கவிதை : நானும், பாட்டியும், நினைவுகளும்.

இப்போதெல்லாம் எனக்கு
பாட்டியின் ஞாபகம்
அடிக்கடி வருகிறது.

கொஞ்சம் அன்புக்காக
எனது சிறு புன்னகைக்காக
ஜீவனுக்குள்
பாசத்தின் ஜென்மத்தைப்
பதுக்கி வைத்திருந்த பாட்டி.

எனக்குத் தெரிந்து
பாட்டியின் நெடும் பயண நேரமே
சந்தைக்கும்
சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்.

கொல்லைப்புறத்தின்
பதனீர்ப்பானைகளுக்கிடையில்
பதியனிடப்பட்டு
பயிரானது தான் அவள் முதுமை!!

சருகுகள் பொறுக்குவதிலும்
சுள்ளிகள் சேகரிப்பதிலும்
ஓலை முடைவதிலுமாய்
அவள் வருடங்கள் முழுவதுமே
விறகுக்காய் விறகாகிப் போனது.

கிழக்குப் பக்கத்தில்
கட்டிவைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டைதேடி முட்டைதேடி
முடிந்துபோகும் காலைகள்.

சமையல் கட்டில்
சருகுக் கூட்டில்
கரிசல் காட்டில்..
இப்படியே மங்கிப் போகும்
மாலைப் பொழுதுகள்.

மண்ணெண்ணெய் விளக்கு
வெளிச்சத்தில்
விட்டில்களை விரட்டி விரட்டி
பாக்கு இடிப்பதிலேயே
முடிந்து போகும் இரவுகள்..

நினைவிருக்கிறது.
சின்னவயதில்
ஆசையாய் நெய் முறுக்கு தந்து
என்னைத் தழுவும் போதெல்லாம்
வழியும்
வெற்றிலைக்கறை கண்டு
விருப்பமின்றி ஒதுங்கியிருக்கிறேன்.

இப்போதெல்லாம்
சாப்பிட்டாயா ?
என்று கேட்கும் பாட்டியின் குரல்
அவ்வப்போது எதிரொலிக்கும்
ஆழ்மனதின் ஏதோ ஒரு எல்லையிலிருந்து.

பாட்டியிடம்
சாப்பிட்டாயா என்று
பாசத்தோடு ஒரே ஒருமுறை
கேட்கத் தோன்றுகிறது.

கால ஓட்டத்தில் ஏதேதோ மாற்றங்கள்
பதனீர் சட்டிகள்,
சருகு அடுப்புகள்,
மண்ணெண்ணெய் விளக்குகள்,
எல்லாம்..
எல்லாம் இறந்து விட்டன.
என் பாட்டியும்.

 

21 comments on “கவிதை : நானும், பாட்டியும், நினைவுகளும்.

  1. //கால ஓட்டத்தில் ஏதேதோ மாற்றங்கள்
    பதனீர் சட்டிகள்,
    சருகு அடுப்புகள்,
    மண்ணெண்ணெய் விளக்குகள்,
    எல்லாம்..
    எல்லாம் இறந்து விட்டன.
    என் பாட்டியும்.//

    ரொம்ப நல்லா இருக்கு சேவியர்,
    எனக்கும் என் பாடி ஞாபகம் வந்துவிட்டது.

    எப்பொழுதும் என் அம்மாவிடம் அவனை திட்டாதே என்று சண்டைக்கு போவாள்.நான் சண்டை போட்டாலும் அதை பெரிதாக எடுத்துகொள்ள மாட்டாள்.

    என் பேரன் ரொம்ப பெரியாளா வருவான், கை நிறைய சம்பாதிப்பான் என்று அம்மாவிடம் சொல்லுவாள்.

    ஆனால் என் முதல் வேலை கிடைத்து சில நாட்களிலேயே உடம்புக்கு முடியாமல் போய்,மருத்துவமணையில் சேர்ந்து,ஒரு சில நாட்களிலேயே உயிர் துறந்தாள்.

    நான் சம்பளம் வாங்கும் போது அவள் இல்லை.

    இன்றும் என் அம்மா சொல்லுவாள், நீ நன்றாக இருப்பதை பார்க்க
    அவளுக்கு கொடுத்து வைக்க வில்லை என்று,
    நான் சொல்லுவேன் “எனக்கு கொடுத்து வைக்கவில்லை”

    பாட்டி….

    Like

  2. //எனக்கும் என் பாடி ஞாபகம் வந்துவிட்டது.//

    மன்னிக்கவும் ,
    எனக்கும் என் பாட்டி ஞாபகம் வந்துவிட்டது.

    Like

  3. நான் என் பாட்டியை பார்த்ததில்லை… என்னை வளர்த்தது என் தாத்தா தான்… இப்பொழுது அவர் இல்லை…உங்கள் கவிதை எனக்கு அவர் நினைவை அழத்து வந்து கவலைக் கொள்ளச் செய்துவிட்டது… சிறப்பான கவிதை

    Like

  4. //இன்றும் என் அம்மா சொல்லுவாள், நீ நன்றாக இருப்பதை பார்க்க
    அவளுக்கு கொடுத்து வைக்க வில்லை என்று,
    நான் சொல்லுவேன் “எனக்கு கொடுத்து வைக்கவில்லை”

    //

    உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள் முகுந்தன். நான் ஒருமுறை பாட்டியை விளையாட்டாகத் திட்டி விட்டேன். அதற்காய் பாட்டி சமையலறையில் நின்று “என்னையா அப்படித் திட்டினாய்” என கேட்டு அழுதார். இன்றும் என் நினைவுகளின் இடையே மாறாத வடுவாகவும் ஈரமாகவும் இருப்பது அந்த நினைவு தான்.

    ஏனெனில் பாட்டி உலகில் எல்லாவற்றையும் விட அதிகமாய் என்னை நேசித்தார் என்பது என் நம்பிக்கை. இன்றைக்கு பாட்டி இருந்திருந்தால் எப்படியெல்லாம் வைத்திருக்கலாம் எனும் நினைவுகள் மட்டுமே அவ்வப்போது அலைக்கழிக்கும்.

    Like

  5. //நான் என் பாட்டியை பார்த்ததில்லை… என்னை வளர்த்தது என் தாத்தா தான்… இப்பொழுது அவர் இல்லை…உங்கள் கவிதை எனக்கு அவர் நினைவை அழத்து வந்து கவலைக் கொள்ளச் செய்துவிட்டது… சிறப்பான கவிதை//

    நன்றி விக்னேஷ்.

    Like

  6. சிறுநீரகக் கோளாறாலும் எலும்பு முறிவினாலும் வாழ்வின் கடைசி மூண்றாண்டுகள் படுக்கையிலேயே இருந்தார்கள் என்னுடைய பாட்டி. சிறுவயது முதல் எத்தனையோ முறை அவர்களிடம் கோபித்துக் கொண்டாலும் எங்கள் இருவருக்குமான அன்பு என்பது எப்போதும் குறைந்ததில்லை.

    என்னுடைய இருபதாவது வயதில் அவர்கள் காலமாகிவிட்டார்கள். சின்னச் சின்ன சண்டைகள் இருந்தபோதும் அவர்களுடைய இறுதிக்காலத்தில் அவர்களுக்குச் செய்த பணிவிடைகள் (நடக்க முடியாத அவரை மருத்துவமணைக்கு தூக்கிச் செல்வது, வெளியிடங்களுக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வது, சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்தது உள்ளிட்டவை) என்னைக் குற்ற உணர்விலிருந்து காப்பாற்றியுள்ளது.

    குழந்தைகள் மட்டுமல்ல, நம் குடும்பத்தின் முதியவர்களும் கூட கொண்டாடத் தக்கவர்கள்தான்.

    Like

  7. //குழந்தைகள் மட்டுமல்ல, நம் குடும்பத்தின் முதியவர்களும் கூட கொண்டாடத் தக்கவர்கள்தான்.//

    ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

    Like

  8. என் அம்மம்மாவை(பாட்டி)ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.என் அம்மம்மா கொஞ்சம் பொல்லாதவர்.கடு கடுவென்றே இருப்பா.நல்லதே செய்வா.கண்டிப்பும் கூட.நான் பூப்படந்த நேரம் அவர் தந்தால் மட்டுமே பயத்தில் சாப்பிடுவேன்.ஒரு நாள் முட்டை நல்லெண்ணெய் அவர் சேலையில் அப்படியே துப்பிவிட்டு பயந்தே போனேன்.ஓ…நடந்ததே வேறு.என்னை அணைத்துப் புத்தி சொல்லி திரும்பவும் சாப்பிட வைத்தார்.இப்படிப் பல என் தாத்தா அம்மம்மா ஞாபகங்கள்.வாழ்வின் வழிகாட்டிகள் அவர்கள்.மறந்தால் எங்களுக்கு வாழ்வு இல்லை.

    Like

  9. //நடக்க முடியாத அவரை மருத்துவமணைக்கு தூக்கிச் செல்வது, வெளியிடங்களுக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வது, சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்தது உள்ளிட்டவை//

    மனதைத் தொட்டு விட்டீர்கள்.

    Like

  10. ////குழந்தைகள் மட்டுமல்ல, நம் குடும்பத்தின் முதியவர்களும் கூட கொண்டாடத் தக்கவர்கள்தான்.//

    ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

    //

    மிகச் சரியான வார்த்தை. மனித நேயத்திலிருந்து முளைத்திருக்கிறது.

    Like

  11. //Very nice.
    அழவச்சிட்டீங்க…//

    நன்றி சகோதரி. அழுகையே உணர்த்துகிறது.
    மழலையின் அழுகை உயிரின் இருப்பை உணர்த்துவது போல,
    பெரியவர் அழுகை மனிதத்தின் இருப்பை உணர்த்துகிறது.

    Like

  12. //எல்லாம் இறந்து விட்டன.
    என் பாட்டியும்.//

    Unlike westerners, we are not good at showing love explicitly.
    But our women know it afterall.

    Nice kavithai Xavi.

    Like

  13. //எல்லாம் இறந்து விட்டன.
    என் பாட்டியும்.

    Unlike westerners, we are not good at showing love explicitly.
    But our women know it afterall.

    Nice kavithai Xavi.

    //

    நன்றி.

    Like

  14. //இப்போதெல்லாம்
    சாப்பிட்டாயா ?
    என்று கேட்கும் பாட்டியின் குரல்
    அவ்வப்போது எதிரொலிக்கும்
    ஆழ்மனதின் ஏதோ ஒரு எல்லையிலிருந்து.//

    ‘சாப்பிட்டாயா?’ எனக் கேட்கும் குரல்களெல்லாம் கூட பாட்டியின் குரலாகத்தான் ஒலிக்கிறது.
    பாட்டிகள் ஒரு யௌவனக்காலத்தைச் சுருட்டி நம் கையில் தந்துவிட்டு நகருகிறார்கள் ஞாபகங்களிலெல்லாம் நிரம்பி வழிந்தவண்ணம்…

    கவிதை அழகு நண்பரே..!

    Like

  15. //‘சாப்பிட்டாயா?’ எனக் கேட்கும் குரல்களெல்லாம் கூட பாட்டியின் குரலாகத்தான் ஒலிக்கிறது.
    //

    அருமை. இன்னொரு அருமையான கோணம். நன்றி !

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.