கி.மு : முதலிரவில் மாறிய மணப்பெண்.

ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு ஏசா, யாக்கோபு என்று இரண்டு மகன்கள் இருந்தனர். தன்னுடைய முதிய வயதில் ஈசாக் யாக்கோபை அழைத்து,
‘மகனே… உனக்குத் திருமண வயதாகிறது. நீ ஒரு நல்ல பெண்ணைக் கண்டுபிடித்து மணந்து கொள். ஆனால் அவள் நாம் இப்போது வசிக்கும் கானான் தேசத்துப் பெண்ணாக இருக்கக் கூடாது. உன் தாயின் ஊருக்குப் போ, அங்கே உன்னுடைய தாய்மாமன் லாபான் இருக்கிறான். அவனுடைய புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொள்’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.

யாக்கோபு லாபான் வசித்துவரும் பதான் அராமை நோக்கி தன்னுடைய பயணத்தைத் துவங்கினார். போகும் வழியில் இரவானதால் ஒரு கல்லை தலையணையாக வைத்துக் கொண்டு ஓரிடத்தில் படுத்து உறங்கினார். தூக்கத்தில் ஓர் அழகிய கனவு ஒன்றைக் கண்டார் யாக்கோபு. ஒரு ராட்சத ஏணியானது பூமியிலிருந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதின் வழியாக வானதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். கடவுள் அதற்குமேல் நின்றுகொண்டு, ‘நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன், பூமியின் எல்லா திசைகளிலும் உன்னுடைய சந்ததியினர் பரவுவார்கள். நான் என்றும் உன்னோடு இருந்து உன்னை வழிநடத்துவேன்’ என்றார்.

யாக்கோபு உறக்கம் கலைந்து எழுந்ததும் தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தார். கடவுள் நிச்சயமாகவே இங்கே இருக்கிறார் என்று சொல்லி தான் தலையணையாக பயன்படுத்திய கல்லை எடுத்து நாட்டி, அதின் மேல் எண்ணை வார்த்து, இது கடவுளின் இடம் என்று சொல்லி, அந்த இடத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்டார். கடவுள் என்னை வழிநடத்தட்டும் நான் எனக்குரிய அனைத்து சொத்திலும் பத்தில் ஒன்றை கடவுளுக்குக் காணிக்கையாய் படைப்பேன் என்றும் அவன் அங்கே உறுதி மொழி எடுத்தார்.

அங்கிருந்து மீண்டும் அவருடைய பயணத்தைத் தொடர்ந்தார். ஆரான் தேசத்தை நெருங்கி வயல் வெளிப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். அந்தக் கிணற்றை ஒரு கல் மூடியிருந்தது. அங்கே சில இடையர்கள் நின்று கொண்டிருந்தார்கள். யாக்கோபு அவர்களை நோக்கி,
‘ஏன் இந்தக் கிணற்றைக் கல்லாம் மூடி வைத்திருக்கிறார்கள் ?’ என்று கேட்டார்.

‘இந்தக் கிணற்றுத் தண்ணீர் தான் இங்குள்ள ஆட்டுமந்தைகளின் தாகத்தைத் தீர்க்கிறது. அது அழுக்கடையாமல் இருக்கத் தான் கல்லை வைத்து மூடி வைத்திருக்கிறோம்’

‘நீங்கள் ஆடுகளோடு வந்திருக்கிறீர்களே, பின் ஏன் இன்னும் இந்தக் கல்லைப் புரட்டவில்லை ?’

‘எல்லா இடையர்களும் வந்து சேர்ந்தபின்பு தான் நாங்கள் கல்லைப் புரட்டுவோம். அதன்பின் எல்லாக் கால்நடைகளும் தண்ணீர் குடித்து முடித்தபின் நாங்கள் அதை மீண்டும் மூடிவைப்போம். இது தான் எங்கள் வழக்கம்.. ஆமாம் .. நீ யார் ? உன்னை நாங்கள் பார்த்ததேயில்லையே ? எதற்காக வந்திருக்கிறாய் ?’

‘என் பெயர் யாக்கோபு. நான் நாகோரின் பேரனான லாபானைத் தேடி கானான் நாட்டிலிருந்து இங்கே வந்திருக்கிறேன்’

‘ஓ… அந்த லாபானா ?’

‘லாபானை உங்களுக்குத் தெரியுமா ?’ யாக்கோபு பிரகாசமானார்.

‘ஓ.. எங்களுக்கு அவரை மிக நன்றாகத் தெரியும்.’

‘அவர் நலமுடன் இருக்கிறாரா ? அவருடைய மகள்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா ?’ யாக்கோபு பரபரப்பாய்க் கேட்டார்.

‘அவர் நலமுடன் தான் இருக்கிறார். அவருடைய மகளுக்கும் ஒரு மந்தை இருக்கிறது. அவள் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வருவாள்’ இடையர்கள் சொன்னதைக் கேட்டதும் யாக்கோபுவின் மனசுக்குள் சில ஆட்டுக் குட்டிகள் ஆனந்தமாய் ஓடின. வழிமேல் விழி வைத்து லாபானின் மகளுக்காகக் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் ஒரு அழகு சிலை ஆடுகளை ஓட்டிக் கொண்டு அங்கே வந்தது. யாக்கோபு அவளுடைய அழகில் மயங்கினார். அவளுடைய வடிவத்தில் அவருக்குள் கிடந்த மோகக் குதிரைகள் முண்டியடித்துக் கொண்டு ஓடின. அவருக்குள் ‘கண்டதும் காதல்’ முளைவிட்டது. தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாதவராக யாக்கோபு ஓடிச் சென்று அவளைக் கட்டிஅணைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

திடீரென ஒரு ஆடவன் வந்து தன்னைக் கட்டியணைத்து முத்தமிட்டதும் அவள் திடுக்கிட்டாள்.

‘ஏய்…. யார் நீ… ‘ அவளுடைய குரல் பிசிறடித்தது.

‘நான் கானான் நாட்டிலிருந்து வருகிறேன். என் பெயர் யாக்கோபு. ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் மகன் நான். நீ என்னுடைய மாமன் மகள் தான். உன்னைத் தேடித் தான் நான் இத்தனை தூரம் பயணித்து வந்தேன். அதனால் தான் உன்னைக் கண்டவுடன் என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறிவிட்டேன்’ யாக்கோபு சொன்னதைக் கேட்டதும் அவள் வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

‘உன் பெயர் என்ன ?’

‘ராகேல்…’

‘ராகேல்… அழகான பெயர்’ யாக்கோபின் குரலில் காதல் வழிந்தது.

விஷயம் ராகேலில் தந்தை லாபானின் காதுகளுக்கு எட்டியது. தூரதேசத்திலிருந்து தன்னைப் பார்க்க வந்திருக்கும் தன் உறவினரைப் பார்க்க அவரும் ஓடோ டி வந்தார்.

‘வாருங்கள் வாருங்கள்… உங்கள் வரவு நல்வரவாகட்டும்… வீட்டுக்கு வாருங்கள்’ லாபான் யாக்கோபை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்.

‘இது என்னுடைய இளைய மகள் ராகேல்… அதோ நிற்கிறாளே அவள் என்னுடைய மூத்த மகள் லேயா ‘ லாபான் அறிமுகப் படுத்தி வைத்தார்.

யாக்கோபு அவர்களோடு ஒருமாதகாலம் தங்கியிருந்து அவர்களுடைய வேலைகளில் ஒத்தாசையாய் இருந்தார். ஒருநாள் லாபான் யாக்கோபிடம் வந்து,
‘நீ என் உறவினர் தான் ஆனாலும் உனக்கு சம்பளம் தராமல் வேலை வாங்குவது நல்லதல்ல. எனவே என்ன ஊதியம் எதிர்பார்க்கிறாய் என்பதைச் சொல்லிவிடு. அதை நான் உனக்குத் தருகிறேன்’ என்றார்.

‘எனக்கு நீங்கள் ஊதியமாக எந்த செல்வத்தையும் தரவேண்டாம். உங்கள் மகள் ராகேல் என் மனதைக் கவர்ந்துவிட்டாள். அவளை நான் ஆழமாக நேசிக்கத் துவங்கிவிட்டேன். அவளை எனக்கு மணம் முடித்து வையுங்கள்.’ யாக்கோபு சொன்னார்.

‘சரி.. ஆனால் என் மகளை உனக்குத் தரவேண்டுமென்றால் நீ என்னிடம் ஏழு ஆண்டுகள் உழைக்க வேண்டும் சம்மதமா ?’ லாபான் கேட்டார்.

‘முழு சம்மதம். ‘ யாக்கோபு மகிழ்வுடன் ஒத்துக் கொண்டார்.

ஏழு ஆண்டுகள் உழைத்தபின் தன் மகளை அவருக்குக் கட்டி வைப்பதாக லாபான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். யாக்கோபு மகிழ்ந்தார். ராகேலைப் பற்றிய கனவுகளில் அவருக்கு ஆண்டுகள் ஓடுவது தெரியவே இல்லை. நாட்கள், மாதங்கள் , வருடங்கள் என காலம் மிக வேகமாக விரைந்தோடியது. ஏழு வருடங்களும் நிறைவுற்றது.

இதோ இதுவரை தன் கண்முன்னால் உலவிக் கொண்டிருந்த அழகுதேவதை தன்னுடைய கைகளில் வரும் நாள் வந்துவிட்டதே என்று யாக்கோபு மகிழ்ந்தார்.

அவர்களுடைய மண நாளை வெகு விமரிசையாய்க் கொண்டாடுவதற்காக லாபான் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து மிகப் பெரிய விருந்து ஒன்றைத் தயாராக்கினார். அனைவரும் திருமண விருந்து உண்டு , மதுவருந்தி ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள்.

அவர்களுடைய மணநாள் வழக்கப்படி இரவில் யாக்கோபின் தனியறைக்குள் மகளை அனுப்பி வைக்கவேண்டும். ராகேலுடன் தான் செலவிடப் போகும் அந்த இனிய இரவுக்காகக் காத்திருந்தார் யாக்கோபு. அந்த முதலிரவும் வந்தது. லாபான் யாக்கோபின் அறைக்குள் தன்னுடைய மகளை அனுப்பி வைத்தார். ஆனால் அவர் அனுப்பி வைத்தது ராகேலை அல்ல, அவளுடைய அக்கா லேயாவை !

உள்ளே வந்தது லேயா என்னும் விஷயம் யாக்கோபுக்குத் தெரியவில்லை. மதுவின் மிச்சத்திலும், மோகத்தின் உச்சத்திலும் இருந்த யாக்கோபு அந்த இரவை லேயாவுடன் செலவிட்டார். விடியற்காலையில் அவர் கண்விழித்தபோது தன்னருகே லேயா படுத்திருப்பதைக் கண்டுத் திடுக்கிட்டார்.

‘நீ… நீ எப்போது இங்கே வந்தாய் ?’

‘என்னோடு தான் இரவு முழுதும் நீர் தங்கியிருந்தீர்…’

‘உன்னோடா ? ராகேல் எங்கே ?’ யாக்கோபு அதிர்ச்சியாய்க் கேட்டார்.

‘அப்பா என்னைத் தான் உங்கள் அறைக்கு அனுப்பி வைத்தார்’ லேயா குரலைத் தாழ்த்தினாள்.

லேயா சொன்னதைக் கேட்ட யாக்கோபு கடும் கோபமடைந்தார். நேராக லாபானிடம் சென்று
‘ஏன் இப்படிச் செய்தீர் ? நான் ராகேலுக்காக அல்லவா உம்மிடம் வேலை செய்தேன். ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்தேனே. இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே’ என ஆத்திரத்தோடு கேட்டான்.

லாபானோ அமைதியாக ,’ மூத்தவள் மணமாகாமல் இருக்கும் போது இளையவளுக்குத் திருமணம் செய்து வைப்பது நமது வழக்கமில்லை. அதனால் தான் லேயாவை உனக்குத் தந்திருக்கிறேன்.’ என்றார்.

‘இல்லை.. எனக்குத் தேவை ராகேல் தான் லேயா அல்ல’

‘லேயாவுடன் நீர் உறவு கொண்டுவிட்டீர். எனவே இனி அவள் உங்களுக்கு உரியவள். அவளோரு ஏழு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்பது திருமணச் சடங்கின் ஒரு பாகம்’ லாபான் அமைதியாய்ச் சொன்னார்.

‘என்னால் முடியாது. ராகேலைத் தான் நான் நேசித்தேன். லேயாவை அல்ல’

‘சரி.. இன்னும் ஏழு ஆண்டுகள் நீ எனக்கு வேலை செய். உனக்கு ராகேலையும் மணமுடித்துத் தருகிறேன்’ லாபான் சொன்னார்.

‘இன்னும் ஏழு ஆண்டுகள் என்னால் காத்திருக்க முடியாது. ஏழு ஆண்டுகள் காத்திருந்தால் என் இளமையும், ராகேலின் இளமையும் முடிந்து போய்விடும். எனவே நீங்கள் உடனே எனக்கு ராகேலையும் மணமுடித்துக் கொடுங்கள். உங்கள் விருப்பப்படி நான் அவளுக்காக இன்னும் ஒரு ஏழு ஆண்டுகள் உழைக்கிறேன்’ யாக்கோபு சொல்ல லாபான் ஒத்துக் கொண்டார்.

ஏழு நாட்கள் லேயாவுடன் தங்கியிருந்தபின் அவர் ராகேலையும் மனைவியாக்கிக் கொண்டார். லேயாவுடனும், ராகேலுடனும் யாக்கோபு தன் வாழ்க்கையைத் துவங்கினார்.

வருடங்கள் ஓடின. லேயா ரூபன், சிமியோன், லேவி, யூதா என நான்கு பிள்ளைகளுக்குத் தாயானாள்.
ராகேலுக்கோ குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை.

ராகேல் நீண்ட நாட்கள் காத்திருந்தாள். தனக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்னும் கவலை அவளை அதிகமாய்க் காயப்படுத்தியது. தன்னுடைய சகோதரிக்கு நிறைய குழந்தைகள் இருக்க எனக்கு கொஞ்சி மகிழ ஒரு குழந்தை கூட இல்லையே என்று வருந்திய ராகேல் ஒரு திட்டமிட்டாள்.

‘நான் ஒன்று கேட்பேன்.. நீர் அதை எனக்கு மறுக்காமல் தரவேண்டும். சம்மதமா ?’ ராகேல் யாக்கோபிடம் கேட்டாள்.

‘நீ என் அழகு தேவதை. உன் விண்ணப்பங்களை மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. தைரியமாகக் கேள். என்ன வேண்டும்’

‘எனக்குக் குழந்தைகள் வேண்டும்’

‘குழந்தைகள் ?.. அது நம்மிடம் இல்லை. கடவுளிடம் அல்லவா இருக்கிறது ?’

‘எனக்கு கொஞ்சி மகிழ உம் குழந்தை ஒன்று வேண்டும். எனவே நீர் என் பணிப்பெண்ணுடன் கூடி எனக்குக் குழந்தைகள் பெற்றுத் தரவேண்டும்’

‘பணிப்பெண்ணுடனா ? வேண்டாம் ராகேல். நமக்கே குழந்தை பிறக்கும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாமே’

‘இல்லை.. இனிமேலும் என்னால் பொறுக்க முடியாது. தயவு செய்து என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள்.’ ராகேல் கெஞ்சினாள். யாக்கோபு வேறு வழியில்லாமல் அன்பு மனைவியின் விருப்பத்துக்கு இணங்கினார்.

ராகேலின் பணிப்பெண்ணுடன் கூடி அவள் மூலமாக தாண், நப்தலி என இரண்டு பிள்ளைகளைப் பெற்றார்.
அவர்களை ராகேல் பாசமுடன் வளர்த்தாள்.

ராகேல் தன்னுடைய பணிப்பெண் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டதை அறிந்த லேயா கணவனிடம்,
‘நீர் ராகேலின் பணிப்பெண்ணுக்குத் தான் குழந்தைகள் தருவீரோ ? என்னுடைய பணிப்பெண் மூலமாக எனக்கு இன்னும் குழந்தைகள் பெற்றுத் தரவேண்டும்’ என்று வற்புறுத்தினாள்.

யாக்கோபு வேறு வழியில்லாமல் லேயாவின் பணிப்பெண் மூலமாகக் காத்து, ஆசேர் என இரண்டு மகன்களைப் பெற்றார். லேயா மீண்டும் கருத்தாங்கி இசக்கார், செபுலோன் என இரண்டு மகன்களையும் தீனா என்று ஒரு மகளையும் பெற்றாள்.

யாக்கோபிற்கு பதினொன்று பிள்ளைகள் பிறந்தபின் ராகேல் தாய்மையடைந்தாள். ராகேல் தாய்மையடைந்ததை அறிந்த யாக்கோபு மிகவும் மகிழ்ந்தார். அவள் ஒரு ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டனர்.

யோசேப்பு பிறந்தபின் யாக்கோபு லாபானை விட்டு தனியே பிரிந்து செல்ல ஆசைப்பட்டார். ஆனால் லாபான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. யாக்கோபு சென்றுவிட்டால் தனக்கு வேலை செய்ய திறமையான ஆள் இல்லாமல் போய் விடுமே என்று பயந்தார். தன்னுடைய செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் சுயநல நோக்கில் அவர் யாக்கோபின் பயணத்தைத் தடுத்தார்.

யாக்கோபு அவரிடம்,’ நான் வந்து உம்முடைய மந்தையை பல மடங்கு பெரிதாக்கியிருக்கிறேன். வளங்களை மிகுதியாக்கியிருக்கிறேன். எனக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் இனிமேல் நான் எனக்காக உழைக்க வேண்டும்’ என்றார்.

‘சரி உனக்கு நான் இனிமேல் நல்ல கூலி தருகிறேன். நீயே கேள் உனக்கு என்ன ஊதியம் வழக்க வேண்டும் ? என்ன தந்தால் தொடர்ந்து என் மந்தையைப் பாதுகாப்பாய் ?’

‘எனக்குக் கூலியாக உம் மந்தையில் உள்ள செம்மறியாடுகளில் கலப்பு நிறமோ, புள்ளியோ உள்ளவற்றையும், கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகளையும், வெள்ளாடுகளில் புள்ளியோ, கலப்பு நிறமோ உள்ளவற்றையும் எனக்குக் கூலியாகத் தந்தால் நான் உமது மந்தைகள் அனைத்தையும் தொடர்ந்து மேய்ப்பேன்’ யாக்கோபு சொன்னார்.

லாபான் ஒத்துக் கொண்டார். ஆனால் தந்திரமாக அன்று இரவே யாக்கோபு சொன்ன அடையாளங்கள் உள்ள அத்தனை கால்நடைகளையும் தம் மகனிடம் கொடுத்து வெளியூருக்கு ஓட்டிச் செல்லுமாறு அனுப்பி வைத்தார். யாக்கோபு மறுநாள் மந்தைக்குச் சென்றபோது அவருக்குக் கூலி என்று எதுவும் இருக்கவில்லை. அவன் கேட்ட அடையாளங்களில் எந்தக் கால்நடையும் இல்லை.

லாபான் தன்னை ஏமாற்றி விட்டதை அறிந்த யாக்கோபு வேறொரு திட்டமிட்டான். இனி பிறக்கப் போகும் கால்நடைகளிலாவது தனக்கு நிறைய சொந்தமாகவேண்டும் என்று யோசித்து புத்திசாலித்தனமான ஒரு செயலைச் செய்தான்.

புன்னை, வாதுமை, அர்மோன் ஆகிய மரக் கொம்புகளை வெட்டி அவற்றின் தோலை வரி வரியாய் உரித்தான். பின் அவற்றை மந்தைகள் தண்ணீர் குடிக்கும் நீர்த்தொட்டிகளிலும், கால்வாய்களிலும் ஆடுகளின் கண்களில் படும்படியாகப் போட்டு வைத்தான். அவற்றைப் பார்த்துக்கொண்டே உறவு கொண்ட ஆடுகள் போட்ட குட்டிகளுக்கு எல்லாம் வரிகள் இருந்தன ! அவற்றை யாக்கோபு தமக்குரிய கூலியாய் எடுத்துக் கொண்டான்.

பின் வலிமையான ஆடுகள் பொலியும்போதெல்லாம் அவற்றுக்கு எதிரே அந்தக் கொம்புகளைப் போட்டார். அதன் குட்டிகள் எல்லாம் வரியுடையவைகளாய் பிறந்தன. நோஞ்சானாய் இருந்த ஆடுகளின் முன்னால் அவன் கொம்புகளைப் போடவில்லை. லாபானுக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஏன் ஏராளமான ஆடுகள் யாக்கோபு சொன்ன அடையாளங்களோடு பிறக்கின்றன என்பது அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

கொஞ்ச நாட்களிலேயே யாக்கோபிடம் வலிமையான பெரிய மந்தை ஒன்று சேர்ந்தது. லாபானிடமோ நோஞ்சானான ஒரு மந்தையே மிச்சமிருந்தது.

லாபான் தன் மந்தை இளைத்துப் போவதைக் கண்டதும் யாக்கோபின் கூலியை மாற்றினார்.
‘யாக்கோபு.. இனிமேல் உனக்குக் கூலியை நான் நிர்ணயிக்கிறேன். உன்னுடைய கூலி இனிமேல் கறுப்பு நிறக் கால்நடைகள் மட்டுமே’

கடவுள் யாக்கோபுடன் இருந்தார். அடுத்த சிறிது காலத்திற்கு மந்தையில் எல்லா கால்நடைகளும் கறுப்பு நிறக் குட்டிகளையே ஈன்றன.

‘இல்லை… இந்த முறை வெள்ளை நிறக் குட்டிகள் உனக்கு கூலி….’ லாபான் மீண்டும் கூலியை மாற்றினார். ஆனால் கடவுள் யாக்கோபின் பக்கமிருந்து விலகவில்லை. கால்நடைகள் எல்லாம் வெள்ளை நிறக் குட்டிகளை ஈன்றன.

லாபான் திகைத்தான். வெள்ளை, கறுப்பு, கலப்பினம், என்று பத்து முறை கூலியை மாற்றினான். ஆனால் எப்போதுமே யாக்கோபுவிற்கே அது சாதகமாய் முடிந்தது. யாக்கோபின் மந்தை மிக விரைவாய் வளர்ந்தது.

இனிமேலும் லாபானுடன் தங்குவது நல்லதல்ல, தம்முடைய சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனியே போய்விட வேண்டும் என்று யாக்கோபு முடிவெடுத்தார். அதன்படி அவர் தன்னுடைய மந்தைகளையும், மனைவியரையும் அழைத்துக் கொண்டு தம் ஊரை நோக்கிப் புறப்பட்டான். ராகேல் தன்னுடைய தந்தையின் குலதெய்வச் சிலைகளையும் திருடி தன்னுடன் வைத்துக் கொண்டாள். அது யாக்கோபுக்குத் தெரியாது.

மூன்றாவது நாள் தான் யாக்கோபு ஓடிப் போன செய்தியை லாபான் உணர்ந்தார். தன்னுடைய குலதெயவச் சிலைகளும் திருடப்பட்டிருப்பதைக் கண்ட அவர் மிகவும் கோபமடைந்து பெரிய படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு யாக்கோபை விரட்டிச் சென்றார். ஆனால் அன்று இரவே கடவுள் அவருக்குக் கனவில் தோன்றி யாக்கோபைத் துன்புறுத்தக் கூடாது என எச்சரித்தார்.

லாபான் தன் படையினரோடு விரைந்து வந்து யாக்கோபைச் சந்தித்தான்
‘ஏன் என்னுடைய சிலைகளைத் திருடிவந்தாய் ? ‘ லாபான் கத்தினார்.

‘உம்முடைய சிலைகளை நான் திருடி வந்தேனா ? இருபது ஆண்டுகள் உமக்காக உழைத்தேனே. என் மீது நம்பிக்கை இல்லையா உமக்கு ? இப்படிப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்துகிறீர்களே ?’

‘சமாளிக்க வேண்டாம். இத்தனை காலமும் என்னோடு இருந்த என்னுடைய சிலைகள் எப்படி திடீரெனக் காணாமல் போகும் ? நீர் தான் அதைத் திருடியது. உண்மையை ஒத்துக் கொண்டு என்னுடைய சிலைகளைத் திரும்ப ஒப்படைத்துவிடு’

‘என் கோபத்தைக் கிளறவேண்டாம். உமக்குச் சந்தேகமென்றால் எங்கள் கூடாரங்களைச் சோதனையிடுங்கள். உமது சிலைகளை யாராவது திருடி வந்திருந்தால் அவர்களை நீரே கொன்று விடும்’

யாக்கோபின் பதிலைக் கேட்ட ராகேல் திடுக்கிட்டாள். சிலைகள் தன்னிடம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் தான் அழிந்து போவோமோ என்று கலங்கினாள்.
உடனே சென்று திருடிவந்த சிலைகளை எல்லாம் ஒட்டகச் சேணத்தினுள் வைத்து அதன் மீது அமர்ந்து கொண்டாள்.

லாபான் எல்லா கூடாரங்களிலும் ஏறி தன்னுடைய சிலைகளைத் தேடினான். எங்கும் காணவில்லை. இனிமேல் ஒரே ஒரு கூடாரம் தான் பாக்கி. அது ராகேலின் கூடாரம். லாபான் ராகேலின் கூடாரத்துக்குள் நுழைந்தார். உள்ளே ராகேல் அமர்ந்திருந்தாள்.

‘மன்னியுங்கள். நான் மாதவிலக்காய் இருக்கிறேன். என்னால் இப்போது எழுந்து உமக்கு மரியாதை செலுத்த முடியாமைக்கு வருந்துகிறேன்’ ராகேல் நடித்தாள்.

‘பரவாயில்லை. நீ ஒட்டகச் சேணத்தில் தானே அமர்ந்திருக்கிறாய். நான் உன் கூடாரத்தை சோதனை செய்து விட்டுப் போய்விடுகிறேன்’ லாபான் சொன்னார். ராகேலின் கூடாரமும் சோதனையிடப் பட்டது. அங்கும் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. எங்கும் சிலைகள் அகப்படாததால் யாக்கோபின் கூட்டத்தாரிடம் சிலைகள் இல்லை என்னும் முடிவிற்கு லாபான் வந்தான்.

‘யாக்கோபு. என்னை மன்னித்துவிடு. உன்னிடம் அந்த சிலைகள் இல்லை. இனிமேல் நாம் சமாதானமாய்ப் போய்விடுவதே நல்லது. இனிமேல் நீயும் நானும் தனித்தனியே வாழலாம்’ லாபான் கூறினார். உடனே யாக்கோபு அங்கே ஒரு கல்லை நாட்டி,’ இது கலயேது என அழைக்கப் படட்டும். இதுவே நமது எல்லைக் கல். இதற்கு அப்புறம் நீங்களும், இந்தப் பக்கம் நானும் வாழ்வோம்’ என்று உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

கோபங்களை எல்லாம் மறந்து ஒற்றுமையாகிய லாபான் அன்று அவர்களோடு தங்கி காலையில் தன் பேரப் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு, தன் மகள்களை நல்ல முறையில் கவனிக்குமாறு யாக்கோபிடம் வேண்டுகோள் விடுத்து விடை பெற்றார்.

36 comments on “கி.மு : முதலிரவில் மாறிய மணப்பெண்.

  1. [‘ராகேல்… அழகான பெயர்’ யாக்கோபின் குரலில் காதல் வழிந்தது.]……
    உலகில் 12 கோத்திரங்களும் யாக்கோபுவின் 12 பிள்ளைகள் மூலமாக வந்ததை அழகாகக் கூறியிருக்கிறீர்கள்…
    யாக்கோபுவின் கதையை மிகவும் நன்றாக, எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்…
    படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வசனநடை…. பிரமாதம்…. வாழ்த்துகள்!!
    யாக்கோபுவின் தாய் மாமன் மகள் ராகேல்…
    ராகேல் (Rachel) என்றல் எபிரேய மொழியில் (Hebrew) “கள்ளம் கபடமற்ற ஆட்டுக்குட்டி” என்று பொருள்படும்.
    யோசேப்பு (Joseph) என்றால், எபிரேய மொழியில் (Hebrew) “கடவுள் சேர்த்துத் தருகிறார்” என்று பொருள்.
    “கலயேது என்றால் எபிரேய மொழியில் (Hebrew) “சாட்சியக் குவியல்” என்ரு பொருள்படும்.
    பெயர்களுக்குப் பொருள் கூறவேண்டும் போல் இருந்ததால் பொருள்விளக்கம் தந்தேன்…. தவறாயிருந்தால் மன்னிக்கவும்…. நன்றி சேவியர்.
    உங்கள் அற்புதமான பணி தொடர வாழ்த்துகிறேன்.

    Like

  2. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

  3. நன்று சேவியர்..

    மிக, மிக எளிமையான மொழியில் எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்..

    உங்களுடைய இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?
    //

    நன்றி உண்மைத்தமிழன்.

    அருவி/தோழமை பதிப்பகத்தில் கிடைக்கும்
    9444302967 – எனும் எண்ணுக்கு தொலைபேசி விலாசம் சொன்னால் அனுப்பி வைப்பார்கள்.

    Like

  4. நன்று சேவியர்..

    மிக, மிக எளிமையான மொழியில் எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்..

    உங்களுடைய இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

    Like

  5. //எந்தக் காலத்திலும் மனித மனங்களின் இயல்பு எந்தக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.வாழ்வின் மாதிரிக் கதை.அழகு.
    //

    மிக்க நன்றி. உங்கள் வலைத்தளத்தை புரட்டிப் பார்த்தேன் இன்றைக்கு. அசத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் என்ன, வலைத்தளத்தில் பின்னூட்டம் இட பல முறை முயன்றேன்… தொங்குகிறது தளம். மிக மிக மெதுவாக இருக்கிறது ! என்ன விஷயம் ? 😦

    Like

  6. விஞ்ஞான வளர்ச்சியோ பொருளாதார வளர்ச்சியோ இல்லாத காலத்தில் நடந்த கதை இது.பாருங்கள்.எந்தக் காலத்திலும் மனித மனங்களின் இயல்பு எந்தக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.வாழ்வின் மாதிரிக் கதை.அழகு.

    Like

  7. அன்பு நண்பர் குகனுக்கு, கருத்துக்களுக்கு நன்றிகள். இது எனது “கி.மு : விவிலியக் கதைகள்” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை. கவிஞர் அப்துல்ரஹ்மானும், இயக்குனர் மகேந்திரன் அவர்களும் மிகவும் விரும்பிப் படித்த நூல். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலமும் அவற்றின் வரலாற்றுச் சுவடுகளையும் எளிமைப்படுத்தி கதை போல இலக்கிய உலகுக்கு அளிக்க வேண்டும் எனும் உந்துதலின் விளைவே இந்நூல்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    Like

  8. நண்பர் சேவியருக்கு ,

    காட்சிகள் கண் முன்னே விரியும் படி நன்கு எழுதி உள்ளீர்கள் !!

    அன்புடன்
    குகன்

    Like

  9. செந்தழல் ரவி மீது எனக்கு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. எப்போதும். வருகைக்கு நன்றி.

    Like

  10. Hi Xaviar,

    You have done a very good work. And the story telling style is wonderful.

    Regards,
    G.N.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.