கவிதை : கண்தானம்

விழிக்கொடை : அன்பினால் ஓர் அவதாரம்.

இந்தப் பூமி,
நிறக்கலவைகளின்
நாட்டியாலயம்.

கதிரவத் தீயில்
பச்சையம் சமைக்கும்
சங்கீதத் தாவரங்களின்
சரணாலயம்.

அலையும் ஓவியங்களாய்
சிரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணப் பூக்களோடு
வர்ணனை பேசித் திரியும்.

இலைகளின் தலை கழுவி
பூக்களின் முகம் துடைக்க,
மேகத்தின் பாகங்கள்
மழை வடிவில் மண்தேடும்.

நதிகளின்
ஓட்டப்பந்தயத்தை,
சிறு மீன் கூட்டங்கள்
ஈரத் தலையுடன்
வேடிக்கை பார்க்கும்.

மொத்த அழகின்
ஒற்றைப் புள்ளியாய்
சிறு மழலைகள்
சிரித்துக் களிக்கும்.

கிழக்கைத் துவைத்துக்
களைக்கும் கதிரவன்
கண்கள் சிவக்க
மேற்குப் போர்வைக்குள்
துயில்ப் பயணம் துவங்கும்.

விடியல் முதல்
மடியல் வரை
அழகின் இழைகளை
அகத்திழுத்துச் செல்லும்
உன்
முகத்திரு விழிகள்.

அத்தனை அழகும்
ஆழமான குருட்டறைக்குள்
கருப்புச் சாயம் பூசப்பட்டுக் கிடக்கும்
பார்வை பிடுங்கப்பட்ட
பாமரக் கண்களில்.

எப்போதேனும்
ஓர்
கண்கிடைக்குமெனும்
கண்ணாடிக் கனவுகளுடன் அவை
இருட்டுக்குள் விழித்திருக்கும்.

புதைக்கப்பட்ட
ஒவ்வோர் விதையும்
கிளைக் கண்களால்
பூமியைத் தீண்டும்.
விதையின் முடிவில்
புது அவதாரம் மீண்டும்.

உணவைப் பகிர்ந்தளிப்பவன்
பசியைப் பட்டினியிடுகிறான்.
கண்களைப் பரிசளிப்பவனோ
பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்.

இது
உன் பூமி.
உன் பாதங்கள் பிறந்த பூமி.

உன்
உடலின் அழிவிற்குப் பின்னும்
உன் தேசத்தின் தேகத்துக்கு
உன் பார்வைகளைப் பரிசளி.

விழிக்கொடை செய்.
புனிதனாவதன் முதல் படி
மனிதனாய்
நீ
மனிதனை அடைவது தான்.

20 comments on “கவிதை : கண்தானம்

  1. “எடுத்துச்செலவதற்கு எதுவுமே இல்லை…
    கொடுத்துச் செல்வதற்கு இரு கண்கள் உண்டே!” – என்னும் வாசகங்களை நான் எங்கள் பகுதியில் பார்க்கும்போதெல்லாம் உங்கள் கவிதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. பாராட்டுக்கள்.

    – கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு.

    Like

  2. ////கண்களைப் பரிசளிப்பவனோ
    பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்.//

    இதைவிட அழகாக கண்தானத்தை பற்றி கூறமுடியாது.
    வாழ்த்துக்கள்.

    // நன்றி குந்தவை //

    //
    இருந்தாலும் கண்தானத்தை பற்றி என்னை மிகவும் சிந்திக்கவைத்த கவிதை
    ‘அறுவை சிகிச்சை’ தான்
    //

    நன்றி 🙂

    Like

  3. //அண்ணா,உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.இப்படியும் வர்ணிக்க முடியுமா எதையும்…எவரையும்!!!நானும் கவிதையையை வர்ணித்து அழகாக்க முயற்சி செய்கிறேன்.அழகாய் வரமாட்டேன் என்கிறதே!!!உங்கள் ரசனையோடு சேர்ந்த கற்பனைக்கு ஒரு சபாஷ்.
    //

    என்னை அண்ணா என அழைத்த மறு வினாடியிலிருந்து எனது அன்பும், ஆசீர்வாதமும், அர்ப்பணிப்பும் இந்தத் தங்கைக்கு உண்டு 🙂 பாராட்டுக்கு நன்ன்றி.

    // எல்லாவிதத் தானங்களைத் தாண்டியது கண் தானம் என்பார்கள்.நானும் சில வருடங்களாக முயற்சி செய்கிறேன்.இன்னும் சரிவரவில்லை.திரும்பத் திரும்ப வாசிக்க வாசிக்க மனித மனதை மனிதனாக்கும் ஒரு மனிதாபிமானக் கவிதை.அருமை.

    //

    நன்றி.

    Like

  4. //கண்களைப் பரிசளிப்பவனோ
    பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்.//

    இதைவிட அழகாக கண்தானத்தை பற்றி கூறமுடியாது.
    வாழ்த்துக்கள்.

    இருந்தாலும் கண்தானத்தை பற்றி என்னை மிகவும் சிந்திக்கவைத்த கவிதை
    ‘அறுவை சிகிச்சை’ தான்.

    Like

  5. அண்ணா,உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.இப்படியும் வர்ணிக்க முடியுமா எதையும்…எவரையும்!!!நானும் கவிதையையை வர்ணித்து அழகாக்க முயற்சி செய்கிறேன்.அழகாய் வரமாட்டேன் என்கிறதே!!!உங்கள் ரசனையோடு சேர்ந்த கற்பனைக்கு ஒரு சபாஷ்.

    எல்லாவிதத் தானங்களைத் தாண்டியது கண் தானம் என்பார்கள்.நானும் சில வருடங்களாக முயற்சி செய்கிறேன்.இன்னும் சரிவரவில்லை.திரும்பத் திரும்ப வாசிக்க வாசிக்க மனித மனதை மனிதனாக்கும் ஒரு மனிதாபிமானக் கவிதை.அருமை.

    Like

  6. //உணவைப் பகிர்ந்தளிப்பவன்
    பசியைப் பட்டினியிடுகிறான்.
    கண்களைப் பரிசளிப்பவனோ
    பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்”

    வரிகளில் வியந்தேன் .//

    மனமார்ந்த நன்றிகள் குகன், உங்கள் தொடர் வாசிப்புக்கும், கருத்துக்களுக்கும்.

    // படித்த மாத்திரத்தில் ,கவிஞர் அறிவுமதி சொல்லும் கவிதை ஒன்று நினைவு தொட்டது .
    “ஒரு மரத்தை வெட்டுபவன் மழையைக் கொலை செய்கிறான் ”
    ஏதோ ஒரு நல்ல ஒற்றுமைப் பாங்கு உள்ளதாகப் பட்டது.//

    வாவ். அருமையான வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    //
    விழிக்கொடை செய்.
    புனிதனாவதன் முதல் படி
    மனிதனாய்
    நீ
    மனிதனை அடைவது தான்.”

    உங்கள் தமிழ் வரிகள் அறிவுத் தத்துவம் பேசும் போது கூடுதலாய் இனிக்கிறது !!

    //

    மீண்டும் நன்றிகள் குகன் 🙂

    Like

  7. அன்புள்ள சேவியருக்கு ,

    உணவைப் பகிர்ந்தளிப்பவன்
    பசியைப் பட்டினியிடுகிறான்.
    கண்களைப் பரிசளிப்பவனோ
    பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்”

    வரிகளில் வியந்தேன் . படித்த மாத்திரத்தில் ,கவிஞர் அறிவுமதி சொல்லும் கவிதை ஒன்று நினைவு தொட்டது .
    “ஒரு மரத்தை வெட்டுபவன் மழையைக் கொலை செய்கிறான் ”
    ஏதோ ஒரு நல்ல ஒற்றுமைப் பாங்கு உள்ளதாகப் பட்டது.


    விழிக்கொடை செய்.
    புனிதனாவதன் முதல் படி
    மனிதனாய்
    நீ
    மனிதனை அடைவது தான்.”

    உங்கள் தமிழ் வரிகள் அறிவுத் தத்துவம் பேசும் போது கூடுதலாய் இனிக்கிறது !!

    நட்புடன்
    குகன்

    Like

  8. நதிகளின்
    ஓட்டப்பந்தயத்தை,
    சிறு மீன் கூட்டங்கள்
    ஈரத் தலையுடன்
    வேடிக்கை பார்க்கும்.

    nice lines..find it cute

    Like

  9. //முந்தைய கவிதையின் பின்னூட்டத்தில்
    ஹேமா சொல்லியிருப்பது போல
    அடிக்கடி அழ வைப்பதே உங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
    எல்லோரும் மனிதநேயத்துடன் கண்தானம் செய்ய முன்வந்தால் ,
    பலரை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும்//

    நன்றி முகுந்தன். உண்மை, கண்தானம், மிக அவசியமானது.

    Like

  10. //மனத்திரையில் உண்மையாக்கிப் பார்த்தேன்… ஒரு வித இன்பத்தைக் கொடுத்தது…//

    நன்றி விக்கி.

    Like

  11. //அருமையான கவிதை. முதலில் விரிவான, அழகிய வர்ணனை பூமியைப்பற்றி; பிறிது விழிக்கொடையின் அவசியம் பற்றி; வாழ்த்துக்கள்//

    நன்றி 🙂

    // நன்றி – மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறது என்று சொன்னதற்கு. //

    நன்றிகள். உங்கள் தோட்டத்தில் மணக்கும் மல்லிகையை நட்டு வைத்திருப்பதற்கு 🙂

    Like

  12. //எப்போதேனும்
    ஓர்
    கண்கிடைக்குமெனும்
    கண்ணாடிக் கனவுகளுடன் அவை
    இருட்டுக்குள் விழித்திருக்கும்.//

    முந்தைய கவிதையின் பின்னூட்டத்தில்
    ஹேமா சொல்லியிருப்பது போல
    அடிக்கடி அழ வைப்பதே உங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
    எல்லோரும் மனிதநேயத்துடன் கண்தானம் செய்ய முன்வந்தால் ,
    பலரை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும்.

    Like

  13. //இலைகளின் தலை கழுவி
    பூக்களின் முகம் துடைக்க,
    மேகத்தின் பாகங்கள்
    மழை வடிவில் மண்தேடும்//

    மனத்திரையில் உண்மையாக்கிப் பார்த்தேன்… ஒரு வித இன்பத்தைக் கொடுத்தது…

    Like

  14. அருமையான கவிதை. முதலில் விரிவான, அழகிய வர்ணனை பூமியைப்பற்றி; பிறிது விழிக்கொடையின் அவசியம் பற்றி; வாழ்த்துக்கள் மற்றும் நன்றி – மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறது என்று சொன்னதற்கு.

    அனுஜன்யா

    Like

  15. //விழிக்கொடை செய்.
    புனிதனாவதன் முதல் படி
    மனிதனாய்
    நீ
    மனிதனை அடைவது தான்.//

    just superb!!! I’m impressed and inspired
    anbudan aruna

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.