சிறுகதை : கொல்லன்

“ அப்பா…. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்… டொங்ங்.. ன்னு
கேட்டுக்கிட்டே இருக்கு. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ?” கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா.

அபினயா, பரந்தாமனின் செல்ல மகள். ஒரே மகள், லண்டனில் போய்ப் படித்து விட்டு
இப்போது தான் தந்தையின் கிராமத்துக்கு வருகிறாள். பரந்தாமனுக்கு கிராமத்தில் ஏகப்பட்ட சொத்து. வயல், தென்னந்தோப்பு என அந்தப் பரக்குன்று கிராமத்தின் பத்தில் ஒரு பங்கு அவருடையது தான்.

அந்த கிராமத்திலிருந்து வெளிநாட்டில் போய்ப் படித்த ஒரே நபர் அபினயா. அந்த பெருமை எப்போதும் பரந்தாமனின் பேச்சுக்களில் தெறிக்கும். ஒரே மகள் என்பதால் அவளுக்கு சாப்பாட்டை விட அதிகமாய் செல்லத்தைத் தான் ஊட்டி வளர்த்தார்.

மகளை மெதுவாய்ப் பார்த்தார் பரந்தாமன், அது பக்கத்து ஆலைல கொல்லன் இரும்படிக்கிற சத்தம்மா. உனக்குத்தான் இந்த கிராமத்தோட தொடர்பு விட்டுப்போயி வருசக் கணக்காச்சு. காலேஜ், மேல்படிப்புண்ணு கிராமத்தை விட்டுப்போயி ரொம்ப நாளாச்சு. காலம் காலமா இவன் இந்த இடத்துல தான் கொல்லப்பட்டறை வெச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கான், நாம தான் இங்கே புதுசா பங்களா கட்டி இருக்கோம். இந்த சத்தம் எல்லாம் கொஞ்ச நாள்ல பழகிடும் பேசாம போய்ப் படுத்துக்கோ. எனக்கும் முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது. இப்போ பழகிடுச்சு. சிறி சிரிப்புடன் மகளைச் சமாதானப்படுத்தும் குரலில் சொன்னார் பரந்தாமன்.

“என்னால முடியாதுப்பா. யாரோ உச்சந்தலைல ஓங்கி அடிக்கிற மாதிரி சத்தம் வருது….”- பாருங்க நைட் மணி பன்னிரண்டாகப் போகுது இன்னும் அவன் அடிக்கிறதை நிறுத்தல.. எப்படி தூக்கம் வரும். பிளீஸ்ப்பா நான் இங்க இருக்கப்போற பத்து நாளா வது இந்த சத்தத்தை நிறுத்துங்க சொல்லிவிட்டு மாடிப்படியேறி படுக்கைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள் அபினயா.

பால்க்கனிக்குச் சென்று வெளியே எட்டிப்பார்த்தார் பரந்தாமன். வெளியே கொஞ்சம் தூரத்தில் அந்த குடிசை. மெலிதான நிலவின் வெளிச்சம் கிராமத்தை போர்த்தியிருக்க அந்த குடிசை மட்டும் நெருப்புகளோடு விழித்துக் கிடந்தது. இன்னும் இரும்படித்துக் கொண்டிருந்தான் அவன்.

புறம்போக்கு நிலத்தில் இருந்த அவனுடைய குடிசைக்கு பின்னால் ஒரு பெரிய சானல். வீட்டிலிருந்து வழுக்கினால் முதுகு ஒடியும் பள்ளத்தில் விழவேண்டியது தான். வீட்டின் பின்புறமாய் சில பனை மரங்கள். ஓலைக்குடிசை ஆங்காங்கே கோணிப்பைகளால் ஒட்டுப் போடப்பட்டிருந்தது.

அவன் பெயரை எல்லோரும் மறந்திருப்பார்கள். பரந்தாமனுக்கும் அவன் பெயர் என்னவென்று நினைவுக்கு வரவில்லை. கொல்லன் என்றால் தான் கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும். பரம்பரை பரம்பரையாய் இரும்படிப்பது தான் அவர்களது தொழில்.

கொல்லப்பட்டறை என்றால் ஒரு தீக்குழி, அந்த தீக்குழிக்கு காற்றை அனுப்பிக்கொண்டிருக்க ஒரு பெரிய தோல்ப்பை. அந்த தோல்ப்பையின் ஒரு முனையில் கயிறு கட்டி மேலே தொங்க விடப்பட்டிருக்கும், அதன் மறு முனை ஒரு குழலோடு இணைக்கப்பட்டு தீக்குழிக்குள் சொருகப்பட்டிருக்கும்.

விறகுக்கரி சேகரித்து அந்த தீக்குழியில் இட்டு, தீயைப்பற்ற வைத்து, அந்த கயிற்றைப்பிடித்து மெதுவாய் இழுத்தால் காற்று குழாய் வழியாகச் சென்று தீ கெடாமல் பார்த்துக் கொள்ளும்.

அந்த கயிற்றைப்பிடித்து இழுப்பதற்காகவே ஒரு கருங்கல் போடப்பட்டிருக்கிறது. அதில் உட்கார்ந்திருப்பாள் செல்லாயி, கொல்லனின் மனைவி. ஏதேனும் ஒரு இரும்புத் துண்டையோ, உருக்குத் துண்டையோ கொண்டு வந்து கொடுத்து கத்தி, மண்வெட்டி, வயல் அறுக்கும் அறுப்பத்தி போன்றவை செய்யச் சொல்வார்கள். கொல்லனும் அந்த இரும்புத்துண்டை தீக்குழிக்குள் இட்டு, அந்த இரும்பு பழுக்க ஆரம்பித்தபின் இடுக்கியால் அதை எடுத்து அருகிலிருக்கும் தண்ணீர் பானைக்குள் நுழைப்பான்.

தீ பெரும்பாம்பின் மூச்சுக் காற்றைப் போல சத்தமிடும், மீண்டும் நெருப்பு, மீண்டும் நீர். அவனுக்குத் தெரியும் எப்போது நீரின் இடவேண்டும், எப்போது இரும்பின் மீது இரும்பை வைத்து இரும்பால் அடிக்கவேண்டும் என்பது. அவன் அதில் ஒரு கலைஞன்.

அவனுடைய சுத்தியல் அசுரவேகத்தில் பழுத்த இரும்பின் மீது இறங்கும்போது அவனுக்குள்ளிருந்து ஹ் ஹே…. என வெளியேறும் மூச்சு மீண்டும் சுத்தியலை தூக்கும் போது தான் திரும்ப நுழையும்

வயலில் அறுவடை ஆரம்பித்தால் கதிரறுக்கும் பெண்களும், ஆண்களும் அவனிடம் வருவார்கள். இந்த அறுவடைக்குத் தேவையான் அறுப்பத்தி செய்வதைத் தவிர்த்துப் பார்த்தால், உலக்கைக்கு போடும் வளையம் செய்வதும், மண்வெட்டி கழன்று விட்டால் அதை இரும்புக் கம்பி போட்டு முறுக்கிக் கொடுப்பதும், பனையேறிகளின் பாளை அறுப்பத்தியை பருவம் வைத்துக் கொடுப்பதும் தான் அவனுக்கு வரும் பெரும்பாலான பணிகள்.

இதில் வருமானம் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியாய் ஒன்றுமே இருக்காது. நாள் முழுவதும் இருந்து சுத்தியல் அடித்தால் ஒரு வெட்டு கத்தியோ, சின்னதாய் இரண்டு அறுப்பத்திகளோ தான் செய்ய முடியும். அதில் கிடைக்கும் சில்லறைப் பணத்தில் ஏதேனும் வாங்கி சாப்பிட்டு, இரண்டு ரூபாய்க்கு மாடசாமியின் வயலோரத்துச் சாராயக்கடையில் ஒரு கிளாஸ் சாராயத்தை அடித்து விட்டு வந்து படுத்தால் விடியும் வரை களைப்பு தெரியாது. இல்லையேல் கையும் முதுகும் கழன்று விழுவதாய்த் தோன்றும்.

அவனுக்கென்று யாரும் கிடையாது, செல்லாயியைத் தவிர. யாரும் அவனை நண்பர்களாகவோ, தெரிந்தவனாகவோ பார்ப்பதில்லை, காரணம் அவனுடைய ஏழ்மையும், அவனுடைய வேலையும்.

எங்கேனும் திருமணம் நடந்தால் இரவில் போவான், மிச்சம் மீதி சாப்பிடுவதற்கும், கல்யாண சாப்பாட்டுக்காய் அடுப்பு மூட்டிய இடத்திலிருந்து விறகுக்கரியைப் பொறுக்குவதற்கும். அந்த விறகுக் கரியைக் கொடுப்பதற்குக் கூட அவனிடமிருந்து காசு வாங்குபவர்கள் அந்த ஊரில் உண்டு.

பரந்தாமன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மகளின் தூக்கம் அவருக்கு முக்கியமாய்ப் பட்டது. மாடிப்படி இறங்கி கொல்லனின் குடிசை நோக்கி நடந்தார்.

தன்னை நெருங்கி வரும் பரந்தாமனை கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான் கொல்லன். இந்த நேரத்துக்கு யார் வருகிறார்கள் ? கையிலிருந்த சுத்தியலை மண்ணில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தான். பரந்தாமன் நெருங்கி வர வர, கொல்லன் மரியாதை காட்டி எழுந்தான்.

‘வாங்க சாமி, என்ன நட்ட ராத்திரில வாரீங்க ? என்னாங்கிலும் வேணுமே ?’ மெதுவாகக் கேட்டான் கொல்லன்.

‘இல்லப்பா… தூக்கம் வரல.. என்ன நீ இன்னும் தூங்கலயா ? மணி பன்னிரண்டாகுது ?’ கேட்டார் பரந்தாமன்.

“அப்பிடியில்ல ஏமானே, ஒறக்கம் வரத்தேன் செய்யுது… ஆனா நாளை நம்ம கொற்கைக்க வயலு அறுப்பாம். நாலு அறுப்பத்தி வேணும்ன்னு சொல்லியோண்டு போனாரு. அறுப்பு நிக்கருது இல்லியா.. அதான் கொறச்சு கஸ்டம் பாக்காத அறுப்பத்தி செய்தோண்டு இருக்குதேன். ‘ கொல்லன் சொன்னான்.

“செய்து முடிஞ்சிச்சுட்டியா ?” பரந்தாமன் மெதுவாய்க் கேட்டார்.

“ இன்னும் தீந்தூல்ல… அடுத்த வாரம் நிறைய வயலு அறுப்பு வருதில்லியா ? அதுகொண்டு நிறைய அறுப்பத்தி செய்ய வேண்டியிருக்கு. தங்கையன், செல்லக்கண்ணு, பொன்னையன் எல்லாருக்க வீட்டு வயலும் இப்போ தான் அறுப்பாம். செய்து குடுக்கிலாண்ணு செல்லி பைசா வேண்டியாச்சு. இன்னி சமயத்துக்கு செய்து குடுக்காத இருக்க பற்றாது. அதான் கஸ்டம் பாக்காத ராத்திரி வேலை செய்யுதேன். நமக்கென்ன மைரு, நாலு நாளு ஒறங்க பற்றாது அம்மட்டும் தேன். மற்றபடி இப்போ தான் கொறச்சு பைச வாற சமயம். அறுக்காறாவும்போ ஒறங்கல்லே. ன்னு மலையாளத்துல ஒரு பழஞ்சொல்லும் உண்டு“ கொல்லன் வெகு இயல்பாய் சிரித்துக் கொண்டே பேசினான்.

பரந்தாமன் அவஸ்தையாய் சிரித்தார். கொல்லன் தொடர்ந்தான்.

“ இப்போ எல்லாம் நிறைய வேலை வாறதில்ல. எங்க அப்பனுக்க காலத்துல, கலப்பையும், தண்ணி புடிக்கிற காக்கோட்டையும், மண்வெட்டி, பிக்காசு எல்லாமே அவரு தான் செய்யுவாரு. இப்போ என்ன வேணுங்கிலும் களியக்காவிளை சந்தைல போனா மதி. போனோமா பைசா குடுத்து வாங்கினோமான்னு ஆச்சு. பட்டறைல வந்து செய்யோக்கு ஆளு கொறவு தேன். மண்ணு வெட்டுக்கு போறவியளுக்க நம்மாட்டி (மண்வெட்டி) கீறிப் போச்சுண்ணா வருவினும் நான் அடைச்சு குடுப்பேன். மரம் வெட்ட போறவியளுக்க கோடாலி ஆப்பு களந்து போனா வருவினும், செரியாக்கி குடுப்பேன். அத்தறதேன். அது போயிற்று எனக்கு வாற வேலை எல்லாம் அறுப்பத்தி, கத்தி, வெட்டோத்தி அம்மட்டும் தேன் “

கொல்லன் சொல்லிக் கொண்டே அமர்ந்தான். பரந்தாமனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மெதுவாய் திரும்பி நடக்கலாமா என யோசித்தார்.

“ நான் பாட்டுக்கு என்னன்னவோ பேசியோண்டே போறேன். நீங்க வந்த விசயம் செல்லுங்க. என்னாங்கிலும் செய்யணுமா ?” கேள்வியாய் பார்த்தான் கொல்லன்.

இ… இல்ல… ஒண்ணுமில்ல….. பரந்தாமன் இழுத்தார்.

“ இல்லேண்ணு சென்னாலே ஏதோ உண்டுண்ணு தேன் அர்த்தம். செல்லுங்க. ஒறக்கம் வரூல்லியா ? “ கொல்லன் கேட்டபடியே தரையிலிருந்த சுத்தியலை எடுத்து அதில் ஒட்டியிருந்த சிறு சிறு மண் துகள்களைத் துடைத்தான்.

“வேற ஒண்ணும் இல்லை. என் பொண்ணு லீவுக்காக வந்திருக்கா. அவளுக்கு இந்த இரும்படிக்கிற சத்தம் தொந்தரவா இருக்காம். தலை வலிக்குதாம். தூங்க முடியாம கஸ்டப் படறா. சரி வேலை முடிஞ்சுதான்னு கேட்டுப் போகலாமேன்னு வந்தேன்” பரந்தாமன் மெதுவாய் சொன்னார்.

“ அய்யோ அப்பிடியா ? அதை ஆத்தியமே செல்லியிருக்கலாமே. செரி.. செரி… பிள்ள ஒறங்கட்டு. வெளி நாட்டில எல்லாம் படிச்சோண்டு வந்த பிள்ள இல்லியா. நான் நிறுத்துதேன். மிச்சத்தை மைரு நாளைக்கு பாத்துக்கலாம்.” சொல்லிக் கொண்டே சுத்தியலை ஓரமாய் வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து தீ மேல் தெளித்து அணைத்தான் கொல்லன்.

சொல்ல வந்ததன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தனது வேலையை விடப் பெரிதாய் தன் மகளின் தூக்கத்தை கொல்லன் முக்கியமாய்ப் பார்த்தது பரந்தாமனை உறுத்தியது. கொல்லனோ வெகு இயல்பாய், கூரையில் சொருகியிருந்த கோணிப்பையை எடுத்து உதறினான். அதுதான் அவனுடைய படுக்கை.

பரந்தாமனுக்கு மனசு பாரமானது போல் தோன்றியது. ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தார். வீட்டில் வந்த பின்பும் நினைவுகள் கொல்லனைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. பாவம் எப்படிப்பட்ட வேலை இது. இது வரைக்கும் அவனுடைய குடிசைக்கு இவ்வளவு அருகில் சென்று பார்த்ததில்லை. எப்படித்தான் அந்த குடிசைக்குள் வெந்து தணியும் காற்றோடு குடும்பம் நடத்துகின்றார்களோ ?

வீட்டில் ஒரு நாள் ஏசி வேலை செய்யாவிட்டாலோ, குறைந்தபட்சம் மின்விசிறி சுழலாவிட்டாலோ தூக்கம் போய் விடுகிறது. அவனுக்கோ வீட்டில் மின்சாரம் என்பதே இல்லை. கூடவே தரையில் சூரியனாய் எப்போதும் தீ வேறு.

கொறித்தபடியோ, காபி குடித்தபடியோ தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து கூடவே போரடிக்கிறது என புலம்பும் எனது வாழ்வுக்கும், நள்ளிரவு வரை இரும்படிக்கும் அவனது வாழ்வுக்குமிடையே தான் எத்தனை பெரிய பள்ளம்.

எப்போதாவது ஒரு சுவையான முழுச்சாப்பாடு கொல்லன் சாப்பிட்டிருப்பானா என்பதே சந்தேகம் தான். ஐந்துக்கும் பத்துக்கும் அவனுடைய உடம்பு எப்படி உழைக்க வேண்டி இருக்கிறது ? யோசனை செய்தபடியே மாடிப்படி யேறி அபினயா வின் அறையை அடைந்தார். உள்ளே மகள் மெத்தையில் புதைந்து தூங்கிக்கிடந்தாள். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே பரந்தாமன் தன்னுடைய அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார். இரவு மெல்ல மெல்ல இழுக்க அப்படியே தூங்கிப்போனார்.

மறுநாள் காலை.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

பால்கனியில் நின்று காப்பி குடித்தபடியே கிராமத்தை அளந்து கொண்டிருந்தாள் அபினயா.

இன்று ஏதோ ஒன்று வித்தியாசமாய் உறுத்தியது அவளுக்கு.

எது ? என்ன வித்தியாசம். சிந்தனைகளை ஒவ்வொன்றாய் புரட்டிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென பிடிபட்டது ! சத்தம் !!! இரும்படிக்கும் சத்தம். !!!

எங்கே போயிற்று அந்த இரும்படிக்கும் ஓசை ? நேற்றைக்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரமாய் அடித்த ஓசை இன்றைக்கு எப்படி தொலைந்து போனது ? யோசனையோடு கீழே இறங்கி வந்தாள் அபினயா..

“ அப்பா… அப்பா..”

“என்னம்மா ?”

“என்னப்பா.,.. இன்னிக்கு அந்த கொல்லன் இரும்படிக்கிற வேலையை இன்னும் ஆரம்பிக்கலையா ? ஒரே நிசப்தமா இருக்கு ? “ அபினயா கண்களை விரித்தபடியே கேட்டாள்.

பரந்தாமன் அபினயத்துடன் பேசும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் சிறு புன்னகையுடன். அவருக்குள்ளும் அப்போது தான் அந்த வித்தியாசம் உறைத்தது.

“ அந்த சத்தம் இல்லேன்னா எப்படி அமைதியா இருக்கு பாத்தீங்களா ?
அது ஒரு பெரிய டார்ச்சர் சத்தம்பா. நீங்க எல்லாம் எப்படித் தான் இந்த சத்தத்தை சகிச்சுக்கறீங்களோ “ சலித்துக் கொண்டாள் அபினயா.

பரந்தாமன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.
பொதுவாகவே காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடுவானே. இன்று என்னவாயிற்று அவனுக்கு ? நிறைய வேலை இருக்கிறது என்று வேறு சொன்னானே ? ஒருவேளை நேற்று நான் சொன்னதால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் இருக்கிறானோ ? கேள்விகள் மனதில் வரிசை வரிசையாய் எழ எழுந்து வெளியே சென்றார் பரந்தாமன்.

குடிசை வாசலில் செல்லாயி நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா… கொல்லன் எங்கே ? வேலை இருக்குன்னு சொன்னான். ஆளையே காணோம் ? “ கேட்டபடி அவளை நெருங்கினார் பரந்தாமன்.

செல்லாயின் கண்கள் அழுதன…

“என்ன சொல்லோக்கு ஏமானே. யாரோ தொட்டி பய ரெயில் ஸ்டேசன்ல அடுக்கி வெச்சிருந்த பாள(தண்டவாள) கம்பியை மோட்டிச்சோண்டு போனானாம். வெளுக்கோக்கு மின்னே போலீசு வந்து இவரு தான் எல்லாத்தையும் மோட்டிச்சோண்டு போனதா கள்ளக் கேசு போட்டு கூட்டியோண்டு போச்சினும். எங்கே என்ன கம்பி காணாத போனாலும் இவரை தேன் பிடிச்சோண்டு போவினும். கேக்கோக்கு ஆளில்லாதது நம்மம் தானே. எப்போ வருவாரோ. அறுப்புக்கு அறுப்பத்தி கேட்டு ஆளுவளும் வருவினும். என்ன செய்யோகின்னு மனசிலாவூல்லே” சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் செல்லாயி.

பரந்தாமனுக்கு பக் கென்று இருந்தது. இரயில்வே தண்டவாளக் கம்பிகளை இவன் திருடியதாய் இழுத்துச் சென்றிருக்கின்றனர். கொல்லப் பட்டறை வைத்திருப்பதால் கத்திகள் செய்வதற்காகத அவற்றைத் திருடியிருப்பான் என போலீஸ் சந்தேகிக்கிறதா ? இல்லை வேறு ஆள் கிடைக்காததால் இந்த அப்பாவியை இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்களா ? பரந்தாமனுக்குள் கேள்விகள் வரிசையாய் எழுந்தன.

“ கவலைப்படாதே. நான் போய் என்னன்னு பாக்கறேன். ஸ்டேஷன்ல போய் அவனை கூட்டிட்டு வரேன் “ சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

இதுவரை கொல்லனின் வீட்டில் என்ன நடக்கிறது என்று பரந்தாமன் சட்டை செய்ததே இல்லை. ஆனால் இன்று அவனுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் மனதில் ஆணி அடித்தது போல நிலைத்தது. என்னவாயிற்று ? எதையும் நெருங்கிப் பார்க்கும் வரை ஒரு அன்னியத் தன்மை மனதில் இருக்கும் என்பது பரந்தாமனுக்குப் புரிந்தது.

நெருங்க நெருங்கத் தான் தெரிகிறது ஒவ்வோர் தனி மனிதனுடைய வாழ்விலும் நிகழும் சோகமும், எதிர்பார்ப்பும், வலியும். பரந்தாமனின் மனசுக்குள் பாரம் பாறாங்கல்லாய் வந்து அமர்ந்தது. கொக்கியில் மாட்டியிருந்த ஒரு சட்டையை எடுத்து போட்டுக்கொண்டே கார் ஷெட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

“ அப்பா . காலைல எங்கேப்பா கிளம்பிட்டீங்க ? நானும் வரேன்” பின்னாலிருந்து அபினயாவின் குரல் ஒலித்தது.

“ இல்லேம்மா. நம்ம கொல்லனை போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களாம், நான் போய் என்னன்னு விசாரிச்சுப் பார்த்து அவனை கூட்டிட்டு வரேன், “ என்று சொன்ன பரந்தாமனை புரியாமல் பார்த்தாள் அபினயா.

“நம்ம கொல்லன்” என பரந்தாமன் சொன்ன வார்த்தைகள் அபினயாவுக்குள் குழப்பத்தையும், சிரிப்பையும், புரியாமையையும் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது அவளது பார்வையிலேயே தெரிந்தது.

பரந்தாமனின் கார் காம்பவுண்ட் கேட்டைக் கடந்து ஊர் சாலையில் வந்து, காவல் நிலையத்தை நோக்கி நகர்ந்தது.

காரின் சன்னல் வழியாக வெளியே பார்த்தார் பரந்தாமன்.

“ டொங்.. டொங்… டொக்….” வலுவில்லாமல் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

கொல்லப்பட்டறையில் செல்லாயி உட்கார்ந்து இரும்படித்துக் கொண்டிருந்தாள்.

33 comments on “சிறுகதை : கொல்லன்

  1. கதை அருமை சேவியர். சிறு கதைக்கான இலக்கனத்துடன் இருக்கிறது.

    Like

  2. //இந்த கதய 1970 ல எழூதி இருந்தா ரெம்ப நல்லா இருந்திருக்கும்….//

    என்ன பண்ண நான் அப்போ பொறக்கவே இல்லையே 😦

    Like

  3. ஒரு கதைக்குள் மூன்று உலகத்தை ஒளித்துவைத்திருக்கிறீர்கள்.
    வானுயர கோபுரங்கள் வந்தாலும் ஏழையின் கூன் முதுகு மட்டும் இன்னும் உயரவேயில்லை/

    மிக்க நன்றி செல்வம். கதையை ஆழமாய் படித்தமைக்கு !

    Like

  4. //
    touching.. Mostly real scenerio in various places around the country. Hope all of us who are affected by this story will try to do our bit when we come across such struggle for survival.
    //

    உங்கள் மனதுக்கு நன்றிகள் ஜெயலக்ஷ்மி

    Like

  5. இந்த கதய 1970 ல எழூதி இருந்தா ரெம்ப நல்லா இருந்திருக்கும்….

    Like

  6. ஒரு கதைக்குள் மூன்று உலகத்தை ஒளித்துவைத்திருக்கிறீர்கள்.
    வானுயர கோபுரங்கள் வந்தாலும் ஏழையின் கூன் முதுகு மட்டும் இன்னும் உயரவேயில்லை

    Like

  7. touching.. Mostly real scenerio in various places around the country. Hope all of us who are affected by this story will try to do our bit when we come across such struggle for survival.

    Like

  8. //என்னதடே ஊருக்கு போன மாதிரியே இருக்குடே … சென்ன நம்பனும் மனச குத்துது ……………
    நல்ல்யிருபடே நீ //

    சூப்பரா இருக்குடே 🙂

    Like

  9. //நல்லா இருக்கு.

    மைரு : மயிரு தானே இது?
    //
    ஆமா கடுகு 🙂 “மை” என்பதை கொஞ்சம் அழுத்திச் சொல்வார்கள் 🙂

    கருத்துக்கு நன்றி 🙂

    Like

  10. //ayya thangal kiramathilirunthu vanthavara?oru kollanin valkaiyai ivallavu nunukamaga solliyirukreergal!.kathapathirapadaipu arumai.aangankay therikum opeedu super. kathai mudiyum pothu oru valiyai niruthivitu sendrathu.

    nandri
    bala

    //

    அன்பின் பாலா, இது உண்மை நிகழ்வுகள் மேல் எழுதப்பட்ட ஒரு கதை தான். நான் கிராமத்துக் காரனே தான் ! 🙂

    Like

  11. //Really good story.எதையும் நெருங்கிப் பார்க்கும் வரை ஒரு அன்னியத் தன்மை மனதில் இருக்கும் என்பது பரந்தாமனுக்குப் புரிந்தது.

    நெருங்க நெருங்கத் தான் தெரிகிறது ஒவ்வோர் தனி மனிதனுடைய வாழ்விலும் நிகழும் சோகமும், எதிர்பார்ப்பும், வலியும். பரந்தாமனின் மனசுக்குள் பாரம் பாறாங்கல்லாய் வந்து அமர்ந்தது

    Good lines.

    //

    மிக்க நன்றி நாதன் 🙂

    Like

  12. //எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க… ரொம்ப நல்லாயிருக்கு..!//

    மிக்க நன்றி வசந்தகுமார். சிறுகதை, கவிதை, புகைப்படம், என கலந்து கட்டி அடிப்பவர் நீங்கள் !! உங்கள் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.

    Like

  13. /கதை மிக சிறப்பாக இருக்கிறது… கொல்லனின் இருப்படிக்கும் சத்தம் அமைதியாய் ஒலிக்கிறது கதை முழுக்க… கொல்லன் ஒரு நாகரீக ஏழை… நன்றாக இரசித்தேன் அண்ணா…//

    மிக்க நன்றி விக்கி 🙂

    Like

  14. /கடைசி இரு வரிகள் என் கண்களில் நீர் கோர்த்தன..//

    நன்றி வேணு. வருகைக்கும், கருத்துக்கும்

    Like

  15. என்னதடே ஊருக்கு போன மாதிரியே இருக்குடே … சென்ன நம்பனும் மனச குத்துது ……………
    நல்ல்யிருபடே நீ

    Like

  16. ayya thangal kiramathilirunthu vanthavara?oru kollanin valkaiyai ivallavu nunukamaga solliyirukreergal!.kathapathirapadaipu arumai.aangankay therikum opeedu super. kathai mudiyum pothu oru valiyai niruthivitu sendrathu.

    nandri
    bala

    Like

  17. Really good story.எதையும் நெருங்கிப் பார்க்கும் வரை ஒரு அன்னியத் தன்மை மனதில் இருக்கும் என்பது பரந்தாமனுக்குப் புரிந்தது.

    நெருங்க நெருங்கத் தான் தெரிகிறது ஒவ்வோர் தனி மனிதனுடைய வாழ்விலும் நிகழும் சோகமும், எதிர்பார்ப்பும், வலியும். பரந்தாமனின் மனசுக்குள் பாரம் பாறாங்கல்லாய் வந்து அமர்ந்தது

    Good lines.

    Like

  18. கதை மிக சிறப்பாக இருக்கிறது… கொல்லனின் இருப்படிக்கும் சத்தம் அமைதியாய் ஒலிக்கிறது கதை முழுக்க… கொல்லன் ஒரு நாகரீக ஏழை… நன்றாக இரசித்தேன் அண்ணா…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.