கவிதை : மயக்கும் மாலைப் பொழுதே

பூமி மீது வானம்
மங்கள
வெயில் எறிந்து விளையாடும்
மாலை.

சிலந்தி வலைகளின்
பிசுபிசுப்புக் கயிறுகளில்
கசவு மின்னும் நெசவு
கண்களைத் தின்னும்.

மாலை அழகுதான்,
அத்தனை அழகையும்
இமை மூடி இருட்டாக்கும்
இரவுக்கும்,
அத்தனை ஜன்னல்களையும்
ஒட்டு மொத்தமாய் திறக்கும்
பகலுக்கும் இடையே,

மங்கல் வெளிச்ச
மந்திரத் தோட்டமாய்,
பச்சை மரங்களின் மார்பிலும்,
பருவப் பெண்களின் கனவிலும்
மஞ்சள் தேய்க்கும்
இந்த கதிர் மாலைக் குளியல்.

இருவிழிகள் இருகிளிகளாய்
இதமாய் வந்து
இதயம் கொத்த,
சின்ன என் மழலை
பட்டாம் பூச்சி பிடிக்கும் மாலை.

மாலை அழகுதான்,
விடலைக் காலம் முதல்
முதுமையின்
கைத்தடிக் காலம் வரை.
மாலை அழகு தான்.

சோர்வு என்னை
சுருக்குப் பையில் சொருகும்
வேளைகளிலெல்லாம்
வாசலில்
எனக்காக மாலை காத்திருக்கும்
மடி நிறையக் கதைகளுடன்.

உன்
இதயமெனும் வண்ணத்துப் பூச்சி
இறக்கை அடிக்கிறதா ?
எனும் உனக்கான என்
காதல் கவிதை கூட
இதே சூரியன் அன்றொருநாள்
விழுந்தபோது எழுந்தது தான்.

நல்லவேளை,
என் காதலை
நீ
மாலை நேரத்தில் மறுதலிக்கவில்லை.

12 comments on “கவிதை : மயக்கும் மாலைப் பொழுதே

  1. நண்பர் சேவியருக்கு ,

    விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
    ஆச்சரியத்தில் உயர்ந்த புருவத்தோடு எழுதுகிறேன்.
    “எவ்வளவு ரசித்திருந்தால் இத்தனை துல்லியமாய் எழுத முடிந்திருக்கும் என்று நினைக்கையில் “. கண் முன்னே நிழலாடி விட்டு போனது நீங்கள் கூறிய காட்சியும் , கூடவே நேரடியாக அதை பார்த்திருந்த போதும் ரசிக்கத் தவறிய மனதும் .

    அன்புடன்
    குகன்

    Like

  2. //கசவு என்றால் என்ன ?
    //

    பெண்களிடம் கேட்டால் சட்டென்று சொல்வார்கள். திருமணமெனில், பட்டுச் சேலையில் கசவு எப்படி இருக்கிறது என்பது மட்டுமே அவர்களுக்குப் பிரதானம் 🙂

    //சிலந்தி வலைகளின்
    பிசுபிசுப்புக் கயிறுகளில்
    கசவு மின்னும் நெசவு
    கண்களைத் தின்னும்.//

    சற்றே ஈரமாய் இருக்கும் சிலந்தி வலைகளில் மாலை வெயில் படருகையில் பலவண்ணக் கசவுத் துணி போல அது பார்வைக்கு வியப்பளிக்கிறது..

    //மாலைப் பொழுதுகளின் ரம்மியத்திற்கு என்றுமே குறைவு இல்லை. அந்த ரம்மியத்தைக் கெடுக்காததன் விளைவு தான் இன்னும் காதலை நினைவு கூற வைக்கிறது என நினைக்கிறேன்

    //

    நீ ஒரு மாலை நேரத்தில் என் காதலை மறுதலித்திருந்தால், எனது மாலைப் பொழுதுகளின் மேல் ஒரு துயரக் கறுப்பு வந்தமரக் கூடும். அதன்பின் வருகின்ற மாலைகளிலெல்லாம் அந்த நினைவு வந்து என் மாலைகளின் புனிதத்தை ரசிக்க விடாமல் செய்திருக்கக் கூடும் என காதலன் நினைக்கிறான்.
    🙂

    Like

  3. அன்புள்ள சேவியருக்கு,

    “கசவு மின்னும் நெசவு
    கண்களைத் தின்னும்”

    கசவு என்றால் என்ன ?
    மாலைப் பொழுதுகளின் ரம்மியத்திற்கு என்றுமே குறைவு இல்லை. அந்த ரம்மியத்தைக் கெடுக்காததன் விளைவு தான் இன்னும் காதலை நினைவு கூற வைக்கிறது என நினைக்கிறேன் .

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  4. ////சிலந்தி வலைகளின்
    பிசுபிசுப்புக் கயிறுகளில்
    கசவு மின்னும் நெசவு
    கண்களைத் தின்னும்.//

    சூப்பரா இருக்குங்க… என்னமா யோசிச்சி இருகிங்க… ரொம்ப அழகான வரி… வாழ்த்துக்கள்…

    //

    மிக்க நன்றி தம்பி.

    Like

  5. //மாலை அழகுதான்
    வேலை முடிந்து
    பஸ் ஸ்டாப்பில்
    நிற்கும் குட்டிகள்
    கார் வாங்காத வரை….

    //

    காரில் ஒரு இடம் தந்தால் மாலை என்ன காலையும் அழகுதான் என்று சொல்ல வருகிறீர்களோ 😉

    Like

  6. //சிலந்தி வலைகளின்
    பிசுபிசுப்புக் கயிறுகளில்
    கசவு மின்னும் நெசவு
    கண்களைத் தின்னும்.//

    சூப்பரா இருக்குங்க… என்னமா யோசிச்சி இருகிங்க… ரொம்ப அழகான வரி… வாழ்த்துக்கள்…

    Like

  7. மாலை அழகுதான்
    வேலை முடிந்து
    பஸ் ஸ்டாப்பில்
    நிற்கும் குட்டிகள்
    கார் வாங்காத வரை….

    என்ன சொல்றிங்க….

    Like

  8. //நான் முந்திக்கொண்டேன் பின்னூட்டத்திற்கு.//

    மிக்க நன்றி 🙂

    //
    உங்கள் கவிதைகளில் தேடி எடுக்கும் தமிழ்தான் அழகு.//

    மீண்டும் நன்றிகள்.

    //
    கவனம்…காதலியை விட மாலைப்பொழுதையே காதலித்துக் கொள்ளுங்கள்.நல்லது.ஏமாற்றாமல் கதைகள் சொல்லி சந்தோஷம் தருவாள்.மாலைநேரத்தில் மட்டும் காதலை மறுக்காதவள் சிலவேளை காலையில் என்ன சொல்வாளோ!!!

    //

    🙂

    Like

  9. நான் முந்திக்கொண்டேன் பின்னூட்டத்திற்கு.
    உங்கள் கவிதைகளில் தேடி எடுக்கும் தமிழ்தான் அழகு.
    கவனம்…காதலியை விட மாலைப்பொழுதையே காதலித்துக் கொள்ளுங்கள்.நல்லது.ஏமாற்றாமல் கதைகள் சொல்லி சந்தோஷம் தருவாள்.மாலைநேரத்தில் மட்டும் காதலை மறுக்காதவள் சிலவேளை காலையில் என்ன சொல்வாளோ!!!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.