யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்” : நூல் விமர்சனம்

நேற்று யெஸ்.பாலபாரதி அவர்கள் எழுதிய “அவன் – அது = அவள்” எனும் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திருநங்கையர் குறித்த அக்கறையும், பாசமும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது மனித நேயத்தின் வேர்களில் இன்னும் ஈரம் உலராமல் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கிழக்கு வெளியிட்ட நான் வித்யா, தோழமை வெளியிட்ட அரவாணிகள் இரண்டு நூலையும் தொடர்ந்து மூன்றாவதாக வாசிக்கும் நூல் இது என்பதால் இந்த நாவல் தரும் அனுபவம் வலி கூட்டுகிறது.

திருநங்கையரின் உண்மையான அனுபவங்களின் வாக்கு மூலங்களையும், அவர்களுடைய வாழ்க்கையின் துயரங்களையும் ஓர் ஆவணமாக்கிய விதத்தில் பாலபாரதி வெற்றியடைந்திருக்கிறார்.

எளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.

குறிப்பாக ‘கோபி’ யின் முதல் துயரம் சக மனிதன் மீதான கரிசனையற்ற ஓர் காட்டு வாசிக் கூட்டத்தின் ஆணிவேர்களில் கோடரியாய் இறங்கியிருக்கிறது. வாசிக்கும் போதே அந்த சமூகக் கூட்டத்தில் ஓர் புழுவாய் நெளியும் அவஸ்தையும், அவமானமும் சூழ்ந்து கொள்கின்றன.

கடைசி கட்டத்தில் நிர்வாணச் சடங்கை விவரிக்கும் போது திருநங்கையரின் துயரத்தின் ஆழம் மனதை மூழ்கடிக்கிறது. துயரங்களின் புதைகுழியையே வாழ்க்கையின் இருப்பிடமாகக் கொண்ட சகோதரிகளின் கண்ணீர் துளிகளின் பிரதிகள் நம்மிடமிருந்தும் வழிகின்றன.

அழுகையின் அடர் இரவில் எழும் மின்மினிகளின் பளிச்சிடுதலாய் திருநங்கையரின் காதல் உணர்வுகளையும், மோகப் பகிர்வுகளையும் விரிவாகவே ஆசிரியர் விளக்குமிடத்தில் ஆபாசத்தையும் மீறி கண்கள் பனிக்கின்றன.

இன்றைய அவசர உலகம் கவனிக்க மறுத்த துயரங்களில் கூடாரத்தில் இவர்களுடைய வாழ்க்கையும் அடங்கும். இதை நாவல் என சொல்லவேண்டாம் என ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம். வலி மிகுந்த உண்மைகளே இதில் வலம் வருகின்றன என்பதால் இருக்கலாம்.

எடுத்துக் கொண்ட கருவுக்காக பாலபாரதியை முழுமையாகப் பாராட்டலாம். நாவல் எனும் வகையில் சில குறைகளையும் காண முடிகிறது. குறிப்பாக ‘நிர்வாணம்’ உட்பட சில காட்சிகளை அழுத்தமாய் விவரித்த அளவுக்கு நாவலின் முடிவுப் பகுதியும் விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறைவுப் பகுதி ஓடும் பஸ்ஸிலிருந்து சட்டென குதித்துவிட்ட அவஸ்தையையே தருகிறது. முழுமையாக அந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் அந்த அவசரம் தடுத்துவிடுகிறது. இந்த நிலை நாவலின் இடையிடையே நேர்கிறது.

எனினும், தனது முதல் நாவலின் மூலமாக ஓர் அழுத்தமான களத்தை எடுத்துக் கொண்டு அதற்காய் சமரசங்கள் செய்து கொள்ளாமல், நிஜத்தின் வலியையும், வலியின் நிஜத்தையும் ஆழமாய் பதிவு செய்த வகையில் ஆசிரியர் தனித்துவம் பெறுகிறார்.

——————————– ——————————– ——————————– 

பல ஆண்டுகளுக்கு முன் திருநங்கையர் பற்றி நான் எழுதிய கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அவர்கள் என்ன
விண்ணப்பம் செய்து
விண்ணிலிருந்து
விழுந்தவர்களா ?
ஏதோ ஒரு கருவறையின்
கதவுதிறந்து பிறந்தவர்கள் தானே.

——————————– ——————————– ——————————– 

தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 184
விலை  : 120

29 comments on “யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்” : நூல் விமர்சனம்

  1. Pingback: அவன் - அது = அவள் :: யெஸ் பாலபாரதி « Snap Judgment

  2. இப்பொழுதுதான் வாசிக்கிறேன். தங்கள் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். விரிவான வாசக அனுபவம் எழுதணும் 🙂

    Like

  3. Pingback: கில்லி - Gilli » Blog Archive » Balabharathy’s ‘Avan - Athu = Aval’: Fiction review by Xavier

  4. //தங்களின் கருத்துக்கு நன்றி சேவியர்..,
    பொதுவாகவே நான் சோம்பேறி! அதிலும் எழுத்துவது என்பது இன்னும் அயர்வான காரியம் தான் எனக்கு! ஆனால் தொடர்ந்து இயங்கும் வாழ்க்கையில் உங்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்வேன்//

    வருகைக்கும், உங்கள் படைப்புக்கும் நன்றிகள். தொடர்ந்து பல நூல்களைத் தமிழுக்குத் தாருங்கள்.

    Like

  5. தங்களின் கருத்துக்கு நன்றி சேவியர்..,
    பொதுவாகவே நான் சோம்பேறி! அதிலும் எழுத்துவது என்பது இன்னும் அயர்வான காரியம் தான் எனக்கு! ஆனால் தொடர்ந்து இயங்கும் வாழ்க்கையில் உங்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்வேன். 🙂

    Like

  6. //ஆனாலும் “நாவல்” என்று சொன்னால் யெஸ்பா நரசிம்மாவதாரம் எடுக்க வாய்ப்பு உண்டு .. இது ஒரு சிறு எச்சரிக்கை மட்டுமே //

    ம்ம்…. “நெடுங்கதை!”

    எச்சரிக்கைக்கு நன்றி 🙂

    Like

  7. //தமிழில் வாடாமல்லிக்கு அடுத்து அரவாணிகள் குறித்து வந்த பிக்‌ஷன் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். எனவே தற்கால தமிழிலக்கிய சூழலில் இந்நாவல் மிக மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.//

    தகவலுக்கு நன்றி. ஆனாலும் “நாவல்” என்று சொன்னால் யெஸ்பா நரசிம்மாவதாரம் எடுக்க வாய்ப்பு உண்டு .. இது ஒரு சிறு எச்சரிக்கை மட்டுமே 🙂

    Like

  8. //எனக்கென்னவோ புத்தக அட்டை நன்றாக வந்திருப்பதாகவே பட்டது. இந்த நாவலுக்கு பொருத்தமான அட்டை//

    கொஞ்சம் போட்டோஷாப் வேலை செய்து , குறைந்த பட்சம் சற்று பிளர் செய்தாவது கொடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து. எனினும் அந்த ரசனைத் தேர்வுக்குரிய எழுத்தாளர்/பதிப்பாளரின் உரிமையில் நான் ஏதும் சொல்வதற்கில்லை 🙂

    // விலை கொஞ்சம் அதிகம் என்பது என் எண்ணம்//

    உண்மை !!! ரூ.80 முதல் ரூ.100 வரை இருந்திருக்கலாம். என்ன செய்ய குரூட் ஆயில் விலையேறிப்போச்சே 😀

    Like

  9. /// அட்டையில் திருநங்கை நெல்லை. முத்து மீனாட்சி யின் முகம், படம் எடுத்தவர் தஞ்சை பாரதி – பெரிய அளவில் ஈர்க்கவில்லை புத்தக அட்டை என்பதே உண்மை. ஆசிரியரிடம் சொல்லி விடாதீர்கள். ///

    எனக்கென்னவோ புத்தக அட்டை நன்றாக வந்திருப்பதாகவே பட்டது. இந்த நாவலுக்கு பொருத்தமான அட்டை. யெஸ்.பாலபாரதி என்ற பெயரை சிவப்பில் போட சொல்லியிருந்தேன். ஹாஃப் ஒயிட்டில் போட்டிருந்தார்கள். அது ஒன்றுதான் எனக்கு குறை 😦

    தமிழில் வாடாமல்லிக்கு அடுத்து அரவாணிகள் குறித்து வந்த பிக்‌ஷன் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். எனவே தற்கால தமிழிலக்கிய சூழலில் இந்நாவல் மிக மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.

    விலை கொஞ்சம் அதிகம் என்பது என் எண்ணம். இதுபோன்ற நாவல்கள் நிறைய பேரை சென்றடைய விலை கொஞ்சம் மலிவாக இருக்க வேண்டும்.

    //ஆனால் நிறைவுப் பகுதி ஓடும் பஸ்ஸிலிருந்து சட்டென குதித்துவிட்ட அவஸ்தையையே தருகிறது. //

    நாவல் குறித்த என்னுடைய விமர்சனமும் இதுவே. ஆனால் இதற்கும் நாவலாசிரியர் சில லாஜிக்குகளை வைத்திருக்கிறார் 🙂

    Like

  10. //நூலாசிரியர் எனது நீண்ட கால நண்பர். இருந்தும்……….புத்தக அட்டையை கூட இன்னும் காட்டவில்லை//

    🙂 அட்டையில் திருநங்கை நெல்லை. முத்து மீனாட்சி யின் முகம், படம் எடுத்தவர் தஞ்சை பாரதி – பெரிய அளவில் ஈர்க்கவில்லை புத்தக அட்டை என்பதே உண்மை. ஆசிரியரிடம் சொல்லி விடாதீர்கள். 🙂

    Like

  11. //,நீங்கள் படிக்கும் நூல்கள் யாவுக்கும் விமர்சனம் கொடுப்பதன் மூலமாய் !!!!!! //

    இதில் உண்மையில்லை என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.

    //நெல்லுக்கு பாய்ந்த நீர் (இறைப்பது சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான் )ஆங்கே என்னைப் போன்ற சிறு புல்லுக்கும் பாய்கிறது ,//

    உங்க தன்னடக்கத்தைக் காட்டறீங்க. ஆனா உங்க அளவுக்கு நிறைய புக் படிக்கிறதில்லை நான் என்பது தான் உண்மை 🙂

    // நறுக் கென்று கேள்வி கேட்டு உள்ளீர்கள் பல ஆண்டுகள் முன்பே கவிதையின் வாயிலாய் !!!!!!

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!

    //

    நன்றி குகன்.

    Like

  12. // இன்னும் கடைகளுக்கு வரவில்லை. பதிப்பாசிரியர் எனது நீண்ட கால நண்பர் //

    நூலாசிரியர் எனது நீண்ட கால நண்பர். இருந்தும்……….புத்தக அட்டையை கூட இன்னும் காட்டவில்லை 😉

    Like

  13. படைப்பாளி சேவியருக்கு,

    நிறைய நூல்களை படித்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறீர்கள் ,நீங்கள் படிக்கும் நூல்கள் யாவுக்கும் விமர்சனம் கொடுப்பதன் மூலமாய் !!!!!! நெல்லுக்கு பாய்ந்த நீர் (இறைப்பது சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான் )ஆங்கே என்னைப் போன்ற சிறு புல்லுக்கும் பாய்கிறது , இதனால் .திருநங்கையரும் மனித இனத்தின் ஒரு வகை தான் என்ற புரிந்துணர்வு நீங்கள் கூறி இருப்பது போல் இன்று ஓரளவு கூடி இருக்கிறது. நறுக் கென்று கேள்வி கேட்டு உள்ளீர்கள் பல ஆண்டுகள் முன்பே கவிதையின் வாயிலாய் !!!!!!

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  14. /சேவியர்!

    புத்தகம் கடைகளில் கிடைக்கிறதா?

    உங்களுக்கு எங்கே கிடைத்தது?

    அன்புடன்
    லக்கி

    //

    இன்னும் கடைகளுக்கு வரவில்லை. பதிப்பாசிரியர் எனது நீண்ட கால நண்பர் 🙂

    Like

  15. சேவியர்!

    புத்தகம் கடைகளில் கிடைக்கிறதா? 🙂

    உங்களுக்கு எங்கே கிடைத்தது?

    அன்புடன்
    லக்கி

    Like

  16. அரவாணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்
    ***********************************************************************
    [Thursday July 10 2008 04:17:51 AM GMT] [yalini]
    ஆண் பெண் பால்நிலை வேறுபாட்டை தெளிவாக உணர முடியாத அரவாணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுவிட்ஸர்லாந்து வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இவ்வாறான குழந்தைகள் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரவாணிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதனை வலியுறுத்தும் வகையில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று சூரிச் வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.
    பத்தாயிரத்திற்கு இரண்டு பிள்ளைகள் இவ்வாறு ஆண் பெண் பால் வேறுபாட்டை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாத வகையில் பிறப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    Like

  17. முதலில் யெஸ்.பாலபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.எனக்கும் இவர்களைப் பற்றின கரிசனை எப்போதும் உண்டு.என் தளத்தில் அவ(ன்)(ள்) என்ற தலைப்பில் ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறேன்.
    அவர்களைப் பற்றி சொல்லத்தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    இப்போ கொஞ்ச நாட்களுக்கு முன் “இப்படிக்கு றோஸ்”ல் இவர்களை பற்றிய ஒரு கலந்துரையாடல் கேட்டு மனதால் அழுதே விட்டேன்.அதன் தாக்கம்தான் அவ(ன்)(ள்)கவிதை.முன்னைய காலங்களைவிட விட இப்போவெல்லாம் திருநங்கையர்கள் பற்றி யாரும் குறையாகக் கதைப்பது குறைவாகவே உள்ளது.மனிதம் உணர்ந்திருக்கிறார்கள் மனிதர்கள்.இதற்குக் காரணம் புத்தகங்கள் தொலைக்காட்சி வானொலி போன்ற ஊடகங்களாகக்
    கூட இருக்கலாம்.

    குள்ளம் போல்…கோணல் போல்
    குறைதானே இதுவும் கூட.
    பெற்றவர் பொறுத்து ஆதரிக்க
    சுதாகரிக்கும் சுற்றமும் சூழலும்.
    வாழ்வே சூன்யமாய்
    ஆண் பாதி…பெண் பாதியாய்.
    காற்றும்…கடலும்,
    வானும்…மண்ணும்,பூவும்…மரமும்
    புண்ணாண என் மனதை அனுசரிக்க,
    அர்த்தநாரீஸ்வரர் என்று
    இறைவனைப் போற்றும்
    உலகம் மட்டும்…என்னை ஏன்!!!! ஹேமா(சுவிஸ்)

    Like

  18. புதிய ஆசிரியர் யெஸ்பாவுக்கு வாழ்த்துக்கள்.
    வளர்க…….

    Like

  19. //இது யார் எழுதிய விமர்சனம் என்று சொல்லவில்லையே ?//

    100 % நானே தான்.. என்ன சந்தேகம் ? 🙂

    Like

  20. பாலபாரதியின் படைப்பு கவனம் பெறவும், வாசிப்பைப் பெறவும் வாழ்த்துக்கள்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.