கட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம்

 

( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியானது )

உலகெங்கும் வெடிகுண்டுகள் வெடிப்பது சர்வ சாதாரணமாகி விட்ட சூழல் இது. இலங்கை, ஈராக் என போர் பிரதேசங்களில் நிகழ்ந்து வந்த வெடிகுண்டுகள் இப்போதெல்லாம் எங்கு வேண்டுமாலாலும் வெடிக்கலாம் எனும் சூழல்.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 2765 பேர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியாகியிருக்கின்றனர். இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முடிய இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த தீவிரவாதப் படுகொலைகளின் எண்ணிக்கை சுமார் பதினான்காயிரத்து ஐநூறு என்கிறது SAIR (South Asis Intelligence Review) புள்ளி விவரம்.  

எல்லைகளில் நிகழ்ந்து வந்த தாக்குதல்களும், குண்டு வெடிப்பும் இப்போது அப்பாவி மக்கள் உலவும் பொது இடங்களில் நிகழ்வதுதான் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அதிலும் இந்த ஓரிரு வாரங்களில் இந்தியாவில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் மக்களை பீதியின் எல்லைக்கே தள்ளியிருக்கிறது. பொதுவிடங்களில் நின்று பேசவும், திரையரங்குகள், விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லவும் மக்கள் பெரிதும் தயங்குகின்றனர். காரணம் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் இடங்கள் இத்தகையதே.

வெடிகுண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளை பல அடுக்குகளாகப் பிரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். முதலாவது குண்டு வெடிக்கும் போது உருவாகும் வெடி அலைகள். வெடிகுண்டு வெடிக்கும் போது சுற்றியிருக்கும் பகுதி மிக அதிக அழுத்தத்துக்குள் தள்ளப்படுகிறது. இது அருகிலிருக்கும் காற்றை மிக அழுத்தத்துடனும், மிக மிக விரைவாகவும் தள்ளுகிறது. இந்த வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு வினாடியை நீங்கள் ஆயிரக்கணக்காக உடைத்தால் அதில் ஒரு வினாடியில் இந்த அலை பாயும் எனக் கொள்ளலாம். இது தான் சுற்றியிருக்கும் பொருட்களையும் உடைத்து, அருகில் நிற்கும் மனிதர்களையும் கொடூரமாய் தாக்குகிறது.

இந்த அலைகளைத் தொடர்ந்து இரண்டாவதாக வருவது அதிர்வு அலைகள். மிக அதிக அழுத்தத்தில், அதிக வெலாசிடி உள்ள அதிர்வு அலைகள் உடலை ஊடுருவி உடலின் பாகங்களைச் சிதைக்கிறது. இந்த அலைகள் தாக்கினால் உடல் மிகப்பெரிய சேதத்தை சந்திப்பது உறுதி.

குண்டு வெடிக்கும்போது அருகில் இருக்கும் கண்ணாடிப் பொருட்களோ, இரும்புப் பொருட்களோ, அல்லது கனமான கூர்மையான பிற பொருட்களோ அதி வேகத்தில் வீசப்படும். இது தான் சற்றுத் தொலைவில் இருப்பவர்களைக் கூட தாக்கி அவர்கள் உயிருக்கு உலை வைக்கிறது.

குண்டு வெடிக்கும் போது ஏற்படும் வெப்பம் அருகில் இருக்கும் பொருட்களை எரித்தும், வெப்ப அலைகளை அருகிலுள்ள பகுதிகளில் நிலவச் செய்தும் முடிந்த மட்டும் பொசுக்கி விடுகிறது.

குண்டு வெடிக்கும்போது நிகழும் இன்னொரு அபாயம் என்னவெனில், வெடிக்கும் போது அதிக அழுத்தமான காற்று வெளித்தள்ளப்படுவதால் அந்த இடத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி விடுகிறது. இந்த வெற்றிடம் அடுத்த வினாடியே அருகிலுள்ள காற்றை உள்ளிழுத்து நிரம்பிக் கொள்கிறது. இப்படி உள்ளிழுக்கும் வலிமை அருகில் இருக்கும் பொருட்களையும் உயிர்களையும் தப்ப விடாமல் செய்துவிடுகிறது.

இவையெல்லாம் குண்டுவெடிக்கும்போது நிகழ்பவை. குண்டு வெடிப்பிற்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்படுவது அதற்கு சற்றும் தொடர்பற்ற மக்கள் என்பது தான் மனித நேயம் உடையவர்களை வேதனைக்குள் தள்ளும் செய்தி.

வன்முறையற்ற, பாதுகாப்பான ஒரு சூழல் அமைய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் தெளிவான திட்டமிடுதலும், பாரபட்சமற்ற அணுகுகுறையும் அவசியம். பொதுமக்களின் பங்களிப்பு, விழுப்புணர்வு போன்றவையும் இதில் அவசியம்.

1       உங்களுக்கு அருகில் எங்கேனும் குண்டு வெடித்தாலோ, வெடிக்கும் என தெரிந்தாலோ எதற்கேனும் அடியில், மூடிக்கொண்டு படுப்பது நலம் பயக்கும். இது குண்டு வெடித்தலினால் நிகழும் அலைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

.
2       உங்களுக்கு ஏதேனும் சந்தேகப்படும்படியான பொருள் தபாலில் வந்தால் அதை அனுப்பியவர் யார் என பாருங்கள். அதில் தொலைபேசி இருந்தால் பேசி தகவல் அறியுங்கள். எதுவும் இல்லையேல் அந்தப் பார்சலை பிரிக்காமல் தனியே ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு காவல் துறைக்குத் தகவல் அளியுங்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் தவிர்த்து யாரிடமிருந்தும் எதுவும் வாங்காதிருங்கள்.

.
3 ஒரு முக்கியமான விஷயம், சந்தேகத்துக்குரிய பார்சல் எங்கே இருந்தாலும் அந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்ட இடைவெளியில், ரேடியோ, செல்போன் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை மின் பொருட்கள் எதையும் இயக்காதீர்கள்.

.
4 இங்கேயெல்லாம் யார் வருவாங்க? என்பது போன்ற ஓரமான, மக்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஏதேனும் பார்சல் இருந்தால் உங்கள் சிந்தனை சட்டென விழிப்படையட்டும். பார்சலின் மேல் ஏதேனும் எச்சரிக்கை வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தால் உடனே காவல்துறைக்குத் தெரியப்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் பார்சலைத் தொடாதீர்கள்.

.
5 வந்திருக்கும் பார்சல் சந்தேகத்துக்குரியதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? சில வழிமுறைகள் சொல்கின்றனர் நிபுணர்கள். உதாரணமாக, வந்திருக்கும் பார்சல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலோ, அனுப்பியவர் விவரம் இல்லாமல் இருந்தாலோ, ஒழுங்கற்ற வடிவத்துடன் இருந்தாலோ, விலாசம் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தாலோ, குறிப்பிட்ட நபருக்கு என்று இல்லாமல் தலைவர் இயக்குனர் என பதவிகள் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தாலோ, வித்தியாசமான வாசனை வந்தாலோ, ஒயர் போன்றவை தெரிந்தாலோ, அளவுக்கு அதிகமாகவே தபால்தலை ஒட்டப்பட்டிருந்தாலோ, அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தாலோ,  எண்ணைப்பசை, பொடி, போன்றவை கசிந்தாலோ, உள்ளிருந்து ஏதேனும் சத்தம் வந்தாலோ அவை பிரச்சினைக்குரியவையாய் இருக்கலாம் என கருதி விழிப்படையுங்கள்.

.
6 ஒருவேளை நீங்கள் ஒரு நிறுவனத்தின் அதிகாரியாய் இருந்தால், யாரேனும் உங்கள் அலுவலகத்துக்கோ, பொது இடத்துக்கோ குண்டு வைத்திருப்பதாக போனில் சொன்னால், அந்த நபர் ஆணா பெண்ணா, அவருடைய குரல், உச்சரிப்பு முறை, பின்னணியில் ஒலிக்கும் சத்தங்கள் இவற்றைக் கவனமுடன் பதிவு செய்யுங்கள். பதட்டப்படவே படாதீர்கள். அந்த நபர் பேசி முடிக்கும் வரை அமைதியாய் கேளுங்கள். அந்த சில வினாடிகளில் நீங்கள் கவனிப்பவை மிகப்பெரிய உதவியாய் இருக்கக் கூடும்.

.
7 கட்டிடத்தில் எங்கேனும் குண்டு வெடித்து தீ பரவினால் முடிந்தமட்டும் தரையோடு குனிந்து வெளியேறுங்கள். வெப்பம் கூரைப் பகுதியில் அதிகமாய் இருக்கும். கட்டிடத்தின் அவசர வாசல்களைப் பயன்படுத்துங்கள். மின் தூக்கிகள் பக்கமே போகாதீர்கள்.

.
8 அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பெரிய கட்டிடங்கள் போன்ற பகுதிகளைச் சுற்றி அதிக வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்தல் அவசியம். கூடவே கண்காணிப்புக் காமராக்கள் பொருத்துவதும் அவசியம். அலுவலகத்தில் பணிபுரிவோர் இத்தகைய ஆலோசனைகளை அலுவலக தலைமைக்குச் சொல்லலாம்.

.
9 சந்தேகப்படும்படியான நபர் உங்கள் அருகே உலாவுவதைக் கவனித்தால் ரகசியமாய் சற்று நேரம் அந்த நபருடைய நடவடிக்கைகளைப் பாருங்கள். சந்தேகம் வலுத்தால் காவல் துறைக்குத் தகவல் கொடுங்கள். குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள், சுரங்க நடை பாதைகள் போன்ற இடங்களில் விழிப்பாய் இருங்கள்.

.
10 யாருமே விரும்பாத இடங்களைக் கூட ஒருவர் ரகசியமாய் புகைப்படம் எடுக்கிறார் என்றால் அவர் கவனிக்கப்பட வேண்டியவர். உதாரணமாக ரயில்வே நிலையங்களின் ஓரங்கள், கழிப்பிடங்களின் பின் பக்கம், இப்படி.

.
11 குற்றவாளிகள் பெரும்பாலும் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று காட்டிக் கொள்ள பெரும் பிரயர்த்தனம் மேற்கொள்வார்கள். குறிப்பாக வெயில் காலத்திலும் கோட் சூட்டுடன் நடப்பது, எதேச்சையாய் செய்வது போல சில செயல்களை வேண்டுமென்றே செய்வது இப்படி. விழிப்பாய் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

.
12 குற்றம் செய்ய வருபவர்கள் பெரும்பாலும் ஒரு பையோ, சூட்கேசோ ஏதேனும் வைத்திருப்பார்கள். தாங்கள் சாதாரணமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள மொழுமொழுவென புதிதாய் ஷேவ் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு. மிகவும் கூர்மையான பார்வையும், அனைத்தையும் கவனத்துடன் அணுகும் மனப்பான்மையும் அவர்களிடம் இருக்கும். வேக வேகமாக நடப்பார்கள், ஆனால் ஓடவே மாட்டார்கள்.

.
13 ஒரு இடத்தில் பெட்டியை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் விடுட்டென பெட்டியை எடுக்காமல் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்வதுபோல ஒருவர் அப்படியே நழுவுகிறார் எனில் கவனம் தேவை !
சமூகவிரோத செயல்களையும், தீவிரவாத நடவடிக்கைகளையும், வெடிகுண்டு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து கழுவி விட முடியாது. ஆனால் எச்சரிக்கை உணர்வு மக்களிடம் பரவினால் இத்தகைய குற்றங்களைப் படிப்படியாகக் குறைக்க முடியும்.
 
சமூக அக்கறையும், சமூகத்தில் நானும் ஓர் அங்கம் எனும் உணர்வும், சமூகப் பாதுகாப்புக்கு என்னால் இயன்றதைச் செய்யவேண்டும் எனும் பங்களிப்பு உணர்வும் அனைவரிடமும் மிளிர்ந்தால் வன்முறைகள் ஒழிந்து நன்முறைகள் சமூகத்தை வளமாக்கும்.

8 comments on “கட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம்

 1. சிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் மலைப்பாக இருக்கிறது… நிறைய எழுதுகிறீர்கள்…. ஆச்சர்யம்…

  Like

 2. சேவியர் அண்ணா,இந்தப் பதிவை கொஞ்சக் காலத்துக்கு முன்னமே எழுதியிருந்தீர்கள் என்றால் எங்கள் நாட்டில் பல உயிர்கள் வாழ்ந்திருக்குமோ!அருமையான பதிவு.தேவையான காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வருமுன் காப்போம்.என்றாலும் சின்னச் சின்ன அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளலாமே தவிர….எங்கள் நாட்டின் அவலத்திற்கு ???உங்கள் சமூக நலன் கொண்ட பதிவுகளுக்கு நன்றி அண்ணா.

  Like

 3. //சிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் மலைப்பாக இருக்கிறது… நிறைய எழுதுகிறீர்கள்…. ஆச்சர்யம்//

  நன்றி தம்பி 🙂 எழுதுவது மிகவும் பிடித்தமான பொழுது போக்கு எனக்கு, உன்னைப் போலவே 😉

  Like

 4. //அருமையான பதிவு.தேவையான காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வருமுன் காப்போம்.என்றாலும் சின்னச் சின்ன அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ளலாமே தவிர….எங்கள் நாட்டின் அவலத்திற்கு ???உங்கள் சமூக நலன் கொண்ட பதிவுகளுக்கு நன்றி அண்ணா.

  //
  நன்றி தங்கச்சி. வருகைக்கும், கருத்துக்கும், அன்புக்கும்.

  Like

 5. சேவியர்,
  மிக அற்புதமான பதிவு. தீவிரவாதிகள் என்று கூறிகொள்பவர்கள்
  கொஞ்சமேனும் மனித நேயம் இருந்தால்….
  அது தான் இல்லையே 😦

  Like

 6. நண்பர் சேவியருக்கு,

  காவல் துறையினரின் கடமையை நீங்கள் எடுத்து சிறப்பாக செய்து உள்ளீர்கள் !! அதற்காய் என்னுடைய பணிவான சல்யுட் !! சமீபத்தில் நடந்த அஹமெதாபாத் குண்டு வெடிப்பில் , போல்ட் , நட்டுகளின் அடியில் வைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து இருக்கின்றனர். போன வருட ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் , சைக்கிள் செயின் பயன்படுத்தி இருக்கின்றனர் . என்ன ஒரு கொடூர மனம் !!!!! இல்லை !!!! இல்லை !!!!! மிருக மனம் கொண்டவன் கூட இப்படிச் செய்வான் என்று சொல்லுதற்கு ஆகாது .

  மனித இனத்தின் குருதி குடித்து , இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கலாம் என்று எண்ணும் தீவிரவாத பேடிகளுக்கு எதிரான இன்னொரு சுதந்திர போருக்கு தயாராவோம் !!!!!!!! அந்த யுத்தத்தில் மாளப் போவது அப்பாவி மக்கள் அல்ல அந்த வெறி பிடித்த மிருகத்துக்கும் கீழான இனம் மட்டுமே என்று சூளுரைப்போம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

  அன்புடன்
  குகன்

  Like

 7. நன்றி குகன். தீவிரவாதத்துக்கு எதிரான உங்கள் மனக் கொந்தளிப்பைக் காட்டி விட்டீர்கள். நம்புவோம், நலமான ஒரு இந்தியா உருவாகும். தோழமை நிலைபெறும் என நம்புவோம்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.