கி.மு : வியப்பூட்டும் திருமணம்

 

ஆபிரகாம் தன்னுடைய முதுமைப் பருவத்தில் தன்னுடைய மகனான ஈசாக்கிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவருக்கு தாம் வசித்து வரும் கானான் நாட்டிலிருந்து ஈசாக்கிற்குப் பெண் கொள்ள விருப்பமில்லை. தன்னுடைய சொந்த ஊரான மெசபொத்தானியாவில் இருக்கும் நாகோர் என்னும் ஊருக்கு தன்னுடைய வேலையாளை அனுப்பி ஈசாக்கிற்கு பெண்தேட முடிவெடுத்தார்.

அவர் தன்னுடைய வேலையாட்களில் மூத்தவரும், தம்முடைய அனைத்துக்கும் அதிபதியுமானவரை அழைத்து, ‘நீ என்னுடைய நம்பிக்கைக்குரிய பணியாளன். நான் உன்னிடம் ஒரு மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போகிறேன்’

‘சொல்லுங்கள், செய்யக் காத்திருக்கிறேன்’ பணியாளன் பணிவானான்.

‘என்னுடைய மகன் ஈசாக் திருமண வயதை அடைந்து விட்டான். அவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடவேண்டும்’

‘பெண் எப்படி இருக்கவேண்டும், எந்த நாட்டினளாக இருக்கவேண்டும் என்பவற்றைச் சொன்னால், நான் அதற்கேற்ற ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்கிறேன்’

‘பெண் நல்ல அழகானவளாகவும், நல்ல குணம் படைத்தவளாகவும் இருக்கவேண்டும். முக்கியமான விஷயம் அவள் மெசபொத்தானியாவைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். இந்த கானான் நாட்டில் அவனுக்குப் பெண் தேடாதே’ ஆபிரகாம் சொன்னார்.

‘அப்படியே செய்கிறேன். நான் ஈசாக்கைக் கூட்டிப் போகலாமா ? அவனுக்கும் பெண்ணைப் பிடித்திருக்கிறதா என்று பார்க்கலாமே ?’

‘வேண்டாம். உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கண்டுபிடிக்கும் பெண் அவனுக்குத் தகுதியானவளாகத் தான் இருப்பாள். ஈசாக் கானான் நாட்டிலேயே இருக்கட்டும்’

‘ஒருவேளை நான் கண்டுபிடிக்கும் பெண் என்னுடன் வர மறுத்தால் என்ன செய்வது ? அப்போதேனும் நான் ஈசாக்கைக் கூட்டிச் செல்லலாமா ?’

‘இல்லை… நீ கண்டுபிடிக்கும் பெண் உன்னுடன் வரமறுத்தால் கவலைப்படாதே. அது கடவுளின் விருப்பம் என்று கருதிக் கொள்கிறேன். அதன் பின் நீ அவனுக்குப் பெண் தேடவேண்டாம் திரும்பி வந்து விடு’

‘அப்படியே ஆகட்டும். ஆனாலும் ஒரே ஒரு கேள்வி. ஏன் ஈசாக் கானானை விட்டு வரக் கூடாது என்கிறீர் ? ஏதேனும் காரணம் உண்டா ?’

‘ஆம். இந்த நாடு எனக்குக் கடவுளால் தரப்பட்டது. நான் என் மகனுக்கு என் சொத்துகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அவனும் கடவுள் தந்த இந்த நாட்டில் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.’ ஆபிரகாம் சொல்ல பணியாளன் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்தக் கால வழக்கப்படி பணியாளன் ஆபிரகாமின் தொடையின் கீழ் தன்னுடைய கைகளை வைத்து சத்தியம் செய்தார். பின் ஆபிரகாமிடமிருந்து விடைபெற்று ஈசாக்கிற்குப் பெண்தேடிப் புறப்பட்டான். தன்னுடன் சில பணியாட்களையும், பத்து ஒட்டகங்களையும், தலைவருக்குரிய சொத்தில் சிறப்பானவை பலவற்றையும் எடுத்துக் கொண்டு மெசபொத்தானியாவை நோக்கிப் புறப்பட்டார். பயணம் நீண்டுகொண்டே இருந்தது, பணியாளனின் மனம் முழுவதும் ஈசாக்கிற்குத் தகுதியான, தலைவரின் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்கவேண்டுமே என்பதைப் பற்றியே இருந்தது.

நீண்ட நாட்கள் பயணம் செய்தபின் அவர் ஊரை நெருங்கினார். ஊர் எல்லையிலே ஒரு கிணறு இருந்தது. தன்னுடைய ஒட்டகங்கள் களைப்பாக இருந்ததால் பணியாளன் அந்தக் கிணற்றங்கரையில் ஒட்டகங்களை நிறுத்திவிட்டுக் காத்திருந்தார். திடீரென அவருடைய மனதில் ஒரு சிந்தனை தோன்றியது. ‘ இது மாலை நேரமாக இருக்கிறது. கண்டிப்பாக பெண்கள் சிலரேனும் தண்ணீர் எடுப்பதற்காக இங்கே வருவார்கள். அப்படி வரும் பெண்களில் எந்தக் கன்னிப் பெண் எனக்கும் என்னுடைய ஒட்டகங்களுக்கும் முகம் கோணாமல் தண்ணீர் எடுத்துத் தருகிறாளோ, அவளையே ஈசாக்கிற்கு மணம் முடித்து வைக்கவேண்டும்’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். அந்த எண்ணம் தோன்றியதும் அவர் அங்கேயே மண்டியிட்டு,’ கடவுளே.. எனக்கு ஒரு நல்ல பெண்ணைக் காட்டும்.’ என்று வேண்டினார்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. யாரையும் காணோம். பணியாளன் காத்திருந்தார். அவருடைய காத்திருப்பு வீண்போகவில்லை, சிறிது நேரத்தில் அங்கே ஒரு இளம் கன்னிப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக வந்தாள்.

அவள் நேராகக் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலேறி வந்தாள். அப்போது பணியாளன் அவளை நோக்கி,
‘பெண்ணே.. தாகமாய் இருக்கிறது.  குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தருவாயா ?’ என்று கேட்டார்.

‘குடியுங்கள் ஐயா… தாகம் தீரக் குடியுங்கள். நீங்கள் நீண்ட தொலைவு நடந்து வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்கள் ஒட்டகங்கள் கூட தாகத்தோடு இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் அவற்றுக்கும் தண்ணீர் எடுத்துத் தருகிறேன்’ அவள் புன்னகையுடனும், கரிசனையுடனும் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்ட வேலையாள் ஆச்சரியப் பட்டார். தான் நினைத்தது போலவே இவள் பேசுகிறாளே. தலைவர் சொன்னதுபோல மிகவும் அழகானவளாகவும் இருக்கிறாளே, கடவுள் தன் எஜமானனின் மகனுக்காய் காட்டும் பெண் இவளே தான் ! என வியந்தார்.

எல்லா ஒட்டகங்களும் தண்ணீர் குடித்து முடிந்ததும் அவர் அவளுக்கு ஒரு அழகிய மூக்குத்தியும், விலையுயர்ந்த வளையல்கள் இரண்டையும் அன்பளிப்பாகக் கொடுத்தார். அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டே அவற்றை வாங்கினாள்.

‘பெண்ணே நீ யார் ? உன் பெயர் என்ன ? உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா ? ‘ பணியாளன் பரபரப்பாய்க் கேட்டான்.
‘என் பெயர் ரபேக்கா. நாகோரின் மகனான பெத்துவேலின் மகள் நான். இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏன் கேட்கிறீர்கள் ?’ அவள் கேள்விக் குறியோடு அவரை நோக்கினாள்.

அவள் சொல்வதைக் கேட்கக் கேட்க வேலையாளின் புருவங்கள் வியப்பில் விரிந்தன. ஆஹா… நாகோர் ஆபிரகாமின் அண்ணனாயிற்றே ! ஆபிரகாமின் அண்ணன் மகள் தான் இவளா ? கடவுள் எனக்கு மிகவும் சரியான பெண்ணைத்தான் காட்டியிருக்கிறார் என்று ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனார். உடனே மண்டியிட்டு கடவுளை வணங்கினார். ரபேக்கா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘பெண்ணே, நாங்கள் இன்று இரவு உங்கள் வீட்டில் தங்க வேண்டும் வசதியிருக்குமா ?’

‘எங்கள் வீட்டில் நீங்களும், உங்கள் பணியாளர்களும் தங்குவதற்குத் தாராளமான இடம் இருக்கிறது. தயங்காமல் வாருங்கள். உங்கள் ஒட்டகங்களுக்குத் தேவையான தீவனமும் இருக்கிறது. வாருங்கள் வந்து தங்கி இளைப்பாறுங்கள் ‘ ரபேக்கா அன்புடன் அழைத்தாள். அவளுடைய பணிவிலும் அவளுடைய உபசரித்தலிலும் பணியாளர் மிகவும் மகிழ்ந்தார். கடவுள் தனக்குக் காட்டிய பெண் உண்மையிலேயே மிகவும் உயர்ந்த குணத்தினள் தான் என்று குதூகலித்தார்.

அவர்கள் அனைவரும் ரபேக்காவின் இல்லத்துக்குச் சென்றனர். யாரோ சிலர் தன்னுடைய இல்லம் நோக்கி வருவதைக் கண்ட ரபேக்காளின் தந்தையும், சகோதரனும் ஓடோ டிச் சென்று அவர்களை வரவேற்றனர்.

‘வாருங்கள் வாருங்கள். களைப்படைந்தவர் போல இருக்கிறீர்கள். தங்கி இளைப்பாறுங்கள். இன்று இரவு ஒரு நல்ல விருந்து உண்டு மகிழுங்கள்’ என்று சொல்லிய ரபேக்காவின் தந்தை உடனே பணியாளனை அழைத்து நல்ல விருந்தொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டார். பணியாளர்கள் விருந்து தயாராக்கினார்கள்.

அவளுடைய பெற்றோரும் , சகோதரனும் அவர்களை மிகவும் நன்றாக உபசரித்தார்கள். விருந்து தயாரானது.

‘வாருங்கள். உண்போம்’ ரபேக்காளின் தந்தை பெத்துவேல் அழைத்தார்.

‘உணவு ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி. ஆனால் அதற்கு முன் நான் ஒரு விஷயத்தைப் பேசவேண்டும்’

‘சொல்லுங்கள். என்ன செய்தி ?’

‘ நான் யார் தெரியுமா ?’

‘இல்லை சொல்லுங்கள்’

‘நான் உங்கள் சகோதரன் ஆபிரகாமின் பணியாளன் ‘

‘என்ன ? நீங்கள் ஆபிரகாமின் பணியாளரா ? ஆபிரகாம் எப்படி இருக்கிறார் ? அவருடைய குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் ? ‘ பெத்துவேல் ஆச்சரியத்தில் கேள்விகளை அவசர அவசரமாய்க் கேட்டார்.

‘ஆபிரகாம் நன்றாக இருக்கிறார். கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா அவருடைய நூறாவது வயதில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவன் இப்போது வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்துவிட்டான். அவனுக்குக் கானான் நாட்டுப் பெண்ணை மணமுடித்து வைக்க தலைவருக்கு விருப்பமில்லை. அதனால் தான் அவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடி நான் இங்கே வந்தேன்’ வேலையாள் சொல்லச் சொல்ல பெத்துவேல் ஆனந்தமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘நல்ல அழகான, நல்ல குணவதியான ஒரு பெண் வேண்டும் என்பதே தலைவரின் ஆசை. எப்படி ஒரு நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது என்னும் கவலையில் நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது என் உள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அது கடவுள் தந்த எண்ணம் என்றே நினைக்கிறேன். அதன்படி ஊர் எல்லையிலிருக்கும் கிணற்றிலிருந்து எனக்கும் என் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தரும் பெண்ணே தலைவரின் மகனுக்குரியவள் என்று காத்திருந்தேன். அப்போது தான் உமது மகள் வந்தாள். அன்போடு என்னையும், என் ஒட்டகங்களையும் கவனித்தாள். வியப்புடன் விசாரித்தபோது தான் அவள் உங்கள் மகள் என்று தெரிந்தது’ பனியாளன் சொல்லி நிறுத்தினார். பெத்துவேல் ஆச்சரியத்தின் விளிம்பில் நின்றார்.

‘நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சரி.. ஆபிரகாமின் மகன் எங்கே ?’

‘ஆபிரகாமிற்கு தன் மகன் ஈசாக்கை கானானை விட்டு வெளியே அனுப்ப மனமில்லை. எனவே என்னை மட்டுமே அனுப்பினார். நான் மனதுக்குள் உங்கள் மகள் ரபேக்கா தான் ஈசாக்குக்குரியவள் என்று முடிவு செய்து விட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?’

‘நான் என்ன சொல்வது ? இது உங்கள் முடிவோ, எனது முடிவொ அல்ல. இது கடவுளின் முடிவு. ரபேக்காவை ஈசாக்கிற்குத் தர எனக்குச் சம்மதமே’ பெத்துவேல் சொன்னார்.

பணியாளன் மகிழ்ந்தான்.’ மிக்க நன்றி. ரபேக்காவை நான் என்னுடன் அழைத்துக் கொண்டு போகலாமா ?’

‘தாராளமாய் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். ‘ பெத்துவேல் மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார்.

‘என்னுடைய இரண்டாவது கவலையும் தீர்ந்தது’ பணியாளன் புன்னகைத்தான்.

‘இரண்டாவது கவலையா ? ‘ பெத்துவேல் புரியாமல் கேட்டார்.

‘ஆம். தகுதியான பெண்ணைக் கண்டுபிடிப்பது ஒரு கவலை. அதைக் கடவுள் தீர்த்து வைத்தார். அந்தப் பெண் என்னுடன் வர மறுத்தால் என்ன செய்வது என்பது என்னுடைய இரண்டாவது கவலையாக இருந்தது. இப்போது நீங்கள் அதற்கும் சம்மதித்து விட்டீர்கள் அல்லவா ? அதனால் என்னுடைய கவலைகள் எல்லாம் தீர்ந்து விட்டன’ பணியாளன் புன்னகையுடன் சொன்னான்.

‘பெண் உங்களுடன் வர சம்மதித்து விட்டாளா ? ‘ திடீரென்று ஒலித்த குரல் வந்த திசையில் பணியாளன் திரும்பிப் பார்த்தான். அங்கே ரபேக்கா நின்று கொண்டிருந்தாள்.

‘உன் தந்தை சம்மதித்ததனால் நீயும் ஒத்துக் கொள்வாய் என்று நினைத்தேன்…’ பணியாளன் தடுமாற்றத்துடன் சொன்னான்.

‘என்னிடம் நீங்கள் கேட்கவேயில்லையே…’

‘அப்படியானால் … உனக்கு என்னுடன் வர விருப்பம் இல்லையா ?’

‘யார் சொன்னது விருப்பமில்லையென்று ? முழு விருப்பம் தான்’ ரபேக்கா குறும்புடன் சொல்ல, பெத்துவேல் சிரித்தார். பணியாளன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

தான் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த அன்பளிப்புகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு மறுநாள் காலையில் ரபேக்காவையும் அழைத்துக் கொண்டு தலைவரின் இல்லம் திரும்பினார். வீட்டுக்கு வந்து சேர்ந்து ஈசாக்கிடம் ரபேக்காவை ஒப்படைத்தார்.

ஈசாக் ரபேக்காவைப் பார்த்தார். அவளுடைய அழகில் மனதைப் பறிகொடுத்தார். அவளை தன்னுடைய தாயின் கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் மணமுடித்தார். அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்வுடன் ஆரம்பித்தனர்.

7 comments on “கி.மு : வியப்பூட்டும் திருமணம்

 1. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் திருமணம் எப்படி நடந்திருக்கிறது, மணப்பெண் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள், யார் பெண் பார்ப்பது, அந்த சூழல், கலாச்சாரம் எப்படி இருந்திருக்கின்றன – என்பன போன்ற செய்திகளை அறியும் ஆர்வமுடையோருக்கு சுவாரஸ்யமான கதை 🙂

  Like

 2. ///‘பெண் உங்களுடன் வர சம்மதித்து விட்டாளா ? ‘///

  கண்மூடித்தனமாக… “ஆமாம்” என்று ரெபேக்கா தலையாட்டவில்லை… புத்திசாலித்தனம் சொல்லில் இருக்கிறது.

  ( “புத்தியுள்ள பெண், தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்வாள்.” )

  அறிமுகம் அல்லாத ஒரு ஆணுடன் தன் மகளை அனுப்புவதென்பது சாதாரண காரியமா? இறைவன் அவரவர் உள்ளத்தினுள் பேசாவிட்டால் இவையாவும் நடக்குமா?
  இறை அன்புக்கு முன்னால் கலாச்சாரங்கள் தடைகளாய் அமைவதில்லை.

  வாழ்த்துகள்!!!!! நன்றி சேவியர்.

  Like

 3. /இறை அன்புக்கு முன்னால் கலாச்சாரங்கள் தடைகளாய் அமைவதில்லை//

  நன்றி ரெஜி.. வருகைக்கும் கருத்துக்கும் அன்புக்கும் 🙂

  Like

 4. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.