கவிதை : நீ.. உனக்கான வரம்.

நண்பனே…

உன்னைப் பற்றி
நீயேன்
உயர்வாய் நினைக்கத்
தயங்குகிறாய் ?

மாலுமிகளே
சஞ்சலப் பட்டால்
சுக்கான் பிடிப்பது
சுலபமாயிருக்குமா ?

நீ
சொல்லுமிடம் செல்ல
உன் கால்கள்,
நீ
நீட்டுமிடம் நிற்க
உன் கைகள்
பின் ஏன் தனியன் என்று
தாழிக்குள் தாழ்கிறாய் ?

 

பூக்களின் பெருமையை
வண்டுகள் வாசித்துச்
சொல்லும்,
ஆனால் மொட்டை விட்டு
வெளியே வருவது
பூக்களின் பணியல்லவா ?

தானியம் தின்னும் கலை
தாய்க் கோழி தரும்
ஆரம்பக் கல்வியாகலாம்,
ஆனாலும்
அலகு கொத்துதல்
குஞ்சுகளின் கடமையல்லவா?

 

ஒவ்வோர் மரமும்
ஒவ்வோர் வரம்.
மூங்கில்கள் மட்டுமே
முளைக்குமென்றால்
பூமியின் தேவைகள் தீராது.

தூக்கம் வந்தாலே
சவக்குழிக்குள்
படுத்துக் கொள்ளும்
தாழ்வு எண்ணக் குழிகளை
ஏன்
தொடர்ந்து வெட்டுகிறாய் ?

கூடு கலைந்து போனதால்
தூக்கிலிட்டுக் கொண்ட
தூக்கணாங்குருவியை
நீ
தவமிருந்தாலும் பார்க்க இயலுமா ?

வலை கிழிந்து போனதால்
செத்துப் போக
சம்மதிக்கும்
சிலந்தியை
உன்னால் சந்திக்க இயலுமா ?

ஆறாவது அறிவு
ஆராய்வதற்கு.
அழிவின் வழிகளை
ஆயத்தப் படுத்த அல்ல.

நம்பிக்கை கொள்,
சுற்றிக் கிடக்கும்
சாபங்களை விடுத்து
உனக்குள் இருக்கும்
சாரங்களை வெளிக்கொணர்.

நீ
வைக்க மறுக்கும் நம்பிக்கையை
உன்மேல்
வேறு
யார் வைக்க இயலும் ?

நீ
காற்று.
இலைகள் அசையவில்லையென்று
கவலை எதற்கு.

நீ
தண்ணீர்.
ஆழம் போதாதென்ற
தாழ்வு மனம் எதற்கு ?

உன் தோளில்
நீயே கட்டிவைக்கும்
எந்திரக் கற்களை
இப்போதே எடுத்தெறி.

இல்லையேல்
நாளை
மாலையிட வரும் கைகளுக்கு
உன் தோள்கள்
புலப்படாது.

Advertisements

17 comments on “கவிதை : நீ.. உனக்கான வரம்.

 1. சேவியர்,
  சத்தியமான வார்த்தைகள்…

  //இல்லையேல்
  நாளை
  மாலையிட வரும் கைகளுக்கு
  உன் தோள்கள்
  புலப்படாது.//

  இதை இப்படியும் எழுதலாமா?

  //
  இல்லையேல்
  நாளை
  மாலையிட வரும் கைகள்
  மலர் வளையத்தை தேட வேண்டி இருக்கும்.
  //

  முகுந்தன்

  Like

 2. //பூக்களின் பெருமையை
  வண்டுகள் வாசித்துச்
  சொல்லும்,
  ஆனால் மொட்டை விட்டு
  வெளியே வருவது
  பூக்களின் பணியல்லவா ?

  ///

  miga arputhamaana uvamai xavier…….Aaravathu arivu endravudan un kavithai ondru gbagam vanthathu…

  http://ragasiyasnekithan.blogspot.com/2008/05/blog-post_19.html

  Like

 3. //இதை இப்படியும் எழுதலாமா?

  //
  இல்லையேல்
  நாளை
  மாலையிட வரும் கைகள்
  மலர் வளையத்தை தேட வேண்டி இருக்கும்.
  //

  எழுதலாமே 🙂 நன்றி.

  Like

 4. நண்பர் சேவியருக்கு ,

  நனைந்த விறகை பிடித்திருக்கும் கைகளுக்கு தீப்பந்தம் பிடிக்க கற்றுத் தரும் வரிகள் . தோல்விகளின் கூரிய பற்களால் கிழிந்து ஓட்டம் நின்று போன இருதயத்தை, ஒட்ட வைத்து தைத்து மீண்டும் இயங்க வைக்க போராடும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரின் வேலையைச் செய்யும் வரிகள். ஊனமுற்ற நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் மனித மனங்களின் கால்களில் சக்கரத்தை கட்டி விட்டு ஓட வைக்கும் வரிகள் .
  மீண்டும் மீண்டும் ரசித்த வரிகள் :

  கூடு கலைந்து போனதால்
  தூக்கிலிட்டுக் கொண்ட
  தூக்கணாங்குருவியை
  நீ
  தவமிருந்தாலும் பார்க்க இயலுமா ?

  வலை கிழிந்து போனதால்
  செத்துப் போக
  சம்மதிக்கும்
  சிலந்தியை
  உன்னால் சந்திக்க இயலுமா ?

  அருமை சேவியர் !

  அன்புடன்
  குகன்

  Like

 5. அன்பின் குகன்

  //நனைந்த விறகை பிடித்திருக்கும் கைகளுக்கு தீப்பந்தம் பிடிக்க கற்றுத் தரும் வரிகள் . தோல்விகளின் கூரிய பற்களால் கிழிந்து ஓட்டம் நின்று போன இருதயத்தை, ஒட்ட வைத்து தைத்து மீண்டும் இயங்க வைக்க போராடும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரின் வேலையைச் செய்யும் வரிகள். ஊனமுற்ற நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் மனித மனங்களின் கால்களில் சக்கரத்தை கட்டி விட்டு ஓட வைக்கும் வரிகள் //

  வாவ்…. கவிதையை விடப் பிரமாதம் !

  மனமார்ந்த நன்றிகள் குகன். எனக்குப் பிடித்த இரண்டு பத்திகளை நீங்களும் குறிப்பிட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி 🙂

  நன்றி… நன்றி

  Like

 6. “Ungalin sindanai Chidaralgalil, moolgiponen, En paniyai marandu padithuviten, Satru velai paarthaal than sambalam tharuvaargal, aadhalal, nan ithodu en maru mozhigalai niruthikolgiren.”
  Meedum ungal valai othathirku varugai puriven, ” kaalam kidaikum velayil neengalum ungal sindanaigalai en valayil thatti vidungal.

  Nandri…. Vanakkam,…

  Like

 7. //“Ungalin sindanai Chidaralgalil, moolgiponen, En paniyai marandu padithuviten, Satru velai paarthaal than sambalam tharuvaargal, aadhalal, nan ithodu en maru mozhigalai niruthikolgiren.”
  Meedum ungal valai othathirku varugai puriven, ” kaalam kidaikum velayil neengalum ungal sindanaigalai en valayil thatti vidungal.

  Nandri…. Vanakkam,…
  //

  கண்டிப்பாக. மிக்க நன்றி நண்பரே… அடிக்கடி வாருங்கள். பேசுவோம்… உங்கள் தளம் நன்றாக இருக்கிறது, அடிக்கடி வருவேன். நன்றி.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s