருடத்துக்கு எடுத்திருப்போம் )

  Like

 3. ஆன்மீக நிகழ்வுகள் எல்லாமே தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது தான் கார்த்திக். 🙂

  Like

 4. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

 5. நோவா(அ)நூஹ்(அலை) உண்மையாகவே 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் அல்லாஹ்(கர்த்தர்) அவரை வாழவைத்தார்.அல்லாஹ்(கர்த்தர்)ஆல் முடியதது எதுவுமில்லை.நோவா(அ)நூஹ்(அலை) அவர்களை 950 ஆண்டுகள் வாழவைத்து அல்லாஹ்(கர்த்தர்) அவரை கைப்பற்றிக்கொண்டார்.அனைவரு(எல்லா உயிரினங்களு)க்கும் குறிப்பிட்ட தவணை வரை அல்லாஹ்(கர்த்தர்) அவகாசம் அளித்திருக்கிறார்.அல்லாஹ்(கர்த்தர்)மட்டுமே நிலையாய் நிலைத்திருப்பார் அவருக்கு மரணமே(ஏன் எந்த பலஹீனமும்)கிடையாது.

  Like

 6. ஒரு சந்தேகம் பதில் வேணும்
  150 நாள் தண்ணீர் இருந்தது
  ஆனா தண்ணீர் முழுதும் எத்தனை நாளில் வற்றியது

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.