கவிதை : என் மகள்

மெல்ல மெல்லச் சின்ன
மல்லிகைக் கால்கள் பின்ன
சின்னச் சின்ன சின்னம் வைத்து
அல்லி நடை போடுகிறாய்.

ஒற்றைப் புன்னகையில்
உலகை விற்று விட்டு
பிஞ்சு விரல் அஞ்சிலும்
வெற்றிப் பத்திரம் நீட்டுகிறாய்.

என் மீசைக் கயிறு பிடித்து
தோள் மலை ஏறுகிறாய்.
கன்னப் பிரதேசங்களில்
நகப் பள்ளம் தோண்டுகிறாய்.

செதுக்கிச் செய்த சின்னச் சூரியனாய்,
உன் கண்களின் சிரிப்பு
வாசல் முழுதும் சிதறிக்கிடக்கிறது.

பதுக்கி வந்த பகல் நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
படுக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன

செம்பருத்திப் பாதங்கள்
சமயலறைவரை
சிறு செம்மண் கோலம் வரைய,
தளிர் மாவிலைக் கைதரும்
ரேகைச் சித்திரங்கள்
வெள்ளைச் சுவரை அழுக்காக்கி அழகாக்கும்.

நீ
பிறப்பதற்குத் தவமிருந்தது ஒருகாலம்,
உன்
ஒவ்வோர் அசைவுகளும்
வரம் தருவது நிகழ் காலம்.

பிஞ்சுக்கன்னங்களை நெஞ்சில் தாங்கி,
ரோஜாத்தீண்டலாய் விழும்
மெல்லிய உன் மூச்சுக் காற்றில்,
மனசுக்குள் சில
மனங்கொத்திகளை பறக்கவிடுகிறேன்.

உன் அழுகைக் கரைகளில்
கரைந்து போகிறேன்.
உன் மெல்லிய உதைகளில்
மென்மையாய் மிதக்கிறேன்.

என் வாலிபங்கள் காத்திருந்தது
உன் வரவுக்காய் தானோ ?
நான் சந்தித்த
மகிழ்வுகளின் மாநாடு தான்
உன் வரவோ ?

காலங்களைப் பிடித்திழுக்கும்
உன் கரங்களுக்குள் கடிவாளமாகி
உன் கண்களோடு கலந்து போய்
கவியரங்கம் நடத்துகிறேன்.

உன்
முத்தங்களுக்காய் மனுச்செய்து
நான் மண்டியிடும் போதெல்லாம்
பக்கத்து வீட்டுச் சன்னல்
சத்தமாய் ஒலிபரப்பு செய்யும்.
‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” என்று.

உனக்கும் எனக்கும்
உயிர்ப்பாய்ச்சல் நடக்கும் போது
ஊர்ப்பாய்ச்சல் நமக்கெதுக்கு ?
தயங்காமல் தாவிவந்து
என்னிரு தோளில் தொங்கி
இன்னொரு முத்தம் தந்துவிட்டுப் போ.

இறுக்கமாய் சிறிது நேரம்
இருந்துவிட்டுப் போ.

23 comments on “கவிதை : என் மகள்

  1. உங்க கவிதைகளை படிக்கும் போது
    எங்களுக்கும் கவிதை எழுதனும்னு ஆசையா இருக்கு!

    ஓரு கலைஞனின் உண்மையான வெற்றி இது தானோ?!

    Like

  2. //இறைவன் இன்னும் மனிதனை நம்புகிறான் . அதனால் தான் குழந்தைகள் பிறக்கின்றன.”
    //

    நன்றாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    //அப்படிப்பட்ட குழந்தைகள் தரும் இன்பத்தை அனுபவப் பூர்வமாக உணர்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள்//

    நன்றி குகன்… 🙂

    //
    தங்கள் மனைவி மடியில் அழகாக படுத்திருந்த உங்கள் குட்டி பாப்பா எப்படி இருக்கிறது , சேவியர்?
    //

    நன்றாக இருக்கிறாள் மகள் 🙂 நன்றி விசாரித்தமைக்கு 🙂

    Like

  3. அன்புள்ள சேவியருக்கு,

    “இறைவன் இன்னும் மனிதனை நம்புகிறான் . அதனால் தான் குழந்தைகள் பிறக்கின்றன.”
    யாரோ ஒரு மிகப் பெரிய அறிஞர் சொல்லிய கூற்று .
    அப்படிப்பட்ட குழந்தைகள் தரும் இன்பத்தை அனுபவப் பூர்வமாக உணர்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள். ரயிலில் உங்களைச் சந்திக்கையில் , தங்கள் மனைவி மடியில் அழகாக படுத்திருந்த உங்கள் குட்டி பாப்பா எப்படி இருக்கிறது , சேவியர்?

    அன்புடன்
    குகன்

    Like

  4. //‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” சொன்னார்கள் என்றால் உண்மைதானே எம் பிள்ளை போல ஊரில் யாரிடமும் இருக்க முடியாது தானே என்று விடுங்கள்.//

    விட்டு விட்டேன் 🙂

    Like

  5. ‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் ” சொன்னார்கள் என்றால் உண்மைதானே எம் பிள்ளை போல ஊரில் யாரிடமும் இருக்க முடியாது தானே என்று விடுங்கள்.பொறாமை அவர்களுக்கு.பூவின் அழகை ரசிக்கத் தெரியாத முட்டாள்கள்.

    Like

  6. //very sweet poem! //

    நன்றி மலர்.

    //the photo u have posted is ur daughter???//

    இல்லை.. என்னை மிகவும் ரசிக்க வைத்த படம் 🙂

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.