அச்சமூட்டும் கச்சா எண்ணை விலை ! : தீர்வு என்ன ?

கச்சா எண்ணையின் விலை உலக சந்தையில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருப்பது உலக நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கட்டுப்படுத்த முடியாத இந்த விலையேற்றத்தினால் உலக அளவில் பொருட்களின் விலை கடுமையாய் அதிகரித்திருப்பதோடு, உணவுத் தேவையை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு உலக உணவுப் பொருள் கையிருப்பும் கதி கலங்க வைத்திருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் 55 டாலர்கள் எனுமளவில் இருந்த ஒரு பாரல் கச்சா எண்ணை இன்று 133 டாலர்கள் எனுமளவில் வரலாறு காணாத விலையேற்றத்துக்கு உட்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் சுமார் 200 டாலர்கள் வரை செல்லலாம் என்று தற்போது “வெந்த புண்ணில் வேலெறியும்” புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளை தனது அதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொள்ள ஆசிக்கும் அமெரிக்காவே இந்த விலையேற்றத்தினால் மிரண்டு போயிருக்கிறது. விலையைக் குறைக்கும் வழி தெரியாமல் வழக்கம் போலவே சீனா, இந்தியா மீது பழியைப் போட்டுக் கொண்டு இருக்கும் கையிருப்பைக் கரைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, கச்சா எண்ணையின் விலையேற்றம் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஓர் வலிமை மிகு எதிரியாக வளர்ந்து நிற்கிறது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய மக்கள் இந்த கச்சா எண்ணையின் விலையேற்றம் பெட்ரோல் விலையையும் உயர்த்தி விடுமோ எனும் பதட்டத்தில் இருக்கின்றனர்.

பெட்ரோல் என்பது மட்டுமே முதன்மையான வாகன எரிபொருளாய் இருக்கும் வரை இத்தகைய தொடர் விலையேற்றங்களும், அச்சமும் தவிர்க்க முடியாததாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனில், இதன் மாற்று வழி தான் என்ன ? கச்சா எண்ணையைச் சார்ந்து இருக்கும் பெட்ரோல், டீசல் எனும் எரிவளிகளைத் தவிர வாகனம் இயக்குவதற்கு என்ன வழி ? இந்த கச்சா எண்ணை விலையேற்றத்திலிருந்து திறமையாய் வெளியேறும் வழி ஏதும் இருக்கிறதா ?

ஒரு வழி அடைந்தால், ஒன்பது வழி திறக்கும் என்பார்கள். அதற்குரிய அணுகுமுறையும், தெளிவான திட்டங்களும் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நியதி.

சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள்

சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இன்றைக்கு சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள் பல சந்தையில் வந்தாலும், இன்னும் அது பரவலாக்கப்படவில்லை. காரணம் அதிலுள்ள சிறு சிறு குறைகளே.

சுற்றுப் புறச் சூழலுக்கு சற்றும் கேடு விளைவிக்காத, இலவசமாய் சூரிய ஒளியைப் பெற்று இயங்கக் கூடிய சூரிய சக்தி வாகனங்கள் இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு சரிவரப் பொருந்தி வரும் என்பதே பொதுவான கருத்தாகும்.

எனினும், இரவில் அதிக தூரம் பயணிக்க முடியாத சிக்கலும், குறைந்த பட்ச சக்தி சேமிக்கும் வசதியும், மழைக்காலம், வெயில் இல்லாத காலங்களில் எப்படி இயங்கும் எனும் அச்சமும் இதை பிரபலப் படுத்தாமல் விட்டு விட்டன.

சரியான ஆராய்ச்சிகளை அரசே முன்னின்று நடத்தி சூரிய ஒளி சக்தியை சரிவரப் பயன்படுத்தும் நவீன வழிகளைக் கண்டறிந்தால் அது நீண்ட கால பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

இயற்கை எரிவளி வாகனங்கள்

இயற்கை எரிவளி வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக அமையக் கூடும். இந்த வளியும் பூமிக்கு அடியிலிருந்து கிடைப்பதே எனினும், பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகக் கிடைக்கிறது.

பெட்ரோலை விட 30 விழுக்காடு குறைவான கரியமில வாயுவை வெளிவிடும் இந்த வளியை சுற்றுப் புறத்தின் நண்பன் எனவும் அழைக்கலாம். பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த விலையில் இந்த வாயு கிடைக்கிறது.

மீத்தேன் அதிக அளவு கொண்ட இந்த வளி, சூரிய ஒளியைப் போலன்றி எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இயற்கை எரிவளியைப் பயன்படுத்தும் வகையில் வாகனங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. இருக்கின்ற வாகனங்களும் பெட்ரோலுக்குப் பதிலாக வளியைப் பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதுவும் இன்னும் பரவலாக்கப்படவில்லை.

இயற்கை எரிவளியின் தேவை, கையிருப்பு, தேவையை சந்திக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  போன்றவை சார்ந்த பரவலான பார்வை அரசுக்கு இருத்தல் அவசியம்.

உதாரணமாக, மலேஷியாவில் இந்த இயற்கை எரிவளி கையிருப்பு பல ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இயற்கை எரிவளியைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுதலை மலேஷிய அரசு ஊக்குவிக்கிறது. இயற்கை எரிவளியினால் இயங்கும் வாகனங்களுக்கு 25 விழுக்காடு சாலை வரி குறைப்பையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

காற்றில் ஓடும் வாகனங்கள்

சோதனை அடிப்படையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெற்றிகரமாக வெள்ளோட்டமிடப்பட்ட நிலையில் இருக்கிறது இந்த காற்றின் அழுத்தத்தில் இயங்கும் வாகன தொழில் நுட்பம்.

இந்த வாகன தொழில் நுட்பம் பரவலாக்கப்பட்டு எல்லா வாகனங்களும் உயர் அழுத்த காற்றில் இயங்கும் நிலை வருமெனில் வாகனங்கள் இயங்க பெட்ரோல் பொருட்கள் வேண்டும் என்பதை முழுமையாய் மாற்றி எழுத முடியும்.

சற்று சிக்கலான தொழில்நுட்பம், ஒருமுறை காற்று நிரப்பினால் சுமார் நூறு கிலோ மீட்டர் வரை மட்டுமே ஓட்ட முடியும், அதிக வேகத்தில் ஓட்ட முடியாது எனும் சிறு சிறு குறைகள் இருந்தாலும் இவையெல்லாம் குறைகளல்ல என்று தோன்றச் செய்கிறது இலவசமாய் கிடைக்கும் காற்று.

சுற்றுப் புறச் சூழலுக்கு சற்றும் கேடு விளைவிக்காத வாகனங்கள் இவை என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கது. இந்த வாகனங்கள் வெளிவிடுவது சில்லென்ற காற்று மட்டுமே.

ஒரு சில ரூபாய்களில் காற்றை நிரப்பி வாகனங்களை இயக்கும் சூழல் வந்தால் வாகன உலகின் மாபெரும் புரட்சியாக அது எழுதப்படும் என்பதில் ஐயமில்லை.

மின் சக்தியில் இயங்கும் வாகனங்கள்

மின் சக்தியில் (பேட்டரியில்) இயங்கும் வாகனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவையும் பெட்ரோல் வாகனங்களுக்கான ஒரு சிறந்த மாற்றாக இருக்க வாய்ப்பு உண்டு.

எனினும் மின் சக்தியை முழுக்க முழுக்க வாகனங்கள் சார்ந்திருக்கும் போது எவ்வளவு மின் சக்தி தேவைப்படும் ? அந்த அளவுக்கு மின் உபரி உற்பத்தி செய்ய முடியுமா எனும் கேள்விகளும் எழுகின்றன.

தேவையைச் சமாளிக்குமளவுக்கு முன் உற்பத்தி செய்ய முடியுமெனில் மின் சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஒரு நல்ல மாற்றாய் இருக்கும் வாய்ப்பு உண்டு.

தற்போதைய மின் சக்தி வாகனங்களில் பல குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக அதிக நேரம் சார்ஜ் செய்ய வேண்டியிருப்பது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்த தூரமே இயக்க முடிவது. இத்தகைய குறைபாடுகள் களையப்படும் நிலை வரும் போது மின் சக்தி வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களின் தேவையை இல்லாமல் செய்து விடலாம்.

தாவர எரிபொருள்

பெட்ரோல் பொருட்களுக்கு சரியான மாற்றாக இருக்கக் கூடும் என கருதப்பட்ட ஒன்று தாவர எரிபொருள். மிகவும் வெற்றிகரமாக மேலைநாடுகளில் தயாரிக்கப்பட்டு வாகனங்களும் அதில் இயங்குகின்றன எனுமளவில் இந்த எரிபொருள் சரியான பணியைச் செய்திருக்கிறது.

எனினும், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்க வேண்டியிருப்பதால் உலகின் உணவுத் தேவைக்கு எமனாக இந்த உத்தி வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

பல்வேறு நாடுகள் பட்டினியில் உழன்று கொண்டிருக்க பல கோடிக்கணக்கான டன் சோளம் எரிபொருளுக்காய் அழிக்கப்படுவது மனித மாண்புக்கு எதிரான செயலாகவே கருதப்படுகிறது.

ஆனால் கழிவுகளிலிருந்தும் எரிபொருள் தயாரிக்க முடியும் என்னும் தகவல் சற்று நம்பிக்கையூட்டுகிறது.

இந்த தாவர எரிபொருள் ஆராய்ச்சியும் உணவுத் தேவையை சிதைக்காத விதத்தில் செயல்படுத்த முடிந்தால் அல்லது உணவுப் பொருள் அல்லாத தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறக்கூடிய சூழல் உருவானால் மிகப்பெரிய வெற்றியாய் அது அமையக் கூடும்.
 

ஏற்கனவே பெட்ரோலும், மின் சக்தியும் என இணைந்த தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடிய வாகனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை எரிபொருள் தேவையை மட்டுப் படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என்பது கவனிக்கத் தக்கது.

பெட்ரோல் எரிபொருள் தவிர்த்த வாகனங்கள் உருவாக்கும் பணிகளும், அதற்கான ஆய்வுகளும் உலக அளவில் பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இருக்கும் வாகனங்களில் எரிபொருளை சிக்கனமாய் செலவழிக்க சில யோசனைகள்.

1. அதிவேகத்தைக் குறையுங்கள். வேகமாய் பயணம் செய்வது உயிருக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் ஆபத்து. வேகமாக வாகனத்தை இயக்குவது, திடீரென வாகனத்தை நிறுத்துவது, வாகனத்தை சட்டென வேகம் கூட்டுவது இவையெல்லாம் உங்கள் எரி பொருளை கரிபொருளாக்கும் காரணிகள்.

.
2. வெயில் வறுத்தெடுக்கும் காலங்களில் எரிபொருளை பகல் பொழுதில் நிரப்பாதீர்கள். அதிகாலையில் தரை குளிராக இருக்கும் போதே சென்று வாகனத்தில் எரிபொருள் நிரப்புங்கள். குளிராய் இருக்கும்போது எரிபொருள் அதன் அடர்த்தியில் இருக்கும், உங்களுக்கு பணத்துக்குரிய எரிபொருள் வீணாகாமல் காருக்குள் விழும்.

.

3. காரின் சக்கரத்தை அடிக்கடி கவனியுங்கள். சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதையும், சக்கரங்கள் சரிவர இருக்கின்றனவா என்பதையும் கவனியுங்கள். இல்லையேல் உங்கள் எரிபொருள் தேவையின்றி வீணாகும்.

.

4. பாதி கொள்கலம் நிரம்பியிருக்கும் போதே வாகனத்தில் எரிபொருள் நிறையுங்கள். இதன் மூலம் நிரப்பும் எரிபொருள் ஆவியாகாமல் தடுக்கப்படும். கொள்கலத்தினுள் முழுவதும் காற்றே நிரம்பியிருக்கும் போது எரிபொருள் நிரப்புவதை விட இது அதிக பயனளிக்கும்.

.

5. காத்திருக்க வேண்டிய நேரத்தில் வாகன இயக்கத்தை நிறுத்தி விடுங்கள். அது ஒரு சில நிமிடங்களுக்கானாலும் பரவாயில்லை.

.

6. முடிந்த அளவுக்கு காரின் கண்ணாடிகளை மூடி வைத்துக் கொண்டு பயணம் செய்யுங்கள். அது காரின் எரிபொருள் தேவையை மட்டுப்படுத்தும்.

.

7. வாகனத்தை சரியானமுறையில் பேணுங்கள். ஆயில் பில்ட்டர் போற்றவற்றை நீண்டகாலம் மாற்றாமல் இருந்தால் எரிபொருள் தேவை அதிகமாகும்.

.

8. தேவையற்ற எடை உங்கள் காரில் இருந்தால் அதை அகற்றுங்கள். சும்மா குப்பைகளை காரின் பின்னால் சேர்த்து வைத்தால் அவற்றுக்கும் சேர்த்து நீங்கள் எரிபொருள் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

.

9. “கார் பூலிங்” என்பது ஒரே அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து வரும் நண்பர்கள் ஒரே காரில் பயணிப்பது. மேலை நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த முறையைப் பயன்படுத்தினால் எரிபொருள் மிச்சம்.

10. பயணங்களைத் திட்டமிடுங்கள். மூன்று நான்கு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால் ஒரே பயணத்தில் அனைத்தையும் முடிக்கப் பாருங்கள். அருகிலுள்ள இடமெனில் நடந்து செல்லலாம். அல்லது பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். அல்லது சைக்கிளில் ஓர் உடற்பயிற்சிப் பயணம் மேற்கொள்ளலாம்.
 

கச்சா எண்ணையின் விலையேற்றம் போன்ற அச்சுறுத்தல்கள் பல வேளைகளில் எதிர்க்க முடியாத அளவுக்கு வலிமையானவை. ஆனால் தரப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்று வழிகளைக் காண்பதும், அதை சமூக நலனுக்காக அர்ப்பணிப்பதுமே மனுக்குலத்தின் தேவையாகும்.

9 comments on “அச்சமூட்டும் கச்சா எண்ணை விலை ! : தீர்வு என்ன ?

 1. சேவியர்,

  நல்ல சிந்தனைகள்.

  எனக்கென்னமோ நாம மீண்டும் மாட்டு வண்டி , காட்டை அடுப்பு அப்படின்னு உபயோக படுத்த ஆரம்பிக்கலாம்னு தோனுது.
  ஆனா முடியாதோ?

  முகுந்தன்

  Like

 2. மாட்டு வண்டி நல்ல யோசனையே ! ஆனா மவுண்ட் ரோட்ல ஸ்பென்ஸர் முன்னாடி பார்க்கிங் கிடைக்குமா தெரியல. கூடவே பொதுவிடத்தில் சாணம் போடக் கூடாது எனும் சட்டம் மாடுகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை…

  ம்….ம்… யோசிக்க வேண்டிய விஷயம் !

  Like

 3. நல்ல அலசல்.உள்ளூர் பயணங்களுக்கு சைக்கிளைக் கூட இன்னும் கொஞ்சம் தரப்படுத்தி வேகத்தை அதிகரிக்கும் தொழில் நுட்பங்களைக் கண்டு பிடிக்கலாம்.நெரிசல்,விபத்துக்கள் குறையும்.ஈராக்கினை சீர்படுத்தலாம்.மாற்றுவழிகளும் அவசியம்.

  Like

 4. பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை குறைத்தால் விலை குறையும். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறும் யோசனையை பரிசிலிக்க ப. சிதம்பரம் பிடிவாதமாக மறுக்கிறார். இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.செவ்வாய்
  அன்று நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்த பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களுக்கு ஏற்படும் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை தடுக்க பெட்ரோலியப் பொருட்கள் மீதான இறக்குமதி மற்றும் எக்சைஸ் வரியை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்தலாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்கம் ஆலோசித்து வருகிறது. இவ்வாறு உயர்த்ினால் எண்ணைய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில் நாள் ஒன்றுக்கு ரூ. 580 கோடி குறையும். ஆனால் அதே நேரத்தில் தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சதவீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருமானம் ரூ. 1380 கோடி. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் ஒரு சதவீதத்தை குறைத்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும். கச்சா எண்ணைய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமானம் கிடைக்கும் தற்போது விற்க்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ. 14.35 ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60 கலால் வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுகிறது

  இதுதான் உண்மை. உங்கள் கட்டுரை மக்களை போராட பாதைக்கு போகாமல் பார்த்துக் கொள்ளும் செயல். சுருக்கமாக சொன்னால் புரட்சியை ‘காய்’ அடிக்கும் செயல்.

  Like

 5. நன்றி lightink, உங்கள் விரிவான கருத்துக்கு. எனது கட்டுரை பெட்ரோலுக்கு மாற்று வழிகள் மட்டுமே. புரட்சிக்கு தடை போடுவதாய் பழி போட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வரி குறைப்பு ஏற்படுத்தும் எதிர் விளைவுகளை ஆராய்ந்து , அதை சமாளிக்கும் வழிகளை அரசு யோசிக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறக்கூடாது என்பதே எல்லோரையும் போல என்னுடைய விருப்பமும் 🙂

  Like

 6. சீனாவிலோ ! ஜப்பானிலோ….அலுவலகம் செல்பவர்கள் மிதிவண்டியை தான் உபயோகிக்கிறார்கள்…ஒரு எல்லைக்குட்பட்டு(குறைந்த பட்சம் 1கி.மீ முதல் அதிக பட்சம் 20கி.மீ) வரை மிதிவண்டியும் அதற்கு மேற்கொண்டு வாகனமும் உபயோகித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.