கவிதை : என் சன்னலோரச் சிட்டுக்கள்

அந்த
சாம்பல் நிறக் குருவி
குஞ்சுகளைக்
கூட்டிக் கொண்டு
கூட்டுக்கு வெளியே
பறக்கத் துவங்கியிருக்கிறது.

இந்த சன்னல் திரையின்
கண்கள் வழியே தெரிகிறது,
ஈரத் தரையின்
புற்கள் இடையே
அதன்
அலகுப் பற்கள் அலையும் அழகு,

காணும் பட்டத்தின் பின்
நீளும் வாலாய்,
தாயின் பின்னால்
குஞ்சுகள் தத்தும் அழகு,

உச்சரிக்கும் பூவாய்,
எச்சரிக்கும் காற்றாய்,
தாயை
நச்சரிக்கும் குரலாய்,
காதில் பூச்சொரியும்
கீச்சுக் குரலழகு,

அதன்
சிறகுச் சூட்டில் சிலநேரம்
சிக்கிக் கிடக்கும்
என் குளிர் கண்கள்.

சில காலம் முன்
சுள்ளி சேகரித்த
காலத்திலேயே எனக்குள்
அது
கூடு கட்டிக் குடியேறி விட்டது.

இப்போது,
தேனீர்,
அலுவல்,
குருவிக் கவனிப்பென்பது
வழக்கமான பழக்கமாகிவிட்டது.

நான்
பேசியதில்லை.
ஆனாலும்
பிரிய நண்பன் போல்
உள்ளுக்குள் தோன்றல்.

அது பேசும் பாஷைகளில்
தமிழை விட
தொன்மை வாடை.
அதன் அழகுக் கழுத்தில்
மலரை விட
மென்மை ஆடை.

மனசில் சிதறும் தானியங்களை
அவை
தரையில் அமர்ந்து
கொத்துகின்றன.

அவை கொத்தித் தின்னும்
அழகில்
என்
மனசின் தானியங்கள்
முளை விடுகின்றன.

அதன்
சத்தங்களின் சரணாலயமாய்
என்
நினைவுச் செடியின்
நீண்ட கிளைகள்.

மனம் மட்டும்
கவனமாய் கவலைப்படும்.

நாளை
சிட்டுக்கள் மீண்டும் வருமோ ?
இல்லை ஏதேனும்
வேடந்தாங்கலை
வேண்டிச் செல்லுமோ ?

*

 : சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து.

24 comments on “கவிதை : என் சன்னலோரச் சிட்டுக்கள்

  1. ஒரு வரி என்று சொல்லமுடியாமல், கவிதை முழுதுமே அழகான வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    Like

  2. //சேவியர் அண்ணாவை காணல.கிராமத்துக்கு அவங்க அப்பா அம்மாகிட்ட இயற்கையை ரசிக்க பறந்து போய்டாருங்கோ….பாருங்க அடுத்த கவிதையை.//

    🙂 அதெப்படி உங்களை சும்மா வுட்டுடுவேனா 🙂

    Like

  3. //எனக்கு ஊரில், சிறு வயதில் ஒரு குருவி தோழி உண்டு.
    காலையில் தேங்காய் துருவும் சத்தத்தில் , ஜன்னலில் வந்து நிற்கும் கொஞ்ஞம் தேங்காய் போட்டவுடன், கொத்தி தின்னுவிட்டு ஓடி போய்விடும்.

    அப்புறம் எங்க வீட்டு பக்கம் நிறையவீடு வந்திருச்சு, குருவி கூடு காணாமபோய்யிருச்சு.

    //

    எல்லோருக்குள்ளும் வழிகிறது தொலைந்தவற்றின் துயரங்கள். 😦

    Like

  4. //ஓ….இதுதான் ரசிப்பின் ரகசியமோ.ம்ம்ம்….நான் எங்கே போவேன் எம் நாடுகளில் உள்ளது போல அழகையும் பசுமையயும் பாசத்தையும் பழமையையும் தேக்கி வைத்திருக்கும் கிராமத்துக்கு.கொடுத்து வைத்தவர் நீங்கள்//

    இந்தியா வரும்போது மறக்காமல் உங்களை அழைத்துச் செல்கிறேன் 🙂

    Like

  5. //கவனமாய் கவலைகளை
    என் மனதில் ஏற்றி விட்டீர்கள். சேவியர்!
    அன்புடன் அருணா

    //

    நன்றி அருணா 🙂

    Like

  6. //கவிதை வேண்டுமா
    உன்னை இழ
    காதல் வேண்டுமா
    இதயம் இழ
    வெற்றி வேண்டுமா
    தூக்கம் இழ

    என்று தன்னுடைய கவிதை ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்து கூறுவார்.//

    அடிக்கடி நல்ல கவிதைகளைக் கொண்டு வந்து மேற்கோள் காட்டி தளத்தை அழகுபடுத்துகிறீர்கள். நன்றி.

    //அப்படி உங்களை முழுமையாய் இழந்த நேரத்தில் விளைந்த கவிதை.சிட்டுக் குருவிகள் சிவகாசிப் பட்டாசுகளில் மட்டும் தெரியப் போகும் அளவுக்கு இயற்கைச் சூழல் கெட்டுப் போகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய சிந்தனை எழுகிறது . //

    வாவ்… சிட்டுக் குருவிகளை சிவகாசிப் பட்டாசுகளில் மட்டும் காணக் கூடிய ஒரு சூழல் உருவாகலாம் – எனும் உங்கள் வரிகளில் தெரிகிறது ரசனையும், கவித்துவமும், சமூக நலனும் கலந்த பார்வை.

    //
    அது பேசும் பாஷைகளில்
    தமிழை விட
    தொன்மை வாடை.
    அதன் அழகுக் கழுத்தில்
    மலரை விட
    மென்மை ஆடை.

    மனசில் சிதறும் தானியங்களை
    அவை
    தரையில் அமர்ந்து
    கொத்துகின்றன.

    அவை கொத்தித் தின்னும்
    அழகில்
    என்
    மனசின் தானியங்கள்
    முளை விடுகின்றன.

    ரசிகனை சிட்டுக் குருவி கூடு கட்டி இருக்கும் உச்சாணி கொம்பு கிளைக்கு அதற்கு தெரியாமலே அழைத்துச் சென்று வந்து விட்டீர்கள் !!!!!!!!!!!

    //

    மிக்க நன்றி குகன். கவிதை எழுதிய எழுத்தாளனின் தளத்தில் வாசகனும் கவிதையை வாசித்தால் கவிதை தன் அர்த்தத்தை எப்போதும் இழக்காது என்பதை விளக்கின உங்கள் வரிகள். நன்றி.

    Like

  7. //சிட்டுக்குருவியைப் பார்த்து உங்களால் கவிதை எழுத முடிந்தது. எனக்கு ரசிக்கத்தான் தெரியும்//

    எழுதினால் மட்டும் தான் கவிதையா ?

    Like

  8. சேவியர் அண்ணாவை காணல.கிராமத்துக்கு அவங்க அப்பா அம்மாகிட்ட இயற்கையை ரசிக்க பறந்து போய்டாருங்கோ….பாருங்க அடுத்த கவிதையை.

    Like

  9. எனக்கு ஊரில், சிறு வயதில் ஒரு குருவி தோழி உண்டு.
    காலையில் தேங்காய் துருவும் சத்தத்தில் , ஜன்னலில் வந்து நிற்கும் கொஞ்ஞம் தேங்காய் போட்டவுடன், கொத்தி தின்னுவிட்டு ஓடி போய்விடும்.

    அப்புறம் எங்க வீட்டு பக்கம் நிறையவீடு வந்திருச்சு, குருவி கூடு காணாமபோய்யிருச்சு.

    Like

  10. ஓ….இதுதான் ரசிப்பின் ரகசியமோ.ம்ம்ம்….நான் எங்கே போவேன் எம் நாடுகளில் உள்ளது போல அழகையும் பசுமையயும் பாசத்தையும் பழமையையும் தேக்கி வைத்திருக்கும் கிராமத்துக்கு.கொடுத்து வைத்தவர் நீங்கள்.

    Like

  11. //மனம் மட்டும்
    கவனமாய் கவலைப்படும்.

    நாளை
    சிட்டுக்கள் மீண்டும் வருமோ ?
    இல்லை ஏதேனும்
    வேடந்தாங்கலை
    வேண்டிச் செல்லுமோ //

    கவனமாய் கவலைகளை
    என் மனதில் ஏற்றி விட்டீர்கள். சேவியர்!
    அன்புடன் அருணா

    Like

  12. அன்புள்ள சேவியருக்கு,

    கவிதை வேண்டுமா
    உன்னை இழ
    காதல் வேண்டுமா
    இதயம் இழ
    வெற்றி வேண்டுமா
    தூக்கம் இழ

    என்று தன்னுடைய கவிதை ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்து கூறுவார்.அப்படி உங்களை முழுமையாய் இழந்த நேரத்தில் விளைந்த கவிதை.சிட்டுக் குருவிகள் சிவகாசிப் பட்டாசுகளில் மட்டும் தெரியப் போகும் அளவுக்கு இயற்கைச் சூழல் கெட்டுப் போகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய சிந்தனை எழுகிறது .

    அது பேசும் பாஷைகளில்
    தமிழை விட
    தொன்மை வாடை.
    அதன் அழகுக் கழுத்தில்
    மலரை விட
    மென்மை ஆடை.

    மனசில் சிதறும் தானியங்களை
    அவை
    தரையில் அமர்ந்து
    கொத்துகின்றன.

    அவை கொத்தித் தின்னும்
    அழகில்
    என்
    மனசின் தானியங்கள்
    முளை விடுகின்றன.

    ரசிகனை சிட்டுக் குருவி கூடு கட்டி இருக்கும் உச்சாணி கொம்பு கிளைக்கு அதற்கு தெரியாமலே அழைத்துச் சென்று வந்து விட்டீர்கள் !!!!!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  13. சிட்டுக்குருவியைப் பார்த்து உங்களால் கவிதை எழுத முடிந்தது. எனக்கு ரசிக்கத்தான் தெரியும்.
    கமலா

    Like

  14. //இயந்திர கதியான வெளிநாட்டு வாழ்க்கையில் எப்படித்தான் நேரம் கிடைக்கிறது உங்களுக்கு இப்படியெல்லாம் ரசிக்க.இலக்கிய ரசிகன் அண்ணா நீங்கள்.கொஞ்சம் பொறாமைதான் எனக்கு.//

    🙂 நான் சென்னையில் தான் இருக்கிறேன் ஹேமா. அடிக்கடி கிராமத்துக்கு ஓடிவிடுகிறேன்.

    Like

  15. //நான் சிறு வயதில் சிட்டுக்குருவிகளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பேன்.
    இப்பொழுது நம் நாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
    சென்ற மாதம் இங்கு (மாட்ரிடில்) குருவிகளை பார்த்ததும் என் மனம் துள்ளி குதித்தது.
    //

    உங்கள் மென்மையான மனதின் பிரதிபலிப்பு அது 🙂

    Like

  16. இயந்திர கதியான வெளிநாட்டு வாழ்க்கையில் எப்படித்தான் நேரம் கிடைக்கிறது உங்களுக்கு இப்படியெல்லாம் ரசிக்க.இலக்கிய ரசிகன் அண்ணா நீங்கள்.கொஞ்சம் பொறாமைதான் எனக்கு.

    Like

  17. ரொம்ப அருமையான வரிகள்.
    //நாளை சிட்டுக்கள் மீண்டும் வருமோ ?//
    நான் சிறு வயதில் சிட்டுக்குருவிகளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பேன்.
    இப்பொழுது நம் நாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
    சென்ற மாதம் இங்கு (மாட்ரிடில்) குருவிகளை பார்த்ததும் என் மனம் துள்ளி குதித்தது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.