உன்னத சங்கீதம் (சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய கவிதை)

 

சாலமோன் அரசரின்
ஓர்
சரித்திரப் புகழ் கவிதை
இது.

இதன்
ஒவ்வோர் வரிகளிலும்
காதலின் வாசம்.

( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )

 

1

 

தலைவனே,
உன் இதழ்களுக்குள்
நீர்
இறுக்கி வைத்திருக்கும்
முத்தத்தின் முத்துக்களை
என்
இதழ்கள் மேல்
இறக்கி வைத்து விடுக.

உமது காதல்,
போதையின் படுக்கை,
அது
திராட்சை இரசத்தின்
போதையைக் கடந்தது.

உமது
பரிமள தைலம்
எல்லைகளை வெட்டி
எல்லா இடங்களிலும்
நிறைகிறது.
மென்மையின் மங்கையர்
உன்
காதலுக்காய் காத்திருக்கின்றனர்.

வந்து
என்னைக் கவர்ந்து செல்,
இன்பத்தின் அறைகளை
காதல் ஊற்றி
நிறைத்திடுவோம்.

எருசலேம் மங்கையரே,
நான்
கருப்பு தான்.
ஆனாலும் என்னை
கேதாரின் கூடாரங்களோடும்
சாலமோனின்
எழில் திரைகளோடும் ஒப்பிட்டு
எழுதலாம்.

நான்
மங்கிய நிறம் தங்கிட
மங்கையே,
என் எழிலோ
எல்லையற்றது !

கதிரவன் கருணையின்றி
தன் கதிர்களை,
என் மேல் வீசினான்.
நான்
நிறம் வறண்டு கருப்பானேன்.

என் தமையர்
என்மேல் சினந்து,
தங்கள்
திராட்சைத் தோட்டங்களில்
காவலாளியாய் ஆக்கினர்.
என் தோட்டமோ
கவனிப்பாரின்றிக் கிடக்கிறது.

என் காதலனே,
நீர்
எங்கே ஆடுகளை மேய்க்கிறீர்.
சொல்லும்.
இதோ நான்
வழிதவறிய ஆடாய்
கூடாரம் தேடி கவலைப் பயணம்
தொடர்கிறேனே.

*

என்
சுவாசத்தின் சூட்சுமமே,

மந்தையின்
கால்சுவடுகளை தொடர்ந்து
இடையர்களின்
கூடாரங்களின் அருகே
உன் ஆட்டுக் குட்டிகளை
மேயவிடு.

என் பிரியமே,
நீ,
பாரவோன் மன்னனின்
தேர்ப்படைகளுக்கு நடுவே
உற்சாகமாய் உலவும்
வெண்புரவி.

குழையணிகளால்
உன் கன்னங்களும்,
மணிச்சரங்களாய் கழுத்தும்
எழில்களை ஏராளமாய்
இழுத்து வைத்துள்ளன.

உனக்காய்,
பொன் வளையல்கள் செய்து
அதிலே
வெள்ளி வளையங்கள்
துள்ளி விளையாடச் செய்வேன்.

*

என் காதலர்
வெள்ளைப் போளமாய்
என்
மார்பில் தங்கிடுவார்.

என் காதலர் எனக்கு
மருதோன்றி மலர்கொத்து.
இளைய தளிர்களால்
இதயம் துளிர்க்கவைக்கும்
எங்கேதித் தோட்ட
மருதோன்றி அவர்.

வென்புறாக்களாய்
சிறகடிக்கின்றன
உனது கண்கள்.

நம்
வீட்டின் விட்டங்கள்
கேதுரு மரங்கள்,
மச்சு தேவதாரு கிளைகள்.

*

சரோன் சமவெளிக்
காட்டு மலர் நான்.
பள்ளத்தாக்கின்
லீலிமலர்.

முட்களின் கூட்டத்தில்
மலர்ந்து கிடக்கும்
லீலி மலராய்
என் காதலன்
இதோ
மங்கையர் நடுவே மலர்கிறான்.

அவர் நிழலில் அமர்ந்து
கனிகள் சுவைப்பது
எத்தனை இனிமை !

அவர்
என்னைப் பார்த்த பார்வையில்
காதல் கலந்தே
இருந்தது.

ஆரோக்கிய உணவளித்து
என்னைத் தேற்றுங்கள்
நான்
காதல் நோயால்
பலவீனமாகிப் போனேன்.

இடது கையின் இடையே
எனைத் தாங்கி,
வலக் கரத்தின் விரலால்
எனை
தழுவிக் கொள்வார் அவர்.

எருசலேம் மங்கையரே
கேளுங்கள்.
காதலை தட்டி எழுப்பாதீர்கள்.
அது
தானே விரும்பி விழிக்கும் வரை
அதன்
தூக்கத்தைக் கலைக்காதீர்கள்.

என் காதலர் சொல்கிறார்.

வா அன்பே,
இதோ
கார்காலம் கடந்து விட்டது.
மழை ஓய்ந்த நிலம்
மெல்லிய
ஈரக் காற்றை விரித்து நிற்கிறது.

இலைகளின் இடையே
மெல்லியப் பூக்கள்
மஞ்சம் விட்டு
புரண்டு படுக்கின்றன.

புறாக்களின் மெல்லிய
ஒலி,
இதோ காதுகளை திறந்து
உள்ளே நுழைகிறது.

அத்திப் பழங்கள்
கனிந்து விட்டன,
திராட்சை மலர்கள் மணக்கின்றன.
வா
விரந்தெழு அன்பே.

குன்றின் வெடிப்புகளின்
குடியிருக்கும் என்
வெள்ளைப் புறாவே,
உன் முகத்தை காட்டி விடு.

மெல்ல மெல்ல
உன் குரலை எழுப்பு,
உன் குரலின் இனிமையில்
நான்
என்னை மறக்க வேண்டும்.

என் காதலர்
எனக்குரியவர்.

இந்த பகல்
இரவை உடுத்தும் முன்
வந்து
என்னை நிரப்பிடு காதலனே.
கலை மான் குட்டியாய்
இரவில் திரும்பி வா.

0
2
என் காதலன் இல்லா
இரவுப் படுக்கையில்
தூக்கம் கூட
துணையாய் படுக்கவில்லை.

எழும்பி,
நகரைச் சுற்றி வந்தேன்,
சாமக் காவலை மட்டுமே
சந்தித்து நடந்த நான்,
இறுதியில்
அவரை கண்டேன்.

அவரை
உயிர் நசுங்கும் இறுக்கத்தில்
அணைத்து
வீட்டுக்கு கூட்டி வந்தேன்.

எருசலேம் மங்கையரே,
காதல் தூங்கட்டும்
அது
தானாய் விழிக்கும் வரை
அதை எழுப்பாதீர்கள்.

*

அன்பே,
என்னே உன் அழகு !
இரு வெண் புறாக்களை
இமைக் கூட்டில்
இருக்க விட்டதாய்
உன் கண்கள்.

மலைச்சரிவில் இறங்கும்
வெள்ளாட்டு மந்தையாய்
உன் கூந்தல்.

உன் பற்கள்,
மயிர் கத்தரிப்பதற்காய்
குளித்துக் கரையேறும்
கொழுத்த மந்தை.

செம்பட்டு இழையடி
உன் இரு இதழ்கள்,
பிளந்த மாதுளை
உன்னிளம் கன்னங்கள்,
எழிலின் பேழை உன் வாய்.

தாவீதின் கொத்தளம்
உன் கழுத்து,
வீரர் படைக்கலனாய்
உன் கழுத்தின் ஆபரணம்.

கலைமானின்
இரட்டைக் குட்டிகள்
ஓர்
மலர் தோட்டத்தில் மேய்வதாய்
உன் மார்புகள்.

குறையற்ற,
சிறு
மறு கூட இல்லா மலர் நீ.

*

சிங்கங்களின்
குகைகளில் இருந்தும்,
புலியின் குன்றுகளிலிருந்தும்
நீ
இறங்கி வா.

என்
உள்ளத்தை நீ
கொள்ளையிட்டாய்,
உன் ஒற்றைப் பார்வை
கொத்தியதில்,
உன் ஆரத்து முத்து
அழைத்த அழைப்பில்
நீ
எனை இழுத்தாய்.

மணமகளே,
உன்
இதழ்களில் வழியுது
அமிழ்தம்.

உன் உமிழ்நீர்
பாலும் தேனும் சரிசமமாய்
கலந்தது.

உன் ஆடையின்
நறுமணம்,
லெபனோனின் நறுமணத்தின்
இணையானது.

நீ,
பூட்டி வைத்த ஓர்
தோட்டம்,
முத்திரையிடப்பட்ட
ஓர் கிணறு.

நீ,
ஓர் மாதுளைச் சோலை,
மெல்லிய தளிர்களும்,
மணக்கும் கனிகளும்,
மருதோன்றி, நரத்தமும்
உன் விளைச்சல்கள்.

நீ,
ஓர் அற்புத நீரோடை.
தோட்டங்களின் நீரூற்று.
வற்றாத வசந்தக் கிணறு.

வாடையே
துயில் கலைந்து எழு,
தென்றலே
தலை துவட்டி வா,
என் தோட்டங்களைத் தழுவு.

என் காதலர்
அந்த நறுமணம் கண்டு
என்
தோட்டத்தில் இளைப்பாறி
கனிகளை உண்ணட்டும்.

 
3
 
நான் உறங்கினேன்,
என் காதலர்
கதவைத் தட்டினார்.

வா என் அழகே,
இதோ
இரவுப் பனி என் தலையை
தூறல் விட்டு ஈரமாக்கியது.

என் காதலரைக் காண,
நான் எழுந்தேன்.
கழற்றிய ஆடையை உடுத்து
கழுவிய கால்கள் அழுக்காக
நாம்
ஆயத்தமானேன்.

கதவைத் திறந்தேன்.
மின்னல் வந்து
மீண்டும் மறைந்ததாய்
அங்கே
காதலனைக் காணவில்லை.

அவர்
குரலைத் தொடர்ந்து
என் நெஞ்சம்
கால் வலிக்க ஓடிற்று,
அவர் கால்களைத் தொடர்ந்து
என் குரல்
நாவறள கூவிற்று.

அவரைக் காணோம்,
எருசலேம் மங்கையரே,
அவரைக் கண்டால்
இதோ
காதல் வயப்பட்ட என்
கண்ணீரின் ஈரத்தை அவருக்கு
காட்டுங்கள்.

தோழியர் கேட்டனர்,
உன் காதலருக்கு என்ன மேன்மை.
யாருக்கு இல்லாத
சிறப்பென்ன அவர்க்கு ?

என் காதலர்,
பல்லாயிரம் பேரிலும்
தனித்துச் சுடர்விடும்
அற்புத அழகினர்.

பாலில் குளித்து,
நதிகளின் கரைகளில்
நாட்டியமாடித் திரியும்
இரு புறாக்கள்
அவர் விழிகள்.

கன்னங்களோ,
நறுமண நாற்றங்கால்கள்,
இதழ்கள்
வெள்ளைப் போளம் சொட்டும்
மெல்லிய லீலி மலர்கள்,
கைகள்,
மாணிக்கக் கற்கள் பதித்த
பொன் தண்டுகள்.

வயிறு,
யானைத் தந்த வேலைப்பாடு.
அங்கே
நீலமணிகள் சில
நீந்தி விளையாடும்.

கால்கள்,
தங்கத் தளத்தில் பொருந்திய
இரு
பளிங்குத் தூண்கள்.

அலர் தோற்றம்
லெபனான் போன்றது.
இவரே
என் காதலர்.
சொல்லுங்கள் நீங்கள்
சந்தித்ததுண்டா ?
4
பெண்களின் அழகியே,
எங்கே போனார்
உன் காதலர்.
நாங்கள் தேடவா ?

என் காதலர்,
பூக்களை நேசித்து
லீலிகளை பறிப்பார்,
தம் தோட்டத்தின்
நறுமண நாற்றங்கால்களிடையே
நடை பயில்வார்,

நான்
அவருடைய ஆசனத்தின்
பொக்கி?ம்.

*

அன்பே,
உன் கண்களை
என் விழிகளிலிருந்து விலக்கு.
அவை என்னை
மயக்கிக் கொல்கின்றன.

சரிவில் ஓடும்
வெள்ளாட்டு மந்தையாய்
உன்
முதுகில் சரியுது
கூந்தல் அருவி.

மங்கையர்
அவளை வாழ்த்தினர்.

யாரிவள்.?

வைகறையின்
அழகிய தோற்றம்.

திங்களை ஒத்த
திகட்டாத அழகு.

ஞாயிறைப்போல
அற்புத ஒளி.

யாரிவள் ?

உன்னைக் கண்டபின்
நான்
செய்யும் செயல்களில் எல்லாம்
சந்தோசம் வந்து
ஒட்டிக் கொள்கிறது
ஆனந்தம் என்னை
கட்டிக் கொள்கிறது.

வா,
என் அழகே.
உன்னை மீண்டும் மீண்டும்
என்
உள்ளம் வியக்க பார்க்க வேண்டும்.
5

 காலணி அணிந்த
உன் மலரணிகள்
எத்தனை அழகு !

உன் கால்களின்
வளைவில்
படைத்தவனின் பிரயாசை,
அந்தக்
கலைஞனின் கைவேலை.

லீலிகள் கொண்டு வேலிகள் இட்ட
கோதுமை மணிக்
குவியலாய்
உன் அழகிய வயிறு
போதை ஊற்றித் தருகிறது..

தந்தத்தால் செதுக்கிய
கொத்தளம்
உன் அழகிய கழுத்து.
எ?போனின் ஆழ் குளங்கள்
உன் கண்கள்.
லெனனோன் கோபுரம்
உன் கழுத்து.
அரசனையும் சிறையிடும்
அதிசய கூந்தல் உனது.

பேரீச்சை மரம்போல்
பொலிவாய்
குலைகளோடு வளர்கிறாய்,
என் ஆசைக் கரைகள்
அகலமாகின்றன.

இதழ்களுக்கும்,
பற்களுக்கும் மேலே,
மென்மையாய் இறங்கும்
திராட்சை இரசமாய்
நீ
சிந்தும் முத்தங்கள்
என் சிந்தை உடைக்கின்றன.

*

நான் என்
காதலனின் கைப் பொருள்.
வாரும்,
வைகறை மெல்ல வரும்போது
திராட்சைத் தோட்டத்தில்
போவோம்.

அந்த
துளிர்க்கும் கொடிகளில்,
வெடிக்கும் மொட்டுகளில்,
சிரிக்கும் மரங்களில்
என்
காதல் கொடியும் பூக்கும்.

அங்கே,
என் காதல் மழையை
உம்
கண்கள் முழுதும் பொழிவேன்.

உம் நெஞ்சத்தில்
முத்திரையாய் என்னை
பொறித்திடுக.

அன்பு
சாவைப் போல சக்தியானது.
அன்பு வெறி
பாதாளம் போல
நிரப்ப இயலாத பள்ளம்,
அதன் பொறி
தீராப் பசியின் தீக் கொழுந்து.

பெருங்கடல்
உருண்டு வந்தாலும் அதை
அணைத்தல் இயலாது.

வெள்ளப் பெருக்கின் கால்களும்
அதை
மிதித்து அழிக்க
முடியாது.

விலைமதிப்பில்லா
தோட்டத்தில் வாழ்பவளே,
உன் குரலை
யான் கேட்கலாகாதோ ?

என் காதலரே,
விரைந்து ஓடிடுக.
கலைமான் அல்லது
மரைமான் குட்டிபோல
மலைகளுக்கு ஓடிடுக.

எருசலேம் மங்கையரே,
மீண்டும் மீண்டும்
ஆணையிடுகிறேன்.
தூங்கும் காதலை எழுப்பாதீர்கள்
அது தானாய்
விழிக்கும் வரை துயில விடுங்கள்.

0

12 comments on “உன்னத சங்கீதம் (சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய கவிதை)

 1. வாவ். சூப்பரு.
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

  Like

 2. நண்பர் சேவியருக்கு,

  கவிஞனுடைய கற்பனை மாரத்தான் ஓட்டச் சுற்று பாதை அவனுடைய் வாழ்வியல் சூழ்நிலையையே தான் மையமாகக் கொண்டு வட்டமடிக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் ஒரு ஆதாரப் பூர்வம் கொடுப்பதாகவும் , 3000 ஆண்டுகளுக்கு முன்னால் காதலின் நிலை என்ன? என்று தொல்லியல் ஆராய்ச்சி செய்யும் மனசிற்கு விடை அளிப்பதாகவும் இருந்த படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. தன்னுடைய காதலனை அடையாளம் காண தோழிகளிடம் தலைவி சொல்லும் குறிப்புகள் மிகவும் ரசனையானவை.

  அன்புடன்
  குகன்

  Like

 3. ஒவ்வொரு வரியாக ரசித்து வாசித்தேன்.காதலின் உணர்வுகள் கொட்டிப் பரவிக் கிடக்கிறது.எத்தனை யுகங்கள் மாறினாலும்,மனித இயல்புகள் மாறும்போதும் காதலின் குணம் என்றும் எப்போதும் மாறுவதில்லை என்று சொல்லக்கூடியதாக இருக்கிறது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதையிலிருந்து.
  வியப்பாகவுமிருக்கிறது.காதல் எவ்வளவு அழகாக ரசித்து எழுதப்பட்டிருக்கிறது.

  Like

 4. //கவிஞனுடைய கற்பனை மாரத்தான் ஓட்டச் சுற்று பாதை அவனுடைய் வாழ்வியல் சூழ்நிலையையே தான் மையமாகக் கொண்டு வட்டமடிக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் ஒரு ஆதாரப் பூர்வம் கொடுப்பதாகவும் , 3000 ஆண்டுகளுக்கு முன்னால் காதலின் நிலை என்ன? என்று தொல்லியல் ஆராய்ச்சி செய்யும் மனசிற்கு விடை அளிப்பதாகவும் இருந்த படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. தன்னுடைய காதலனை அடையாளம் காண தோழிகளிடம் தலைவி சொல்லும் குறிப்புகள் மிகவும் ரசனையானவை.//

  நன்றி குகன். வருகைக்கும் உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கும்.

  உண்மை, இதிலுள்ள உவமைகள் பல வியக்க வைத்தன என்னை.

  மலைச்சரிவில் ஓடும் ஆட்டுமந்தையை தோளில் புரண்டோடும் கூந்தலுக்கு ஒப்பிடுவது வியக்க வைக்கிறது இல்லையா ? !

  Like

 5. //காதலின் உணர்வுகள் கொட்டிப் பரவிக் கிடக்கிறது.எத்தனை யுகங்கள் மாறினாலும்,மனித இயல்புகள் மாறும்போதும் காதலின் குணம் என்றும் எப்போதும் மாறுவதில்லை என்று சொல்லக்கூடியதாக இருக்கிறது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதையிலிருந்து.
  வியப்பாகவுமிருக்கிறது.காதல் எவ்வளவு அழகாக ரசித்து எழுதப்பட்டிருக்கிறது.//

  உண்மை… பைபிளில் உள்ள காதல் காவியம் இது. வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றிகள் பல.

  Like

 6. //
  மலைச்சரிவில் இறங்கும்
  வெள்ளாட்டு மந்தையாய்
  உன் கூந்தல்.

  சரிவில் ஓடும்
  வெள்ளாட்டு மந்தையாய்
  உன்
  முதுகில் சரியுது
  கூந்தல் அருவி.//

  ஆமாம் சேவியர் !!!
  நான் பிரம்மித்து சொக்கிப் போன அதே உவமையை நீங்களும் குறிப்பிட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி ! ,
  அதே சமயம் மனம் கொஞ்சம் ஒத்துக் கொள்ள தயங்கியது அந்த உவமையை முதல் முறை படித்த மாத்திரம்!
  காரணம், வெள்ளாட்டு மந்தை என்று சொல்லப்பட்டுள்ளது. கூந்தலின் நிறம் கருப்பு அல்லவா ??
  அந்த இனத்தைச் சார்ந்தவர்களுக்கோ, இல்லை, அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கோ கூந்தல் நிறம் வெள்ளையாய் இருப்பின் இது மிகச் சிறந்த கற்பனையாக ஏற்றுக் கொண்டு முதலிலேயே நான் கூறி இருக்கக் கூடும் என்பது எனது தாழ்மையான கருத்து.அவர்களுடைய வரலாற்றைப் பற்றிய அறிவு எனக்கு இல்லாததால் அழகிய உவமையை ஜீரணிக்க நேரம் எடுத்துக் கொண்டது பகுத்தறிவு.

  இன்னும் பல இடத்தில் மெய் சிலிர்த்தது. அதில் ஒன்றைக் கீழே எடுத்துக் காட்டியுள்ளேன்.

  வயிறு,
  யானைத் தந்த வேலைப்பாடு.
  அங்கே
  நீலமணிகள் சில
  நீந்தி விளையாடும்.

  Like

 7. //அதே சமயம் மனம் கொஞ்சம் ஒத்துக் கொள்ள தயங்கியது அந்த உவமையை முதல் முறை படித்த மாத்திரம்!
  காரணம், வெள்ளாட்டு மந்தை என்று சொல்லப்பட்டுள்ளது. கூந்தலின் நிறம் கருப்பு அல்லவா ??//

  உண்மை ! நான் நினைத்ததையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். 🙂

  இந்த கவிதை கடவுளுக்கும் எருசலேமுக்கும் இடையேயான உவமை உரையாடல் என்று யூதர்களும், கடவுளுக்கும் திருச்சபை (கிறிஸ்தவர்களின் கூட்டம்) க்கும் இடையேயான உவமை உரையாடல் என்று கிறிஸ்தவர்களும் கருதிக் கொள்கின்றனர். எனவே வெறும் காதலன் – காதலி எனுமளவில் இதை அணுகி வாசிக்கும் போது நமக்குப் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

  நன்றி நண்பரே… நிறைய பின்னூட்டங்கள் இட்டு மனதை ஆனந்தத்தில் ஆழ்த்தியமைக்கு 🙂

  Like

 8. நன்றி சேவியர் 🙂
  ஆமாம். நான் காதலன் காதலி என்ற அளவில் தான் பார்த்தேன் 😉
  கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி 🙂

  அன்புடன்
  குகன்

  Like

 9. உன்னதப்பாட்டு நான் பைபிளில்
  மிகவும் விருப்பிப்படிப்பது….
  என்னை கவிதை எழுத வைத்ததும்
  உன்னதப்பாட்டுதான்.. :)))
  மிக அழகு சேவியர்.. !!

  Like

 10. //உன்னதப்பாட்டு நான் பைபிளில்
  மிகவும் விருப்பிப்படிப்பது….
  என்னை கவிதை எழுத வைத்ததும்
  உன்னதப்பாட்டுதான்.. :)))
  //

  நன்றி நவீன். பைபிள் ஒரு இலக்கியம் என்பார் ஜெயகாந்தன்.
  என்னை இயக்கவும், வியக்கவும் வைப்பது பைபிளே. 🙂

  //
  மிக அழகு சேவியர்.. !!
  //

  நன்றி நவீன். உன்னதப்பாட்டை பைபிளில் படித்த உங்கள் பாராட்டு உண்மையில் நிறைவளிக்கிறது. நான் அதன் அழகைக் கெடுத்துவிடவில்லை எனும் நிறைவையும் அளிக்கிறது.

  //

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.