எத்தியோப்பியாவும் உலகமயமாதலும்

(தமிழோசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

உலகம் பல்வேறு இலட்சியங்களை தங்கள் முன்னால் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நவீன யுகத்தின் பிரதிநிதிகள் என தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், ஆவேசமும் நாடுகளிடையே மேலோங்கியிருக்கின்றன.

மண் இருக்கிறதா, மலை இருக்கிறதா, தண்ணீர் இருக்கிறதா, உயிர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்ய இனிமேல் எந்தக் கிரகத்துக்குத் தனது விண்கலத்தை அனுப்பலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது அதிகார அமெரிக்கா.

எந்த நாட்டின் மீது போர் தொடுக்கலாம், போரில் எத்தனை கோடி டாலர்கள் செலவிடலாம் என்றெல்லாம் அவர்கள் வரையறைகளை செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எத்தியோப்பியாவிலிருந்து வெளிவந்திருக்கும் ஒரு படம் உயிரை உலுக்குகிறது.

வேறு கிரகத்தில் உயிர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்கிறாயே, இதோ இந்த எத்தியோப்பிய எலும்புக் கூடுகளுக்குள் உயிர் இருக்கிறதே அதைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தாய் என உலக நாடுகளின் காதுகளை நோக்கிக் கூச்சலிடத் தோன்றுகிறது.

போர்களும், நவீனயுகத்தின் ஆடம்பரங்களும் உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விட, நிராயுதபாணியாய் நிர்வாணியாய் நிற்கிறான் வயிறு காய்ந்த மனிதன்.

உலகமயமாக்கம் என்னும் மாயை எதைச் சம்பாதித்திருக்கிறது ? . உலகம் முழுவதிலும் இருக்கும் பட்டினியைத் துடைக்க ஒரு உலக மயமாதல் நிகழ்ந்திருந்தால் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளியிருக்கும்.

அல்லது குறைந்தபட்சம் சமாதானத்தையும், நிம்மதியையுமாவது உலகமயமாக்கியிருக்கலாம். அதுவும் இல்லை. வெறும் கரன்சிகளைக் கொள்ளையடிக்கவும், நலிந்தவர்களின் நட்டெலும்பை முறிக்கவும் மட்டுமே இந்த உலகமயமாக்கல் பிசாசுப் பற்களை ஒளித்து வைத்துச் சிரிக்கிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும்  வாங்கப்படும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒருபகுதி வீணாக்கப் படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நாளை விடியும்போது விழிப்போமா என்பதை அறியாமல், ஒருவேளை உணவை உண்டே பல நாட்களாகிப் போன கூட்டம் இன்னும் எத்தியோப்பியாவின் நரகத் தெருக்களில் நடக்க முடியாமல் நகர்ந்து திரிகிறது.

அடிப்படை வசதிகளில் முதன்மையான உணவே கனவாகிப் போனபின் அங்கே எதைத் தான் எதிர்பார்க்க முடியும். “எத்தியோப்பியாவைப் பார்த்தபின், வீணாக்கப்படும் உணவைப் பார்த்தால் உள்ளுக்குள் கோபம் கொப்பளிக்கிறது” என்றார் அன்னை தெரசா ஒருமுறை.

உணவகங்களிலும், நடன அரங்குகளிலும், ஆடம்பரப் பொருட்களிலும், உல்லாசக் கொண்டாட்டங்களிலும் பணத்தை வாரி இறைக்கும் போது எத்தொயோப்பியக் குழந்தையின் கதறல் கேட்கவில்லையெனில் யாரும் மனித நேயம் மிச்சமிருப்பதாய் சொல்லிக் கொள்ள முடியாது.

பல இலட்சம் மக்கள் தங்கள் எலும்புகளின் மேல் போர்த்த சதை இல்லாத பட்டினிக்குள் கிடக்கும் போது, தொப்பையைக் கரைக்க வியர்க்க விறுவிறுக்க பயிற்சி அறைகளில் ஓடும் மனிதர்களைத் தான் சம்பாதித்திருக்கின்றன நாடுகள்.

எத்தியோப்பியாவைப் போலவே வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நிகழ்காலத்தில் நிற்க ஒரு நிழல் கூட இல்லையே என அழுதற்கும் திராணியற்ற மக்கள் உலகின் பலகோடியிலும் இருக்கின்றனர்.

எனினும், கண்டும் காணாததும் போல இருக்கப் பழகி விட்டது மனுக்குலம். ஓசோனில் ஓட்டை இருக்கிறதா என காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட அடுத்த வீட்டுக் குடிசையில் ஓட்டை இருக்கிறதா என பார்ப்பதில் செலவிடுவதில்லை முதலாளித்துவம்.

வானத்தை நோக்கியே பார்த்துப் பழகிவிட்ட மேலை நாடுகள் பூமியை எப்போது பார்க்கும் ? உலக மயமாதல் என்பது உறிஞ்சுதலுக்கானது மட்டும் தானா ? ஊற்றுதலுக்கானது இல்லையா ? எனும் கேள்விகளெல்லாம் முதுகு வளைந்து கிடக்கின்றன.

உலகம் தனது சுருக்குப் பையில் வன்முறையையும், விஞ்ஞானத்தையும், பாலியல் பிழைகளையும், சுயநல சிந்தனைகளையும் சுமந்து திரிகிறது. எத்தியோப்பியா போன்ற நாடுகளின் வறுமை விரல்கள் நறுக்கப்பட்டு வீதியில் கிடக்கின்றன.

நமது முதன்மைகள் விளையாட்டும், சினிமாவும், மேலை நாட்டுக் கலாச்சாரங்களுமாகிப் போய்விட்டன. குடும்ப உறவுகளுடன் வாழாத மக்கள் பிறருக்காகக் கவலைப்படுவதில்லை. வாழ்க்கைச் சூழல் கூட ஒருவகையில் மனித நேயத்தை, மரங்களைப் போல மனிதர்களின் மனங்களிலிருந்து முறித்தெறிகிறது.

உலகம் விழித்தெழ வேண்டும். வாழும் உரிமை எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கும் உண்டு. அங்கே இருப்பவர்களும் நமது சகோதர சகோதரிகளே, நமது குழந்தைகளே எனும் உணர்வு மேலோங்க வேண்டும். உலக மயமாதல் என்பது நிறுவனங்களின், வியாபாரத்தின் மீது கட்டப்படாமல், மனித தேவைகளின் மீதும், மாண்புகளின் மீதும் நிலை நிற்கும் காலம் ஒன்று உருவாகவேண்டும். அப்போது தான் எலும்புகளின் தேசமான எத்தியோப்பியாவும் எழும்பும்.

8 comments on “எத்தியோப்பியாவும் உலகமயமாதலும்

 1. மனித உயிர்களின் மதிப்பு இன்று மலிந்துவிட்டது. ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.

  Like

 2. அதிகார மைங்கள் A/C அறையில் ஏழையின் அளவிடல்கள் அற்று என்று
  நேரடி அனுபவ அரசு அமைய பெரும் போதும் மக்கள் ஆகிய நாமும் ஒர் உண்ணத புரட்சிக்கு விதை வித்திட்டால் மனித உயிர்களின் மதிப்பு வளம் பெரும்….

  Like

 3. //வேடன் வலையில்
  சிக்கிய புறாக்களாய் மக்கள்
  விடுவிப்பார் யார் என்கிற தவிப்பில்.
  அரசியல் அரக்கர்கள் ஒரு பக்கமும்
  பசி அரக்கன் மறு பக்கமுமாய்.
  கேட்பார் அற்ற வீதியில்
  அலறும் தத்துவப் பாடலாய்
  தமிழரின் அழுகுரல்கள்.//
  மனிதம் தொலைந்து வரும் இக்காலகட்டத்தில் வறுமையைப் பற்றி நிறைய அலசியிருக்கிறீர்கள்.ம்ம்ம…யார் காதில் விழும்!

  Like

 4. //மனித உயிர்களின் மதிப்பு இன்று மலிந்துவிட்டது. ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவேண்டும்//

  உண்மை. அடுத்திருப்பவரோடு ஆத்மார்த்த அன்பு கொள்தலே இன்றைய முதன்மைத் தேவை

  Like

 5. //வீதியில்
  அலறும் தத்துவப் பாடலாய்
  //

  அருமை. உங்கள் உயர்வான மனதுக்கு நன்றிகள் ஹேமா.

  Like

 6. நண்பர் சேவியருக்கு ,

  சமூகப் பொறுப்புள்ள ஒரு படைப்பாளியின் அனல் கக்கும் நியாயமான கோபம் கொப்பளிக்கிறது கட்டுரையின் ஒவ்வொரு எழுத்திலும். உங்கள் கேள்விகள் அனைத்தும் பசியால் அழுபவனின் கண்ணீர் கதறல்களை உலகத்தின் செவிட்டு காதுகளுக்கு பறையடிக்கும் என்று நம்புகிறேன்.
  அப்படி இல்லாத பட்சத்திலும், நீங்கள் இது போன்ற கட்டுரை எழுதுவதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள் !!!!!
  ” அபாயச் சங்கை ஊத வேண்டும் போது ஊதுவோம் , தீர்வு விடியும் போது விடியட்டும் ” என்ற கொள்கை பிடிப்பு உடையவர் நீங்கள் !!! இது போன்ற உங்களுடைய பல கட்டுரைகளை படித்ததன் மூலம் அதை அறிந்து உணர்ந்திருக்கிறேன்.

  தொடரட்டும் உங்கள் துயர் துடைக்கும் எழுத்துப் பணி முயற்சி !!!!!!!!!!!!!.

  அன்புடன்
  குகன்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.