கவிதை : இரவின் பாதையில்

கைத்தடி உடைந்த
குருட்டுக்கிழவன்போல்
தடுமாறி நகரும் கும்மிருட்டு.

சின்ன வாய்க்காலின் எல்லையில்
தென்னம் ஓலைகளோடு
ஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை.

காலையில் பெய்த மழையில்
தலைக்குளித்து
மாலை வெயிலில் மஞ்சள் பூசி
கருப்புக் கரைத்த காற்றுடன்
தலையசைத்துப் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீள வயல்..

சேற்றுக் குழிகளுக்குள்
குரல்வளை நொறுங்க
கத்திக் கொண்டிருக்கும்
ஈரத்தவளைகள்.

சொட்டுச் சொட்டாய்
தென்னைமரம் உதிர்க்கும்
சேமிப்புத் துளிகளின்
சலங்கைச் சத்தம்.

சுவர்க்கோழிகளின் ரீங்காரத்தில்
தூக்கம் கலைந்து
சுவடு சுவாசித்து அலையும்
எறும்புக்கூட்டங்கள்
வழிமாறிக் கடிக்கும் குத்தூசிச் சின்னங்கள்

ஆங்காங்கே கும்மிருட்டுக் குடிசை
திண்ணைகளில் கூந்தலசைத்துச்
சிரிக்கும்
மண்ணெண்ணை தீபங்கள்.

போர்வைகளைத் துளைக்கும்
சில்மிஷக்காற்று..

கவிதை போல் காதுகளுக்குள்
கூடாரமடித்துக் கிடக்கும்
ஓர் மழைக்காலக் குருவியின்
மழலைப்பாடல்.

கை தொடும் தூரத்தில்
விட்டத்தில் கட்டிய தொட்டிலில்
விரல் மடித்துக் கடித்துக் கிடக்கும்
என் மூன்று மாதக் குழந்தை..

தொட்டில் கயிறின் முனைபிடித்து
படுக்கைக் கரையில்
முந்தானை முனைகள் மெலிதாய்க் கலைய
விரல் தொடும் தூரத்தில்
அழகாய்த் துயிலும் என் வெண்ணிலா.

மழலைக்காய் அவள் இசைக்கும்
தாலாட்டில் தான்
தூங்கிப் போகவேண்டுமென்று
ஆழமாகிப் போன பின்னிரவிலும்
பிடிவாதமாய் விழித்திருக்கிறது
என்
ஒற்றை மனசு.

(கவிதைப் போட்டி ஒன்றில் கவிஞர் பாவண்ணன் அவர்களால் முதல் பரிசுக்குரியதென தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை )

10 comments on “கவிதை : இரவின் பாதையில்

  1. வணக்கம் சேவியார்

    மிக எளிமையான கவிதை
    ஆனால் மனதை வருடும் ஊவமை.
    புதுவை சிவா.

  2. சேவியர்,
    ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் இந்தமாதிரி ஒரு இடத்தில் ஒரு கயிற்று கட்டிலில் படுத்து தூங்கனும்னு ஆசை வந்துவிட்டது. ஹ்ம்ம்……
    முகுந்தன்

  3. தொட்டில் கயிறின் முனைபிடித்து
    படுக்கைக் கரையில்
    முந்தானை முனைகள் மெலிதாய்க் கலைய…

    தூங்கும் போதும் தாய்மையின் பாசத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  4. //வணக்கம் சேவியார்

    மிக எளிமையான கவிதை
    ஆனால் மனதை வருடும் ஊவமை
    //

    மனமார்ந்த நன்றிகள் நண்பரே🙂

  5. //எனக்கும் இந்தமாதிரி ஒரு இடத்தில் ஒரு கயிற்று கட்டிலில் படுத்து தூங்கனும்னு ஆசை வந்துவிட்டது//

    ம்…. அது ஒரு உன்னத அனுபவம்🙂

  6. //தூங்கும் போதும் தாய்மையின் பாசத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    கவிதை வரிகளை நன்றாக ரசிக்கிறீர்கள். நன்றி ஹேமா…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s