கவிதை : எது பாவம் ?

முண்டியடிக்கும்
குழப்பக் கண்களோடு
கேட்டேன்,
பாவம் என்றால் என்ன ?

சட்டத்தின் முதுகெலும்புடைத்து
சமுதாயத்தைக் குழப்பி
சச்சரவு செய்வது பாவம்
அரசு ஊழிய நண்பன் சொன்னான்.

ஆண்டவனின்
வார்த்தைகளை வாழாமல்,
கேட்டுவிட்டுக் கடப்பவன்
பாவி என்றார்
மரியாதைக்குரிய மதகுரு ஒருவர்.

கத்தி வீசாமல்
பிறர் மனம் காயம் செய்வதும்
வார்த்தை வாளெடுத்து
இதயம் சொருகுவதும் பாவம்,
குடும்பத் தலைவி சட்டென சொன்னார்.

பாவமில்லா இதயங்களை
பாவத்துக்குள் விழத்தாட்டுவது பாவம்,
படித்ததைச் சொன்னான்
பெரியவன் ஒருவன்.

நீ
என்ற ஒன்றே இல்லாத போது
பாவம் என்பதெல்லாம் இல்லை.
பார்வையில் தான் பழுது.
உன்னைச் சுற்றி இருப்பதெல்லாம்
நீர்க்குமிழிகளின் நிரந்தர அரங்கம்.
மேதாவித்தன குழப்பவாதி சொன்னான்.

உன் பார்வையில் தவறாய் தெரிவது
இன்னொரு பார்வையில்
பழுதாயில்லை என்றால்
பாவம் என்பதை எப்படி
பட்டியல் படுத்துவாய் ?
கேள்விக்குக் கேள்வியை பதிலாய் சொன்னார்
பேராசிரியர் ஒருவர்.

எந்தப் பதிலும் பதிலாய் முடியாமல்
கேள்வியோடு கேள்விகள்
கேள்விகள் தொடுக்க,
பதிலாய் நான் படுக்கையில் விழுந்தேன்.

மனசாட்சியின் தூங்காக் கண்கள்
உங்களை
தூங்கவிடாமல் செய்கிறதென்றால்,
நீங்கள் செய்தது பாவம் என்றாள்
கிசுகிசுப்பாய்
காதருகே என் மனைவி.
திரும்பிப் படுத்தேன்.

கனவுகளோடு சிரித்துப் பேசி
தூங்கிக் கொண்டிருந்தது
என் குழந்தை.

6 comments on “கவிதை : எது பாவம் ?

  1. சிறு குழந்தையைப் போல மாறிவிட்டால்
    விண்ணுலகை மண்ணுலகில் காணலாம்
    என்ற இயேசு பெருமானின்
    இன்மொழியின் மென்பொருள் இதுதானோ..?

    Like

  2. //மனசாட்சியின் தூங்காக் கண்கள்
    உங்களை
    தூங்கவிடாமல் செய்கிறதென்றால்,
    நீங்கள் செய்தது பாவம்//

    சத்தியமான வார்த்தைகள் சேவியர். மனசுல ஒண்ணும் இல்லாம நல்லா தூங்கினாலே நாம பாவம் செய்யலனு தெரிஞ்சுக்கலாம்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.