கவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்

கருப்புப் போர்வைக்குள்
குளிர் உறங்கும்
இரவு.

அமெரிக்காவின்
அகன்ற சாலைகளெங்கும்
கால் வலியுடன் விழுந்து கிடக்கிறது
கனத்த காற்று.

ஜன்னல் திறந்தால்
பாய்ந்து விடலாமென்று
குத்தூசிகளுடன் காத்திருக்கிறது
குளிர்.

செயற்கைச் சூரியனை
குழாய்களில் செலுத்தும்
வீடுகள்.

விரல்கள்
அனிச்சைச் செயலாய்
நடுங்க.

பல் வரிசை இரண்டும்
காலாட்படை போல
நேருக்கு நேர் மோதிக் கொள்ள.
நாக்கு தொண்டைக்குள் சென்று
நங்கூரமிடும் இரவு.

மெலிதாய்க் கசியும் நிலவில்
சாலைகளுக்கு இலையாடை போர்த்தி
நிர்வாணமாய் நிற்கும்
பனி தாங்கி மரங்கள்.

சிகரெட் இழுக்காமலேயே
புகைவிடும் வாயுடன்,
அணுக்களிலும் இடையிலும் வெப்பத்தோடு
பகையிடும் குளிர்ந்த இரவில்,
அந்த ஒற்றையடிப்பாதையில்
நான்.

உடலின் உறுப்புக்களைக்
கொஞ்சம் கொஞ்சமாய்க்
குளிர் தின்ன.
நெஞ்சில் மட்டும் கதகதப்பாய்
இன்னும்
உயிர்வளர்க்கும் உன் நினைவுகள்..

ஒரு மழை இரவும்,  ஓராயிரம் ஈசல்களும் நூலில் இருந்து

14 comments on “கவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்

  1. நண்பர் சேவியருக்கு,

    கவிதை உண்மையின் உரைகல். அதை நான் சொல்லவில்லை. இந்த வரிகள்

    செயற்கைச் சூரியனை
    குழாய்களில் செலுத்தும்
    வீடுகள்.”

    எதை விவரிக்க எழுதப்பட்டவை என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் . 🙂

    அன்புடன்
    குகன்

    Like

  2. /உங்கள் அமெரிக்க வாழ்க்கையின் அனுபவச் சாலைக்குள் பாஸ்போர்ட் , விசா எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடந்து போக முடிந்தது. /

    நன்றி 🙂

    //
    மைனஸ் டிகிரி குளிர் வாசித்து (நடந்து) முடிக்கும் வரை . ஆனால் , கடைசி வரையிலும், போர்வை கேட்கச் சொல்லாத குளிர் . அப்படி குளிர வைக்க உங்களால் தான் முடியும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    “நிர்வாண மரங்கள்” , “குத்தூசியோடு காத்திருக்கும் குளிர்” , “நாக்குக்குள் நங்கூரமிடுதல்” அப்பப்பா !!!!!!!!!!! என்ன ஒரு புதுமை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    //

    நன்றி மீண்டும்.. 😉

    //

    செயற்கைச் சூரியனை
    குழாய்களில் செலுத்தும்
    வீடுகள்.

    எல்லாத்தையும் அமெரிக்கா போகாம தெரிஞ்சுக்க பேராசை எனக்கு !!!!!! எனவே, நீங்களே சொல்லி விடுங்கள்
    எதன் பொருட்டு எழுதப் பட்டது இந்தக் கற்பனை ? .

    //

    கற்பனையா ? உண்மை என்று கூட வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் பழைய கவிதை இது 🙂

    வழக்கம் போலவே வந்து வலிமை ஊட்டிய உங்கள் விரிவான கருத்துக்கு நன்றிகள் பல.

    //

    Like

  3. //என் அனுபவம்… சிறப்பாக கொடுக்க முடியவில்லை… மன்னிக்கவும்…

    //

    வந்து பாக்கறேன் 🙂

    Like

  4. நண்பர் சேவியருக்கு,

    உங்கள் அமெரிக்க வாழ்க்கையின் அனுபவச் சாலைக்குள் பாஸ்போர்ட் , விசா எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடந்து போக முடிந்தது. மைனஸ் டிகிரி குளிர் வாசித்து (நடந்து) முடிக்கும் வரை . ஆனால் , கடைசி வரையிலும், போர்வை கேட்கச் சொல்லாத குளிர் . அப்படி குளிர வைக்க உங்களால் தான் முடியும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    “நிர்வாண மரங்கள்” , “குத்தூசியோடு காத்திருக்கும் குளிர்” , “நாக்குக்குள் நங்கூரமிடுதல்” அப்பப்பா !!!!!!!!!!! என்ன ஒரு புதுமை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    செயற்கைச் சூரியனை
    குழாய்களில் செலுத்தும்
    வீடுகள்.

    எல்லாத்தையும் அமெரிக்கா போகாம தெரிஞ்சுக்க பேராசை எனக்கு 🙂 !!!!!! எனவே, நீங்களே சொல்லி விடுங்கள் 🙂
    எதன் பொருட்டு எழுதப் பட்டது இந்தக் கற்பனை ? .

    நட்புடன்
    குகன்

    Like

  5. //கவிதை படிக்க ஆரம்பித்தவுடன் தட்டச்சு செய்துக் கொள்ளும் பற்களையும், புகை கக்கும் வாயையும் எழுதுவீர்களா எனப் பார்த்தேன்… அழகாக கொடுத்திருக்கிங்க… நல்லா இருக்கு//

    நன்றி விக்கி 🙂 மலேஷிய அனுபவம் எப்படியோ 😀

    Like

  6. //பல் வரிசை இரண்டும்
    காலாட்படை போல
    நேருக்கு நேர் மோதிக் கொள்ள.
    நாக்கு தொண்டைக்குள் சென்று
    நங்கூரமிடும் இரவு.//

    கவிதை படிக்க ஆரம்பித்தவுடன் தட்டச்சு செய்துக் கொள்ளும் பற்களையும், புகை கக்கும் வாயையும் எழுதுவீர்களா எனப் பார்த்தேன்… அழகாக கொடுத்திருக்கிங்க… நல்லா இருக்கு..

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.