லிஃப்ட் : ரணமும், காரணமும்.

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

வாழ்வின் வலிமிகுந்த தருணங்கள் நமக்கு சகமனிதனின் மீதுள்ள ஆத்மார்த்தமான கரிசனையையும், அன்பையும் வெளிப்படுத்துகின்றன. கூடவே அத்தகைய தருணங்களை எதிர்கொள்ளும் வழிகளையும் நமக்குக் கற்றுத் தருகின்றன, அல்லது எச்சரிக்கை செய்கின்றன.

சமீபத்தில் சென்னையில் லிப்டில் மாட்டி உயிரிழந்த இளைஞனின் சோகம் உயிரை பதை பதைக்க வைக்கிறது. இனிமேல் யாருக்கும் இத்தகைய கொடூர மரணங்கள் நேரக்கூடாது என மனம் நினைக்கும் அதே வேளையில் மனதில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை உணர்வுகளும் மேலிடுகின்றன.

லிப்ட் – ல் நிகழும் இத்தகைய துயர நிகழ்வுகள் மிகவும் அபூர்வமானவை. உதாரணமாக ஒரு கோடி பேர் பயணிக்கும் போது ஒரு நபர் காயமடைகிறார் என்றது அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு புள்ளி விவரம். தற்போதைய நவீன லிப்ட்கள் அதை இன்னும் குறைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் லிப்ஃகள் பாதுகாப்பு இல்லாமலும், அனுமதி இல்லாமலும் இயங்கக் கூடும் எனும் ஐயம் கவலையுறச் செய்கிறது, எச்சரிக்கை உணர்வையும் அதிகரித்திருக்கிறது.
லிப்ட்டைப் பயன்படுத்தும்போது சிலவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

1. தானாகவே திறக்கும் லிப்ட்களில் லிப்ட் கதவு திறக்கவில்லையெனில் எந்தவிதமான பரிசோதனை முயற்சிகளும் செய்யாமல் உரியவர்களிடம் சொல்லி விடுங்கள். அல்லது ஓரமாய் இருக்கும் படிக்கட்டைப் பயன்படுத்துங்கள்.

.
2. நாமாகவே திறக்க வேண்டிய கிரில் கதவுகள் எனில், லிப்ட் அந்த தளத்தில் நிற்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து விட்டு திறக்கவும். திறந்தபின் உள்ளே நுழையும் போதும், பராக்கு பார்த்து விட்டு நுழையாமல் அதீத கவனத்துடன் நுழையுங்கள்.

.
3. மின் தட்டுப்பாடு உள்ள காலங்களில் லிப்டைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்துவது உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் ஏற்றது.

.
4. ஒருவேளை லிப்ட் பாதி வழியில் நின்று விட்டால் பதட்டப்படாதீர்கள். நிச்சயமாக லிப்ட்டுக்குள் அலாரம், அவசர தொலைபேசி ஏதேனும் இருக்கும் அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் கையில் கைபேசி இருந்தால் உதவி நாடுங்கள்.

.
5. எக்காரணம் கொண்டும் வழியில் நின்றுவிட்ட லிப்ட் டில் இருந்து வெளியேறும் வழியை யோசிக்கவே யோசிக்காதீர்கள். உதவி வரும் வரை நிதானமாய் இருங்கள். உதவியும் அதிகாரப்பூர்வ இடத்திலிருந்து வருகிறதா என கவனியுங்கள். காவல்துறை, தீயணைப்புத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வருகிறதா என பாருங்கள். வேடிக்கை பார்ப்பவர்கள் கை நீட்டி இழுக்க முயன்றால் வேண்டாம் என ஒதுங்கிவிடுங்கள்.

.
6. தீ, எச்சரிக்கை மணி போன்றவற்றுக்காக அவசரமாய் வெளியேறுகிறீர்கள் எனில் படிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

.
7. மின் தடை ஏற்பட்டதாய் உணர்ந்தாலும் கவலைப்படாதீர்கள், பெரும்பாலான லிப்ட்களுக்கு தனி ஜெனரேட்டர் வசதி உண்டு என்பதையும், அவசர காலத்தில் முதல் தளம் வரை லிப்டை இறக்கும் மின்சக்தி எப்போதுமே சேமிக்கப்பட்டிருக்கும் என்பதையும் உணருங்கள்.

.
8.  லிப்ட் ஒன்றும் கடவுளல்ல, போனால் மறுபடியும் திரும்ப வரும் எனவே அவசரம் வேண்டாம். ஒவ்வொரு முறை நீங்கள் லிப்டைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்தும் போதும் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

.
9. குழந்தைகள், செல்லப்பிராணிகள் உங்களுடன் வந்தால் அவர்களை மிகவும் கவனமுடன் கண்காணியுங்கள். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் கதவு இடுக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாய் இருங்கள்.

.
10. லிப்ட் டுக்குள் வேறெந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்காதீர்கள். தேவையான பொத்தானை அழுத்திவிட்டு அமைதியாய் கதவை விட்டு தள்ளியே நில்லுங்கள்.

லிப்டைக் கண்பாணிப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். லிப்ட்டில் பயணம் செய்வோர் அவர்களை முழுமையாய் நம்புகிறார்கள் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லிப்டிலுள்ள எச்சரிக்கை மணி, தொலைபேசி, கணினி இணைப்பு, போன்றவற்றை அடிக்கடி சரி செய்ய வேண்டும்.

லிப்டின் பராமரிப்பை வருடாந்தர காப்பீடுக்கு உட்படுத்தி பிழையின்றி பராமரிக்க வேண்டும். மின் தடை உண்டெனில் உடனுக்குடன் லிப்ட் வாசலில் அறிவிப்புப் பலகைகள் போடவேண்டும்.

முடிந்தால் அதிக நெருக்கடியான இடங்களில் ஒரு நபரை பணிக்கு அமர்த்தி லிப்ட்டை இயக்கலாம்.

இன்றைய குடியிருப்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகி விட்டது லிப்ட்டில் பயணிப்பது. அதை பாதுகாப்பானதாய் ஆக்கிக் கொள்ளும் கடமை நம்மிடம் இருக்கிறது. வாழ்க்கை துயர நிகழ்வுகளின் தொகுப்பல்ல. எனவே கவனத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எச்சரிக்கை உணர்வுகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6 comments on “லிஃப்ட் : ரணமும், காரணமும்.

 1. மிகவும் வேதனைதரும் செய்தி. பெற்றோர் எத்தனை கனவோடு வளர்த்திருப்பார்கள் தங்கள் மகனை. இப்படி மரணத்துக்கு வாரிக்கொடுக்கவா?

  Like

 2. சேவிய‌ர் என்னுடைய‌ எச்சரிக்கை துளி.
  1)பொது லிப்டில் அதிக எண்ணிக்கையில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ அளவுக்கும் அதிக‌மாக‌ ஆட்க‌ள் ஏறினால் லிப்ட் க‌த‌வு மூடும் முன்னால் வெளியேறி விடுங்க‌ள். ப‌ல‌ லிப்ட்க‌ள் எச்ச‌ரிக்கை செய்யாம‌ல் மேலேறி பாதியில் நின்று விடுவ‌துண்டு(5 பேர் செல்ல‌ வேண்டிய‌ லிப்டில் 12 பேர் சென்று பாதி வ‌ழியில் ப‌த்து நிமிட‌ங்க‌ள் உள்ளே மூச்சு திண‌றிய‌ ச‌ம்ப‌வ‌ம் என‌க்கு ந‌ட‌ந்த‌து)

  Like

 3. /மிகவும் வேதனைதரும் செய்தி. பெற்றோர் எத்தனை கனவோடு வளர்த்திருப்பார்கள் தங்கள் மகனை. இப்படி மரணத்துக்கு வாரிக்கொடுக்கவா?//

  உண்மை. என் தோழி ஒருத்தி அதே அப்பாட்மெண்டில் குடியிருக்கிறார். சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை 😦

  Like

 4. //பொது லிப்டில் அதிக எண்ணிக்கையில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ அளவுக்கும் அதிக‌மாக‌ ஆட்க‌ள் ஏறினால் லிப்ட் க‌த‌வு மூடும் முன்னால் வெளியேறி விடுங்க‌ள்//

  மிக..மிக..பயனுள்ள முக்கியமான செய்தி. நன்றி பாஷா

  Like

 5. ஒவ்வொரு தடவையும் ஏதாவது நடக்கும் போதுதான் நாம் முழித்துபார்க்கின்றோம்.
  எந்த பொருளையும் பயன்படுத்துவதெற்கென்று ஒரு வரைமுறை இருக்கும், அதை பற்றி நமக்கும், நம்முடன் இருப்பவர்களுக்கும் தெரிந்திருப்பது மிக மிக அவசியம். ஏதவது பிரச்சனை வந்தால் எப்படி கையாளுவது என்றும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

  எங்க ஏரியாவில் நடந்த ஒரு கொடுமையான நிகழ்ச்சி பாருங்கள், ஆறு குழந்தைகளுடன் ஒரு அம்மா வீட்டில் இருக்கும்போது , ஏ.சி-யில் தீபிடித்து அந்த அம்மா மாத்திரம் தான் பலத்த காயங்களுடன் பிழைத்திருக்கிறார்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.