கவிதை : ஒரு தங்கை தாயாகிறாள்

 
ஒரு கொத்துக் குளிர்த்தென்றல்
சட்டென்று சறுக்கி வந்து
என்
உயிர் கொத்திச் சென்றதாய் ஓர்
பிரம்மாண்டப் பனிச்சரிவு எனக்குள்.

நினைவுகளும் நினைவுகளும்
நிர்ப்பந்தச் சண்டையிட,
என் கண்களுக்குள்
வானவில் ஒன்று
நிறுத்தாமல் நர்த்தனமிடும் சலங்கைச் சத்தம்.

என் தங்கை
தாயாகப் போகிறாள்.
ஒரு ஜனனச் சன்னல்
இதோ
பூமியின் பூபாளத்துக்காய் திறக்கப் போகிறது.

உற்சாக அலை ஒன்று
உள்ளுக்குள் உருள்கிறது.
அது
துள்ளும் கடலலையை எல்லாம்
உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொள்ளச் சொல்கிறது.

விரலிடுக்கில் விண்மீன் பறித்து
அதை
மின்மினிக்குப் பரிசளிக்கச் சொல்கிறது.

தோட்டத்தில்
தானியங்களை விலக்கிவிட்டு
வெள்ளைப்பூக்களும்
வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே
வளர்க்கச் சொல்கிறது.

பீலி பெய் சாகாடும் நிலை எனக்கு.
என் இதயக் குமிழுக்குள்
இத்தனை ஆனந்தத்தை
இறுக்கித் திணிக்க முடியவில்லை.

என் விரல் பிடித்து நடக்க
ஓர்
மழலை ரோஜா மலரப்போகிறது.

என் மொத்த மகிழ்ச்சிக் கொடிகளும்
ஒற்றைப்புள்ளியில்
ஓர் ஜீவ முடிச்சிடப் போகிறது.

ஒரு
பச்சைப்பிள்ளையின் முதல் சத்தத்துக்கு
ஓர் புதுத் தாயின் முதல் முத்தம்
புன்னகைப் பரிசாய் விழப் போகிறது.

பிரிய தங்கையே.,
நேற்றுவரை உன்னை பூவாய்த் தான் பார்த்தேன்.
நீ செடியான சேதியே
இன்றுதான் எனக்குள்
ஓர் சங்கீதமாய் விழுகிறது.

கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
வேர்களுக்குள் விழா நடக்குமென்று
இன்று தான்
விளங்கிக் கொண்டேன்.

9 comments on “கவிதை : ஒரு தங்கை தாயாகிறாள்

  1. //நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த புது மிதிவண்டியை அப்பா வாங்கிக் கொடுத்தவுடன் , சிறுவனுடைய மனசு வரையறுக்க முடியா வானம் முட்டும் துள்ளல் ஆட்டம் போடுமோ , அந்த மனநிலை உங்களுக்கு தங்கை தாயாகும் சேதி கேட்ட மாத்திரம்.//

    மீண்டும் வியக்க வைக்கிறீர்கள். 🙂 சட்டென முளை விடும் ஆனந்தத்தை இதை விட பளிச்சென சொல்ல முடியாது 😀

    //தன்னுடைய மாணவன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு
    வாங்கியவுடன் , அவனுக்கு பாடம் நடத்திய தமிழாசிரியர் கண்களில் உண்டாகும் பெருமிதம் , தன் தங்கை தாயானதும் உங்கள் கண்களிலும் உண்டாகியுள்ளது.அதற்கு சாட்சி சொல்லும் கற்கண்டு வேதமாய் பின் வரும் வரிகள்.//

    தமிழையும், தமிழாசிரியரையும் நினைத்துப் பார்த்து சிலிர்க்க வைக்கிறீர்கள். பொதுவாகவே ஈன்ற பொழுதில் … என்று தான் சொல்லுவார்கள். நீங்கள் இதிலும் வித்தியாசம் 🙂

    //

    நேரடியாக வெளிப்படையாய்ச் சொல்லுவதானால் ,”என்ன செய்யப் போகிறாய்” நெடுங்கவிதை , இது போன்ற பல கவிதைகளைப் படிக்கும் போது உங்களை கட்டியணைத்து அழ வேண்டும் என்ற உணர்வே ஏற்படுகிறது.

    //

    இப்படி ஒரு நெகிழ்ச்சியான நேசத்துக்காகவே என் இறுதி நாள் வரை எழுதி மடிய ஆசைப்படுகிறேன்.

    //அபாரமான படைப்பு,சேவியர் !!!!!!!
    வாழ்த்துக்கள் !!!!!!!!!

    நட்புடன்
    குகன்
    //

    உங்கள் அன்புக்கும், நட்புக்கும், ஊக்கத்துக்கும் நன்றிகள் கோடி.

    Like

  2. அன்புள்ள சேவியருக்கு,

    நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த புது மிதிவண்டியை அப்பா வாங்கிக் கொடுத்தவுடன் , சிறுவனுடைய மனசு வரையறுக்க முடியா வானம் முட்டும் துள்ளல் ஆட்டம் போடுமோ , அந்த மனநிலை உங்களுக்கு தங்கை தாயாகும் சேதி கேட்ட மாத்திரம். நீங்கள் மிகப் பெரிய கவிஞராய் இருப்பதால் வரையறுப்பது உங்களுக்கு வசப்பட்டு போனது.

    //
    உற்சாக அலை ஒன்று
    உள்ளுக்குள் உருள்கிறது.
    அது
    துள்ளும் கடலலையை எல்லாம்
    உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொள்ளச் சொல்கிறது.

    விரலிடுக்கில் விண்மீன் பறித்து
    அதை
    மின்மினிக்குப் பரிசளிக்கச் சொல்கிறது.

    தோட்டத்தில்
    தானியங்களை விலக்கிவிட்டு
    வெள்ளைப்பூக்களும்
    வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே
    வளர்க்கச் சொல்கிறது.

    பீலி பெய் சாகாடும் நிலை எனக்கு.
    என் இதயக் குமிழுக்குள்
    இத்தனை ஆனந்தத்தை
    இறுக்கித் திணிக்க முடியவில்லை.
    //

    தன்னுடைய மாணவன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு
    வாங்கியவுடன் , அவனுக்கு பாடம் நடத்திய தமிழாசிரியர் கண்களில் உண்டாகும் பெருமிதம் , தன் தங்கை தாயானதும் உங்கள் கண்களிலும் உண்டாகியுள்ளது.அதற்கு சாட்சி சொல்லும் கற்கண்டு வேதமாய் பின் வரும் வரிகள்.

    //
    கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
    வேர்களுக்குள் விழா நடக்குமென்று
    இன்று தான்
    விளங்கிக் கொண்டேன்.//

    நேரடியாக வெளிப்படையாய்ச் சொல்லுவதானால் ,”என்ன செய்யப் போகிறாய்” நெடுங்கவிதை , இது போன்ற பல கவிதைகளைப் படிக்கும் போது உங்களை கட்டியணைத்து அழ வேண்டும் என்ற உணர்வே ஏற்படுகிறது.

    அபாரமான படைப்பு,சேவியர் !!!!!!!
    வாழ்த்துக்கள் !!!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  3. ////கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
    வேர்களுக்குள் விழா நடக்குமென்று
    இன்று தான்
    விளங்கிக் கொண்டேன்.//
    வார்த்தை விளையாட்டு உங்களுக்குப் புதிதல்ல……ஆனாலும் இது மிகப் புதிது..
    //

    மிகவும் ஆனந்தமாய் இருக்கிறது. நன்றி வருகைக்கும், உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கும்.

    Like

  4. //வாவ்….இவ்வளவு சந்தோஷமா!இப்படி ஒரு அண்ணா இருக்க உங்கள் தங்கை கொடுத்து வைத்தவர் அண்ணா.சந்தோஷம் ஆறாய் ஓடுகிற மாதிரி எப்பவும் போல சந்தோஷக்கவிதை.என் வாழ்த்துக்களும் உங்கள் தங்கச்சிக்கு.//

    நன்றி தங்கையே 🙂

    Like

  5. //வாவ்….இவ்வளவு சந்தோஷமா!இப்படி ஒரு அண்ணா இருக்க உங்கள் தங்கை கொடுத்து வைத்தவர் அண்ணா//

    ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் ஹேமா…
    அன்புடன் அருணா

    Like

  6. //கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
    வேர்களுக்குள் விழா நடக்குமென்று
    இன்று தான்
    விளங்கிக் கொண்டேன்.//
    வார்த்தை விளையாட்டு உங்களுக்குப் புதிதல்ல……ஆனாலும் இது மிகப் புதிது..
    அன்புடன் அருணா

    Like

  7. வாவ்….இவ்வளவு சந்தோஷமா!இப்படி ஒரு அண்ணா இருக்க உங்கள் தங்கை கொடுத்து வைத்தவர் அண்ணா.சந்தோஷம் ஆறாய் ஓடுகிற மாதிரி எப்பவும் போல சந்தோஷக்கவிதை.என் வாழ்த்துக்களும் உங்கள் தங்கச்சிக்கு.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.