அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்

( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை )

அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு.

காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம்.

ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் அறிவினாலும், ஆற்றலினாலும் பெண்கள் இன்று சமூகத்தில் அங்கீகாரங்களையும், புகழையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர். ஆணும் பெண்ணும் சமமெனும் சொல்லே பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் இல்லை என பறைசாற்றுவதற்காகத் தானோ என எழுச்சியுடன் பெண்கள் கேட்கும் காலம் இது.

ஆனால், பழைய மரபின் தொடர்ச்சியாக இன்றும் பெண்கள் அழகான உடல் வேண்டும், வசீகரிக்கும் முகம் வேண்டும் என அதீத கவலை கொண்டு திரிவது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது. செயற்கை முகப்பூச்சுகளையும், பல்வேறு அழகு சாதனப் பொருட்களையும் கைகளிலும், பைகளிலும் அடக்கி இன்றைய பெண்கள் அலுவலகங்களுக்கு விரைவது தனது இயல்பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது எனலாம்.

உளவியல் ரீதியாக இது பெண்களின் தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடாகவும், தாழ்வு மனப்பான்மையின் தாழ் திறக்கும் சங்கதியாகவும் தெரியும் அதே வேளையில் இது ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் இருக்கிறது என்பது கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.

உலகிலேயே அதிக அளவு அழகுசாதனப் பொருட்களை உபயோகிப்பது பெண்கள் தான் என்பதை பிரிட்டனின் ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் அந்த அழகு சாதனப் பொருட்கள் உண்மையிலேயே அழகைக் கூட்டுகின்றனவா, அவை தேவையானவை தானா என ஆராய்ந்தால் கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

இளமையாகவும், அழகாகவும், வனப்பாகவும் காட்டுவேன் என விளம்பரங்களில் வாக்குறுதி அளிக்கும் அழகு சாதனங்கள் உண்மையில் அழகையும், வனப்பையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்த அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதியல் பொருட்களைப் பார்த்தால் ஆய்வுக் கூடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு அமிலப் பட்டியலாய் அவை அச்சமூட்டுகின்றன.

பெண்களின் அழகுசாதனப் பொருட்கள் பலவற்றிலும் விஷத் தன்மையுள்ள பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதும், இந்த விஷத் தன்மைகள் ஒவ்வாமை முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு விதமான நோய்களைத் தோற்றுவிக்கக் கூடியவை என்பதும், இவை பெண்மையைக் கூட வலுவிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை என்பதுமே இந்த அழகுசாதனப் பொருட்கள் குறித்த உண்மையாகும்.

உணவுப் பொருட்களுக்கு இருக்கக் கூடிய தர நிர்ணய அமைப்புகள் போல அழகு சாதனப் பொருட்கள் விஷயத்தில் அமைப்புகள் முழுமையாக இல்லை. பல மேலை நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்த தர நிர்ணய சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்தகைய அமைப்புகள் உள்ள நாடுகளில் அழகுப் பொருட்கள் குறைந்த பட்ச உத்தரவாதத்தைத் தர முடியும். உதாரணமாக, யூரோப்பியன் யூனியன் காஸ்மெடிக் டைரக்டிவ் ( European Union’s cosmetics directive ) எனும் அமைப்பு 2006ல் ஆரம்பிக்கப்பட்ட பின் யூ.கே வில் அழகு சாதனப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களோ, அமிலங்களோ கலப்பது பெருமளவில் குறைந்துள்ளன.

சமீபத்தில் அமெரிக்காவில் உதட்டுச் சாயங்களில் காணப்படும் விஷத் தன்மையைக் கண்டறிவதற்கான சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிரபலமான உதட்டுச் சாயங்களில் 61 விழுக்காடு விஷத் தன்மை உடையதாக காணப்பட்டன. முப்பது விழுக்காடு உதட்டுச் சாயங்களில் இந்த விஷத் தன்மை அளவுக்கு மிக மிக அதிக அளவில் இருந்ததால் அவற்றைத் தடை செய்திருக்கிறது அமெரிக்க அரசு.

தொடர்ந்து உதட்டுச் சாயம் போடும் பழக்கம் உடைய ஒரு பெண் சுமார் நான்கரை கிலோ எடையளவுக்கு லிப்ஸ்டிக்கை தன்னன அறியாமலே உட்கொள்கிறார் எனவும், இது மனச் சிதைவு, கருச் சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத் தன்மை இழப்பு உட்பட பல்வேறு சிக்கல்களை உருவாக்கக் கூடும் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரிவிக்கிறார்.

மலிவு விலை உதட்டுச் சாயம், கண்களை அழகுபடுத்தும் மை, முகத்தில் பூசப்படும் ரோஸ் பவுடர், நகப் பூச்சு, பாடி ஸ்பிரே, ஹெயர் ஸ்ப்ரே, டியோடரண்ட், வாசனைத் திரவியம், ஷாம்பூ, ஷவர் ஜெல், ஹேண்ட் வாஷ் என எங்கும் அழகுசாதனப் பொருட்களின் சந்தை பரவலாய் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அத்தகைய கட்டுக்கோப்பான தர நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியாது. கூடவே, தரக் கட்டுப்பாட்டைப் பார்த்து அழகுப் பொருட்களை வாங்க வேண்டும் எனும் விழிப்புணர்வே பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே உண்மை.

பாரபீன்ஸ் ( parabens )  மற்றும் பாத்தலேட்ஸ் ( phthalates) போன்ற அமிலங்கள் வாசனைத் திரவியங்களிலும், பாடி ஸ்பிரேக்களிலும் உள்ளன. இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகுந்து ஊறு விளைவிக்கக் கூடியவை. அழகுப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் 20 வயதுமுதல் 40 வயதுக்குள்ளான இன்றைய பெண்களிடம் இந்த பாரபீன்ஸ் மிக அதிக அளவில் இருக்கின்றன. இவை ஹார்மோன்களைச் சேதப்படுத்தும் அச்சுறுத்தலையும் தருகின்றன. இந்த பாரபீன்ஸ் விஷத் தன்மை வாய்ந்தவை என்பதும், மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதும் ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புரோப்பலீன் கிளைகோள் எனப்படும் தோலை சேதப்படுத்தி குருதிக் குழாய்களில் அமிலத்தன்மை கரைக்கும் வேதியல் பொருள் இன்றைய மிகப்பிரபலமான டியோடரண்ட் களில் காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இது மூளை, லிவர், சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்த வல்லது. இந்த விஷத் தன்மை மவுத்வாஷ், மற்றும் பற்பசைகளில் கூட காணப்படுகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

ஸ்வீடன் நாட்டில் தடைசெய்யப்பட்ட பார்மால்டிஹைட் எனப்படும் பொருள் நமக்குக் கிடைக்கும் ஷாம்பூ, ஹேண்ட் வாஷ் போன்ற பொருட்களில் இருக்கின்றது. இவை தலைவலி, அலர்ஜி போன்ற பல உபாதைகளைத் தந்து செல்கிறது. ஷாம்பூ, மற்றும் நுரை தரக்கூடிய பல அழகு சாதனப் பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட், மற்றும் சோடியம் லாரத் சல்பேட் எனும் இரண்டு வேதியல் பொருட்கள் காணப்படுகின்றன. இவை மிக மிக ஆபத்தானவை. குழந்தைகளின் கண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி இவற்றுக்கு உண்டு. இவை தோலினூடாக எளிதில் உடலுக்குள் கடந்து உடலுக்குள் விஷத்தன்மையை இறக்குமதி செய்துவிடுகிறது.

அழகுப் பொருட்களில் எத்தனோலமின் எனும் பொருள் நானோ, டை மற்றும் டிரை  எனும் மூன்று வகையாகக் காணக்கிடைக்கிறது. இவை ஷாம்பூ, ஷவர் ஜெல், சோப், ஃபேஷியல் கிளீனர்ஸ் உட்பட பல்வேறு அழகுப் பொருட்களில் உள்ளன. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது சிறுநீரகப் புற்றுநோய், லிவர் புற்று நோய் உட்பட பல கொடிய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என விளம்பரப்படுத்தப்படும் அழகுப் பொருட்கள் பெரும்பாலானவற்றில் இந்த விஷத்தன்மை உண்டு. அமிலங்களுடன் ஒரு சில இயற்கைப் பொருட்களையும் கலந்து அவற்றை இயற்கைப் பொருள் என விளம்பரப் படுத்துவது விளம்பர உத்தி தவிர வேறில்லை என்பதை விளங்கிக் கொள்ளல் அவசியம்.

ஐசோபுரோபைல் ஆல்கஹால் (Isopropyl Alcohol)  எனும் விஷத்தன்மையுள்ள பொருள் அன்றாடம் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோஷன்(after-shave lotions), ஹெயர் கலர் ரின்சஸ்(hair color rinses), ஹேண்ட் லோஷன்(hand lotions)  உட்பட பல்வேறு அழகு பொருட்களில் கலந்துள்ளது. தலைவலி, வாந்தி, மன அழுத்தம் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு இந்தப் பொருள் காரணமாகிறதாம்.

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணை பெரும்பாலும் மினரல் ஆயில் என்கின்றது புள்ளி விவரம் ஒன்று. இந்த மினரல் எண்ணை உடலின் மேல் ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை ஏற்படுத்தி தோலின் இயல்புத் தன்மையைப் பாதிக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தும் போது உடல் தனது இயல்பான பணிகளைச் செய்ய முடியாமலும், உடலின் நச்சுத் தன்மையை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமலும் சோர்வுறுகிறது.

முகப்பூச்சு பயன்படுத்துவது கூட கெடுதலானது எனவும், குறிப்பாக குழந்தைகள் முகப்பூச்சுத் துகள்களை சுவாசிக்க நேர்வதனால் ஆஸ்த்மா போன்ற பல பிரச்சனைகள் வர காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அழகின் மீது அதீத மோகம் ஏற்படும் போது உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனும் தீவிர உந்துதலும் பெண்களிடம் எழுகிறது. ஊடகங்கள் மிகைப்படுத்தும் அழகும், இளமையுமே உண்மை என நம்பி அதே போல நகலெடுக்க தனது உடலைக் கொடுமைப்படுத்தும் டயட் முறைகள் இன்று உலகெங்கும் பரவியிருக்கின்றன. அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் டாலர்கள் இத்தகைய உடல் குறைப்பு பொருட்களுக்காகச் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இத்தகைய மோகம் அதிகரிக்கும் போது உயிரிழப்புகள் கூட நேரிடுகின்றன. சமீபத்தில் மாஸ்கோவில் 35 வயதான பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக உடலை இளைக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதால் மரணமடைந்திருக்கிறார். உலகெங்கும் அவ்வப்போது நிகழும் இத்தகைய நிகழ்வுகள் மாத்திரைகளினால் அழகைத் தேடுவோருக்கான எச்சரிக்கை மணி எனக் கொள்ளலாம்.

இன்னும் சிலருக்கு ஆடையின் வண்ணத்துக்கு ஏற்ப அழகிய காண்டாக்ட் லென்ஸ் அணிவது ஒரு பிரியமாக இருக்கிறது. இது கண்ணுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் கண் மருத்துவர்கள்.

இன்றைய இளம் பெண்களிடையே தங்கள் கூந்தலை நேராக்க வேண்டும் எனும் மோகமும் மிகுந்து வருகிறது, அந்த முறைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பார்மால்டிஹைட் எனப்படும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இது புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் என உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வோர் செயலும் உடலின் இயல்புக்கு ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க ஒரே வழி அழகுப் பொருட்களின் மீதான அதீத நாட்டத்தைக் குறைப்பதே. ஊடகங்களும், திரைப்படங்களும் மிகைப்படுத்துபவையே அழகெனும் மாயையிலிருந்து இளம் பெண்கள் வெளிவரும்போது தான் ஆரோக்கியமான சூழல் நிலவும் என்பது திண்ணம்.

25 comments on “அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்

 1. //
  ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க ஒரே வழி அழகுப் பொருட்களின் மீதான அதீத நாட்டத்தைக் குறைப்பதே.
  //

  இத போல்ட் பண்ணி போடுங்ணா!

  Like

 2. சேவியர் ,

  நீங்க சொல்றது படி பார்த்தா, நம்ம நடிகைகள் எல்லாம் என்ன பண்ணுவாங்க ?? 😉
  பாவம்,அவங்களுக்கு ஒரு வழியச் சொல்லுங்க! 🙂

  அமைதியான மனதோடு வாழ்ந்தால் இயற்கையாக கிடைத்த அழகு தங்கும் என்ற “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” பழமொழி உண்மையை உணரும் படி மொழிந்து உள்ளீர்கள் !

  Like

 3. மிக உபயோகமான கட்டுரை . இயற்கைப் பொருட்கள் பலவும் இருக்க இந்த இரசாயனக்கலவைகள் கலந்த அழகுப் பொருட்களை உபயொகிப்பது தேவையில்லைதான். ஆனால் இவ்வளவு தூரம் மாறி வந்து விட்ட நம்மை
  பாடிஸ்பிரே மற்றும் ஷாம்போவை விடச்சொன்னால் மாற்றுப்பொருள் ஒன்று வலைத்தளத்திலியே யாராவது சொன்னால் நல்லாயிருக்கும்.
  கூந்தலுக்கு சீகக்காய் மற்றும் உடலுக்கு வாசனைப்பொடி இருப்பது தெரியும் .
  இருந்தும் ………..

  பழமை விரும்பி
  கமலா

  Like

 4. பொதுவாக இயற்கை அழகும் மன அமைதியுமே நிறைந்த அழகைத் தரும்.நல்ல ஆரோக்கியம் தரும் பதிவு.பெண்கள் யாராவது காதில் போட்டுக் கொள்வார்களா?

  Like

 5. ////
  ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க ஒரே வழி அழகுப் பொருட்களின் மீதான அதீத நாட்டத்தைக் குறைப்பதே.
  //

  இத போல்ட் பண்ணி போடுங்ணா
  //

  நன்றி சிவா… அதான் நீங்களே தனியா சொல்லிட்டீங்களே 🙂 நன்றி வருகைக்கு.

  Like

 6. //நீங்க சொல்றது படி பார்த்தா, நம்ம நடிகைகள் எல்லாம் என்ன பண்ணுவாங்க ??
  பாவம்,அவங்களுக்கு ஒரு வழியச் சொல்லுங்க!

  //

  அவங்களுக்கு வேற வழி இல்லைன்னு சொல்லுவாங்க 😀

  Like

 7. /நல்ல விளக்கமான, அவசியமான கட்டுரை//

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முரளி கண்ணன்

  Like

 8. //ஆனால் இவ்வளவு தூரம் மாறி வந்து விட்ட நம்மை
  பாடிஸ்பிரே மற்றும் ஷாம்போவை விடச்சொன்னால் மாற்றுப்பொருள் ஒன்று வலைத்தளத்திலியே யாராவது சொன்னால் நல்லாயிருக்கும்.
  //

  உண்மை தான்.. நான் இதுல ரொம்ப வீக் 😦

  Like

 9. //மிக அவசியமான கட்டுரை. நிச்சயம் பலருக்கும் உதவும்.//

  நன்றி முருகானந்தம்,, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  Like

 10. /பொதுவாக இயற்கை அழகும் மன அமைதியுமே நிறைந்த அழகைத் தரும்.நல்ல ஆரோக்கியம் தரும் பதிவு.பெண்கள் யாராவது காதில் போட்டுக் கொள்வார்களா/

  நன்றி சகோதரி…. இதைப் படித்தவர்கள் அடுத்த முறை அழகுசாதனங்களைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க உதவினால் இந்தக் கட்டுரை தன் பணியைச் செய்தது என்று பொருள் 🙂

  Like

 11. //இன்றைய இளம் பெண்களிடையே தங்கள் கூந்தலை நேராக்க வேண்டும் எனும் மோகமும் மிகுந்து வருகிறது//

  ஆமா… அலைபாய நடந்து போகனுமாம்…

  Like

 12. // இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வோர் செயலும் உடலின் இயல்புக்கு ஊறு விளைவிக்கக் கூடியது//

  ரொம்ப correct நீங்க சொன்னது ( பெண்ணே நீ இதழில் குறிப்பிட்டது) .
  உண்மையாகவே அழகுசாதனப் பொருட்கள் தேவையேயில்லை…
  எல்லாப் பெண்களுமே இயற்கையில் அழகு தான் (ஏதோ ஒரு அழகு எல்லாரிடமும் உண்டு).
  ஆனால்ல்ல்ல்ல்ல் Perfume and Bodyspray இல்லாமல் எப்படி??
  அங்குதான் கொஞ்சம் இடிக்குது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.