அறிவியல் புனைக் கதை : நவீனன்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை
மாலை 6 மணி.

“யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே … “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ்.

கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்லியிருப்பார்கள். ஆனால் அடுத்த நாளே இன்னொரு கொலை நடந்தால் இந்த தகிடுதத்தம் எல்லாம் அம்பலமாகிவிடும். எனவே தான் என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருக்கிறது காவல் துறை.

“ஏம்பா… வண்டியெல்லாம் ரெடிதானே … இன்னிக்கும் நைட் பூரா சுத்த வேண்டியது தான். வீட்டுல இருக்கிற வாட்ச் மேனை எல்லாம் கொன்னுட்டு, போலீஸ்காரங்களை நைட் வாட்ச்மேனாக்கிட்டான் அந்த கபோதி…” இன்ஸ்பெக்டரின் எரிச்சல் தெறித்தது.

இந்தப் பொறம்போக்கு பத்திரிகைக் காரங்க, தெருவுக்கு தெரு முளைச்சிருக்கிற வேலை வெட்டியற்ற பொறுக்கி இயக்கங்க எல்லாமாய் சேர்ந்து மனுஷனை ஒழுங்கா தூங்கக் கூட வுடமாட்டாங்க. மேலிட பிரஷர், பொதுமக்கள் பிரஷர் ன்னு எல்லா பிரஷரும் சேர்ந்து நமக்குத் தான் பிளட் பிரஷர் ஏகத்துக்கு எகிறிப் போச்சு. கனகராஜ் செம கடுப்பில் இருந்தார். சைக்கோ கொலையாளியைப் பிடித்தால் இவரே ஒரு சைக்கோவாக மாறி கைங்கர்யம் செய்து விடுவார் போலிருந்தது.

அப்போது தான் நுழைந்தார் கான்ஸ்டபிள் குமார்.

“சார்… சென்னை முழுக்க சை.கோவோட கலர் போட்டோவை ஒட்டி வெச்சிருக்காங்க சார் “ கான்ஸ்டபிள் சொல்ல கனகராஜ் சட்டென நிமிர்ந்தார்.

என்னது ? சைக்கோ போஸ்டரா ? என்ன சொல்றே ? யார் பாத்தது ? யார் ஒட்டினது ? கனகராஜ் படபடத்தார்.

சைக்கோ இல்ல சார்.. வைகோ. ஏதோ ஒபாமாவைப் போய் பார்த்தாராமே அதைப் போஸ்டராப் போட்டிருக்காங்க. குமார் சொல்ல கனகராஜ் ஏகத்துக்குக் கடுப்பானார்.

போய்யா போ… வேலையைப் பாரு. இன்னிக்கு இரண்டு மணிக்கு மேல அதிகாலை நாலரை மணி வரை அசோக்நகர், வடபழனி ஏரியாக்கள்ல யாரெல்லாம் அலஞ்சிட்டிருக்காங்களோ அவங்க எல்லாரையுமே ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு வந்துடு. பிச்சைக்காரனானாலும் சரி, பைத்தியக்காரனானாலும் சரி. ஒருத்தனையும் விடாதே. இன்னொண்ணு… பொண்ணுங்க சுத்திட்டிருந்தாலும் தூக்கிட்டு வந்துடு. சைக்கோ ஆணா பொண்ணான்னே தெரியல. இன்னிக்கு நான் வரல, செல்வத்தோட தலைமைல எல்லா ஏரியாலயும் சுத்துங்க. ஏதாச்சும் சமாச்சாரம் இருந்தா போன்பண்ணுங்க. சொல்லிவிட்டு கனகராஜ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.

நகரின் பரபரப்பு குறையத் துவங்கிய நள்ளிரவில் காவல்துறை பரபரப்பானது. வாகனங்கள் ஏரியாக்களை சுற்றி வரத் துவங்கின.

இதற்காகவே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவல் வாகனங்களும் சாலையில் அங்கும் இங்கும் சுற்றின. சைக்கோவைப் பற்றிய பயமோ என்னவோ எந்தக் காவலரும், பைக்கிலோ, சைக்கிளிலோ, நடந்தோ சுற்றவில்லை. எல்லோரும் ஆளுக்கு இரண்டு செல் போன் கையில் வைத்துக் கொண்டு ஜீப்பில் சுற்றித் திரிந்தனர்.

அந்த இரவும் அவர்களுக்கு ஒரு தூக்கமற்ற இரவாகவே முடிந்தது.

காலை ஆறுமணி.

அசோக் நகர் காவல்நிலையத்துக்குக்குள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர் இருபது பேர். பாதி பேர், அப்பாடா தங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்பட்டு நிம்மதியாய் அமர்ந்திருந்தனர்.

சிலர் பிச்சைக்காரர்கள், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி, இரண்டு பேர் காவல் துறையினருக்குப் பரிச்சயமான மாமூல் மச்சான்கள்.

சற்று நேரம் ஓய்வெடுத்திருந்த கனகராஜ் அப்போது தான் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அவருடைய இருபது ஆண்டுகால போலீஸ் வாழ்க்கையில் ஒரு பார்வையிலேயே அப்பாவி யார், அப்பாவியாய் நடிப்பவன் யார் என்பதையெல்லாம் எடைபோடக் கற்றுக் கொண்டிருந்தார்.

பார்வையை வரிசையாய் அமர்ந்திருந்தவர்கள் மேல் நிதானமாய் ஓட்டிக் கொண்டிருந்தபோது அவன் தட்டுப்பட்டான்.

படித்தவன் போல, சாதுவாக எந்த சலனத்தையும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அவன். சுமார் முப்பத்தைந்து வயது இளைஞன். பச்சை நிறத்தில் அழகான ஒரு டிஷர்ட் அணிந்திருந்தான். நெஞ்சில் “கிரீன் பே பேக்கர்ஸ்” என எழுதப்பட்டிருந்தது. காக்கி நிறத்தில் ஒரு பேண்ட் அது தனது பிராண்ட் ஏரோபோஸல் என்றது.. என்றது.

“இவனை எங்கேய்யா புடிச்சீங்க”

“வடபழனி திருப்பத்துக்கு பக்கத்துல நின்னு சுத்தி சுத்தி பாத்திட்டிருந்தான் சார்… கொஞ்சம் சந்தேக கேஸ் மாதிரி இருந்தது…” இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு பதில் வந்தது.

வரிசையில் இருந்த மற்றவர்களை விட்டுவிட்டு இவனை மட்டும் எழுந்து வரச்சொல்லி சைகை செய்தார் கனகராஜ்.

அவன் எழுந்தான். இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து நின்றான்.

“என்னப்பா.. பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கே… நைட்ல என்ன பண்ணிட்டிருந்தே…”

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“எங்கேருந்து வரே.. என்ன வேலை பாக்கறே… அமெரிக்கன் பிராண்ட் பேண்ட் போட்டிருக்கே ? அமெரிக்க புட்பால் குழுவோட பேரை சட்டையில போட்டிருக்கே… எங்கேயிருந்து கிடச்சுது ?”

மௌனம்.

“யோவ்.. என்ன ? வாயில கொழுக்கட்ட வெச்சிருக்கியா ? ஒன்னு வுட்டேன்னா மவனே…. “ கனகராஜ் கையை ஓங்க, இவன் நிமிர்ந்து பார்த்தான்.

இவன் பார்வையைக் கண்ட கனகராஜ் சற்றே உஷாரானார். அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் திரும்பினார்,

“மற்றவங்க கிட்டே டீடெய்ல் வாங்கிட்டு, போட்டோ எடுத்துட்டு அனுப்பிடு. இவனை மட்டும் உள்ளே கூட்டிட்டு போய் ஜட்டியோட உட்கார வை… இன்னிக்கு நமக்கு நல்ல வேலை இருக்கு போல “ கனகராஜ் சொல்லிக் கொண்டே ஒரு செயரை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

மேஜை மீது கசங்கிய நிலையில் கிடந்த தினத் தந்தியை ஒதுக்கி விட்டு, இன்னும் மடிப்பு கலைக்கப்படாத ஆங்கிலச் செய்தித் தாளை எடுத்து பிரித்தார்.

வியந்தார்.

அதில் முதல் பக்கத்தில் கீழே வலது பாகத்தில் தனக்கு முன்னால் நின்றிருக்கும் இந்த இளைஞனின் புகைப்படம்.

புகைப்படத்தை உற்றுப் பார்த்த அவர் அதிர்ந்தார்.

இதே சட்டை, கிரீன்பே பேக்கர்ஸ்… இதே முகம்… இதே பார்வை.

.
மில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா
காலை மணி 11

கொஞ்சும் ஆங்கில உரையாடல்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. மேஜை மீது இருந்த புகைப்படத்தை தலைமை காவல் அதிகாரி மேட் ரைசன் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

உங்க பையனை எப்போதிலிருந்து காணவில்லை ? அமெரிக்க ஆங்கிலத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதரிடம் கேட்டார்.

மூணு நாளா வீட்டுக்கு வரவில்லை. பொதுவா இப்படி இருக்க மாட்டான். அப்பப்போ நைட் டான்ஸ் கிளப்புக்கு போவான், அப்படி போனாலும் மறு நாள் காலைல வந்திடுவான். வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு போனவன், சனி, ஞாயிறு இரண்டு நாளும் வரவில்லை. இன்னிக்கு காலைல அவனோட அலுவலகம் போய் கேட்டேன். நவீன் வெள்ளிக்கிழமையே வரவில்லையே என்றார்கள். அதனால் தான் பதட்டமாய் இருக்கிறது.

நவீனின் தந்தை நுக்காலா மகனைக் குறித்த கவலையை பதட்டம் வழியும் கண்களுடனும், தனது நீண்ட கால அமெரிக்க வாழ்க்கையின் பிரதிபலிப்பான அழகிய ஆங்கிலத்துடனும் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஏதாவது அடையாளம் ?

வீட்டில இருந்து வெள்ளிக்கிழமை போனப்போ கிரீன் கலர் டிஷர்ட் போட்டிருந்தான், அதில கிரீன் பே பாக்கர்ஸ் ன்னு எழுதியிருக்கும். அது கூட ஒரு காக்கி கலர் கார்கோ பேண்ட் போட்டிருந்தான்.

நிச்சயமா தெரியுமா ?

ஆமா.. அந்த டி-ஷர்ட் க்கு அந்த பேண்ட் மேட்சிங்கா இல்லைன்னு சொல்லிட்டே இருந்தான். மேட்சிங் துணியை வாஷர்ல போடாததனால கோச்சுகிட்டான். சோ, நல்லா தெரியும்.

ஒருவேளை அந்த சண்டையினால கோச்சுகிட்டு…

நோ… நோ… இதெல்லாம் ரொம்ப சகஜம். இந்த மாதிரி சண்டைக்கெல்லாம் வீட்டுக்கு வராம இருக்க மாட்டான். நல்ல பையன். எப்படியாவது அவனை கண்டுபிடிச்சு கொடுங்க பிளீஸ்…. நுக்காலா கெஞ்சினார்.

மேட் ரைசன் தேவையான விவரங்களை வாங்கிக் கொண்டு, நுக்காலாவை அனுப்பினார்.

பொறுமையாக ஒரு பர்கரை வாங்கிக் கடித்துக் கொண்டே நவீனின் அலுவலகம் நோக்கிச் சென்றார் மேட். கூடவே உடன் பணியாளர் டிம் சானர்.

அலுவலகம் சாலையை விட்டு தள்ளி கொஞ்சம் உள்ளே இருந்தது. அந்த அலுவலகம் ஏதோ ஓர் அமானுஷ்யத் தனமாய் இருப்பதாய் பட்டது அவருக்கு.

காரை இரண்டு மஞ்சள் கோடுகளின் நடுவே அழகாய் பார்க் செய்து விட்டு, உள்ளே சென்றனர் மேட் ரைசனும், டிம் சானரும்.

உங்கள் மேலாளரைப் பார்க்கவேண்டும்.

நீங்கள் ?

அடையாள அட்டை காண்பிக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்க வில்லை. மேலாளர் அவர்களை வந்து அழைத்துச் சென்றார்.

சொல்லுங்கள்.. என்ன விஷயம். காபி சாப்பிடுகிறீர்களா ?

நோ… தாங்க்ஸ். உங்க அலுவலகத்தில வேலை செய்யும் நவீன் காணோம்ன்னு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு அதான் ஒரு முதல் கட்ட விசாரணை.

நவீனை காணோமா ? மேலாளர் அதிர்ந்தார். ஓ.. நோ.. அது நிகழக் கூடாது.

அவருடைய அதிர்ச்சியின் வீரியத்தைக் கண்ட மேட் ரைசன் சற்றே திகைத்தார். மேலாளர் தொடர்ந்தார்.

“மேட்… உங்களுக்கே தெரியும், இது பெடரல் கவர்ண்ட்மெண்டோட ஆராய்ச்சிக் கூடம்.  டிபென்ஸ் சம்பந்தப்பட்டது. நவீன் இங்கே சீஃப் ஆர்க்கிடெக் மாதிரி. சிஸ்டம்ஸ் எக்ஸ்பர்ட். அவன் காணாமப் போறது நாட்டோட பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலா அமைய வாய்ப்பிருக்கு. இது வெறுமனே ஒரு ஆள் மிஸ்ஸிங் அல்ல. அவனை எப்படியும் கண்டுபிடிச்சாகணும்” மேலாளர் படபடத்தார்.

இல்லே.. அப்படிப் பதட்டப்படத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்போ தானே இரண்டு மூண்டு நாளா காணோம். மேட் சொல்லி முடிக்கும் முன் அவர் இடைமறித்தார்.

நோ… நோ… இது ரொம்ப சீரியஸ் மேட்டர். நவீனை உடனே கண்டுபிடிச்சாகணும். எங்க ரூல் படி எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் அனுமதி இல்லாமல் எங்கேயும் போகக் கூடாது. அது மட்டுமல்ல அவர் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை நடத்திட்டுருந்தார். அது முடியற தருவாயில இருக்கு. இந்த நேரத்துல அவர் மிஸ் ஆகறது பயமுறுத்துது. நான் பெண்டகன் தலைமையிடத்தில இருந்து ஸ்பெஷல் ஆர்டர் வாங்கி குடுக்கறேன். நவீன் உடனே கண்டுபிடிக்கப் படணும். அவர் சொல்லச் சொல்ல மேட் மேலாளரின் பதட்டத்தை உள்வாங்கிக் கொண்டார்.

அதன் பின் எல்லாம் ராக்கெட் வேகம் பிடித்தன. நவீனின் போட்டோ உலகம் முழுவதுமுள்ள ரகசிய தேடல் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நவீனைக் கண்டுபிடிக்க தேடல் கலிபோர்னியா காட்டுத் தீ போல பரவியது.

அடிலெய்ட் ரிஸர்ச் சென்டர், ஆஸ்திரேலியா
காலை 5 மணி.

“நிஜமாவா சொல்றீங்க ?” அடிலெய்ட் ரிசர்ச் செண்டரின் தலைமை நிர்வாகி லியோன் ஆஸ்கின் கையில் பற்றியிருந்த செல்போனுக்கே காதுவலிக்கும் அளவுக்குச் சத்தமாய்க் கேட்டார்.

உண்மை தான். இந்த ஆராய்ச்சிக்காக நீங்கள் செய்த எந்த செலவும் வீண் போகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறேன். ஜெயராஜ் மறு முனையில் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசினான். அவன் குரலில் பெருமிதம் படபடத்தது.

ஐ..காண்ட் வெயிட்… இன்னும் ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன். சொல்லிக் கொண்டு கைப்பேசியை ஆஃப்செய்து விட்டு படுக்கையைச் சுருட்டி வீசிவிட்டு எழுந்தார் ஆஸ்கின்.

பத்தே நிமிடத்தில் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே நுழைந்தது ஆஸ்கினின் கார்.

ஆராய்ச்சிக் கூடம் அமைதியாய் இருந்தது.

ஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஏதேதோ படங்கள் வரிசை வரிசையாய் ஓடின.

ஹாய்..ஜேக். 

ஜெயராஜ் நிமிர்ந்தார்.

ஹாய் ஆஸ்கின். வாங்க.

என்னால் இருப்புக் கொள்ளவில்லை ஜேக். இதை மட்டும் நிஜமாக்கிக் காட்டினால் உலகமே வியர்ந்து போய்விடும். ஆஸ்கின் தனது அறுபது வயதையும் மறந்து ஆறு வயதுக் குழந்தை போல குதூகலித்தார்.

ஜேக் புன்னகைத்தான். இண்டர்காமை தட்டி ஜெனியை உள்ளே அழைத்தான்.

‘ஜெனிக்கு இந்த ஆராய்ச்சி தெரியுமா ?’

‘தெரியாது. அவளைத் தான் இன்னிக்கு சோதனைக்குப் பயன்படுத்தப் போறேன். பாருங்க விளையாட்டை’ என்று கூறி கண்ணடித்தான் ஜெயராஜ்.

ஜெனி வந்தாள். அந்த சிக்கலான கண்ணாடி அறைகளும், கணினிகளும் நிரம்பியிருந்த சோதனைச்சாலைக்குள் நடந்து ஜெயராஜ் அருகே வந்தாள். கையிலிருந்த ஆங்கில செய்தித் தாளை ஜெயராஜின் முன்னால் வைத்து விட்டு அவன் சொன்ன ஒரு குட்டியூண்டு கண்ணாடி அறைக்குள் அமர்ந்தாள்.

ஜெனி… நான் கேக்கறதுக்கு பதிலை மட்டும் சொல்லு. அவ்வளவு தான் வேலை… ஜெயராஜ் சொல்ல, ஜெனி சிரித்தாள்.

ஆஸ்கின் கணினித் திரையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணினியில் ஏதேதோ புதிய வண்ணங்கள் தோன்றத் துவங்கின.

ஜெயராஜ், கணினியின் செட்டப் களைச் சரிசெய்துவிட்டு, தனக்கு முன்னால் இருந்த மெல்லிய குமிழ் வடிவ மைக்கில் பேசினான். அது ஜெனி இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஜெனி.. நேற்று மாலையில் என்ன பண்ணினே ?

நேற்று வீட்டுக்குப் போயி நல்லா தூங்கினேன். ஜெனி சொன்னாள்.

ஜெயராஜ் கணினித் திரையைப் பார்த்தான். அதில் புகைப்படங்கள் துண்டு துண்டாய் தெரிந்தன. ஜெனி ஒரு பாரில் நுழைவதும், உள்ளே அமர்ந்து மது அருந்துவதும், அடிலெய்ட் ரண்டேல் மால் தெருவுக்குள் நுழைவதும் என காட்சி காட்சியாக திரையில் வர ஆஸ்கினுக்கு புல்லரித்தது.

மூளையில் நமது சிந்தனைகளும், பதில்களும் வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பே காட்சி வடிவம் பெற்று விடுகின்றன. அந்த காட்சி வடிவம் ஒருவகையில் ஞானிகளின் தலையைச் சுற்றி வரும் ஒளி வட்டம் போல சுற்றிக் கொண்டே இருக்கும். அது வெளிப்புற இயக்கங்களாலும், கதிர்களாலும் தாக்கப்படவில்லையெனில் அந்தக் காட்சிகளை அப்படியே டிஜிடல் இழைகளாக்கி கணினியில் புகுத்திவிடலாம். இது அதன் முதல் படி. ஜெயராஜ் சொன்னனன்.

கனிணியின் திரையில் ஜெனியின் மனதில் ஓடும் காட்சிகளெல்லாம் துண்டு துண்டாய் வந்து கொண்டே இருந்தன.

ஜெயராஜ் விளக்கினான். நமது மூளையில் சிந்தனைகள், அனுபவங்கள், காட்சிகள் நிரம்பியிருந்தாலும் அவற்றில் எதையெல்லாம் நினைவுபடுத்துகிறோமோ அது மட்டுமே டிஜிடலைஸ் செய்யப்படுகிறது. அதனால் தான் கணினித் திரையில் ஒரு திரைப்படமாய் தொடர்ந்து காட்சிகள் ஓடாமல் துண்டு துண்டாய் காட்சிகள் வருகின்றன. இதன் அடுத்த கட்டம் மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையுமே பிரதி எடுப்பது.

இனிமேல் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதோ, உளவாளிகளிடம் ரகசியம் கறப்பதோ, மனநோயாளிகளின் நோயின் வேர் கண்டுபிடிப்பதோ எதுவுமே சாத்தியம்… ஜெயராஜ் சொல்லச் சொல்ல ஆஸ்கின் அசந்து போய் உட்கார்ந்திருந்தார்.

உனக்கு பாய் பிரண்ட் யாராவது இருக்காங்களா ? ஜெயராஜ் மைக்கருகே குனிந்து குறும்பாய் கேட்டான்.

நோ…வே என்றாள் ஜெனி..

கணினி காட்சிகள் சட்டென்று நிறம் மாறின. கணினியில் ஜெனி ஜெயராஜைப் பார்த்து ரசிக்கும் காட்சிகள் தோன்ற, ஆஸ்கினும் ஜெயராஜும் வாயடைத்துப் போனார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாத அவஸ்தையில் தலையைக் குலுக்கிய ஜெயராஜின் கண்களில் பட்டது அருகிலிருந்த ஆங்கிலச் செய்தித் தாளும், அதில் இருந்த நவீனின் புகைப்படமும்.

ஆஸ்கினின் பார்வையிலிருந்து தப்பிக்க மெல்ல வாசிக்கத் துவங்கினான் அதை.

மில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா

மேட்-டின் அறைக்குள் அமைதியாய் இருந்த ஃபேக்ஸ் மெஷின் நாகப் பாம்பு போல உஸ் என முனகியது.

பிரிண்டரின் ராட்சத நாக்கு போல வெளியே நீண்ட காகிதத்தை இழுத்து எடுத்த மேட் ஆனந்தமடைந்தார். !

நவீன் கண்டுபிடிக்கப் பட்டான் ! லாஸ் வேகஸில் !!

படத்தில் லாஸ்வேகஸ் சூதாட்ட விடுதி பலாஜியோவின் முன்னால் நவீன் நிற்க, அருகிலேயே காவலர் ஒருவர். நவீனின் டிஷர்ட் கிரீன் பே பேக்கர்ஸ் என்றது.

ஆஹா.. நவீன் கண்டுபிடிக்கப் பட்டானா ? மேட் ஆனந்தமடைந்தார். உடனே இதை மேலிடத்துக்கு அறிவிக்க வேண்டும். குறிப்பாக அந்த அலுவலக மேலாளருக்கு அறிவிக்க வேண்டும். என்று நினைத்துக் கொண்டிருந்த போது போன் அடித்தது.

‘வி காட் நவீன் …” மறு முனை பேசியது.

நன்றி. இப்போது தான் பேக்ஸ் கிடைத்தது. மேட் ரைசன் சொன்னார்.

ஃபேக்ஸ் ? வாட் ஃபேக்ஸ் ?  மறு முனை குழம்பியது

“நவீன் கிடைச்சுட்டதா நீங்க லாஸ்வேகஸில இருந்து அனுப்பின போட்டோவும் செய்தியும் ! “ மேட் ரைசன் சொன்னார்.

என்ன சொல்றீங்க ? – லாஸ் வேகஸா ? நவீனை நாங்க இங்கே சிகாகோ நேவி பியர்ல கண்டு பிடிச்சிருக்கோம்.

அவர்கள் சொல்ல மேட் குழம்பினார் ? இதென்ன புதுக் குழப்பம் ?
“அவன் என்ன டிரஸ் போட்டிருக்கான் ? “ மேட் கேட்டார்.

பச்சை நிற டீ ஷர்ட். கிரீன்பே பேக்கர்ஸ் வாசகம் ! காக்கி நிற பேண்ட்.

மேட் அதிர்ந்தார். இதெப்படி சாத்தியம் ?

யோசித்துக் கொண்டே பெருமூச்சு விட்டவருக்கு மீண்டும் ஒரு அழைப்பு. செய்தியைக்  கேட்ட அவருடைய கையிலிருந்த செல்போன் நழுவிக் கீழே விழுந்தது.

ஆஸ்திரேலியாவில் நவீன் கண்டுபிடிக்கப் பட்டானாம். ஆனால் அங்கே நான்கு நவீன்கள் ஒரே போல, ஒரே மாதிரி டி-ஷர்ட், பேண்ட் அணிந்திருந்ததால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனராம்.

எதிர்பாராத புதுக் குழப்பம் நிலவ, மேட் ரைசன் மேஜை மீது அமர்ந்தார்.

ஃபேக்ஸ் மறுபடியும் இயங்கத் துவங்கியது.

போன் மறுபடியும் அடித்தது.

சீனா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர் என எல்லா இடங்களிலும் நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டனர் என்னும் செய்திகள் பேக்ஸிலும், போனிலும் வந்து கொண்டே இருந்தனர்.

உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நவீன்களும் ஒரே அடையாளத்துடன். ஒரே மாதிரி சீருடையுடன். !!

.
அசோக் நகர் காவல் நிலையம், சென்னை

காணாமல் போல சுமார் முப்பத்து ஆறு வயது நவீன் உலகெங்கும் நாற்பத்து ஏழு இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டனர். எல்லோரும் ஒரே ஆடையை அணிந்திருப்பதும், எல்லோருமே பிரமை பிடித்தவர்கள் போல அமைதியாய் இருப்பதும் காவலர்களையும், அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் திகைக்க வைத்திருக்கிறது.

இந்தியாவில், அசோக் நகரில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.

“இனிமேலும் பல நவீன் கள் உலகெங்கும் நடமாடிக் கொண்டிருக்கலாம் எனும் அச்சம் நிலவுகிறது. இதன் மர்மத்தை அவிழ்ப்பதும், இவர்கள் உண்மையிலேயே ஏதேனும் தீவிரவாதிகளின் அதி நவீன ரோபோவா என்பதை கண்டறியவும் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

எங்கேனும் இந்தப் படத்தில் காணப்படும் நவீன் எனும் நபர் தென்பட்டால் உடனே இந்த எண்களில் ஏதேனும் ஒன்றுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

கனகராஜ் திகிலுடன் தனக்கு முன்னால் நின்றிருந்த நவீனைப் பார்த்தார்.

“யோவ்.. சட்டை பேண்டை கழற்ற சொன்னா என்ன பண்றே” ஒரு காவலர் உள்ளிருந்து நவீனை நோக்கிக் குரல் கொடுத்தார்.

“வேண்டாம்… வேண்டாம்…. “ கனகராஜ் திடீரென மறுத்தார். 

“இவனை ஒரு செல்லுல அடைச்சு வையுங்க. நான் ஒரு போன் பண்ண வேண்டியிருக்கு. விஷயம் ரொம்ப முக்கியம். இவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. வெளியே விட்டுடாதீங்க. அவனை தொடாதீங்க” கனகராஜ் சொல்லிக் கொண்டே போக நிலையத்தில் இருந்த காவலர்கள் குழப்பத்துடன் நெற்றி சுருக்கினர்.

அடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா

“.. எல்லா நவீன்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான ரிசல்ட் களே வந்திருக்கின்றன. எந்த வித்தியாசமும் இல்லை.

கண்டுபிடிக்கப் பட்ட இந்த ஐம்பது நவீன்களுமே பேசாமல் மௌனமாய் இருப்பதால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். இவர்களுடைய பின்னணி என்ன ? இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வது எப்படி என தெரியாமல் உலகெங்குமுள்ள காவலர்கள் திகைத்துப் போயிருக்கின்றனர்.”

ஆஸ்கின், இந்த செய்தியைப் படிச்சீங்களா ? வியப்பும், படபடப்புமாக ஜெயராஜ் செய்தியை ஆஸ்கினின் முன்னால் நீட்டினான்.

ஆஸ்கின் இன்னும் ஆராய்ச்சிப் பிரமிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. அதற்குள் அந்த செய்தி அடுத்த ஆச்சரியத்தை அவருக்குக் கொடுத்தது.

இங்கே நமக்கு ஒரு வாய்ப்பு, ஜெயராஜ் சொன்னான்.

என்ன வாய்ப்பு ?

இந்த குழப்பத்தைத் தீர்க்க நம்ம கண்டுபிடிப்பைப் பயன்படுத்துவோம். நவீன் மனதில் என்ன இருக்கு, என்ன ஓடிட்டிருக்கு என்பதை நாம படமா காப்சர் பண்ணுவோம். என்ன சொல்றீங்க ? ஜெயராய் உற்சாகமாய் கேட்க ஆஸ்கினுக்கு அது ஒரு அரிய வாய்ப்பாய் பட்டது.

அதுக்கென்ன.. உடனே பண்ணிடலாமே ! ஆஸ்கின் உற்சாகமானார்.

அடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா
மாலை 4 மணி

 
அமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆஸ்கினும் ஜெயராஜும் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த கண்டுபிடிப்பு இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. எனவே இதைக் குறித்து எதுவும் வெளியே சொல்லக் கூடாது எனும் உத்தரவை ஆஸ்திரேலிய அரசு வருகை தந்திருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு இட்டிருந்தது.

நான்கு நவீன்கள் ஓரமாக அமர்ந்திருந்தனர்.

ஒரு நவீன் ஜெயராஜின் கண்டுபிடிப்பான அந்த பிற கதிர்கள் தாக்காத சிறப்பு கண்ணாடி அறைக்குள்  அமர்த்தப்பட்டார்.

ஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த மைக்கில் நவீனிடம் பேசிக்கொண்டிருந்தார். தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், என எந்த மொழியில் பேசினாலும் நவீனிடமிருந்து பதில் இல்லை.

கணினி திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஜெயராஜும், ஆஸ்கினும், அமெரிக்க அதிகாரிகளும்.

கணினி எந்த மாற்றமும் இன்றி வெறுமையாய் இருந்தது.

ஜெயராஜுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது. இப்போது என்ன செய்வது ? நவீன் ஏன் எதையுமே நினைக்க மாட்டேன் என்கிறான் ? நினைக்காதிருக்கும் வரை திரையில் ஏதும் தோன்றாதே… நான் தோல்வியடைந்து விட்டேனா ? இந்தக் கருவியால் பயனில்லையா ? ஜெயராஜ் வருந்தினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் ஜெயராஜ் டேபின் மீது விரலால் தட்டினார்.

எதிர்பாரா விதமாக கணினியில் சட்டென ஒரு காட்சி தோன்றியது.

வெளிச்சமாய் ஒரு மிகப்பெரிய குமிழ். அதற்குள் ஏதோ நீள் குழல் விளக்குகள் அசைந்து கொண்டிருந்தன.

ஜெயராஜ் மீண்டும் தனது விரலால் மேஜையில் முதலில் தட்டியது போலவே தட்டினான்.

அதே காட்சி மீண்டும் திரையில் வந்தது.

ஜெயராஜுக்கு ஏதோ ஒன்று பிடிபட்டது போல் தோன்றியது. இதென்ன ஒரு புது மொழியா ?  ஜெயராஜ் ஆஸ்கினைப் பார்த்தார் அவர் குழப்ப முடிச்சுகளோடு ஜெயராஜைப் பார்த்தார். அதிகாரிகள் கணினியையே விழுங்கி விடுவது போலப் பார்த்தார்கள்.

ஜெயராஜ் தனது விரல்களால் மேஜையில் தட்ட ஆரம்பித்தார். மெலிதான தாளம் போல ஜெயராஜ் மேஜையில் தட்டத் தட்ட கணினித் திரை அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தது.

ஒரு வெளிச்சக் குமிழுக்குள் நவீன் நிற்கிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட். அவனுக்கு முன்னால் வெளிச்ச உடலுடன் நீள் குழல் விளக்குகளைப் போன்ற உயிர்கள் அலைகின்றன. அவ்வப்போது அவை அணைந்து அணைந்து எரிகின்றன. நடக்கின்றன. வளைகின்றன. வடிவத்தை மாற்றி குமிழ் விளக்கு போல ஆகின்றன. மெலிதாகின்றன.

நவீனின் பிம்பம் ஒரு பாதரசப் படிவம் போன்ற ஒரு பெட்டிக்குள் விழுகிறது, அந்தப் பெட்டிக்குள் ஒரு விளக்கு உருவமும் நுழைகிறது. அடுத்த வினாடி இன்னோர் நவீன் அந்தப் பெட்டியிலிருந்து எழுந்து வருகிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட்.

ஜெயராஜும், ஆஸ்கினும், அதிகாரிகளும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சட்டென காட்சிகள் மாற, நவீன்கள் ஆயிரம் ஆயிரமாய் பெரும் கூட்டமாய் நிற்கின்றனர். தரைக்குள்ளிருந்து சில உருவங்கள் மண்புழுக்களைப் போல மண்ணைத் துழைத்து கம்பங்களைப் போல நிமிர்கின்றன.

அடுத்த காட்சியில் ஓர் ராட்சத பருந்து போன்ற கருவிக்குள் நவீன்கள் நுழைகின்றனர். பின் அந்த கருவியிலிருந்து ஒளி உருண்டைகள் ஆயிரம் ஆயிரமாய் வெளியேறி பூமியை சிதறிப் பாய்கின்றன.

காடுகள், மலைகள், நாடுகள் என எல்லா இடங்களுக்கும் அந்த ஒளிப் பந்துகள் விழுகின்றன. ஒளிப்பந்து விழும் இடத்தில் சட்டென ஒளி மறைய நவீன்கள் !

அந்த அறையிலிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போய் கணினித் திரையையே வெறித்தனர்.

யு.எப். ஓ அலுவலகம், இங்கிலாந்து

இந்த நவீன்களின் உடலில் இருப்பது ஏலியன் உயிரா ? அது ஏலியன் தானா ? ஏலியன் எனில் என்ன கிரகம் ? எப்படி அவர்களால் ஒளியாக பூமிக்குள் பாய முடிகிறது ? எப்படி மனிதனைப் பிரதியெடுக்க முடிகிறது ? அவர்கள் நோக்கம் தான் என்ன ? பூமியைக் கட்டுப்படுத்துவதா ? பூமியை அழிப்பதா ? இப்படிப் பல கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சியையே அனைவரும் மேற்கொண்டுள்ளோம்.

பல சுவாரஸ்யமான ஆய்வுகள் தெரியவந்துள்ளன. ஒன்று இவர்கள் கார்பண்டை ஆக்ஸைடைத் தான் சுவாசிக்கப் பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது இவர்களுக்குப் பசிப்பதில்லை. மூன்றாவது, இவர்கள் மண்ணில் புதையுண்டு கிடந்தால் கூட உயிர்வாழ்வார்கள்.

ஆராய்ச்சி பல்வேறு கட்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் பல நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டதால் உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கின்றன.

பத்திரிகையாளர் கூட்டத்தில் யூ.எஃப். ஓ இயக்குனர் ராபட்சன் பேசிக்கொண்டிருந்தார்.

“ஒரு உயிரை வைத்து இப்படி ஆராய்ச்சி செய்வது நல்லதா ? இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயலில்லையா ?” ஒரு பத்திரிகைப் பெண்மணி கோபமாய் கேட்டாள்.

இவர்கள் மீது எந்த காயமும் நேராமல் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

“உலகிலிருந்து நவீன் எப்படி வேறு கிரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்” அடுத்த கேள்வி வந்தது.

“அது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஆராய்ச்சிக் கூடம் மும்முரமாய் இருக்கிறது”

“இவர்களால் மனிதனுக்கு ஏதேனும் நோய், உயிர்சேதம் போன்ற அச்சுறுத்தல்கள் ? “ கேள்விகள் தொடர்ந்தன..

முழுமையாய் எதுவும் தெரியாது. இவர்களால் மனிதர்களுக்கு என்ன அச்சுறுத்தல் என்பதைக் கண்டறியும் வரை இவர்கள் பாதுகாப்பாகவே வைக்கப்படுவார்கள். எங்கேனும் இந்த மனித உருவத்தைக் கண்டால் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இது ஒட்டுமொத்த உலகத்துக்குமான வேண்டுதல்.

பேட்டி தொடர்ந்து கொண்டிருக்க, அடக்க முடியாத அழுகையுடன் விசும்பிக் கொண்டிருந்தனர் நவீனின் தந்தை நுக்கலாவும், தாயும்.

33 comments on “அறிவியல் புனைக் கதை : நவீனன்

 1. சூப்பர்.. பிச்சு உதறிட்டீங்க.. ஆனா, முடிவு மட்டும் கொஞ்சம் அந்தரத்தில தொங்கற மாதிரி ஒரு பீலிங்.

  Like

 2. அப்புறம்.. சிறுகதை எழுத சொன்னா.. ஒரு த்ரில்லர் சினிமாவுக்கே எழுதிட்டீங்க.. வாழ்த்துகள்..

  Like

 3. நல்ல கதை.வாழ்த்துக்கள்.
  தாங்கள் அறிவியல் புதினம் எழுதலாமே?

  Like

 4. நண்பர் சேவியருக்கு,

  “சைக்கோவைப் பற்றிய பயமோ என்னவோ எந்தக் காவலரும், பைக்கிலோ, சைக்கிளிலோ, நடந்தோ சுற்றவில்லை.”

  “வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்லியிருப்பார்கள். ஆனால் அடுத்த நாளே இன்னொரு கொலை நடந்தால் இந்த தகிடுதத்தம் எல்லாம் அம்பலமாகிவிடும். எனவே தான் என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருக்கிறது காவல் துறை.”

  சிரிப்பைத் தூண்டும் எதார்த்தமான வரிகள் !!!!!!!!!!!!!!!
  நானும் அசோக் நகர் ஏரியா தான் !!!!!!!! 🙂

  சில இடங்களில் இந்தக் கதையில் ஒத்துப் போக முடியவில்லை.என்றாலும்,அறிவியல் புனைக் கதை என்பதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

  ஜெயராஜ் டேபிள் மீது விரல் தட்டியவுடன் காட்சிகள் கணினித்திரையில் ஓடியது என்று சொல்லுவது சரியானதாகப் படவில்லை. மாறாக, வேறு ஏதேனும் பட்டனை சொல்லி இருக்கலாம்.

  “நீள் குழல் விளக்கு” என்று டியுப் லைட்டை தானே சொல்கிறீர்கள் !!!!!! மிக நன்று !

  “மூளையில் நமது சிந்தனைகளும், பதில்களும் வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பே காட்சி வடிவமீڦlt;E??ற்று விடுகின்றன. ”

  எழுத்து சரியாக வரவில்லை !!!!! சரி செய்து விடுங்கள் !!!!!!!!!

  அன்புடன்
  குகன்

  Like

 5. மிக அருமையான, விறுவிறுப்பான அறிவியல் புனைக்கதை

  பதிவிற்கு நன்றி

  நித்தில்

  Like

 6. ஒரு நல்ல திரைக்கதை வடிவில் சீன் பை சீனாக மாறிக் கொண்டே இருக்கின்றது கதைக்களம். ஆனால், இறுதியில் சட்டென்று முடிந்து விட்டார் போல் ஒரு பிரம்மை.

  நன்றாக இருந்தது ஐயா..!

  Like

 7. என்ன அண்ணாச்சி, சைக்கோ மேல் சாரி….வைகோ மேல் அப்படி ஒரு பாசமா உங்களுக்கு?

  கதை விறுவிறுப்பாக இருந்தது.

  Like

 8. //சூப்பர்.. பிச்சு உதறிட்டீங்க.. ஆனா, முடிவு மட்டும் கொஞ்சம் அந்தரத்தில தொங்கற மாதிரி ஒரு பீலிங்.

  //

  நன்றி பு.பட்டியன்.

  இரண்டு வேறு வேறு முடிவை எழுதிப் பார்த்து, கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கட்டுமேன்னு இப்படி மூணாவதா ஒரு முடிவு எழுதினேன். 🙂 கிளிக் ஆகலையோ !

  Like

 9. //அப்புறம்.. சிறுகதை எழுத சொன்னா.. ஒரு த்ரில்லர் சினிமாவுக்கே எழுதிட்டீங்க.. வாழ்த்துகள்//

  நன்றி 🙂 நன்றி.. கொஞ்சம் பெரிசாயிடுச்சு 😉

  Like

 10. /நல்ல கதை.வாழ்த்துக்கள்.
  தாங்கள் அறிவியல் புதினம் எழுதலாமே?//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சந்திரசேகர். 🙂

  அறிவியல் புதினம் எழுதுமளவுக்கு அறிவு பத்தாது 🙂

  Like

 11. //நண்பர் சேவியருக்கு,

  “சைக்கோவைப் பற்றிய பயமோ என்னவோ எந்தக் காவலரும், பைக்கிலோ, சைக்கிளிலோ, நடந்தோ சுற்றவில்லை.”

  “வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்லியிருப்பார்கள். ஆனால் அடுத்த நாளே இன்னொரு கொலை நடந்தால் இந்த தகிடுதத்தம் எல்லாம் அம்பலமாகிவிடும். எனவே தான் என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருக்கிறது காவல் துறை.”

  சிரிப்பைத் தூண்டும் எதார்த்தமான வரிகள் !!!!!!!!!!!!!!!
  நானும் அசோக் நகர் ஏரியா தான் !!!!!!!!

  //

  நன்றி. அசோக் நகர் காவல் நிலையத்துல பத்த வெச்சுடாதீங்க 🙂

  //

  சில இடங்களில் இந்தக் கதையில் ஒத்துப் போக முடியவில்லை.என்றாலும்,அறிவியல் புனைக் கதை என்பதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. //

  🙂

  //

  ஜெயராஜ் டேபிள் மீது விரல் தட்டியவுடன் காட்சிகள் கணினித்திரையில் ஓடியது என்று சொல்லுவது சரியானதாகப் படவில்லை. மாறாக, வேறு ஏதேனும் பட்டனை சொல்லி இருக்கலாம்.

  //

  ஏலியன் மொழி இசை மொழி என்று சொல்ல வந்தேன் …..

  //

  “நீள் குழல் விளக்கு” என்று டியுப் லைட்டை தானே சொல்கிறீர்கள் !!!!!! மிக நன்று !

  //

  நன்றி 🙂

  //

  “மூளையில் நமது சிந்தனைகளும், பதில்களும் வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பே காட்சி வடிவமீڦlt;E??ற்று விடுகின்றன. ”

  எழுத்து சரியாக வரவில்லை !!!!! சரி செய்து விடுங்கள் !!!!!!!!!

  //

  சரி செய்து விட்டேன்.

  மிக்க நன்றி குகன். உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும்.

  Like

 12. //மிக அருமையான, விறுவிறுப்பான அறிவியல் புனைக்கதை

  பதிவிற்கு நன்றி

  நித்தில்

  //

  நன்றி நித்தில். 🙂

  Like

 13. //ஒரு நல்ல திரைக்கதை வடிவில் சீன் பை சீனாக மாறிக் கொண்டே இருக்கின்றது கதைக்களம். ஆனால், இறுதியில் சட்டென்று முடிந்து விட்டார் போல் ஒரு பிரம்மை.
  //

  நன்றி வசந்தகுமார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  //
  நன்றாக இருந்தது ஐயா
  //

  ஐயாவா ? ஐயகோ என்னை வயதனாக்கி விட்டீர்களே 😦

  Like

 14. /என்ன அண்ணாச்சி, சைக்கோ மேல் சாரி….வைகோ மேல் அப்படி ஒரு பாசமா உங்களுக்கு?

  கதை விறுவிறுப்பாக இருந்தது
  //

  நன்றி தங்கச்சி.. வை.கோ நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு, ஒபாமாவையோ பாத்து வந்து போஸ்டர் ஒட்டினவரு. அவரை நான் ஏன் கிண்டல் பண்ண போறேன். ஏதோ அசோக் நகர் காவல் நிலையத்துல ஒரு போலீஸ்காரர் காது சரியா கேக்கல.. அதுக்கு நான் என்னங்க பண்றது..

  Like

 15. //ஏலியன் மொழி இசை மொழி என்று சொல்ல வந்தேன் ….. //

  விளக்கத்திற்கும் , சரி செய்ததற்கும் நன்றி !!!! 🙂

  நட்புடன்
  குகன்

  Like

 16. Pingback: அறிபுனை போட்டி முடிவுகள்

 17. மனமார்ந்த வாழ்த்துக்கள் சேவியர். அறிவியல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதற்காக.

  Like

 18. Pingback: சுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும். « கவிதைச் சாலை

 19. fast paced action thriller movie paartha mathiri irukku…..pongal sapdripa kidaikira mundiri parupu maathiri anga anga naiyandi asathal….intha maathiri elimaiyana varthaigalala sci-fi kadhaiya ezhuthurathu evlo kashtam nu ezhuthi parkaravangulluku thaan theriyum. Ending is rather sudden and less-impacting.
  Btw, for your & shankar’s attention – ‘Endiran’ kadai discussion-la sujathavoda idam innum kaaliyaa thaan irukku….

  Like

 20. நன்றி ஆனந்த் ! நீ இன்னும் இம்மியளவு கூட மாறலை. உன் நக்கலும், நையாண்டியும், பஞ்ச் டலயாக்கும் எல்லாம் அப்படியே இருக்கு. சரி.. உன்னோட தளத்தை தூசு தட்டலாமா ?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.