கி.மு : இரு சகோதரர்களின் கதை

 
ஈசாக் ஆபிரகாமின் மகன். அவர் தன்னுடைய நாற்பதாவது வயதில் ரபேக்காவை மணந்தார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஈசாக் இறை விசுவாசத்தில் தந்தை ஆபிரகாமைப் போலவே சிறந்து விளங்கினான். கடவுளுக்குப் பலிகள் செலுத்துவதிலும், அவருக்குப் பயந்து நடப்பதிலும் அவர் ஆபிரகாமைப் போலவே இருந்தார். கடவுள் ஈசாக்கிற்கு ஏராளமான செல்வங்கள் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார் ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அது குழந்தைச் செல்வம்.

தனக்குக் குழந்தை இல்லையே என்று வருந்தினாலும் ஈசாக் கடவுளின் வழியை விட்டு விலகவில்லை. அவரை மட்டுமே நம்பி அவரிடம் தன்னுடைய வேண்டுதல்களைச் சொல்லி வந்தார். ஈசாக்கின் உறுதியான நம்பிக்கையைக் கண்ட கடவுள் மனமிரங்கி அவனுக்குக் குழந்தைச் செல்வம் கொடுப்பதென முடிவுசெய்தார். ரபேக்கா கர்ப்பமானாள்.

நீண்டகாலமாகக் கருவுறாமல் இருந்த ரபேக்கா மிகவும் மகிழ்ந்தாள். ஈசாக்கும் தன் குழந்தை பிறக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ரபேக்காவின் கர்ப்பத்தில் உருவானதோ இரட்டைப் பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளும் கருப்பைக்கு உள்ளேயே சண்டையிடத் துவங்கிவிட்டார்கள். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருப்பதை உணர்ந்த ரபேக்கா மிகவும் வருந்தினாள். யாருக்கும் இப்படியெல்லாம் நிகழ்ந்ததில்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ? என அழுது புலம்பினாள். தன்னுடைய கவலையை எல்லாம் கடவுளின் காலடியில் வைத்தாள்.

ஒருநாள் அவள் கடவுளிடம் கண்ணீரோடு மன்றாடிக் கொண்டிருக்கையில் கடவுள் அவளிடம் பேசினார்.

‘ரபேக்கா… கலங்காதே. உன்னுடைய கர்ப்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சண்டையிடுவது கடவுள் செயல்தான் எனவே கவலைப்படாதே’

‘கடவுளே, பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பது தானே நல்லது, அவர்களை கருவிலேயே மோதிக் கொள்ளச் செய்கிறீரே ? அதற்குக் காரணம் என்ன ?’ ரபேக்கா கடவுளிடம் கேட்டாள்.

‘அவர்கள் மூலமாக இரண்டு பெரும் இனங்களைத் தோற்றுவிக்கப் போகிறேன். உன் கருவில் இருப்பது இரண்டு உயிர்கள் அல்ல. இரண்டு மிகப்பெரிய இனங்கள் என்பதை உணர்ந்து மகிழ்ந்திரு. இன்னும் ஒன்று சொல்கிறேன், நடைமுறை வழக்கத்துக்கு மாறாக உன்னுடைய மூத்த மகன் இளைய மகனுக்குப் பணிவிடை செய்பவனாக இருப்பான்’ கடவுள் சொன்னார்.

மூத்தமகன் இளையவனுக்குப் பணிந்திருப்பானா ? அதெப்படி ? ரபேக்கா குழம்பினாள். அந்தக் காலத்தில் மூத்த மகனுக்குத் தான் அனைத்துவிதமான வரங்களும், சொத்துக்களும் சொந்தமாகும். அவனுக்கு தலைமகன் உரிமை என்று ஒன்று கிடைக்கும். அதன்படி தந்தை மூத்த மகனின் தலையில் தான் தன்னுடைய கையை வைத்து வாழ்த்துவார். தந்தை என்னவெல்லாம் வாழ்த்துவாரோ அவை அனைத்தும் அந்த மகனுக்குக் கிடைக்கும். மூத்தவன் வீட்டின் வழிகாட்டியாக இருப்பான் இளையவன் மூத்தவனுக்குப் பணிந்து இருப்பான். இதுவே வழக்கம். அப்படியிருக்கக் கடவுள் மூத்தமகனுன் தான் இளையவனுக்குப் பணிந்திருப்பான் என்கிறாரே என்று ரபேக்கா ரொம்பவே குழம்பிப் போனாள். ஆனாலும் அமைதி காத்தாள்.

மாதங்கள் ஓடின, ரபேக்காவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. நல்ல நிறத்திலும் உடல் முழுதும் ரோமத்துடனும் முதல் குழந்தை பிறந்தது. இரண்டாவது மகன் மூத்தவனுடைய குதிகாலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். அதைக் கண்ட ரபேக்கா வியந்தாள். கருவறைச் சண்டை வெளியிலும் தொடரப் போகிறது என்பதை உணர்ந்தாள்.

அவர்கள் மூத்த மகனுக்கு ஏசா என்றும், இரண்டாவது மகனுக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.

இருவரும் வளர்ந்தார்கள். மூத்தவன் ஏசா, வேட்டையில் மிகச் சிறந்தவனாக விளங்கினான். எங்கும் அலைந்து திரிந்து வேட்டையாடுவான். அவனுடைய வீரத்திற்காகவும் அவனுடைய திறமைக்காகவும், அவன் பிடித்துவரும் மிருகங்களின் சுவைக்காகவும் தந்தை அவனிடம் மிகவும் அன்புள்ளவனாய் இருந்தார்.

இளையவன் யாக்கோபு, வீட்டிலேயே தாயின் அருகிலேயே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பான். எப்போதும் வீட்டிலேயே இருக்கும் இளையமகன் மேல் தாய் ரபேக்கா மிகவும் அன்பு கொண்டிருந்தாள்.

ஒருநாள் ஏசா, வேட்டையாடி மிகவும் களைத்துப் போய் வீடு திரும்பினான். அவனால் நிற்கக் கூட முடியவில்லை. வீட்டில் யாக்கோபு மணமான கூழ் தயாராக்கிக் கொண்டிருந்தான்.
ஏசா அவனிடம்’ யாக்கோபு என்ன செய்கிறாய் ?’

‘நான் கூழ் தயாராக்கிக் கொண்டிருக்கிறேன். மணம் வரவில்லையா ?’ யாக்கோபு புன்னகையுடன் கேட்டான்.

‘வருகிறது… வருகிறது. எனக்கும் கொஞ்சம் கூழ் கொடு நான் பசியினால் செத்துக் கொண்டிருக்கிறேன், என் உடலில் வலிவில்லை’ ஏசா சொன்னதும் யாக்கோபு மனதுக்குள் ஒரு தந்திரத் திட்டம் தீட்டினான்.

‘நீ தான் வேட்டையில் மன்னனாயிற்றே. இன்றைக்கு எதுவும் கிடைக்கவில்லையா ? இல்லை சமைத்து உண்ணுமளவுக்குப் பொறுமை இல்லையா ?’ யாக்கோபு ஒரு தந்திரச் சிரிப்புடன் கேட்டான்.

‘எனக்கு மிகவும் பசிக்கிறது. இப்போது பேசக் கூட வலுவில்லை. சிறிது கூழ் கொடு’ ஏசா கேட்டான்.

‘சரி. நான் உனக்குக் கூழ் தருகிறேன். பதிலுக்கு நீ என்ன தருவாய் ?’

 

‘என்ன வேண்டுமோ கேள் தருகிறேன். எனக்கு இப்போது உணவு தான் முக்கியம்’ ஏசா சொன்னான்.

‘சரி.. உன்னுடைய தலைமகனுக்குரிய உரிமையை எனக்குத் தந்துவிடு. பின்பு இந்த மணமும், சுவையும் நிறைந்த கூழை நீ பசியாற உண்டு இளைப்பாறு’ யாக்கோபு விஷயத்துக்கு வந்தான்.

‘சாவதை விட மேல் என்னுடைய தலைமகன் உரிமையை உனக்குத் தருவது தான். இனிமேல் எனக்குத் தலைமகன் உரிமை வேண்டாம். நீயே வைத்துக் கொள்’ ஏசா சொன்னான்.

‘அப்படிச் சொன்னால் முடியாதே. நீ என்னுடைய தலையில் கைவைத்து சத்தியம் செய்து தரவேண்டும்’ யாக்கோபு கேட்க, ஏசா யாக்கோபின் தலையின் மீது தன் கைகளை வைத்து ஆணையிட்டான். ஏசாவின் தலைமகன் உரிமை கைமாறியது.

ஏசா தன்னுடைய நாற்பதாவது வயதில் இத்தியர் இனத்தைச் சேர்ந்த யூதித், பஸ்மாத் என்னும் இரண்டு பெண்களை மணந்தார். அவர்கள் ஏசாயின் பெற்றோருடன் ஒத்துப் போகவில்லை. ஏசாயின் பெற்றோர் இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்தார்கள்.

வருடங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. ஈசாக் தன்னுடைய முதுமைக்குள் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையும் மங்கத் துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்த பார்வை ஒரு கட்டத்தில் முழுமையாகப் போய்விட்டது.

ஒருநாள் அவர் தன்னுடைய மூத்தமகன் ஏசாயை அழைத்து, ‘மகனே நான் மிகவும் பலகீனனாகி விட்டேன். எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என்னும் நிலையில் கிடக்கிறது என்னுடைய உய்யிர். என்னுடைய பார்வையும் போய்விட்டது. உடலிலுள்ள வலுவும் போய்விட்டது எனவே நான் மூத்த மகனாகிய உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறேன். அதற்கு முன்னால் ஒருமுறை உன் கையால் வேட்டையாடிக் கொண்டு வரும் விலங்கை உண்ணவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. எனவே நீ வேட்டைக்குப் போ. நல்ல ஒரு விலங்கை வேட்டையாடி அதைச் சமைத்து எனக்குத் தா. அதை உண்டபின் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்றார்

‘அப்படியே செய்கிறேன் அப்பா…’ ஏசா ஈசாக்கிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய வேட்டைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வேட்டையாடப் புறப்பட்டான்.

ஏசாவிடம் ஈசாக் சொன்னதையெல்லாம் மறைவிலிருந்து ரபேக்கா கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஏசாவிற்கு எல்லா வரங்களும் கிடைப்பதை அவள் விரும்பவில்லை. தான் மிகவும் நேசிக்கும் யாக்கோபுவிற்குத் தான் வரங்கள் கிடைக்கவேண்டும். அதற்காக தவறான வழியில் கூட செல்லலாம் என்று அவளுடைய மனம் யோசித்தது.

அவள் யாக்கோபை அழைத்து,’மகனே உனக்கு விஷயம் தெரியுமா ? உன் தந்தை ஏசா விற்கு ஆசிகளை வழங்கப் போகிறாராம்’ என்றாள்

‘அப்படியா ? ‘ யாக்கோபு என்ன செய்வதென்று தெரியாமல் கேட்டார்.

‘ஆமாம். ஏசா வேட்டையாடிக் கொண்டு வரவேண்டுமாம். அதை உண்டதும் அவர் அவனுக்கு ஆசிவழங்குவாராம். அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டேன்’

‘இப்போது ஏசா எங்கே ?’

‘அவன் வேட்டையாடுவதற்காகப் போயிருக்கிறான். அவன் வந்ததும் அவனுக்கு ஆசிகள் கிடைக்கப் போவது உறுதி. அவன் திரும்பி வரும் நேரத்துக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்’ ரபேக்கா சொன்னாள்.

‘ஏதாவது என்றால் ? ‘

‘உன் தந்தையை ஏமாற்றியாவது உனக்கு வரங்கள் வாங்கித் தரவேண்டும் என்று விரும்புகிறேன்’

‘அது எப்படியம்மா முடியும் ?’ யாக்கோபு குழம்பினார்.

‘என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. நீ போய் மந்தையிலிருந்து கொழுத்த இரண்டு வெள்ளாடுகளைப் பிடித்துக் கொண்டு வா. நான் அவற்றைச் சமைத்துத் தருகிறேன். ஏசாவிற்குப் பதிலாக நீ தந்தையிடம் போ’

‘என் குரலை அவர் கண்டுபிடிக்க மாட்டாரா ? அவருக்கு கண்தான் பழுதே தவிர காது நன்றாகக் கேட்குமே ?’

‘குரலை வைத்தெல்லாம் அடையாளம் காணமாட்டார். நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே’

‘சரி, குரல் விஷயத்தை விட்டு விடுவோம். ஏசா க்கு உடல் முழுதும் ரோமம் இருக்கும். எனக்கு உடம்பில் ரோமமே கிடையாதே. அவர் சும்மா தொட்டுப் பார்த்தால் கூட குட்டு வெளிப்பட்டுவிடும். அப்பாவுக்கு என்னை அடையாளம் தெரிந்தால் வரத்துக்குப் பதிலாக சாபம் கிடைக்கும் இல்லையா ?’யாக்கோபு கேட்டார்

‘பயப்படாதே. அவர் ஏதாவது சாபமிட்டால் அந்த சாபத்தை நான் வாங்கிக் கொள்கிறேன். நீ கொண்டு வரும் ஆட்டின் தோலை எடுத்து உன்னுடைய உடம்பில் கட்டி வைத்துக் கொள். அப்போது அவர் தொட்டுப் பார்த்தால் கூட ரோமம் இருக்கும் இல்லையா ?’ ரபேக்காவின் யோசனையைக் கேட்ட யாக்கோபுவிற்குத் துணிச்சல் வந்தது.

‘இதோ உடனே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைப் பிடித்து வருகிறேன். ஏசா வருவதற்குள் நாம் காரியத்தை முடித்தாக வேண்டும்’ யாக்கோபு பரபரத்தார்.

ஓடிப் போய் மந்தையிலிருந்து கொழுத்த வெள்ளாடுகள் இரண்டைப் பிடித்து வந்து தாயிடம் கொடுத்தார். தாய் அதை மிகவும் சுவையாய் சமைத்தாள்.

பின் யாக்கோபின் கைகளிலும், கழுத்திலும் வெள்ளாட்டின் தோலை வைத்துக் கட்டினாள். ஏசாவின் உடை ஒன்றை எடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். பின் சமைத்தவற்றை யாக்கோபிடம் கொடுத்து தந்தையிடம் அனுப்பி வைத்தாள்.

யாக்கோபு நேராகத் தந்தையிடம் சென்றார்,’ அப்பா.. நான் ஏசா வந்திருக்கிறேன்’

 

‘என்ன மகனே என்ன விஷயம் ? உடனே வந்திருக்கிறாய் ?’

‘வேட்டையாடி உங்களுக்கு அதைச் சமைத்தும் கொண்டு வந்திருக்கிறேன்’ யாக்கோபு சொன்னார்.

‘அதற்குள் வேட்டையாடி, சமைத்தும் முடித்து விட்டாயா ? இதெப்படி சாத்தியம். நீ போய் கொஞ்சம் நேரம் தானே ஆகிறது’ ஈசாக் கேட்டான்.

‘வேட்டையாடுவதற்கு நிறைய நேரமாகும் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் கடவுள் எனக்கு நல்ல ஒரு விலங்கைக் கொடுத்தார். விரைவில் என் வேட்டை முடிவதற்கு அவருடைய கருணை தான் காரணம்’ யாக்கோபு சொன்னார்.

‘உன் குரல் யாக்கோபின் குரல் போல் இருக்கிறதே’ ஈசாக் சொல்லதும் யாக்கோபு உள்ளுக்குள் நடுங்கினார்.

‘ஏனப்பா சந்தேகம். இதோ உணவு.. உண்ணுங்கள். ‘ யாக்கோபு பாத்திரத்தை ஈசாக்கின் கைகளில் வைத்தான்.

ஈசாக் சந்தேகம் நீங்காதவராக யாக்கோபின் கைகளைத் தடவிப் பார்த்தார். நிறைய ரோமம் இருந்தது.
‘உன் உடம்பெல்லாம் முடி இருக்கிறது. ஆனால் குரல் யாக்கோபின் குரல் போல தான் இருக்கிறது’ ஈசாக் மீண்டும் சந்தேகப் பட்டார்.

‘என்ன அப்பா ? இப்படி நம்பிக்கையில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் தானே போய் வேட்டையாடி வரச் சொன்னீர்கள் ? வேட்டையாடிக் களைத்துப் போய் வந்திருக்கிறேன். குரலில் கூட கொஞ்சம் வித்தியாசம் தெரிவது சகஜம் தானே. முதலில் உண்ணுங்கள்’ என்றான் யாக்கோபு.

ஈசாக் உண்டான். உண்டு முடித்தபின்,’ உணவு மிகவும் சுவையாக இருக்கிறது மகனே. வா.. என்னருகில் வந்து எனக்கு ஒரு முத்தம் கொடு’ ஈசாக் சொன்னார்.

யாக்கோபு அருகில் சென்று தந்தையை முத்தமிட்டான். அப்போது ஈசாக் அவனுடைய ஆடையை முகர்ந்து பார்த்தான். யாக்கோபின் தாய் தந்திரமாய் ஏசாவின் ஆடைய அணிவித்து அனுப்பியிருந்ததால் ஈசாக்கிற்கு ஏசாயின் வாசனையே வந்தது. உடனே தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தூரப் போட்டு விட்டு மகனுக்கு ஆசிகளை வழங்கத் துவங்கினார்.

‘மகனே உன்னைக் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார். நீ உன்னுடைய இனத்தினர் அனைவருக்கும் தலைவனாக இருப்பாய். உன் சகோதரன் உனக்குப் பணிந்திருப்பான். நீயே எல்லோரையும் விட முதன்மையானவனாய் இருப்பாய். உன்னை வாழ்த்துவோருக்கு வாழ்த்தும், சபிப்போருக்கு சாபமும் வந்து சேரும். நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய்’ ஈசாக் தன் மகன் ஏசா என்று நினைத்து யாக்கோபை வாழ்த்தினார்.

‘உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தந்தையே…’ யாக்கோபு மிகவும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகன்றான். நடப்பதையெல்லாம் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த ரபேக்கா மிகவும் ஆனந்தமடைந்தாள். அவள் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

சிறிது நேரம் சென்றபின் ஏசா வந்தான். கையில் வேட்டையாடிச் சமைத்த விலங்கின் கறி !
ரபேக்காவும், யாக்கோபும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏசா நேராக தன் தந்தையிடம் சென்றான்.

‘அப்பா… ‘

‘யாரது ?’

‘நான் தான் அப்பா, உங்கள் மூத்த மகன் ஏசா ? என் குரல் உங்களுக்குப் புரியவில்லையா ?’

‘ஐயோ மகனே…. ‘ ஈசாக்கின் குரல் நடுங்கியது.

‘என்ன தந்தையே.. குரல் நடுங்குகிறது. இதோ உம்முடைய கட்டளைப்படி நான் வேட்டையாடி உணவு சமைத்து உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இதை ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசி வழங்குங்கள்’

‘ஏமாந்து விட்டேன் மகனே… ஏமாந்து விட்டேன்’ ஈசாக் புலம்பினார்.

‘ஏமாந்து விட்டீர்களா ? யாரிடம் அப்பா ? புரியவில்லையே ?’

‘உன் தம்பி யாக்கோபு தான் என்னை ஏமாற்றி விட்டான்… அவன் உன்னைப் போல வேஷமிட்டு வந்து என்னிடமிருந்து எல்லா ஆசிகளையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டானே. அவனே எஜமானனாய் இருப்பான் என்றும் ஆசி வழங்கி விட்டேனே. கடவுளே… தப்பு செய்து விட்டேனே ‘ ஈசாக் தொடர்ந்து புலம்பினார்.

ஏசா அதிர்ந்தான். ‘ என்னப்பா இப்படிச் சொல்கிறீர்கள் ? எல்லா ஆசிகளையும் அவனே வாங்கி விட்டானா ?  எனக்கும் அதே ஆசிகளை வழங்குங்கள் நானும் அவனைப் போல வளம் பெற வேண்டும்’ ஏசா பதட்டமாய்ச் சொனான்.

‘ இல்லை மகனே. அந்த ஆசி ஒருமுறை தான் வழங்கப் பட வேண்டும். என்னிடம் வேறு ஆசிகளும் இல்லை. நான் இப்போது என்ன செய்வது ? நீ அவனுக்குப் பணிந்திருக்கத் தான் வேண்டும். என்னை மன்னித்து விடு’ ஈசாக் கலங்கினார்.

தன்னை ஏமாற்றிய யாக்கோபுவின் மீது ஏசா கடும் கோபமடைந்தான். ‘ஒருமுறை என்னுடைய தலைமகன் உரிமையைத் தந்திரமாய்ப் பறித்தான், இப்போது எனக்கான ஆசிகளையும் அபகரித்துக் கொண்டான். அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என கொக்கரித்தான்.

இதைக்கேட்ட தாய் பயந்து போய் யாக்கோபை தன்னுடைய சகோதரன் இருக்கும் ஆரான் தேசத்துக்கு தப்பியோடுமாறு அவசரப்படுத்தினாள். யாக்கோபு அங்கிருந்துத் தப்பியோடினான்.

அண்ணன் ஏசாவிடமிருந்து தப்பியோடிய யாக்கோபு ஆரான் தேசத்தில் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பின் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

ஏசா சொந்த ஊரில் நிறைய செல்வம், ஏராளமான கால்நடைகள் என மிகவும் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். ஏராளமான வேலையாட்களும் அவரிடம் இருந்தார்கள்.

ஊரை நெருங்கியபோது தான் யாக்கோபிற்கு தான் தன் அண்ணன் ஏசாயிடம் சண்டையிட்டதும், துரோகம் இழைத்ததும் நினைவுக்கு வந்தது. ‘ அவ்வளவு தான் நாம் தொலைந்தோம். என் குடும்பத்தினர் அனைவரையும் ஏசா கொன்று என் சொத்துக்களையும் அபகரித்துவிடுவான். ‘ என பயந்து நடுங்கினார். ஏதாவது செய்து தன் அண்ணனின் கோபத்தைத் தணிக்கவேண்டும் என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டார்.

அவர் தன்னுடைய பணியாட்களை அழைத்து,’ என் அண்ணன் கண்டிப்பாக என்மீது கடுமையான கோபத்தில் இருப்பார். எனவே நம்முடைய மந்தையை நீங்கள் மூன்று கூட்டமாகப் பிரித்து எனக்கு முன்னால் செல்லுங்கள். ஏசாவைச் சந்தித்தால் இது யாக்கோபு உங்களுக்குத் தந்த நன்கொடை என்று சொல்லி அவரிடம் கொடுங்கள்’ என்று கூறினார்.

மந்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டது. மூன்று மந்தைகளும் யாக்கோபுக்கு முன்னால் அனுப்பி வைக்கப் பட்டன.

இதே நேரத்தில் ஏசாயின் பணியாளன் ஒருவன் ஏசாயிடம் வந்து ரகசியம் பேசினான்,’ ஐயா… உம்மை ஏமாற்றி விட்டுத் தப்பியோடிய யாக்கோபு இப்போது நாடுதிரும்பிக் கொண்டிருக்கிறார்’

‘என்ன யாக்கோபு வருகிறானா ? உடனே நம்முடைய வீரர்கள் நானூறு பேரை கூட்டிச் சேருங்கள் அவனை எதிர்கொண்டு செல்லவேண்டும்..’ ஏசா கர்ஜித்தான்.

நானூறு பேர் கொண்ட படை யாக்கோபை எதிர்கொண்டு சென்றது. வழியில் ஏசா முதல் மந்தையைக் கண்டார். அந்த மந்தையை வழிநடத்திக் கொண்டிருந்தவர். ஏசாயைக் கண்டு பணிந்து வணங்கி,
‘ ஐயா… இது உங்கள் சகோதரர் யாக்கோபு உங்களுக்கு அனுப்பிய அன்பளிப்பு’ என்றார்.

‘யாருக்கு வேண்டும் அவனுடைய அன்பளிப்பு’ சொல்லிக் கொண்டே ஏசாவும் படையினரும் முன்னேறினர்.

அப்படியே வழியில் இரண்டாவது, மூன்றாவது மந்தைகளையும் ஏசா நிராகரித்தார். விஷயம் யாக்கோபுக்குத் தெரிவிக்கப் பட்டது. யாக்கோபு மேலும் அதிகமாக அஞ்சி நடுங்கினார்.

அவர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய வேலையாட்களை அழைத்து, ‘ நீங்கள் என்னுடைய குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நான் போய் ஏசாவைச் சந்திக்கிறேன்’ என்றார்.

வேலையாட்களோ,’ வேண்டாம் தலைவரே. அது நமக்கு மிகப்பெரிய தீங்காக அமையும். நீர் இல்லாவிட்டால் எங்களை வழிநடத்த யாரும் இல்லை. போகவேண்டாம் ‘ என்று தடுத்தனர். யாக்கோபு அவர்கள் அறிவுரையைக் கேட்கவில்லை.

யாக்கோபு தனியனாக ஏசாவை எதிர்கொள்ளச் சென்றான். அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் பதைபதைக்கும் நெஞ்சோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏசா பெரும்படையோடு யாக்கோபை நெருங்கினான். உடனே ஏசா தரையில் விழுந்து வணங்கி
‘சகோதரனே… என்னை மன்னிக்க வேண்டும். மாபெரும் தவறு இழைத்துவிட்டேன்’ என்று கலங்கி நின்றான்.

ஏசா ஓடி வந்து அவனைக் கட்டியணைத்தார். யாக்கோபு ஒன்றுப் புரியாமல் திகைத்து நின்றார்.

‘தம்பி… இத்தனை நாட்களாக என்னை விட்டு விட்டுத் தனியாகப் போய் விட்டாயே. நீ இல்லாமல் நான் எவ்வளவு வருந்தினேன் தெரியுமா ? ‘ ஏசா அழுதார். அதைக் கேட்ட யாக்கோபுவும் அழுதார்.

‘நீ என்ன தவறு செய்தாலும் என் தம்பி தானே. எனக்கு எதற்கு உன்னுடைய மந்தைகள் ? நீ வந்தாயே, அதுவே போதும்’ சகோதரர்கள் இருவரும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். இதைக்கண்ட யாக்கோபின் குடும்பத்தினரும், வேலையாட்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

Advertisements

3 comments on “கி.மு : இரு சகோதரர்களின் கதை

  1. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s