கி.மு : ஆபிரகாமின் கதை


ஆபிரகாம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட ஆபிராம் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை பிரமிக்கத்தக்கது. அது அவருக்கு விசுவாசத்தின் தந்தை என்னும் பெயரையும் சம்பாதித்துத் தந்தது.

ஆபிராம் தெராகு என்பவரின் மகன். அவருக்கு நாகோர், ஆரான் என்று இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஆரானுக்கு ஒரு மகன் இருந்தான் அவன் பெயர் லோத்து. அவன் ஆபிராமோடு மிகவும் நேசமாய் இருந்தான்.

ஆபிராமுக்கு திருமண வயது வந்தபோது சாராய் என்ற அழகிய பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தனர். சாராய் பேரழகி. அவளோடு அழகில் போட்டியிட அந்த ஊரில் யாருமே இல்லை என்னுமளவுக்கு அழகானவள். ஒரு அழகிய பெண் தன் மனைவியானதில் ஆபிராம் மிகவும் ஆனந்தமடைந்தார். சாராளும் ஆபிராமின் அன்பில் மூழ்கி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தாள். அவர்கள் மனதில் ஒரு மிகப் பெரிய குறை இருந்தது. குழந்தை பாக்கியமின்மை.

ஆபிராமின் தந்தை தன்னுடைய இருநூற்று ஐந்து வயதில் இறந்த போது கடவுள் ஆபிராமோடு பேசினார்.

கடவுள் ஆபிராமை நோக்கி ,’ ஆபிராம், நீ இந்த நாட்டில் இருந்தது போதும். இனிமேல் நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே உனக்கு ஏராளமான செல்வங்கள் கிடைக்கச் செய்வேன். உன்னோடு எப்போதும் என்னுடைய அருகாமை இருக்கும். இனிமேல் நீ என்னுடைய பிரிய பக்தன். உன்னை யாராவது வாழ்த்தினால் அவர்களை நானும் வாழ்த்துவேன். உன்னை யாராவது சபிக்கிறார்கள் என்றால் என்னுடைய சாபமும் அவர்கள் மேல் விழும்.’

ஆபிராம் கடவுள் சொன்னதை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டிருக்க, கடவுள் தொடர்ந்தார்.

‘ உனக்குக் குழந்தைகள் இல்லையே என்னும் கவலை வேண்டாம். உன்னுடைய சந்ததியினர் கடல் மணலைப் போல பெருகுவார்கள். கடல் மணலை யாரேனும் எண்ணிவிடக் கூடுமோ ? அந்த அளவுக்கு உன் சந்ததி பலுகிப் பெருகும். வானத்து நட்சத்திரங்கள் போல உன் சந்ததி எங்கும் பரவும்’ என்றார்.

கடவுளின் வாக்குறுதியைக் கேட்ட ஆபிராம் மகிழ்ந்தார். கடவுள் சொன்னபடியே ஆபிராம் தன்னுடைய மனைவி, உடைமைகள், கால்நடைகள், பணியாட்களோடு  தன்னுடைய அண்ணன் மகன் லோத்தையும் அழைத்துக் கொண்டு கடவுள் காட்டிய நாட்டை நோக்கித் தன்னுடைய பயணத்தைத் துவங்கினார். அப்போது அவருக்கு வயது எழுபத்து ஐந்து.

ஆபிராமின் பயணம் நெகேபு நாட்டை அடைந்தது. அந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடியதால் ஆபிரகாம் எகிப்து நோக்கிப் பயணமானார். எகிப்து நாட்டில் அவர்களுக்கு மிகப் பெரிய சோதனை ஒன்று காத்திருந்தது.

அவர்களின் பயணம் எகிப்து நாட்டை நெருங்குகையில்,
ஆபிராம் தன் மனைவியை நோக்கி, ‘ இந்த ஊர் கொஞ்சம் மோசமான ஊர். யாராவது உன்னைப் பற்றிக் கேட்டால் நீ என்னுடைய மனைவி என்று சொல்லாதே. என்னுடைய சகோதரி என்று சொல். நான் உன்னுடைய கணவன் என்பதை அறிந்தால் இந்த மக்கள் என்னைக் கொன்றுவிட்டு உன்னை அபகரித்துக் கொள்வார்கள்’ என்றார்.

சாராய் பயந்துகொண்டே சம்மதித்தாள். தன்னைப் பற்றி விசாரிப்பவர்களிடமெல்லாம் ‘ நான் ஆபிராமின் தங்கை’ என்று சொன்னாள்.

எகிப்தியர்கள் சாராயின் அழகில் மயங்கினார்கள். ‘ஆஹா.. ஒரு அழகு தேவதை நம்முடைய நாட்டுக்கு விஜயம் செய்திருக்கிறதே’ என்று வியந்தார்கள். அவளை அடையவேண்டும் என்னும் எண்ணம் அவளைப் பார்க்கும் அனைவரிடமும் முளைவிட்டது.

சாராயின் அழகைப் பற்றி மன்னனும் அறிந்தான். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த மன்னனும் சாராளை அடைய ஆசைப்பட்டான். சாராள் மன்னனின் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டாள்.

‘பேரழகுப் பெண்ணே. உன்னைப் போன்ற அழகியை நான் இதுவரை கண்டதில்லை. நீ மாளிகையில் இருக்கவேண்டியவள். வீதியில் உலவ வேண்டியவளல்ல’ மன்னன் மோகத்தை உச்சரித்தான். சாராள் உமிழ்நீர் தொண்டையில் சிக்கிக் கொள்ளத் தடுமாறி நின்றாள்.

‘நீ யார் ?’ மன்னன் கேட்டான்.

‘நான் ஆபிராம் என்பவருடைய சகோதரி’ சாராய் சொன்னாள்.

‘உனக்கு மணமாகி விட்டதா ?’

‘இன்னும் இல்லை’

‘நல்லது. இனிமேல் நீ என் அந்தப்புரத்துக்குச் சொந்தக்காரி. வா.. வந்து என்னுடைய அரசகுடும்பத்தில் இணைந்து விடு’ மன்னன் மகிழ்வுடன் சொன்னான்.

சாராய் திடுக்கிட்டுப் போய் ஆபிராமைப் பார்த்தாள். ஆபிராம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே நடு நடுங்கி ஓரமாய் நின்றார். மன்னன் ஆபிராமை அழைத்தான்,
‘ஆபிராம், கவலைப்படாதே. உன் தங்கை இங்கே சகல செல்வங்களும், இன்பங்களும் பெற்று நலமாய் இருப்பாள். இப்படிப்பட்ட ஒரு பேரழகிக்கு அண்ணனாய்ப் பிறந்ததால் உனக்கும் ஏராளம் செல்வங்கள் தருவேன்’ என்று சொல்லிய மன்னன் ஆபிராமுக்கு ஏராளமான செல்வங்களையும், கால்நடைகளையும், பணியாட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தான். ஆபிராம் ஒன்றும் பேசாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

ஆபிராம் நேரடியாக கடவுளின் சந்நிதிக்குச் சென்று பணித்தார். தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கடவுளிடம் முறையிட்டுப் புலம்பினார். கடவுள் மன்னனைத் தண்டிப்பது என முடிவெடுத்து மன்னனுக்கும் அவன் உறவினர்கள் பலருக்கும் கொள்ளை நோய் வரச் செய்தார். திடீரென தன் குடும்பமே நோயில் விழுந்ததைக் கண்ட மன்னன் அதிர்ந்தான். வைத்தியர்கள் அரணமனையை முற்றுகையிட்டார்கள். எந்த வைத்தியராலும் நோயைக் குணமாக்க முடியவேயில்லை. ஒருவர் பின் ஒருவராக மன்னனின் உறவினர்கள் அனைவருக்கும் இந்த நோய் பரவியது. நோயால் பீடிக்கப் படாத மன்னனின் உறவினர்கள் யாருமே இல்லை என்ற நிலையும் வந்தது. மன்னன் அவசரமாக அரசவையைக் கூட்டினான்.

‘அரச குடும்பத்துக்கு நேர்ந்துள்ள இந்த நோய், கடவுளின் சாபமாய் இருக்கக் கூடுமோ என்னும் சந்தேகம் எனக்கு எழுந்திருக்கிறது. எனவே என்னுடைய  ஆட்சியில் ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துச் சொல்ல வேண்டும்’ மன்னன் ஆணையிட்டான். அலுவலர்கள் அரச ஆணைகளையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் எல்லவற்றையும் குடைய ஆரம்பித்தார்கள்.

கடைசியில் உண்மை வெளிப்பட்டது. சாராள் ஆபிராமின் சகோதரி அல்ல மனைவி என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

செய்தி அறிந்த மன்னன் கடும் கோபமடைந்தான். ஆபிராமைக் கூப்பிட்டு வர ஆளனுப்பினான். ஆபிராம் தன் உயிர் தன்னை விட்டுப் பிரிந்துவிடப்போகிறதோ என்ற பயத்தில் மன்னனின் சபையில் வந்து நின்றான்.
மன்னன் ஆபிராமை நோக்கி,

‘ஏன் என்னிடம் பொய் சொன்னாய் ? சாராள் உன் மனைவி என்று சொல்லியிருக்கலாமே? எதற்காக உன்னுடைய சகோதரி என்று சொன்னாய் ?’ மன்னன் சினத்துடன் கேட்டான்.

 

 

‘மன்னரே மன்னிக்க வேண்டும். உண்மையைச் சொன்னால் என்னைக் கொன்று விடுவீர்கள் என்று பயந்தேன்’ ஆபிரகாம் பணிந்தான்.

‘உன்னால் அரச குடும்பமே இன்று நோயில் கிடக்கிறது. தெரியுமா ?’ மன்னன் கோபத்தில் கத்தினான்.

ஆபிராம் எதுவும் பேசாமல் மெளனமாய் நின்றார்.

‘ உடனே உன் மனைவியையும், உன் உடமைகளையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடு. என் கண்முன்னால் நிற்காதே. இனிமேல் இந்த நாட்டில் நீ தங்கக் கூடாது எகிப்தின் எல்லைகளைக் கடந்து எங்கேனும் ஓடிப் போ’ மன்னன் கட்டளையிட்டான்.

ஆபிராம் தன் மனைவி தன்னிடம் மீண்டு வந்த மகிழ்ச்சியில் எகிப்தை விட்டு வெளியேறினார்.

அந்நேரமே மன்னனின் குடும்பத்தினரைப் பிடித்திருந்த நோயும் வெளியேறியது.

எகிப்தை விட்டு வெளியேறிய ஆபிராம் கானான் நாட்டில் வந்து குடியேறினார். அப்போது மீண்டும் கடவுள் அவரோடு பேசினார்.

‘ஆபிராமே… இதோ நான்கு திசைகளிலும் நீ காணும் தேசத்தையெல்லாம் உனக்கும் உன் சந்ததியினருக்குமாய் கொடுப்பேன் ‘ என்றார்.

ஆபிராம் முதன் முறையாக கடவுளின் குரலுக்கு பதில் பேசினார்.
‘கடவுளே.. என்ன செல்வங்கள் இருந்து என்ன பயன் ? எனக்குத் தான் குழந்தைகளே இல்லையே ? கணக்கில்லாத செல்வங்கள் ஒரு மழலைக்கு ஈடாக முடியுமா ?’ ஆபிராம் கேட்டார்.

‘கவலைப் படாதே ஆபிராம். உன் சந்ததி கடல் மணலைப்போலவும், வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கணக்கில்லாமல் பெருகும் என்று நான் உனக்குச் சொன்னதை மறந்தாயா ?’

‘ஆண்டவரே. எனக்கு இன்னும் ஒரு குழந்தை கூட இல்லையே ? எப்படி என் சந்ததி கடல் மணல் போல பெருக முடியும் ? எனக்குப் பின் என் வீட்டு அடிமைகளின் ஏதாவது ஒரு மகன் தான் என் சொத்துக்களை எடுத்துக் கொள்வான் போலிருக்கிறதே’ ஆபிராம் தன் கவலையைச் சொன்னார்.

கடவுளோ,’ கலங்காதே.. உன் பிள்ளை தான் உனக்குப் பின் உரிமையாளன் ஆவான். இதோ மீண்டும் உனக்கு அதே வாக்குறுதியைத் தருகிறேன். வானத்தைப் பார், அங்கிருக்கின்ற நட்சத்திரங்களைப் போல உன் வழிமரபினரும் இருப்பார்கள்’ என்றார்.

ஆபிராம் ஆண்டவரின் வார்த்தைகளை நம்பினார்.

கடவுள் மீண்டும் ஆபிராமை நோக்கி, ‘ இதோ இந்த நாடும் உனக்குத் தான் சொந்தமாகும் என்றார்’

‘இது எனக்குச் சொந்தமாகும் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது ?’ ஆபிராம் வினவினார்.

கடவுள் அவரிடம் ‘ மூன்று வயதுள்ள ஒரு பசு, மூன்று வயதுள்ள ஒரு செம்மரியாடு, மூன்று வயதுள்ள ஒரு வெள்ளாடு, ஒரு காட்டுப் புறா, ஒரு மாடப்புறா இவற்றைக் கொண்டு வந்து எனக்குப் பலியிடு’ என்றார்.

ஆபிராம் கடவுள் சொன்ன அனைத்தையும் கொண்டு வந்து அவற்றை இரண்டிரண்டு துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் அதற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். பறவைகளை அவர் வெட்டவில்லை.

இரவில் ஆபிராம் ஆழ்ந்த உறக்கம் கொண்டார். அப்போது கடவுள் அவரிடம், ‘ உன்னுடைய வழிமரபினர் வேறொரு நாட்டிற்கு பிழைக்கச் செல்வார்கள். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாய் இருப்பார்கள். அதன் பின் அவர்கள் ஏராளமான செல்வங்களோடு விடுதலைபெற்றுத் திரும்புவார்கள். நான் உனக்கு உனக்கு நீடிய ஆயுளைக் கொடுப்பேன். உன் முதிர் வயதில் தான் நீ மரணமடைவாய்’ என்றார்.

அப்போது நெருப்பு இறங்கி வந்து ஆபிராமின் பலிப்பொருட்களின் இடையே கடந்து போனது. தன்னுடைய பலி கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதை அறிந்த ஆபிராம் மகிழ்ந்தார்.

ஆபிராம் கடவுளின் வார்த்தைகளில் உறுதியாய் இருந்தாலும் சாராள் தனக்கு ஒரு வாரிசு இல்லையே என மிகவும் மனம் வருந்தினாள். தன்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாதோ என்னும் கவலை அவளுக்குள் மெல்ல மெல்ல வளர்ந்து பரவியது. தன்னால் ஆபிராமுக்கும் அவப்பெயரும், மனவருத்தமும் வருகிறதே என்று அவள் மிகவும் கவலைப்பட்டாள். இன்னொரு பெண் மூலமாகவேனும் ஆபிராமுக்கு ஒரு குழந்தை கிடைக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தாள். அவளுக்கு ஆகார் என்னும் எகிப்திய தேசத்துப் பணிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் வழியாக ஆபிராம் குழந்தை பெற்றுக் கொள்ளட்டுமே என்று நினைத்த சாராய் அதுபற்றிக் கணவனிடம் பேச முடிவெடுத்தாள்.

ஒருநாள் அவள் ஆபிராமை அழைத்து,’ எனக்குத் தான் குழந்தைகள் இல்லை, என்னுடைய கருவறையின் வாசல் கடவுளால் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறது. நீர் என்னுடைய பணிப்பெண் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்’ என வேண்டினாள்.

‘என்னது ? பணிப்பெண் மூலமாகவா ? வேண்டாம். கடவுள் நமக்குக் குழந்தைச் செல்வத்தைத் தருவதாக வாக்களித்திருக்கிறார்.’ ஆபிராம் மறுத்தார்.

‘நமக்கு வயதாகிறது. நீங்கள் இந்தத் திட்டத்துக்கு ஒத்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் நம்முடைய வம்சம் நம்மோடு அழிந்து போய்விடும்’ சாராள் பிடிவாதம் பிடித்தாள்.

‘ பணிப்பெண் மூலமாகக் குழந்தை பிறந்தால் அதன் பின் அவள் உன்னை மதிக்க மாட்டாள். உன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே நாம் கொஞ்சநாள் காத்திருப்போம்’ ஆபிராம் சொன்னார்.

‘இல்லை. எனக்குத் தேவை உங்கள் குழந்தை. அது எப்படியேனும் கிடைத்தாகவேண்டும். இந்தப் பணிப்பெண் என்னோடு நீண்டகாலமாக இருக்கிறவள். எனவே அவள் எனக்கு எதிராய் இருக்க மாட்டாள். நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம்’ சாராள் தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தாள்.

மனைவியின் வற்புறுத்தலை மறுக்க முடியாத ஆபிராம் அந்த வேண்டுகோளை ஏற்றார். தன் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் சாராள் தன் பணிப்பெண்ணை தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

ஆபிராம் பணிப்பெண்ணோடு கூடி வாழ்ந்தார். ஆகார் கருவுற்றாள் ! ஆபிராமின் முதல் வாரிசு ஆகாரின் வயிற்றில் குடியேறியது.

ஆபிராம் கணித்தது போலவே கருவுற்றதும் ஆகாரின் குணங்கள் மாறத் துவங்கின. அவளுக்குள் அகந்தையும் கர்வமும் நிறைந்தது. அவள் சாராளை நகைக்கவும், ஏளனமாய் பேசவும் துவங்கினாள்.

‘குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எல்லாம் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்’

‘உன்னால் இத்தனை ஆண்டுகள் முயன்றும் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியவில்லையே. என்னைப் பார் உடனடியாக தாயாகிவிட்டேன்’

‘தாய்மைப் பேறு இல்லாமல் வாழ்ந்து என்ன பயன் ?’

ஆகார் சாராயின் மீது ஏளனச் சொற்களை எறிந்து மகிழ்ந்தாள்.

குழந்தைப் பேறு இல்லாத சாராளுக்கு ஆகாரின் ஏளனப் பேச்சு அதிக துன்பத்தைத் தந்தது.

‘நீ என்னுடைய பணிப்பெண் தான். நான் சொல்வதைச் செய்வது தான் உன் வேலை. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது நான் உனக்குத் தந்த வேலை அவ்வளவு தான். இனிமேல் உன் வாயிலிருந்து ஒரு ஏளனச் சொல் விழுந்தாலும் உன்னைக் கொன்றுவிடுவேன்’ சாராய் எச்சரித்தாள்.

அதோடு விட்டுவிடாமல் கருவுற்றிருந்த ஆகாரை கடினமான வேலைகள் செய்யவைத்து பழிவாங்கினாள் சாராய். ஆபிராமோ எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

சாராளின் கொடுமை அதிகரித்து தாங்கமுடியாத நிலையை அடைந்தபோது ஆகார் வீட்டை விட்டு தப்பி ஓடினாள். ஓடி ஓடி கால்கள் தளர்ந்து பாலைவனத்தில் நம்பிக்கையற்று வீழ்ந்த போது, ஒரு தேவதூதன் அவளைச் சந்தித்து அருகிலிருந்த நீரூற்றுக்கு அழைத்துச் சென்றான்.

‘ நீ சாராய்஢ன் பணிப்பெண்ணான ஆகார் அல்லவா ? எங்கே ஓடுகிறாய் ? ‘ தூதர் கேட்டார்.

‘ஐயா… சாராய் க்கு குழந்தைகள் இல்லை. எனவே நான் சாராயின் விருப்பப்படி ஆபிராம் மூலமாகக் கருவுற்றேன். கருவுற்றபின் சாராயின் மனது மாறிவிட்டது. அவள் என்னை எதிரியாய் பாவித்துக் கொடுமைப்படுத்துகிறாள். அதையெல்லாம் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவே தப்பி ஓடுகிறேன்’ ஆகார் சொன்னாள்.

‘நீ உன்னுடைய எஜமானியின் மனம் புண்படுமாறு நடந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்’ தூதன் சொல்ல, ஆகார் மெளனமானாள்.

தூதன் அவளிடம்,’ நீ இந்தப் பாலை நிலத்தில் அலையவேண்டாம். பேசாமல் சாராளிடமே போ. அவளைப் புண்படுத்தாமல் அவளுக்குப் பணிந்திரு. அது தான் நல்லது ‘ என்றார்.

‘ இனிமேல் நான் அங்கே போனால் என்னால் அமைதியாக் வாழமுடியுமா ? ‘ ஆகார் பயந்தாள்.

‘எதற்கும் கவலைப்படாதே. நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவளுக்கு இஸ்மாயில் என்று பெயரிடு. இது கடவுளின் வாக்கு’ தூதர் சொல்ல ஆகார் முகம் மலர்ந்தாள்.

‘என்னுடைய மகன் நல்லமுறையில் வளர்வானா ? என்னுடைய குலம் வளருமா ?’ ஆகார் கேட்டாள்.

‘ உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. ஆனால் இஸ்மாயில் தான்….’ தூதர் இழுத்தார்.

‘ஏன் ? என் மகனுக்கு என்ன ஆகும் ?’ ஆகார் பதட்டத்துடன் கேட்டாள்.

‘ உன் மகன் இஸ்மாயிலை எல்லோரும் எதிர்ப்பார்கள். அவன் யாருடனும் இணக்கமாக இருக்க மாட்டான். ஓரு காட்டுக் கழுதையைப் போல அவன் வாழ்வான்’
தூதர் சொன்னதைக் கேட்ட ஆகார் கவலையடைந்தாள். ஆனாலும் தன் குலம் நன்றாகச் செழிக்கும் என்னும் எண்ணம் அவளுக்கு ஆறுதலைத் தந்தது. அவள் ஆபிராமிடம் திரும்பினாள்.

அதன் பின் ஆகார் அமைதியாக தன்னுடைய நாட்களைக் கழித்தாள். பேறு காலம் வந்தபோது அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

ஆகார் ஆபிராமை நோக்கி ‘ குழந்தைக்கு ஏதேனும் பெயர் யோசித்து வைத்திருக்கிறீர்களா ? நான் ஒரு பெயரை யோசித்து வைத்திருக்கிறேன்’ என்று கேட்டாள்.

‘இவனுக்கு நான் இஸ்மாயில் என்று பெயரிடுகிறேன்.’ ஆபிராம் சொன்னார்.

ஆகார் ஆச்சரியமடைந்தாள். ‘நானும் இவனுக்கு இஸ்மாயின் என்று தான் பெயரிட நினைத்தேன். அது கடவுளின் தூதர் என்னிடம் சொன்ன பெயர்’ என்று ஆகார் சொல்ல ஆபிராம் கடவுளின் செயலை எண்ணி வியந்தார். அவர்கள் இருவரும் கடவுளைப் பணிந்து நன்றி செலுத்தினர்.

அப்போது ஆபிராமுடைய வயது எண்பத்து ஆறு.

ஆபிராமுக்கு தொன்னூற்று ஒன்பது வயதானபோது கடவுள் ஆபிராமோடு மீண்டும் பேசினார்.
‘ஆபிராம். நீ எப்போதும் என்னுடைய வழிகளை விட்டு விலகாமல் இருப்பதால் நான் மிகவும் மகிழ்கிறேன். உனக்கு ஏராளமான செல்வங்களையும், குழந்தைகளையும் தருவேன்’

ஆபிராம் கடவுளைப் பணிந்தார். கடவுள் தொடர்ந்தார்.

‘ இன்று முதல் நீ ஆபிராம் என்றல்ல ஆபிரகாம் என அழைக்கப் படுவாய். உன் சந்ததியினருக்கு இந்த கானான் தேசம் முழுவதையும் கொடுப்பேன். அவர்களுக்கு நானே கடவுளாய் இருப்பேன். உன் வம்சத்தினர் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்தாக வேண்டும். வேற்று இனத்துப் பிள்ளைகளை எடுத்து வளர்த்தால், அவர்களுக்கும் விருத்த சேதனம் செய்தாக வேண்டும் ‘

‘இனிமேல் உன் மனைவியை சாராய் என்று அழைக்காதே. இனி அவள் சாரா என்று அழைக்கப் படட்டும். அவள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்’ என்றார்.

ஆபிரகாம் உள்ளுக்குள் சிரித்தார். நூறு வயதிலா எனக்குக் குழந்தை ? தொன்னூறு வயது சாராவா தாய்மையடையப் போகிறாள் என உள்ளுக்குள் நினைத்தார்.

‘எனக்கு இஸ்மாயிலே போதும் கடவுளே. அவனுக்கு நீர் நீண்ட ஆயுளைக் கொடுத்தால் போதும்’ ஆபிரகாம் சொன்னார்.

‘ஏன் என்னுடைய வார்தைகளில் உனக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா என்ன் ? சொல்வது உன் கடவுள். உனக்கும் சாராளுக்கும் குழந்தை பிறக்கும், அவனுக்கு ஈசாக் என்று பெயரிடு. ஈசாக் பிறந்தாலும் நான் இஸ்மாயிலைக் கைவிடமாட்டேன். அவனையும் நான் பெரியவனாக்குவேன். பன்னிரண்டு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான். அவனிடம் இருந்து பெரிய நாடு ஒன்று தோன்றும்’ சொல்லிவிட்டுக் கடவுள் அகன்றார்.

ஆபிரகாம், கடவுள் தம்மிடம் சொன்னபடியே, இஸ்மாயில் உட்பட தம் வீட்டில் பிறந்த ஆண்களுக்கும், விலைக்கு வாங்கிய ஆண்களுக்கும் விருத்த சேதனம் செய்தார். தானும் விருத்த சேதனம் செய்து கொண்டார்.

 

 

சில நாட்களுக்குப் பின் ஆபிரகாம் மம்ரே என்னுமிடத்தில் தேவதாரு மரங்களின் அருகே கூடாரம் அமைத்து அதன் வாசலருகே அமர்ந்திருக்கையில் ஆண்டவர் அவருக்குத் தரிசனமானார். திடீரென மூன்று மனிதர்கள் அவருக்கு முன்னால் சற்று தொலைவில் வந்து நின்றார்கள். அவர்களைக் கண்டவுடன் ஆபிரகாம் ஓடோ டிச் சென்று அவர்களுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

‘வாருங்கள்… நான் உங்கள் கால்களைக் கழுவ தண்ணீர் எடுத்து வருகிறேன். நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுங்கள். உங்களுக்கு உண்பதற்கும் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் உண்டு பசியாறி பின்பு உங்கள் பயணத்தைத் தொடருங்கள்’ விருந்தோம்புதலில் சிறந்தவரான ஆபிரகாம் வழிப்போக்கர்களை உபசரித்தார். அவர்கள் கடவுளின் தூதர்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆபிராமின் அன்பில் வந்தவர்கள் மகிழ்ந்தார்கள். இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடரச் சம்மதித்தனர்.

ஆபிரகாம் கூடாரத்தினுள் சென்று சாராவிடம் அப்பங்கள் தயாராக்கச் சொல்லிவிட்டு, மந்தைக்குச் சென்று கொழுத்த கன்று ஒன்றை அடித்து சமைத்து அவர்களுக்குப் பரிமாறினார். அவர்கள் உண்ணும்போது அவர்கள் அருகிலே நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவர்களில் ஒருவர் ஆபிரகாமை நோக்கி ‘ உன் மனைவி சாரா எங்கே ?’ என்று கேட்டார்.

ஆபிரகாம் வியந்தார். வழிப்போக்கர்களுக்கு தன் மனைவியின் பெயர் எப்படித் தெரிந்தது ? அதுவும் கடவுள் கொடுத்த சாரா என்னும் பெயர் இவர்களுக்கு எப்படித் தெரியும் என வியந்தார். வந்திருப்பவர் கடவுளே என்று கண்டு கொண்டார்.

‘சாரா.. அதோ அந்தக் கூடாரத்தில் இருக்கிறாள்’

‘நான் மீண்டும் உன்னைச் சந்திக்க இளவேனிற்காலத்தில் வருவேன் அப்போது அவளுக்கு ஒரு மகன் இருப்பான்.’

கூடாரத்துக்குள் இருந்த சாராளின் காதுகளில் தூதரின் வார்த்தைகள் விழுந்ததும் சாராள் சிரித்தாள்
‘இது நல்ல கதையாக இருக்கிறதே ! நான் சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழவி, ஆபிரகாம் உடல் தளர்ந்து போன ஒரு கிழவர். எங்களுக்கா குழந்தை ? எங்கள் உடல் அந்த நிலையை எல்லாம் எப்போதோ கடந்து விட்டதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

கடவுள் ஆபிரகாமிடம்,’ ஆபிரகாம், நம்பிக்கை தான் மனிதனின் முதல் தேவை. சாரா கடவுளின் வார்த்தைகளை நம்பாமல் நகைக்கிறாள். அவள் கூடாரத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறாள். கடவுளால் ஆகாதது உண்டா ? பின் ஏன் சாரா சந்தேகப் பட்டு சிரிக்கிறாள்’ என்று கோபத்துடன் கேட்டார்.

அதைக் கேட்ட சாரா நடுங்கினாள். பயம் வந்து அவளைப் பிடித்துக் கொண்டது.
‘ஐயோ… நான் சிரிக்கவே இல்லை… ‘ என்று மறுத்தாள்.

‘காதில் விழுவதை மட்டுமே கேட்பது மனிதனுடைய காதுகள். மனதில் ஒன்றை நினைப்பதற்கு முன்பே அதைக் கேட்கும் சக்தி எனக்கு உண்டு.. என்னிடம் பொய் பேசவேண்டாம்’ கடவுள் சொல்ல சாரா மெளனமானாள்.

கடவுள் ஆபிரகாமிடம் ‘உன் சந்ததியை நான் வளப்படுத்துவேன் என்று மீண்டும் மீண்டும் உன்னிடம் கூறுகிறேன்’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார். சாரா கருத்தரித்தாள்.

சாராவால் இதை நம்பவே முடியவில்லை. கடவுளின் வல்லமையை நினைத்து நினைத்து விழிகளை மூடாமல் வியந்து கொண்டிருந்தாள். அவளுடைய மனதுக்குள் நீண்ட காலமாக இருந்த வருத்தம் சட்டென்று விடைபெற்றோடியது. அளவில்லா ஆனந்தத்தில் ஆபிரகாமும், சாராளும் கடவுளை இடைவிடாமல் போற்றிப் புகழ்ந்தார்கள்.

குறிப்பிட்ட காலத்தில் சாரா ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கடவுளின் அருளினால் முதிந்த வயதிலும் தன்னால் குழந்தை பெற முடிந்ததை எண்ணி எண்ணி சாரா வியந்தாள். கடவுளின் கட்டளைப்படி மகனுக்கு ஈசாக் என்று பெயரிட்டனர்.

ஈசாக் பிறந்தபோது ஆபிரகாமுக்கு வயது நூறு.

தங்களுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சாராவும் ஆபிரகாமும் ஆனந்தமாய் நாட்களைக் கொண்டாடினார்கள். ஈசாக்கை அவர்கள் மிகவும் செல்லமாக வளர்த்தார்கள்.

ஈசாக் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய நாளில் ஆபிரகாம் ஒரு மிகப் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். தடபுடலான விருந்து. ஆபிரகாமுக்குத் தெரிந்த அனைவரும் விருந்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர். அந்த விருந்தினர் கூட்டத்தினரிடையே சாராவின் பணிப்பெண்ணான ஆகாரின் மகன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சாராவின் மனதுக்குள் பொறாமை துளிர்த்தது. இப்போது தான் எனக்கு மகன் இருக்கிறானே, அடிமையின் மகன் இனிமேல் இங்கே எதற்கு அவனையும், ஆகாரையும் துரத்தி விட வேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டாள். நேராக ஆபிரகாமிடம் சென்று

‘ நமக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறானே இனிமேல் இந்த அடிமையின் மகன் நமக்கெதற்கு ? அவர்களைத் துரத்திவிடுங்கள்’ சாரா ஆபிரகாமிடம் சொன்னாள்.

‘அவன் சின்னப் பையன். அவன் மேல் ஏன் கோபப்படுகிறாய் ? அவனும் இங்கேயே வளரட்டும்’

‘இல்லை. ஒரு அடிமையின் மகனும் என்னுடைய மகனும் சம அந்தஸ்தில் வளர்வது எனக்கு அவமானம். அவர்கள் இங்கே இருக்க கூடாது’

‘அவனை ஏன் அடிமையின் மகன் என்கிறாய் ? அவன் என்னுடைய மகன் அல்லவா ?’

‘ஓ.. அப்படியானால் அந்த மகன் தான் உங்களுக்குத் தேவையா ? நானும் என் மகனும் உங்களுக்கு இரண்டாம் பட்சம் தானா ?’ சாரா கோபமடைந்தாள்.

‘ஏன் கோபிக்கிறாய். அவன் வளரட்டும். வளர்ந்த பின் வேண்டுமானால் அவர்களை அனுப்பி விடலாம்’

‘இல்லை. அவர்கள் இப்போதே போயாக வேண்டும். நம்முடைய அனைத்து சொத்துகளுக்கும் என் மகன் மட்டுமே வாரிசாக வேண்டும். நம்முடைய குலம் இஸ்மாயிலிடமிருந்தல்ல, ஈசாக்கிடமிருந்தே தோன்ற வேண்டும்’ சாரா பிடிவாதம் பிடித்தாள்.

‘கொஞ்சம் யோசித்துப் பார் சாரா, அவன் என்னுடைய மகன். நீ சொன்னதனால் தானே நான் ஆகார் மூலமாக அவனைப் பெற்றேன். அவன் உனக்கும் மகன் போலத் தானே. உன் முடிவை மாற்றிவிடு’ ஆபிரகாம் கெஞ்சினார்.

‘இல்லை. ஒன்று அந்த அடிமையும் அவளுடைய மகனும் இங்கே இருக்கவேண்டும், இல்லையேல் நானும், நம் மகனும் இருக்க வேண்டும். எது வேண்டுமென்று நீங்களே முடிவெடுங்கள்’ சாரா திட்டவட்டமாகச் சொன்னாள்.

ஆபிரகாம் மிகவும் வருந்தினார். ஆகாரையும் இஸ்மாயிலையும் வீட்டை விட்டு அனுப்புவதென்று முடிவெடுத்தார். அவர் கடவுளை நோக்கி
‘கடவுளே.. உமது மகன் இஸ்மாயிலை நான் வீட்டை விட்டு அனுப்புகிறேன். இந்த வீட்டை விட்டு அனுப்பினாலும் உம்முடைய பாதுகாப்பை அவனுக்கு அளித்தருளும். அவனுடைய சந்ததியினரை வளப்படுத்தும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினார்.

கடவுள் ஆபிரகாமிடம், கவலை வேண்டாம் அவனை நான் பாதுகாப்பேன் அவனுக்கு ஒரு மிகப் பெரிய சந்ததியைக் கொடுப்பேன். என்றார். கடவுளின் குரலைக் கேட்ட ஆபிரகாம் மகிழ்ந்தார்.

ஆகாரையும், அவர் மகனையும் வீட்டை விட்டு அனுப்பினார்.

ஆபிரகாமும், அவர் மனைவியும் ஈசாக்கை உயிரினும் மேலாகப் பாவித்து வளர்த்தனர். அவனுடன் விளையாடுவதிலேயே பொழுதைச் செலவிட்டனர். ஈசாக்கின் அழகிலும், திறமையிலும் இருவரும் குழந்தைகளாய் மாறி குதூகலித்தனர். அப்போது கடவுள் ஆபிரகாமை சோதிக்க விரும்பினார்.

கடவுள் ஆபிரகாமிடம்,’ ஆபிரகாமே… நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா ?’ கடவுள் கேட்டார்.

‘நீர் என்னோடு இருக்கும் போது எனக்கு என்ன கவலை ஆண்டவரே’

‘இப்போது நீ அதிக மகிழ்ச்சியாய் இருப்பது போல உணர்கிறேன்…’

‘ஆம் ஆண்டவரே. நீர் எங்களுக்குத் தந்த அருமை மகன் எங்களுடைய ஆனந்தத்தின் எல்லைகளை அகலமாக்கிவிட்டான்.’

‘சரி.. நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும்’ கடவுள் கேட்டார்.

‘சொல்லும் கடவுளே… செய்யக் காத்திருக்கிறேன்’

‘என்ன சொன்னாலும் செய்வாயா ?’

‘உம்முடைய கட்டளைகளை நான் எப்போதுமே மீறியதில்லையே கடவுளே. இனிமேலும் மீறமாட்டேன்’ ஆபிரகாம் சொன்னார்.

‘அப்படியானால்… நீ உயிரினும் மேலாக நேசிக்கும் உன் ஒரே மகனை மோரியா நிலப்பகுதிக்குச் சென்று எனக்கு எரிபலி செலுத்து’ கடவுள் சொல்ல ஆபிரகாம் நிலை குலைந்தார்.

ஆபிரகாமின் இதயம் உடைந்து சிதறியது. தான் உயிரினும் மேலாக நேசிக்கும் தன் மகனை வெட்டி எரித்துப் பலியிடுவதா என உள்ளுக்குள் உயிர் பதறியது. ஆனாலும் கடவுளின் கட்டளைக்கு பணிய முடிவெடுத்தார்.

அன்று இரவு முழுவதும் ஆபிரகாமினால் தூங்க முடியவில்லை. தாங்க முடியாத துயரத்தில் தவித்தார்.
மறுநாள் அதிகாலையில் எழுத்து தம் வேலைக்காரர் இருவரை அழைத்து, விறகுகளையும் எடுத்துக் கொண்டு மகன் ஈசாக்கையும் கூட்டிக் கொண்டு கடவுள் குறிப்பிட்டிருந்த இடத்துக்குப் பயணமானார். அவர்கள் மூன்று நாட்கள் நடந்து கடவுள் சொன்ன மோரியா நிலப்பகுதியை வந்தடைந்தார்கள்.

ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம்,’ நீங்கள் இங்கே இருங்கள். நானும் ஈசாக்கும் சென்று பலி நிறைவேற்றிவிட்டு வருகிறோம்’ என்று கூறிவிட்டு கொண்டு வந்திருந்த விறகுக் கட்டைகளை தன் மகனுடைய தலையில் வைத்தார். ஒருகையில் நெருப்பையும், மறுகையில் கத்தியையும் அவர் எடுத்துக் கொண்டார்.

போகும் வழியில் சிறுவன் ஈசாக் தந்தையை அழைத்தான்

“அப்பா…”

“சொல் மகனே….”

“விறகு இருக்கிறது. நெருப்பு இருக்கிறது, கத்தி இருக்கிறது. பலியிடுவதற்குத் தேவையான ஆட்டுக் குட்டி எங்கே அப்பா ?’

“அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார் மகனே” என்று தந்தை தழுதழுத்தார்.

இடத்தைச் சென்று அடைந்ததும் கொண்டு சென்றிருந்த விறகுக் கட்டைகளை அடுக்கி பலித்தளத்தை உருவாக்கினார்.

‘மகனே.. இங்கே அருகில் வா…’

ஈசாக் தந்தையின் அருகில் வந்து நின்றான். ஆபிரகாம் அவனுடைய கைகளையும் கால்களையும் கட்டினார்.

‘அப்பா… ஏன் என்னுடைய கைகளைக் கட்டுகிறீர்கள் ?’ ஈசாக் புரியாமல் கேட்டான்.

‘கடவுள் இந்தமுறை ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கேட்கவில்லை. உன்னைத் தான் கேட்டிருக்கிறார்’ ஆபிரகாம் சொன்னார். ஈசாக் மிரட்சியுடன் தந்தையைப் பார்த்தான்.

ஆபிரகாம் ஈசாக்கைப் பிடித்து விறகின் மேல் கிடத்தினா. வானத்தை அண்ணார்ந்து பார்த்து,’ கடவுளே என் ஒரே மகனை உமக்குப் பலியிடுகிறேன். ஏற்றுக் கொள்ளும்’ என்று சொல்லிக் கொண்டே மகனை இரண்டாய் வெட்டும் நோக்குடன் கத்தியை வேகமாக இறக்கினார். ஈசாக் பயத்தில் கண்களை மூடினான்.

திடீரென கடவுளின் குரல் வானத்திலிருந்து புறப்பட்டது.,

‘நிறுத்து ஆபிரகாம் நிறுத்து’

பாதி ஓங்கிய கையை ஆபிரகாம் அந்தரத்தில் நிறுத்தினார்.

‘ஆபிரகாம். உன்னுடைய விசுவாசம் மிகப் பெரிது என்பதைக் கண்டு கொண்டேன். உன் மகனை ஒன்றும் செய்யாதே. உன் ஒரே மகனை விட அதிகமாய் நீ என்னை நேசிக்கிறாய். எனக்காக அவனைக் கொல்லக் கூட நீ தயாராகி விட்டதை நினைக்கும் போது நான் உண்மையிலேயே மிகவும் ஆனந்தமடைகிறேன். இதைவிட மேலான பக்தியை நான் எங்கு காண்பேன். இனிமேல் உன் சந்ததி எங்கும் பலுகிப் பெருகும் ‘ என்றார்.

ஆபிரகாம் மகிழ்ந்தார். ஈசாக்கின் கட்டுகளை அவிழ்த்து விட்டு அவனைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின் சுற்று முற்றும் பார்த்தார். தூரத்தில் முள் காட்டில் ஒரு ஆட்டுக் குட்டி கொம்புகள் சிக்கிக் கிடப்பதைக் கண்டார். அதைப் பிடித்து வந்து கடவுளுக்குப் பலியிட்டார்.

நூறு வயது பொறுமைக்குப் பின் கிடைத்த மகனையும் கடவுளுக்காய் பலியிடத்துணிந்த ஆபிரகாமின் இறையச்சமும், விசுவாசமும் அவர் சந்ததியை எங்கும் பெருகச் செய்தது. அவர் விசுவாசத்தின் தந்தை என்னும் பெயரையும் பெற்றார்.

கி.மு : நூலில் இருந்து

17 comments on “கி.மு : ஆபிரகாமின் கதை

  1. /THANKS XAVI Bro.
    God bless U and your family.
    I request to U pls correct the followings..
    நான் உனக்கு உனக்கு நீடிய ஆயுளைக் கொடுப்பேன்.//

    நன்றி சார். திருத்திக்கறேன் 🙂

    Like

  2. THANKS XAVI Bro.
    God bless U and your family.
    I request to U pls correct the followings..
    நான் உனக்கு உனக்கு நீடிய ஆயுளைக் கொடுப்பேன்.

    Like

  3. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

  4. //தேவாலயத்துள் இருப்பபது போன்ற உணர்வு ஏற்படுகிறது… நன்றி Xavier.
    உங்கள் பணி தொரட வாழ்த்துகிறேன்!//

    நன்றிகள் நண்பரே. 🙂

    Like

  5. //தேவாலயத்துள் இருப்பபது போன்ற உணர்வு ஏற்படுகிறது… நன்றி Xavier.
    உங்கள் பணி தொரட வாழ்த்துகிறேன்!//

    நன்றிகள் பல 🙂 மீண்டும் சந்திப்போம்..

    Like

  6. தேவாலயத்துள் இருப்பபது போன்ற உணர்வு ஏற்படுகிறது… நன்றி Xavier.
    உங்கள் பணி தொரட வாழ்த்துகிறேன்!

    Like

  7. எப்படி அய்யா சோம்பலில்லாமல் இவ்வளவு எழுதுகிறீர்கள் ….
    அருமை, நன்றி.

    Like

  8. கருத்துக்கு நன்றி சதீஷ்… சுருக்கமா போட முயல்கிறேன்.

    புத்தகம் தோழமை பதிப்பகத்தில் ( 9444302967) கிடைக்கும் 🙂

    Like

  9. கதையை நன்றாய்ப் பதிவு செய்து இருக்கிறீர்கள். ஆனாலும் சற்றே நீளமாய் இருக்கிறது. புத்தக வடிவில் இது நன்றாய் இருக்கலாம்., ஆனால் இணைய வடிவில் இன்னும் கொஞ்சம் சுருக்கமாய்ச் சொல்லலாம். முழுதாய்ப் படிக்க விரும்புபவர்களுக்கு, புத்தகத்தை எங்கு வாங்கலாம் என்கிற லிங்க்’ கைக் கொடுக்கலாம்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.