கட்டுரை : புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்

( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே.

உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முதலிடத்தில் உள்ளது, அங்குள்ள மக்களில் சுமார் முப்பது விழுக்காட்டினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாய் இருக்கின்றனர்.

இன்னும் இருபது ஆண்டுகளில் புகைப் பழக்கத்தினால் இறக்கும் மனிதர்களில் 80 விழுக்காட்டினர் பிந்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்பது புகைப் பழக்கத்துக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

உலக அளவில் தினமும் சுமார் 15, 000 பேர் புகைப் பழக்கத்தினால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை படிப்படியாய் வளர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சவாலாய் உருவெடுத்துள்ளது.

அடுத்த நூற்றாண்டு முளைக்கும் போது நூறு கோடி பேர் புகைக்கும் பழக்கத்தினால் புதையுண்டு போயிருப்பார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன ஆய்வறிக்கை.

உலகெங்கும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் (சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் ) அரசுகளுக்கு வரியாக வந்து சேர்கின்றன சிகரெட் பொருட்கள் மூலம், ஆனால் அதில் 0.2 விழுக்காடு கூட புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அரசுகள் செலவிடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வின் அறிக்கை.

அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துகள், புகைத்தலுக்கு எதிரான விளம்பரங்களைத் தீவிரப்படுத்துதல், புகையிலை பொருட்களுக்கான சலுகைகள் அனைத்தையும் நிறுத்துதல், பொது இடங்களில் புகைத்தலை தடை செய்தல், புகையிலையின் கொடுமையை மக்களுக்குப் புரிய வைத்தல், புகைப் பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு உதவுதல் என ஆறு வகைகளில் அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அது வலுயுறுத்தியுள்ளது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை 179 நாடுகளின் புகை பழக்கம் குறித்த தகவல்களை துல்லியமாய் தருகிறது. அதன்படி 74 நாடுகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது !, உலகின் ஐம்பது விழுக்காடு நாடுகள் அரசு அலுவலகங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது, வெறும் இருபது நாடுகள் மட்டுமே புகைக்கு எதிரான கடினமான கொள்கைகளை வகுத்துள்ளது.

பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.

உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகைத்தலினால் வருகிறது. புகைத்தலினால் அல்சீமர் போன்ற நோய்கள் விரைவிலேயே தாக்குகிறது என்று புள்ளி விவரங்களும், மருத்துவத் தகவல்களும் தொடர்ந்து மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் புகைப் பழக்கம் ஒழியவில்லை.

மைக்கேல் ராய்சன் மற்றும் மெஹ்மெட் எனும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புகைத்தலை நிறுத்துவதற்கான வழி முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

இது நான்கு படிகளைக் கொண்டது.

முதல் படி, புகை பழக்கமுடையவர் தன்னுடைய புகைப் பழக்கத்தைக் குறித்த முழு அறிவைப் பெறுதல். அதாவது ஒரு நாள் எத்தனை சிகரெட் பிடிக்கிறார், தனியாக புகை பிடிக்கிறாரா, நண்பர்களுடன் புகை பிடிக்கிறாரா ? காலையில் அதிகம் பிடிக்கிறாரா ? இரவிலா ? போன்ற அனைத்து விவரங்களையும் தயாராக்குதல்.

இரண்டாவது படி, புகைக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து விலக்குதல். உதாரணமாக சிலருக்கு காபி குடித்தவுடன் புகைக்கத் தோன்றும், சிலருக்கு உண்டபின் புகைக்காவிட்டால் தலையே வெடித்துவிடும், சிலருக்கு மாலை நேரத்தில் நண்பர்களோடு இருக்கும்போது நிறுத்தாமல் புகைக்க வேண்டும் இப்படி பலப் பல காரணிகள். இவற்றைக் கண்டறிந்து விலக்க வேண்டும். மாற்று வழிகள் யோசிக்க வேண்டும், உதாரணமாக உண்ட பின் கொஞ்ச நேரம் நடப்பது போல.

மூன்றாவது படி, நீங்கள் நீண்ட நாட்களாக புகைக்கிறீர்கள், நிறைய புகைக்கிறீர்கள் எனில் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது. அதாவது புகை வெறுப்பு மருந்துகள், புகைக்கு மாற்று மருந்துகள் போன்றவற்றைக் குறித்த தகவல்களுக்காக.

நான்காவது படி, புகைப்பதை நிறுத்தியதை மிகப்பெரிய சாதனையாய் கருதி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது. காரணம் பல கோடி பேர் முயன்று முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் என்பது கர்வத்துக்குத் தக்கதே.

 
பெரும்பாலான புகை அடிமைகள் தங்கள் பழக்கத்தை பதின் வயதுகளிலேயே பெற்று விடுகின்றனர். எனவே தான் பதின் வயதுகளில் புகை சார்ந்த பழக்கம் வராதபடி பார்த்துக் கொள்தல் அவசியமாகிறது. குறிப்பாக அவர்களைக் கவரும் ஊடகங்கள், நண்பர்கள், சூழல் இவை புகை இல்லாததாய் இருத்தல் அவசியம்.

புகையை நிறுத்த கீழ்க்கண்ட வழிகளை முயன்று பாருங்கள்.

1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும்  லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய்  மாறிவிடும்.

.
2. புகையைத் தூண்டும் காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று  தூரம் நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய் கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.

.
3. உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை  மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

.
4. புகையை விட்ட சில நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள் உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்  கொள்ளுங்கள்.

.
5. உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை  உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம்.

.
6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின் நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம்  அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.

.
7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.

.
8. மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும் விருப்பத்தைக்  குறைக்கும்.

.
9. ஊறு விளைவிக்காத சிகரெட் என எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள்  உடலின் சுரப்பிகளும், செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.

.
10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.

16 comments on “கட்டுரை : புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்

 1. அண்ணா நன்றி.இந்தக் கட்டுரையை முதலில் என் அப்பாவுக்கு அனுப்ப வேணும் நான்.ஐயோ..என் அம்மா வருடக்கணக்காக அவரோடு போராடிக் கொண்டிருக்கிறார்,எங்கள் நாட்டுப் பிரச்சனை போல அது நீண்டு கொண்டேதான் இருக்கிறது.”அப்பாவுக்கு ஒரு வேண்டு கோள்” என்று என் தளத்தில் கூட அவருக்காக ஒரு கவிதை.ம்ம்ம்…திருந்த இடமே இல்லை என்று வைத்தியரே சொல்லியாச்சு.பாக்கலாம்.சேவியர் அண்ணாவின் கட்டுரையாவது திருத்துமா என் அப்பாவை!!!

  இங்கு சுவிஸிலும் நிறையப் போராட்டங்கள் அரசாங்கத்துக்கும் புகைபிடிப்பவர்களுக்கும்.இப்போ சிகரெட்டின் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி இப்போ சட்டபூர்வமான் தடைச்சட்டங்களைக் கொன்டு வந்திருக்கிறார்கள்.பாருங்கள் இங்கே…

  ரோன் நகரின் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை
  ****************************************************************
  [Wednesday July 02 2008 03:16:37 AM GMT] [yalini]
  ரோன் நகரில் இன்று முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாதென தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  புகைத்தலுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுயைமான சட்டங்களில் இதுவும் ஒன்றென தெரிவிக்கப்படுகிறது.
  இந்த விதியை மீறுவோருக்கு எதிராக 100 முதல் 1000 பிராங்க் வரையிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது.
  இந்தத் தவறை மீண்டும் மீண்டும் மேற்கொண்டால் அபாரதப் பணம் 10,000 பிராங்க் வரையில் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் புகைப்பிடிக்க முடியும் எனத் விலக்களிக்கப்பட்டுள்ளது.

  சூரிச்சில் புகைப்பிடிப்பதற்கு விசேட கூடாரங்கள்
  *******************************************************
  [Thursday July 03 2008 04:10:34 AM GMT] [yalini]
  பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புகைப்பிடிப்பதற்கு விசேட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளது.வைத்தியசாலைகள், பொதுக் கட்டிடங்கள், தொல்பொருள் நிலையங்கள், அரங்குகள் என்பவற்றில் புகைப்பிடிக்கக் கூடாதென தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
  எனவே புகைப்பிடிப்போரின் நலன் கருதி விசேட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  போதிய காற்றோட்ட வசதிகளுடன் இந்த புதிய புகை பிடிக்கும் கூடாராங்கள் உருவாக்கப்படவுள்ளது.
  தற்போது குறித்த வகைக் கூடாரங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் கூடாரங்கள் அமைக்கப்படும் எனவும் சூரிச் நகர உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 2. அன்புள்ள சேவியருக்கு,

  புகைப் பழக்கத்திற்கு எதிரான கட்டுரையாக மட்டும் அல்லாது , புகைக்கும் எண்ணத்தை கை விடுவது எப்படி என்றும் மிக நேர்த்தியாக ,வழக்கம் போலவே பல தகவல்களை சோர்வடையாது திரட்டி கொடுத்து உள்ளீர்கள் !!!!!! இந்தக் கட்டுரை படித்து விட்டு பலர் திருந்த வேண்டும் . இல்லாது போயின், ஒருவர் திருந்தினாலும் அது உங்கள் உழைப்புக்கும் , புகைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்கும் வலு கூட்டி மகுடம் சேர்ப்பதாகும் என்று நம்புகிறேன். என் புகைக்கும் நண்பர்களுக்கும் இந்தக் கட்டுரையில் படித்ததை நிச்சயம் எடுத்து உரைப்பேன் .
  ஓங்குக உங்கள் சமூகப் பங்கு !!!!!!!!!!!!!!
  என்றும் துணை நிற்பேன் உங்கள் அயராத முயற்சிகளுக்கு !!!!!!!!!!!!!!!

  நட்புடன்
  குகன்

 3. //அப்பாவுக்கு ஒரு வேண்டு கோள்” என்று என் தளத்தில் கூட அவருக்காக ஒரு கவிதை.ம்ம்ம்…திருந்த இடமே இல்லை என்று வைத்தியரே சொல்லியாச்சு.பாக்கலாம்.சேவியர் அண்ணாவின் கட்டுரையாவது திருத்துமா என் அப்பாவை!!!
  //

  கனக்க வைக்கும் கவிதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். புகைப் பழக்கத்தை விட முடியாது எனும் மாயையை விட்டு விட்டு, நானும் புகைப் பழக்கத்துக்கு வெளியே வந்தவன் தான். எனவே நல்லது நடக்கும் என நம்புவோம்.

 4. //புகைப் பழக்கத்திற்கு எதிரான கட்டுரையாக மட்டும் அல்லாது , புகைக்கும் எண்ணத்தை கை விடுவது எப்படி என்றும் மிக நேர்த்தியாக ,வழக்கம் போலவே பல தகவல்களை சோர்வடையாது திரட்டி கொடுத்து உள்ளீர்கள் !!!!!! //

  நன்றி குகன்

  //

  இந்தக் கட்டுரை படித்து விட்டு பலர் திருந்த வேண்டும் . இல்லாது போயின், ஒருவர் திருந்தினாலும் அது உங்கள் உழைப்புக்கும் , புகைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்கும் வலு கூட்டி மகுடம் சேர்ப்பதாகும் என்று நம்புகிறேன். //

  நிச்சயமாக.

  //

  என் புகைக்கும் நண்பர்களுக்கும் இந்தக் கட்டுரையில் படித்ததை நிச்சயம் எடுத்து உரைப்பேன் .
  ஓங்குக உங்கள் சமூகப் பங்கு !!!!!!!!!!!!!!
  என்றும் துணை நிற்பேன் உங்கள் அயராத முயற்சிகளுக்கு !!!!!!!!!!!!!!!

  //

  உங்கள் நட்புக்கும், அன்புக்கும், சமூக ஆர்வத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ஒருமுறை நேரில் சந்திப்போமே, ஓய்வாய் இருக்கும் போது சொல்லுன்ன்கள்.

 5. அன்புள்ள சேவியர் ,

  பல ரசிகர்கள் உங்களுக்கு இருக்கையில் , என்னை அழைத்த அந்த அன்பான , பெருந்தன்மையான மனதுக்கு முதல் வணக்கம்.
  நான் ஓய்வாய் இருக்கும் போது என்றெல்லாம் கேட்டு உயரிய பீடத்திற்கு என்னை அழைத்து சென்று விட்டீர்கள் !!!!!!!
  உங்கள் தனிப்பட்ட ஜி மெயில் மற்றும் யாஹூ முகவரிக்கு மின்னஞ்சல் செய்து விட்டேன்.படித்து பார்த்து பதிலளியுங்கள்.

  நட்புடன்
  குகன்

 6. //பல ரசிகர்கள் உங்களுக்கு இருக்கையில் , என்னை அழைத்த அந்த அன்பான , பெருந்தன்மையான மனதுக்கு முதல் வணக்கம்.//

  அடடா…. அடடா… இப்படியெல்லாம் சொல்லி என்னை பெரிய ஆளாக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க போல🙂

  //
  நான் ஓய்வாய் இருக்கும் போது என்றெல்லாம் கேட்டு உயரிய பீடத்திற்கு என்னை அழைத்து சென்று விட்டீர்கள் !!!!!!!//

  ஒரு ஐ.டி காரன் கஷ்டம், இன்னொரு ஐ.டி காரருக்குத் தானே தெரியும்😉

  //
  உங்கள் தனிப்பட்ட ஜி மெயில் மற்றும் யாஹூ முகவரிக்கு மின்னஞ்சல் செய்து விட்டேன்.படித்து பார்த்து பதிலளியுங்கள்.

  //

  நன்றி நன்றி.🙂

 7. //ஒரு ஐ.டி காரன் கஷ்டம், இன்னொரு ஐ.டி காரருக்குத் தானே தெரியும் //
  சத்தியமான வார்த்தை

 8. ரொம்ப நன்றிங்க! இன்று முதல் நான் புகை பிடிப்பதை நிறுத்த முயல்கிறேன். ( எத்தனை நாட்களுக்கு என்று உள்மனம் என்னிடம் கேட்பதை தவிர்க்க முடியவில்லை!) மீண்டும் நன்றி.

 9. ////ஒரு ஐ.டி காரன் கஷ்டம், இன்னொரு ஐ.டி காரருக்குத் தானே தெரியும் //
  சத்தியமான வார்த்தை

  //
  🙂

 10. //ரொம்ப நன்றிங்க! இன்று முதல் நான் புகை பிடிப்பதை நிறுத்த முயல்கிறேன். ( எத்தனை நாட்களுக்கு என்று உள்மனம் என்னிடம் கேட்பதை தவிர்க்க முடியவில்லை!) மீண்டும் நன்றி.

  //

  நானும் இப்படித் தான் நினைத்தேன். ஆனால் இப்போது விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல உணர்கிறேன் !

 11. அன்புள்ள சேவியர், நீண்ட ஆண்டுகளாக விடமுடியாமல் பாதிக்க பட்டுள்ளேன் இந்த புகை பழக்கத்தால். பல முறை முயன்றும் தவிர்க்க இயலாமல் தவித்த நாட்கள் ஏராளம். இதனால் நான் மட்டுமல்லாது எனது குடும்பமும் பாதிக்க படும் என்பதனை கருத்தில் கொண்டு எப்படியாவது இதனை விட்டு விட வேண்டும் என்ற நோக்கில் வலைதேடலின் பொழுது உங்களின் அர்த்தமுள்ள கட்டுரையை படித்தேன் தெளிவு பெற்றது போல் உணருகிறேன். என் வாழ்வில் இனி புகைக்கு இடம் இல்லை என்ற குறிக்கோளோடு இந்த வாக்கியங்களை தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக மற்றவர்களுக்கும் இதனை பகிர்வேன் என்று உறுதி கூறுகின்றேன். நன்றி சேவியர்.

 12. புகை பழக்கத்தை கைவிட வலைதளங்களில் தேடினேன் நான் எதிர் பார்த்த பதில் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் நான் எதிர் பார்த்த பதில் என்னிடமே இருக்கிறது. ஆம் ……. இனி புகைப்பது இல்லை என்ற முடிவு எடுத்து விட்டேன் … எந்த கெட்ட பழக்கங்களையும் நம்மால் மட்டுமே கைவிட முடியும் இரா.செந்தில்

 13. அன்பிரற்புரிய தோழர்களுக்கு பான்பராகை நிறுத்துவதை பற்றி கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s