“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ?

மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லையெனில் மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தரமாட்டார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியில்லை எந்த நோயாய் இருந்தாலும் மருந்தகங்களில் இருப்பவர்களே மருத்துவர்களாகி ஏதேனும் நான்கைந்து பெயர் தெரியாத மாத்திரைகளைத் தந்து விடுகின்றனர். இவை உண்மையிலேயே பயனுள்ளவை தானா ? உடலுக்கு நலமளிப்பவை தானா ?

இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் சொல்லும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதாவது உலக அளவில் புழக்கத்தில் உள்ள மருந்துகளில் சுமார் பதினைந்து முதல் இருபது விழுக்காடு மருந்துகள் போலியானவையே என அது அறிக்கை வெளியிட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே போலி மருந்துகள் கலந்துள்ளன. ஆனால் வளரும் நாடுகளிலோ சுமார் இருபத்தைந்து முதல் முப்பது விழுக்காடு என இந்த புள்ளி விவரங்கள் மூர்ச்சையடைய வைக்கின்றன.

வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே போலி மருந்துகளும், தரமற்ற தயாரிப்புகளும் அதிகமாய் தயாராவதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. அதன் கூற்றை நிரூபிக்க புள்ளி விவரக் கணக்குகளையும் சமர்ப்பிக்கின்றது.

உலக அளவில் பின் தங்கிய நாடுகளில் தயாராகும் மருந்துகளில் 25 விழுக்காடு மருந்துகள் போலியானவையாம்.

நைஜீரியாவிலும், பாகிஸ்தானிலும் தயாராகும் மருந்துகளில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு மருந்துகள் தரமற்ற மாற்று மருந்துகள் எனவும், சீனாவில் சில மருந்துகள் சுமார் 85 விழுக்காடு போலியாய் இருப்பதாகவும், நைஜீரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சுமார் 37 விழுக்காடு ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் போலியே என்றும், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் உலவும் மலேரியா தடுப்பு மருந்துகளில் 90 விழுக்காடு போலியே என்றும் இந்த அதிர்ச்சிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உலகெங்கும் ஒவ்வோர் வினாடியும் சுமார் 35 இலட்ச ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வினாடிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் போதும் இந்தக் கள்ளச் சந்தையின் பலத்தைக் காட்ட !

இந்தியாவிலும் சுமார் 10 விழுக்காடு மருந்துகள் போலியானவையே என்பதே உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை சொல்லும் செய்தி. ஆனால் உண்மையில் இது இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

போலி மருந்துகள் என்பவை உண்மையான மருந்துகளைப் போல தயாராக்கப்பட்டு, தரம் குறைந்ததாகவோ, தரமற்றதாகவோ, ஊறு விளைவிப்பதாகவோ இருக்கின்றன என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம்.

போலி மருந்துகளால் என்ன தான் பிரச்சனை ?

முதலாவதாக இந்த போலி மருந்துகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த மருந்துகளால் நோய் குணமாகும் வாய்ப்பு மிகவும் குறைவு

இரண்டாவதாக இந்த போலி மருந்துகளில் மருத்துவ மூலக்கூறுகள் தேவையான அளவில் இல்லாமல் இருப்பதால் குறைவாகவோ, அதிகமாகவோ உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நோயின் வீரியம் அதிகரிக்கவோ, நோயாளிக்கு வேறு பக்க விளைவுகள் வரவோ வழி வகுக்கிறது.

மூன்றாவதாக இந்த மருந்துகளில் நிறைய விஷத் தன்மையுடைய பொருட்கள் கலந்திருப்பதால் இவை நோயாளியின் உயிருக்கே ஆபத்தாய் முடிகின்றன.

உதாரணமாக ஹெய்தியில் ஒருமுறை இருமல் மருந்து எண்பத்தொன்பது பேரைப் பலிவாங்கியது, சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தில் இருந்த டைஎத்தலின் கிளைகோல் எனும் வேதியல் பொருளே இதன் காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.
நைஜீரியாவில் ஒருமுறை 2500 பேர் மரணம், வங்கதேசத்தில் 109 பேர் மரணம், சமீபத்தில் இந்தியாவில் பல குழந்தைகள் மரணம் என இந்த துயரக் கணக்கு உலகெங்கும் விரிவடைகிறது.

சீனாவில் ஆண்டுதோறும் சுமார் மூன்று இலட்சம் பேர் தரம் குறைந்த போலி மாற்று மருந்துகளினால் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த போலி மருந்துகளால் சமூகத்திற்கு நேரக்கூடிய மிகப்பெரிய ஆபத்தின் சிறு சிறு துணிக்கைகள் எனக் கொள்ளலாம்.

பாலியல் சார்ந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் புழக்கத்தில் உள்ளவற்றில் பெரும்பாலானவை போலி மருந்துகளே. ரகசியமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் எனும் மக்களின் எண்ணமும், பாலியல் கல்வி இல்லாத சூழலும், பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய தரமற்ற பாலியல் சார்ந்த மருந்துகளின் அசுர வளர்ச்சிக்கு வழிகோல்கின்றன. இத்தகைய மருந்துகளுக்கான விளம்பரங்களையும், உரையாடல்களையும் ஊடகங்கள் மிகைப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

இன்னொன்று எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இல்லாத இத்தகைய பெரிய நோய்கள் போலி மருந்து தயாரிப்போருக்கு ஒரு வரமாய் மாறியிருக்கிறது. உலகமே மூளையைக் கசக்கும் எயிட்ஸ் நோய்க்கான மருந்தை நமது தெருக்கள் கூவிக் கூவி விற்கின்றன !

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என எல்லா கண்டங்களிலும் போலிகள் புகுந்திருந்தாலும், ஆசியக் கண்டம் தான் இந்த போலி மருந்துகளின் ஊற்றாய் இருக்கிறது என மேலை நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சீனாவில் மட்டும் சுமார் 500 அனுமதியற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியிருந்தது.

தென்மேற்கு ஆசியாவிலுள்ள கம்போடியாவில் சுமார் 2800 போலி மருந்து விற்பனை நிலையங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற மருந்துகளும் உலவுகின்றனவாம். தாய்லாந்தில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 8.5 விழுக்காடு போலி தானாம்.

ஈராக்கின் மீது அமெரிக்கா போர்தொடுக்க ஆரம்பித்த பின் அங்கே சுமார் 70 விழுக்காடு மருந்துகள் காலாவதியானதாகவோ, தரமற்ற தயாரிப்பாகவோ, போலியானதாகவோ தான் கிடைப்பதாக ஈராக்கின் அமைச்சர் அதில் முஸின் தெரிவிக்கிறார்.

போலி மருந்துகள் இப்படி உலக நாடுகளையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கையில் இன்னொரு அச்சுறுத்தலாய் உலவுகின்றன தடை செய்யப்பட்ட மருந்துகள்.

இதிலுள்ள துயரம் என்னவென்றால் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் ஏராளமாய், வெகு சகஜமாய் இந்தியாவில் கிடைக்கின்றன என்பது தான். இந்தியா தான் போலிகளின் புகலிடமாயிற்றே எங்கும் போலி எதிலும் போலி என்பது மருத்துவத்திலும் இரண்டறக் கலந்து விட்டது.

ஆடைகளிலோ அல்லது பிற பொருட்களிலோ போலிகள் இருந்தால் பண விரயம் எனுமளவில் அது நின்று விடுகிறது. ஆனால் மருந்துப் பொருட்களில் போலித்தனம் நுழையும்போதோ அது உயிரையே அழித்து விடுகிறது. எனவே தான் பிற போலித்தனங்களைப் போல இலகுவாக மருத்துகளிலுள்ள போலித்தனங்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இந்தியாவில் சுமார் 515 மருந்துகள் 3000 வேறு வேறு பெயர்களில் உலவுவதாகவும் இவை உலக நாடுகள் பலவற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும் இந்திய மருந்து கடைகளில் எந்த விதமான தடையுமின்றி கிடைப்பதாகவும் மருத்துவம் சார்ந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள் புற்று நோய், பக்கவாதம், பார்வையிழப்பு போன்ற பல்வேறு கொடிய நோய்களை வரவழைக்கும் வலிமை கொண்டவையாம்.

பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜோர்டன், மலேஷியா, நார்வே, ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளைக் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி இந்திய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதன் மூலம் பல இலட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு அடைகின்றனர் என்பதும் அதிர்ச்சியூட்டும் செய்திகளாகும்.

உதாரணமாக ஜப்பானில் சுமார் பத்தாயிரம் பேரை பார்வையிழக்கவும், உடலுறுப்புகள் செயலிழக்கவும் வைத்த மருந்துகளும், உலக அளவில் சுமார் 15 ஆயிரம் பேரை உயிரிழக்கவும் வைத்த மருந்துகளும் இன்றும் இந்தியச் சந்தையில் அச்சமின்றி உலவுகின்றன. இவை சர்வதேச அரங்கில் நிராகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

நவால்ஜின், டி கோல்ட், விக்ஸ் ஆக்சன் 500, நிம்சுலைட், அனால்ஜின் போன்ற சர்வ சாதாரணமாய் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும் மருந்துகள் எல்லாம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் தடை செய்யப்பட்ட மருந்துகளே என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? இதில் இன்னொரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் பல இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என்பதே !

ஒரு மருந்தைத் தடை செய்யும் அதிகாரம் மருத்துவத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வுக்கு உண்டு. ஒரு மருந்தை தடை செய்யும் முன் ஒரு மருத்துவக் குழு அந்த மருந்தை முழுமையாக ஆராய்கிறது. அந்த மருந்தில் உள்ள வேதியல் பொருட்கள், அவை உடலுக்கு ஏற்படுத்தக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றை முழுமையாக ஆராய்ந்தபின் அந்த மருந்தைத் தடை செய்வதா, வேண்டாமா எனும் அறிக்கையை ஆலோசனைக் குழுவுக்கு அளிக்கிறது. ஆலோசனைக் குழு அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது.

அப்படித் தடை செய்தாலும் அவை விற்பனைக் கூடங்களுக்கு திருட்டுத் தனமாக வந்து சேர்ந்து விடுகின்றன. கடந்த மாதம் பஞ்சாபில் ஒரு மருந்து கடையிலிருந்து மட்டும் சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டன. ஒரு கடையில் நிலமையே இப்படியெனில் இந்தியா முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மருந்து கடைகளில் எத்தனை கோடி ரூபாய்களுக்கான தடை செய்யப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவோ எனும் பதட்டம் இயல்பாகவே எழுகிறது.

மருந்தை வாங்க வரும் நோயாளிகள் எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை, எவை அங்கீகரிக்கப்பட்டவை என்பதை அறிந்திருக்க முடியாது. அந்தத் தார்மீகக் கடமை மருந்தைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும், மருந்தை வினியோகிக்கும் மருந்து கடைகளுக்கும் உண்டு. தடை செய்யப்பட்ட மருந்துகளை பரிந்துரை செய்யாமலும், அவற்றை விற்பனை செய்யாமலும் இருக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
பரிந்துரைக்கப்படும் மருந்துகள் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருக்கிறதா எப்பதைக் கவனித்தால் ஆபத்திலிருந்து தப்பலாம். தனிநபர்களைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான வழிமுறை அல்ல. ஆனால் இந்த சோதனையை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எளிதில் செய்ய முடியும்.

தடை செய்யப்பட்டவை எவை என்பன போன்ற தகவல்களை பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் எளிதில் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின் பல எல்லைகளிலும் இருக்கும் சிறு சிறு மருத்துவமனை மருத்துவர்களை இந்தத் தகவல் சென்றடைவதில்லை. எனவே அவர்களுக்கு எந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்பதில் தெளிவில்லை. பெரும்பாலும் இவையெல்லாம் மருத்துவ இதழ்கள், அறிக்கைகள் மூலம் மட்டுமே மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவை எல்லோரையும் சென்றடையாமல் இருப்பதில் வியப்பில்லை.

நேரடியாக வாங்கும் கடைகளிலேயே இத்தகைய போலிகளின் புழக்கம் இருக்கும் போது இணையம் மூலமாக வாங்கும் மருந்துகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இணையத்தில் மருந்துகள் வாங்கும்போது தரமற்ற மருந்துகளே ஐம்பது விழுக்காடு நேரங்களில் வழங்கப்படுகின்றனவாம். முடிந்தவரை இணையம் மூலம் மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இணையம் மூலமாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட விலையைப் பார்க்காமல் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த போலி மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள், அங்கீகாரமற்ற மருந்துகள் போன்றவை சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்பு மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதல் போன்றது என்பதை உணர்தல் அவசியம். இதைத் தடுக்க அரசு ரீதியான திட்டமிட்ட செயல்பாடு மிக அவசியம்.

அனைத்து மருத்துவ மனைகளும் தரக்கட்டுப்பாடுக்குள் வரவேண்டும். டிரேட்மார்க் இல்லாத மருத்துவமனைகள் இயங்க அரசு அனுமதி மறுக்க வேண்டும். இந்த மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை தரமான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறவேண்டும். அந்த நிறுவனங்களின் தயாரிப்புத் தரத்தையும் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

போலி மருந்துகள், அனுமதியற்ற மருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஒரு பயங்கரவாத, கொலைக் குற்றத்துக்குரிய அல்லது அதற்கும் மேற்பட்ட வீரியத்துடன் இந்த குற்றங்கள் அணுகப்பட வேண்டும். போலி மருந்துகளுக்கு எதிரான விசாரணைகள் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் சார்ந்தது என்பதால் விரைந்து முடிக்கப்படவும் வேண்டும்.

போலி மருந்துகள், தரமற்ற தயாரிப்புகள் இவற்றுக்கான அனுமதிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், சுயநல நோக்கங்களுடன் அனுமதி வழங்கியவர்கள் இவர்களுக்கு எதிராய் சட்டம் கடுமையாய் பாய வேண்டும்.

கடுமையான தரக்கட்டுப்பாடு அமைப்பும், அதில் தனிநபர் நலம் கலக்காத அணுகு முறையும் வேண்டும்.

போலி மருந்து குறித்த புகார்கள் எளிமையாக்கப்படவேண்டும். போலியா ? அப்படின்னா என்ன ? எனக் கேட்கும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் இருந்தால் சந்தையிலும், தயாரிப்பு நிலையங்களிலும், இறக்குமதிகளிலும் இந்த போலி மருந்துகளை ஒழித்தல் சாத்தியமே.
நைஜீரியா இத்தகைய போலி மருந்துகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாடு. 2001 ல் சுமார் 41 விழுக்காடு மருந்துகள் அங்கே போலியாகவே உலவி வந்தன. நைஜீரிய அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அந்த விகிதம் கணிசமாய் குறைந்து 15 விழுக்காடு எனுமளவுக்குக் குறைந்திருக்கிறது. பதிவு செய்யப்படாத மருந்துகள் 68 விழுக்காடிலிருந்து 19 விழுக்காடாக வீழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் மற்ற வளரும் நாடுகளுக்கான ஒரு முன்னுதாரணம் எனலாம்.

சரி இந்த போலி மருந்து விஷயத்தில் நமது பங்கு என்ன ?

முதலில் விளம்பரங்களின் வசீகரத்தைக் கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருந்து என்றால் கண்டிப்பாக உயர் தரம் என முடிவு கட்டாமல் இருப்பது. இரவு நேரங்களில் தொலைக்காட்சியில் பேசும் “வாலிப வயோதிக அன்பர்களே” அழைப்புகள் உண்மை என நம்பி ஏமாறாமல் இருப்பது. போலிகளை எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருப்பது என பல வழிகளில் நமது பங்காற்றல் இருக்க முடியும்.

போலி மருந்துகளை தெரிந்தே வாங்கும் போது நாம் அந்த குற்றத்தின் பங்கு தாரர்கள் ஆகின்றோம் என்பதையும், நாமும் பணத்தைக் கொடுத்து அந்த குற்றத்தையும் அது தொடர்பாய் எழக்கூடிய தொடர் குற்றங்களையும் ஊக்குவிக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.

போலி மருந்துகளை விற்கும் மருந்தகங்கள், தங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதால் இந்த பிழையைச் செய்கின்றனர். இத்தகையோர் சமூகத்தைச் சிதைக்கும் கொடும் செயலைச் செய்கின்றோம் என்பதை உணர வேண்டும்.

வளரும் நாடுகளிலுள்ள மக்கள் சுகாதார வசதிகள் இல்லாமல் தொடர் நோய்களுக்கு இலக்கானவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். தினசரி வாழ்க்கையை இழுக்கவே திராணியற்ற மக்கள் லாபமானதை வாங்கவே விரும்புவர். அவர்களுடைய பொருளாதார இயலாமையை மூலதனமாக்கி ஆபத்தான போலிகளை அவர்கள் தலையில் கட்டாமல், மருந்தகங்கள் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

போலி மருந்துகளைக் கண்டறிவது கடினம். எனிலும் நம்மால் முடிந்த அளவுக்கு போலியில்லாத மருந்து தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்பே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கும்போது அளவிலோ, வடிவத்திலோ, நிறத்திலோ, எழுத்துகளிலோ ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால் வாங்காதீர்கள். வேறொரு மருந்து கடையை நாடுங்கள். வாங்கிவிட்டால் மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கலாம்.

பெரும்பாலும் போலிகள் மாத்திரைகளில் தான் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. எனவே மாத்திரைகள் வாங்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள்.

மருந்துகளின் ஆயுளைக் கண்டிப்பாகப் பாருங்கள். அதன் கடைசி நாள் தாண்டியிருந்தாலோ, அதன் மீது புதிதாக ஸ்டிக்கர் ஏதேனும் ஒட்டப்பட்டிருந்தாலோ, நாள் திருத்தப்பட்டிருந்தாலோ அதை வாங்காதீர்கள்.
மருந்துகள் “காலாவதி” நாள் இல்லாமல் இருந்தால் அது நிச்சயம் போலி மருந்து என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
மருந்துகளில் தயாரிப்பு நிறுவனத்தைக் குறித்த விவரம் இல்லாமல் இருந்தாலும் அது போலியே.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த போலி மருந்துகள் ஆயிரம் சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. போலி மருந்துகள் பிரச்சினை சமூகத்தைக் கரையானாக அரித்து, சமூகத்தின் நலனையே கெடுக்கும் பிரச்சனையாகும்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அரசு தீவிர நடவடிக்கைகள் எடுப்பது, ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் தார்மீகக் கடமையை உணர்ந்து செயல்படுவது என கூட்டு முயற்சி கைகூடினால் சுகாதாரமான சமூகம் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

9 comments on ““பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு

 1. anna ippothu kiramathil irukum kadaikali sendru partheerkaleyanal
  anaithumay poli marrunthukal enru theriyum.

  vicks action 500 kku pathilaka athey niramulla attaiyil kitta thatta athey peyar iruppathu pola thotramudaiya veroru per irukum

  pamaranuku ithu puriya vaippilai

  athey pol ” set tablets ” endru ondru ” vaithuvali, paythi, itharkellam kodukirarkal (ather kellam peyer illai . 3 or 4 mathirai kalai ondraga oru pacet il pootu tharukirarkal)

  eppotho naan kelvi pattathu ” bagalore il poli marunthuku factory irukirathu endru ! ” ithu entha alavu unmai enru theriya villai

  saatharan marunthukaliley intha alavu poli irukum pothu

  matravatrai patri yosikavey payamai irukirathu

  nalla payanulla pathivu

  nandri

  bala

  Like

 2. Hi, INDIAN GOVERNMENT HAS ALREADY VERY STRICT CONTROLS FOR PREVENTION OF SPURIOUS DRUGS. ALL THE QUALIFIED DOCTORS ARE CONSCIOUS ABOUT Rx MEDICATIONS TO THE PATIENTS AND THAT’S THE REASON, LOTS OF WARNINGS HAVE BEEN GIVEN TO THE PUBLIC TO AVOID PURCHASING MEDICATIONS OVER THE COUNTER(IN MEDICAL SHOPS),FOR THEIR PROBLEMS EVEN FOR EMERGENCIES.ALL THE MAJOR PHARMACEUTICAL COMPANIES HAVE BEEN ADOPTING ISO 9001-2000 CERTIFICATION,CGMP STANDARDS AND WHO DIRECTIVES WHICH IS CLOSELY MONITORED BY DRUG AUTHORITIES OF INDIA. NOW A DAYS, SPECIALIST DOCTORS DOES NOT RECOMMEND EVEN THE SO CALLED FAMOUS CONSUMER DRGS ALSO, WHICH IS BEING SOLD THRU ADVERTISEMENTS ONLY. Eg BENEDRYL COUGH FORMULA,GLYCODIN,REVITAL ETC.APART FROM THAT IN CHEMISTS LEVEL ALSO IN MAJOR CITIES, THEY AVOID BUYING MEDICATIONS FROM THE COMPANY OR WHOLE SALE IF THE EXPIRY DATE IS LESS THAN 6 MONTHS.IN THE NUT SHELL, PUBLIC AWARENESS IS IMPROVING NOT ONLY IN CITIES BUT ALSO IN SEMI URBAN AREAS, WHILE PURCHASING MEDICATIONS, AND CHEMISTS ARE ALSO VERY STRICT,AND THEY AVOID SELLING SUCH MEDICATIONS TO KEEP UP THEIR CUSTOMER LOYALTY AND TO PROTECT THEIR FIRMS BUSINESS IN LONG RUN.BUT STILL THESE SPURIOUS DRUGS ARE AVAILABLE IN THE MARKET REFLECTS THAT INDIAN GOVERNMENT HAS TO CREATE MORE AWARENESS THRU GOVT. HOSPITAL SERVICES, MAKING ALL THE MEDICATIONS AVAILABLE IN THE PHARMACY WHICH SHOULD REACH POOR PATIENTS WITHOUT ANY HICK UPS IN BETWEEN.THIS IS A VERY BIG SUBJECT, WHICH CAN NOT BE COMPLETED IN FEW LINES….

  Like

 3. நன்றி பாலா & பாலகுமார்.

  மருந்துகளைக் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது என்பது நடக்காத விஷயம். ஒருவேளை 1 விழுக்காடு மக்கள் விழிப்புடன் இருக்கலாம்.

  ஒரு மருந்துகடை வைத்திருப்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “ஒரிஜினல் ஐட்டம்ஸ் க்கு 8 முதல் 10 பர்சண்ட் தான் சார் மார்ஜின். டூப்ளிகேட்டுன்னா நமக்கு 40 – 50 பர்சண்டேஜ் மார்ஜின் வரும்.” !!!

  Like

 4. ஐயோ! நான் இங்கு ஒரு உண்மை சம்பவத்தை கூற விரும்புகிறேன். தொழில் பிரகாரம் நான் ஒரு நர்ஸ். மதுரையில் நான் இருந்த வீட்டு சொந்தக்காரர், மெடிக்கல் ஸ்டோர் வைத்திருத்தார். ஒரு நாள் மருந்து வாங்குவதற்க்காக சென்றிருந்தேன். வாங்க சென்றிருந்த மருந்து ”சிட்ரஸின்”. இரண்டு மாத்திரை வாங்கிவிட்டு, என்ன விலை எனக் கேட்டேன். நான்கு ரூபாய் என்றார். அதே மாத்திரையை முன்பு வேறு கடையில் வாங்கியிருக்கிறேன். 2 மாத்திரை ரூ.5.50க்கு வாங்கியது ஞாபகம் வந்தது. இதை அவரிடம் கூறினேன்.அதற்க்கு அவர் கூறிய பதில் என்னை அதிர வைத்தது.

  ”பெரிய மருந்து கடைகளில் மொத்த விலைக்கு ”டுப்ளிக்கெட் சிட்ரஸின்” மாத்திரைகளை வாங்குவோம். சாதார்னமாக 10 மாத்திரை அடங்கிய ஸ்ட்ரிப்பை ரூ.3 வாங்கி, விற்க்கும் போது ஒரு மாத்திரை ரூ.2 விற்போம்” என்றார்.

  நான் நர்ஸ் ஆக இருப்பதால் போலி மாத்திரைகள் செய்யும் அட்டுழியங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

  போலி மாத்திரையுடன் பிரச்சனை முடியதில்லை. உலகேங்கும் தடை செய்யப் பட்டுள்ள மாத்திரைகள் சர்வசாதர்னமாக இந்தியாவில் விற்ப்பனைக்கு கிடைக்கிறது.

  சரி, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு? மாத்திரைகளை வாங்கம் போது, கம்பெனி மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்படி வாங்கவும். தடை செய்யப் பட்டுள்ள மாத்திரைகளும் பிற உண்மைகளையும் அறிய Monthly Index of Medical Specialities (MIMS) என்ற தனி நிறுவனம் இயங்குகிறது.

  Like

 5. நர்ஸ் சகோதரியின் விளக்கங்களுக்கும்

  +

  நண்பர் சுபாஷின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் 🙂

  Like

 6. நானும் வெளியூர் செல்லும் போது, ( மருந்து கடைகாரரின் சிபாரிசில்) கொஞ்சம் மாத்திரைகளை வாங்கிவைத்திருந்தேன். தற்செயலாக எனக்கு தெரிந்த மருத்துவரிடம், என்னிடமுள்ள மாத்திரைகளை சொன்னேன், அவ்வளவு தான் நல்லா வாங்கி கட்டிக்கொண்டேன்.

  நல்ல பதிவு அண்ணா.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.