கவிதை : பனைக்காலக் கனவுகள்

நான்
என் எண்பதுகளில்.
பனைமரம் ஏறுகின்றன
என்
பழைய நினைவுகள்.

நெடிதுயர்ந்த
பனைமரங்கள்
இளமை முதல் என்
இரு கரங்களுக்குள்
இருந்தவை.

ஏறும் பனைகளின்
எண்ணிக்கை கணக்கிட்டு
தானே
பெண்கொண்டார்கள் அன்று !!

கருக்கலில் கண்விழித்து
நான்காம் ஜாமம்
நகரும் போதே
பனையில் ஊர்ந்து ஏறும்
வாழ்க்கை அது.

காய்த்துப் போன கைகளோடு
பனங்காய் பறித்ததும்,
உச்சியில் உட்கார்ந்து
பாளை வெட்டி
பதனீர் கலயம் கட்டி
கள் உண்டதும்
இன்னும் கண்ணுக்குள் போதையாய்.

பனையில் சாய்த்து வைக்க
மிருக்குத் தடி,
கால்களைக் கட்டிக் கொள்ள
திளாப்புக் கயிறு,
இடுப்பில் தொங்க விட குடுவை,
என்றெல்லாம் சொன்னால்,
படம் வரைந்து
பாகம் குறி என்பார்கள்
இன்றைய
பட்டணத்துப் பொடிசுகள்.

சந்தை வீதியில்
கருப்பட்டி விற்ற என்
பிரிய மனைவி பொன்னம்மா
பாம்பட ஆசையுடனேயே
போய் சேர்ந்து விட்டாள்.

குமரியிலிருந்து
பணத்துக்காய்
பாண்டிக்கு பனையேற
கிராமமே கிளம்பியபோதும்
பிடிவாதப் பிசாசுடன்
என் பனைகளைத் தொட்டு
படுத்துக் கிடந்தவன் நான்.

ஒவ்வோர் அணைப்பிலும்
ஓர் முரட்டுக் குழந்தையாய்,
சுரத்தலில்
ஓர் சூறாவளியாய்
என்னோடு வளரும் என் மரங்கள்.

பனையேறியின் மகன்
எனும் அடையாளம் சொல்ல
வெளியூர் பையன்
வேதனைப்படுவேனோ எனும்
வேதனையில்
கிராமக் குடிசையை
என் தாய்நாடாக்கிக் கொண்டேன்.

ஓருமுறை
குருத்தோலைப் புழு
குதறிப் கொன்ற பனை மரத்துக்காய்
இரவெல்லாம்
வலித்தது எனக்கு.

இப்போது,
ரப்பர் வைக்க வேண்டுமென்று
பிடுங்கி எறிந்திருக்கிறான்
என் பனை மரங்களை.

ஒவ்வோர்
பனைமூட்டுப் பள்ளத்திலும்
கொத்துக் கொத்தாய் வேர்கள்,
என்
சருகுச் சருமமே வலிக்கிறது.
பாசனம் நிறுத்திய
நரம்புகளே நடுங்குகின்றன.

ஓர்,
பனை மரப்பள்ளத்தில்
என்னைப் புதைத்து விடுங்கள்,
மரமே
என்னை கருணைக் கொலை செய்து
கொண்டு போங்கள்.

இதயம் கதறும் ஓசைகள்
பனை ஓலைகளிடையே
சரசரக்கின்றன.

கரையான் அரித்த
ஓலைச்சுவடியாய்,
பனைக்கால கனவுகளின்
பள்ளத்தாக்கில்
தொய்ந்து போன
என்
தோள்கள் தொங்குகின்றன.

0

Advertisements

9 comments on “கவிதை : பனைக்காலக் கனவுகள்

 1. அருமை சேவியர் அண்ணா.பனையின் நினைவுகள் நிறைய.இங்கே ஆசைக்கு டின்னில் அடைத்து வருகின்ற நுங்கு குடிக்கிறேன்.
  பனம்பழம்,பினாட்டு,கிழங்கு,ஒடியல்,பனங்காய்ப் பணியாரம்…இனி எப்போ அந்த வாழ்வெல்லாம்.நீங்கள் பனைப் பள்ளத்துள் உங்களைப் புதைக்கக் கேட்கிறீர்கள்.எங்கள் நாட்டில் எங்களைக் கேட்காமலே உயிரோடு புதைக்கிறார்கள்.குண்டுகள் வீழ்வதாலும் நச்சுப் புகையாலும் எங்கள் இயற்கைகள் அழிந்து வருகின்றன.
  பதனீர் வழிகிறதோ இல்லையோ எங்கள் கண்களில் கண்ணீர்.

  Like

 2. நண்பர் சேவியருக்கு,

  படம் வரைந்து பாகங்களைக் குறிக்கச் சொல்லும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான் .அப்படி இருந்தாலும் ” கவிதைத் தொகுப்பு” சிறுகதை மூலம் பனை மர ஆல் என் போன்றவன் நெஞ்சிலும் குத்தும் படி எழுதி இருந்தீர்கள். அதே பனை மரம் பற்றிய இந்தக் கவிதையில் , உங்கள் அனுபவ வெளிக்குள் முழுமையாக வர முடியவில்லை என்பதை உண்மையாக ஒத்துக் கொண்டாலும் , அந்த பனை மரம் ஏறுபவனின் ஏக்க உணர்வு வட்டத்திற்குள் நிச்சயம் இழுத்துச் செல்லாமல் இல்லை வரிகள் .

  அன்புடன்
  குகன்

  Like

 3. படத்துக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை அண்ணாச்சி.

  ம்ம்……. பைனி, பனங்கிழங்கு, கருப்பட்டி எல்லாவற்றையும் நியாபகப்படுத்திவிட்டீர்கள். எங்கம்மா மண்பானையில் கருப்பட்டியுடன் புளியை ஒரு மாதம் ஊற வைத்து தருவாங்க பாருங்க….டாப்..
  நீங்க அப்படி சாப்பிட்டிருக்கீங்களா?

  Like

 4. //எங்கள் நாட்டில் எங்களைக் கேட்காமலே உயிரோடு புதைக்கிறார்கள்.குண்டுகள் வீழ்வதாலும் நச்சுப் புகையாலும் எங்கள் இயற்கைகள் அழிந்து வருகின்றன.
  பதனீர் வழிகிறதோ இல்லையோ எங்கள் கண்களில் கண்ணீர்//

  மனம் கனக்கிறது 😦

  Like

 5. //படத்துக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை அண்ணாச்சி.

  //

  அப்படியா ? சரி விடுங்க… கண்டுக்காதீங்க 😉

  //

  ம்ம்……. பைனி, பனங்கிழங்கு, கருப்பட்டி எல்லாவற்றையும் நியாபகப்படுத்திவிட்டீர்கள்.//

  பைனி.. !!!! ம்….ம்….ம்….. இந்த வார்த்தையைக் கேட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன !!!

  எங்கம்மா மண்பானையில் கருப்பட்டியுடன் புளியை ஒரு மாதம் ஊற வைத்து தருவாங்க பாருங்க….டாப்..
  நீங்க அப்படி சாப்பிட்டிருக்கீங்களா?

  //

  Like

 6. //எங்கம்மா மண்பானையில் கருப்பட்டியுடன் புளியை ஒரு மாதம் ஊற வைத்து தருவாங்க பாருங்க….டாப்..
  நீங்க அப்படி சாப்பிட்டிருக்கீங்களா?
  //

  இல்லையே ??? கேக்கவே நல்லா இருக்கே !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s