அப்பாவின் நினைவாக…

வெறும் நான்கு வருடங்கள் தானா ? ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் என்றல்லாவா நினைத்தேன் என்கிறது மனது. ஒரு வழிகாட்டியாய், தோழனாய், தியாகியாய், கடமை தவறாத அப்பாவாய் என எத்தனையோ பரிமாணங்களைக் காட்டிய தந்தை மறைந்தபின் நாட்கள் சுமை இழுக்கும் கழுதையைப் போல பெருமூச்சு விட்டுத் தான் நகர்கிறது.
.
வரப்புகளில் எனை நடக்கப் பழக்கியதும், சர்ப்பக் குளத்தில் நீச்சல் பழக்கியதும், சமூகத்தில் வாழப் பழக்கியதும், சபைகளிலே பேசப்பழக்கியதும் எல்லாம் எல்லாம் என் தந்தை தான். கிராமத்து மண்ணில் கால் மிதிக்கும் போதெல்லாம் என் அப்பா நடந்து திரிந்த சாலை இது என மனது ஈரமாய் அழுகிறது.
.
இப்படி ஒரு வழிகாட்டியே ஒவ்வோர் குழந்தைக்கும் தேவை எனுமளவுக்கு அப்பாவின் வழிகாட்டுதல் இருந்தது. அதிர்ந்து பேசியதில்லை, ஆனால் அவருடைய பேச்சைத் தட்டவேண்டுமென தோன்றியதில்லை. எப்போதேனும் வயதுக் கோளாறினால் தந்தை சொல் தட்டியபின்னும், பொய் சொல்லிப் பணம் வாங்கிய பின்னும் குற்ற உணர்வு தாங்காமல் அழுதிருக்கிறேன். அப்படிப்பட்ட நேசமே எனக்கும் அப்பாவுக்குமான நேசம்.
.
மங்கலாகவும், எல்லாம் மறந்தது போலவும் தோன்றுகிறது. என்னையே நான் அலசி ஆராயும்போதெல்லாம் எனக்கு இருக்கும் இன்றைய சிந்தனைக்கும், மனதுக்கும் காரணம் என் பெற்றோரே என்பதை துளியளவும் மறுக்க முடியாது.
.
சிறுவயதில் ஒருமுறை நாலணா திருடிக் கொண்டு அதைப் பெருமையாக அப்பாவிடமே கொண்டு காட்டினேன். “எங்கிருந்து எடுத்தே” என்று ஒரே ஒரு கேள்வி தான். பக்கத்து வீட்டிலிருந்து என உண்மையைச் சொன்னேன். அடுத்த வினாடியே கையோடு அழைத்துச் சென்று எடுத்த அதே இடத்தில் வைக்கச் செய்து மன்னிப்பு கேட்க வைத்தார். அப்போது நான் ஒன்றாம் வகுப்பா, இரண்டாம் வகுப்பா தெரியவில்லை. ஆனால் அது தான் கடைசியாய் நான் திருடியது என்பது மட்டும் தெரியும்.
.
அப்போது நான் பதின் வயதுகளில். இரண்டு வீட்டாருக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்பா அங்கே விரைந்தார், கூடவே நானும். அடுத்தவர் மனைவியை தரக்குறைவாய் பேசிவிட்டார் ஒருவர் என்பது தான் பிரச்சனை. அப்பா கொஞ்சம் சாந்தமாய் பேசி பிரச்சினையை முடிக்கப் பார்த்தார். அப்பா ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், ஆலயத்தில் மிக முக்கிய நபராகவும் இருந்ததால் அவருடைய பேச்சுக்கு ஊரில் மரியாதை இருந்தது. ஆனால் அன்றைக்கு இருக்கவில்லை. பிரச்சினையை விடுமாறு அப்பா அறிவுறுத்தினார். “ஒன் பொண்டாட்டி எவன் கூடவோ போனா.. என்று ஒருத்தன் சொன்னா நீ சும்மா இருப்பியா “ என அப்பாவை நோக்கி கோபமாய் கத்தினார் அவர். என் பதின் வயது சுருக்கென சிவந்தது. அப்பாவோ அமைதியாக, “நான் சும்மா தான் இருப்பேன். ஏன்னா நான் மத்தவங்களை விட என் பொண்டாட்டியை நம்புபவன்” என்றார். நான் அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். வியப்பாய் இருந்தது. அந்த சண்டையும் அங்கே நிறைவுற்றது.
.
ஆலயத்தில் சமாதானக் குழு என ஒரு குழு உண்டு. கிராமத்து மக்கள் எதற்கெடுத்தாலும் முறுக்கிக் கொள்வதனால் உருவான குழு அது. வீடுகளுக்கு இடையே நேரிடும் உறவு விரிசல்களைச் சரி செய்யவும், அனைவரையும் ஒற்றுமைப்படுத்தவும் ஒரு பாலமாக இந்த சமாதானக் குழு செயல்படும். அந்தக் குழுவின் தலைவராக அப்போது இருந்தவர் அப்பா. அது எனது கல்லூரி காலம். ஒருமுறை ஏதோ ஒரு குடும்பச் சிக்கலைச் சரி செய்தது அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவருக்குப் பிடிக்கவில்லை. அவர் சாலையில் நின்று கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் அப்பாவை தரக்குறையாய் பேசத் துவங்கினார். கடைகளில் இருந்தவர்களும், சாலையில் பேருந்துக்காய் காத்திருந்தவர்களும் எல்லோரும் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு பொறுக்கவில்லை. ஆனால் எனது கையை அப்பா அழுத்தமாய் பிடித்திருந்தார், எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல. சுமார் அரை மணி நேரம் அவர் தனி ஒருவராக கத்திக் கொண்டே இருந்தார். பின் அவருக்கே போரடித்திருக்க வேண்டும் பேச்சின் சுருதியைக் குறைத்து விட்டு அப்பா நின்றிருந்த கடைக்கு அருகில் வந்தார். உடனே அப்பா கடைக்காரரிடம் “ஒரு சர்பத் குடுங்க. “ என்று ஒரு சர்பத் வாங்கி கத்திய நபரிடம் கொடுத்தார். கொடுத்துவிட்டு “ மனசுல என்ன இருந்தாலும் கொட்டிடணும். அப்போ தான் மனசு லேசாகும்.. “ என்றார். அந்த நபர் அதன் பின் பேசவேயில்லை.
.
பெரியவர்களை மரியாதையாய் தான் அழைக்கவேண்டும், ஏழை பணக்காரர் வித்தியாசம் பார்க்கக் கூடாது, பொறுமையே தேவை, உடனடி மன்னிக்கும் மனம் என்றெல்லாம் அவர் கட்டிய மதிப்பீடுகளின் செங்கற்களில் தான் நின்று கொண்டிருக்கிறது எனது வாழ்க்கை எனும் கட்டிடம்.
.
அமெரிக்காவுக்குக் கடைசியாய் அப்பா அனுப்பிய கவிதை இது ( கடிதம் தொலைந்து விட்டது. வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன். எனவே எழுத்துப் பிழைகள் இருக்கலாம் ). எத்தனை தொலைவில் நீ இருந்தாலும் என் நேசத்தில் தான் இருக்கிறார் என அவர் அனுப்பிய மடல். இன்னும் என் நினைவுகளில் ஒலிக்கிறது அப்பாவின் குரல் கவிதையாய்.

ദൂര ദേശ അഭിവാശം എങ്കിലും
സ്നേങമെന്നത് അനര്ധമാകുമോ
സുര്യനേരെ തിക്കിലുതിക്കിലും
സാരസങ്ങള് വിടരുന്നതില്ലയോ

2003ம் வருடம் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை எனும் தகவல் வந்ததும் இந்தியா வந்தேன். நல்லவேளை அப்போது அப்பா பிழைத்துக் கொண்டார். அந்த நிம்மதி மூச்சுக்கு ஓராண்டு நீளமே இருந்தது துயரம் ! 2003ல் எழுதிய கவிதை இது. நினைவுகளின் பரணைத் துடைக்கையில் அகப்பட்டது.
.

படுக்கையில் என் பிரபஞ்சம்

அந்த அழைப்பு
இல்லாதிருந்திருக்க வேண்டும்.

என்னை
கிராமத்தின் வரப்புகளுக்கும்,
அமெரிக்காவின்
வியப்புகளுக்கும்
அனுப்பிய தந்தை பற்றிய செய்தி.

மருத்துவப் படுக்கையில்,
வெளிவராத வார்த்தைகளோடும்
எனைக் காணும்
கனவுகளோடும் அப்பா.

அதுவரை
ஒற்றைப் புள்ளிக்குள்
உறங்கிக் கிடப்பதாய்
தோன்றிய உலகம்,
ஏழு கடல்களை
இடையே இணைத்ததாய்
திடீரென விஸ்வரூபம் கொண்டது.

கடுகு வெடித்து
சஞ்சீவி சரிந்ததாய்,
ஒற்றை வரிச் செய்தி எனக்குள்
சில கிரகங்களை
இறக்கி வைத்தது.

நான்
முதல் முறை இறக்கிறேன்.

சிறு வயது முதலே
செலவழிக்காத
என் கண்ணீர்க் கடல்,
இதயத்துக்குள் உடைந்தது.

வினாடிக்குக் கூட
நீளம் உண்டு என்பதை
விஞ்ஞானிகள் சொல்லி
விளங்கிக் கொள்ளாத நான்,
அப்பாவால்
அறிந்து கொண்டேன்.

இரவுகளில் சோகம்
இரட்டிப்பாகும் என்பதும்,
உண்ணாமல் சிலநாட்கள்
உயிர்வாழ முடியும் என்பதும்,
நான்
பகிர வேண்டிய பாசம்
ஏராளம் என்பதும்,
ஆறாவது அறிவுக்கு
அறிவிக்கப்பட்டது அப்போது தான்.

இறக்கை உதிர்க்கா
உலோகப் பறவை,
மீனம்பாக்கம் சரணாலயத்தில்
சரணடையும் வரை
நரம்புகளெங்கும்
நடுங்கும் நயாகரா
நகர்ந்து கொண்டே இருந்தது.

பேரம் பேசாமல்
வாகனம் அமர்த்தியதும்,
சில்லறை வாங்காமல்
சிதறி ஓடியதும் அப்போது தான்.

வயல்களில்
தானியம் தின்னும் பறவையாய்
தாவித்திரிந்த தந்தையை,
கசக்கிப் போட்ட வேட்டியாய்
கட்டிலில் பார்க்கையில்
நசுங்கியது மனசு.

அவர் அருகே
என் புதிய புத்தகம்.
அதை
விரல்களால் மட்டுமே அவர்
வாசித்துப் பார்த்திருந்தார்.

என்னைக் கண்டதும்
கண்களில் பொங்கும்
ஆனந்த அலைகளை
கரைகளுக்கு அனுப்பவே
இயலாத நிலை.

நல்லவேளை,
அப்பா வீடு திரும்பினார்.

பிரார்த்தனைகள்
அப்பாவை
கட்டிலை விட்டுக் கீழிறக்கி
இருக்கையில்
இருக்க வைத்தது.

பிறிதொரு பொழுதில் கேட்டேன்,
மருத்துவமனைக் கட்டிலில்
என்ன பிரார்த்தித்தீர்கள்.

அப்பா சொன்னார்,

அந்த மரண வேதனையை
சகித்துக் கொள்ள இயலவில்லை,
இறைவன்
நெஞ்சு வலிதந்து என்னை
கொன்று விடட்டும்.
என பிரார்த்தித்தேன்.

நான்
இரண்டாம் முறையாய்
இறந்தேன்.

10 comments on “அப்பாவின் நினைவாக…

 1. அம்மா அப்பாவோடு இருந்த காலம் நிஜமாகவே பொற்காலம்தாங்க. நாம எவ்வளவு சந்தோஷமா பணத்தையும், உறவுகளையும் சம்பாதிச்சு அனுபவித்தாலும் அப்பாவின் அன்பும் அம்மாவின் பாசமும் அவர்களின் பணமும் கொடுத்த நிம்மதியை வேறு எதுவும் கொடுக்கமுடியாதுங்க!
  அனுபவத்துடன்
  கமலா

  Like

 2. //என்னையே நான் அலசி ஆராயும்போதெல்லாம் எனக்கு இருக்கும் இன்றைய சிந்தனைக்கும், மனதுக்கும் காரணம் என் பெற்றோரே என்பதை துளியளவும் மறுக்க முடியாது.//

  REPEATE….

  …………………….
  …………………….
  …………………….
  …………………….

  உங்கள் தந்தை மறைய வில்லை… உங்கள் எழுத்துகளிலும், சிந்தனைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…..

  Like

 3. அன்புள்ள சேவியருக்கு,

  நெஞ்சுடைந்து போனேன் இந்த வரிகளின் வாயிலாய் முன்பு நிகழ்ந்து போன துயரமான விஷயம் அறிந்த போது.

  அவர் அருகே
  என் புதிய புத்தகம்.
  அதை
  விரல்களால் மட்டுமே அவர்
  வாசித்துப் பார்த்திருந்தார்.

  உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கவிதை ரசிகன் எல்லாம் உங்கள் படைப்புகளை பாராட்டும் போதும், நீங்கள் உலக அளவில் பெற்றிருக்கும் மிகப் பெரிய அங்கீகாரங்களை தன்னடக்கத்தோடு சுமந்து கொண்டிருக்கும் போதும் , அதை கண்டு மகிழ்வுறுவதற்கு உங்கள் தந்தை இல்லையே என்று எண்ணும் போது என் மனம் வேதனை அடைகிறது, சேவியர் .

  //பெரியவர்களை மரியாதையாய் தான் அழைக்கவேண்டும், ஏழை பணக்காரர் வித்தியாசம் பார்க்கக் கூடாது, பொறுமையே தேவை, உடனடி மன்னிக்கும் மனம் என்றெல்லாம் அவர் கட்டிய மதிப்பீடுகளின் செங்கற்களில் தான் நின்று கொண்டிருக்கிறது எனது வாழ்க்கை எனும் கட்டிடம்.//
  .
  மெய் சிலிர்த்துப் போனேன் சேவியர்.

  உங்கள் தந்தை இட்டுச் சென்ற கொள்கை வழிச் சுவடுகளில் இதயம் பதித்து நீங்கள் வாழ்ந்து வருவதின் மூலம் உயிரோடு வாழ்கிறார் உங்கள் அப்பா .
  நீங்கள் அடைந்து இருக்கும் உயரத்தை வியப்போடு பார்த்துக் கொண்டும், உங்கள் எழுச்சியான படைப்புகளை படித்து கண்ணீராலும் மௌனத்தாலும் எங்கேயோ நின்று கொண்டு விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்.

  வருத்தப்படாதீர்கள் சேவியர்!
  துயரங்களில் இருந்து உங்களைத் தூக்கிப் பிடிக்க உங்களுக்கு இருக்கும் எத்தனையோ ரசிகர்களில் நானும் ஒருவன் , சேவியர்!

  நட்புடன்
  குகன்

  Like

 4. அன்பின் நண்பர்களுக்கு, ஒரு சுய புலம்பலாகத் தான் இந்தப் பதிவை இட்டேன். நட்பின் கரங்கள் நீண்டதில் ஆறுதல் நிரம்பவே வருகிறது. வருடம் முழுவதும் தொடர்வதே நினைவுகள் எனினும், சில நாட்களில் அவை கரை கடக்கின்றன. வலிகளின் வழியே பயணிப்பது தானே வாழ்க்கை. அனைவருக்கும் நன்றிகள்.

  Like

 5. அன்புள்ள அண்ணா, உங்கள் வலி எனக்கு புரிகிறது. நான் அந்த வலியை தினம் தினம் அனுபவித்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அம்மாவும் , அப்பாவும் அடுத்தடுத்து என் நினைவில் வாழவந்துவிட்டார்கள் . இன்னும் என்னால் அதை நம்பவே முடியவில்லை.
  இவ்வளவு பெரியவர்களுக்கே கஷ்டமாகயிருக்கிறதே, அப்போது சிறு வயதிலே பெற்றவர்களை இழந்தவர்களுடைய சோகம் எப்படியிருக்கும் என்று நினைத்து என்னுடய சோகத்தை கட்டுபடுத்தி கொள்வேன். வேறு என்ன செய்ய?

  Like

 6. Very moving.
  Not all of us are lucky enough to have a father like yours who tought you valuable lessons without trying to teach you. You are a very lucky son.

  Like

 7. Pingback: அப்பாவின் நினைவாக… / சேவியர் | SEASONSNIDUR

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.