கவிதை : புரியவில்லையே அம்மா

அம்மா..
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மொழிபெயர்த்து
அமுதூட்டுவாய்.
தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய்.

பாவாடைப் பருவத்தில்
என் இடுப்பில்
புடவை கட்டிவிட்டு
உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய்
சொல்லிச் சிரித்துக் கொண்டாய்.
ஏனோ எனக்குப் புரியவில்லை.

அறிவுக்குள் காரணங்கள் விளங்காத
ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில்
பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது,
பூப்பெய்தினேன் என்றுசொல்லிப்
பூரித்தாய்.
எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது.

அந்தி வந்து வாசல் தட்டும் முன்
நான் வந்து சேரவேண்டுமென்று
கோபக்குரலில் விளக்கினாய்
முழுதாய் படராத இருட்டுபோல
சில இடங்கள் புரியவேயில்லை.

பள்ளிக்கூடத்தின் பலகைகளில்
தரவரிசையில் நான்
தலைகாட்டியபோதெல்லாம்
அடக்கமுடியா ஆனந்தத்தில் அணைத்துக் கொள்வாய்,
அப்போதெல்லாம்
தினம் தினம் தேர்வுகள் வராதா என்று யோசித்திருக்கிறேன்.

வலிகளின்
இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் மடியில் கவிழ்ந்தழுதிருக்கிறேன்.

என் கண்கள் துடைக்கும்
உன் முந்தானை நுனி,
என் வலிகள் பிய்த்தெறியும் உன் விரல் நுனி,
இவைகளின் தைரியத்தில்,
நான்
அழுவதற்குக் கூட அச்சப்பட்டதில்லை.

ஆனால்,
இன்று பயமாய் இருக்கிறது எனக்கு,

எப்போதும் சிரிக்கும்
உன் கண்கள் முழுதும் கண்ணீர்,
இறுக்கக் கட்டியிருக்கிறாய்
உன் ஆறுதல்க் கரங்களை.
உன் கால்களைக் கட்டிக்கொண்டு அழத்தோன்றுகிறது.

பாரமாய் என் கழுத்தில்
புத்தம் புதுத் தாலி.

இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.
ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

0

29 comments on “கவிதை : புரியவில்லையே அம்மா

 1. தாய்ப்பாசத்தின் ஏக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதுதான்.
  என்றாலும் திருமணமாகிப் போகும் போது அப்போதான் பிறந்த குழந்தைபோல நெருக்கமாக அம்மாவைத் தேடும்.அம்மாவின் பிரிவு மனதை மிகவும் தாக்கும்.அவள் தாயான பின்னும் கூட இறக்கும் வரை அம்மாவின் அன்புக்காகக் காத்திருக்கும்.தாயின் பாசத்தையும்,தாய்க்காக ஒரு பெண்ணின் ஏக்கத்தையும் கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை அண்ணா.
  ஒரு பெண்ணின் உணர்வோடு உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

 2. நண்பர் சேவியருக்கு,

  பிறந்ததில் இருந்து திருமணத்திற்கு முன் வரை ஒரு பெண் கடந்து போகும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் வடிவம் கொடுத்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.சீன சுவர் அளவிற்கு நீளும் பெண்ணிய ஏக்கங்களை சிதைபடாமல் , உங்கள் படைப்புக்கே உண்டான இலக்கணங்களோடு வழங்கி உள்ள விதம் அருமை !!!!!!

  அன்புடன்
  குகன்

 3. //பெண்ணாய் பிறந்த எல்லோருக்கும் ஏற்படும் இது வரமா சாபமா?/

  வரமாவதும், சாபமாவதும் அமையும் வாழ்வின் ஆத்மார்த்தத்தைப் பொறுத்தது !

 4. //தாய்ப்பாசத்தின் ஏக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதுதான்.
  என்றாலும் திருமணமாகிப் போகும் போது அப்போதான் பிறந்த குழந்தைபோல நெருக்கமாக அம்மாவைத் தேடும்.அம்மாவின் பிரிவு மனதை மிகவும் தாக்கும்.அவள் தாயான பின்னும் கூட இறக்கும் வரை அம்மாவின் அன்புக்காகக் காத்திருக்கும்.தாயின் பாசத்தையும்,தாய்க்காக ஒரு பெண்ணின் ஏக்கத்தையும் கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை அண்ணா.
  ஒரு பெண்ணின் உணர்வோடு உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்/

  ரொம்ப நன்றி தங்கையே… பெண்ணின் உணர்வோடு உணர்ந்து எழுதியிருப்பதாய் ஒரு பெண்ணின் வாயால் பாராட்டப்பெறுவது உண்மையிலேயே மன நிறைவை அளிக்கிறது !

 5. //நண்பர் சேவியருக்கு,

  பிறந்ததில் இருந்து திருமணத்திற்கு முன் வரை ஒரு பெண் கடந்து போகும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் வடிவம் கொடுத்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.சீன சுவர் அளவிற்கு நீளும் பெண்ணிய ஏக்கங்களை சிதைபடாமல் , உங்கள் படைப்புக்கே உண்டான இலக்கணங்களோடு வழங்கி உள்ள விதம் அருமை !!!!!!

  //

  அன்பின் குகன், பெண்ணின் உணர்வுகளை சீனப்பெருஞ்சுவரோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பதில் உங்கள் பார்வையின் ஆழமும், விசாலமும் புரிகிறது. ரொம்பவே ரசித்தேன். உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  ஏராளமான பின்னூட்டங்கள் போட்டு நாளை இனிமையாக்கியமைக்கு நன்றிகள் பல🙂

 6. சேவியர்,

  பெண்ணின் உணர்வுகளை எப்படி உங்களால் இவ்வளவு அழகாக எழுத முடிகிறது!

  /முழுதாய் படராத இருட்டுபோல
  சில இடங்கள் புரியவேயில்லை./

  ரசித்த வரிகள். வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 7. படித்து முடித்தவுடன் அப்படியே அம்மாவின் காலகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது சேவியர்.நினைத்தவுடன் பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் நாங்கள் எல்லாம் இப்போதைக்கு முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அழுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
  அன்புடன் அருணா

 8. அறியாப் பருவம் முதல் //புத்தம் புதுத் தாலி.// ஏந்தி வாழ்வின் அடுத்த கட்டமாகிய புக்ககம் போகும் வரை கூடவே வந்த அம்மா…..

  //இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.
  ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.//

  எனக்கும் கூடத்தான்.

 9. /பெண்ணின் உணர்வுகளை எப்படி உங்களால் இவ்வளவு அழகாக எழுத முடிகிறது!

  /முழுதாய் படராத இருட்டுபோல
  சில இடங்கள் புரியவேயில்லை./

  ரசித்த வரிகள். வாழ்த்துக்கள்
  //

  நன்றி அனுஜன்யா…🙂

 10. //படித்து முடித்தவுடன் அப்படியே அம்மாவின் காலகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது சேவியர்//

  படைப்பையும், அன்னையையும் ஒரு சேர பெருமைப்படுத்திவிட்டீர்கள் அருணா.

 11. //அறியாப் பருவம் முதல் //புத்தம் புதுத் தாலி.// ஏந்தி வாழ்வின் அடுத்த கட்டமாகிய புக்ககம் போகும் வரை கூடவே வந்த அம்மா…..

  //இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.
  ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.//

  எனக்கும் கூடத்தான்.
  //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம லக்ஷ்மி..

 12. பெண்ணிற்காக பெண் ஏங்கும் ஒரு உன்னதமான உணர்வு… தாய் – மகள் உறவைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

  தெய்வமாய், தந்தையாய், ஆசானாய், தோழனாய், தோழியாய், இப்படி எந்த ஒரு பரிமாணத்திலும் அவளைத்தவிர வேறு யாரால் தங்களை எளிதில் புகுத்திக் கொள்ள முடியும்?

  ***பாரமாய் என் கழுத்தில்
  புத்தம் புதுத் தாலி***

  தாயை பிரியும் அந்த மகளின் அனைத்து சோகங்களையும் இந்த ஒரு வரியில் விளங்க வைத்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது….

  மஹாலக்ஷ்மி

 13. //தாயை பிரியும் அந்த மகளின் அனைத்து சோகங்களையும் இந்த ஒரு வரியில் விளங்க வைத்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது….

  //

  எனக்கு நான்கு உடன் பிறந்த சகோதரிகள் உண்டு. (இணையத்தில் ஏராளம் முகம் தெரியாத சகோதரிகள் உண்டு) . பெண்களின் துயரங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் கொஞ்சம் அறிய முடிந்தது அதனால் தான்.

 14. Pengalukkaaga kanneer sindhum-ungal
  Pennavaukku vazhthukkal…

  vasagargala madhikura unga panpukku nandri Thiru.Xavier avargale…….neenga enga irukeenganu therinjukalaama?

 15. அன்பின் கார்த்திக். வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.

  வாசகர்களை மதிக்கும் பண்பு என்று மகிழ்வூட்டியமைக்கு நன்றி. நான் தற்போது சிங்கார சென்னையில்.

 16. Wonderful!!!!!!!!!!!

  No words to explain my feelings!!!

  Tamil typing theriyadu adanalathan englishel type pannan….

 17. Pingback: கவிதை : புரியவில்லையே அம்மா « SEASONSNIDUR

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s