வாங்க சிரிக்கலாம்…

smile
உற்சாகமாக பட்டாம்பூச்சியைப் போல ஓடித் திரியும் பலருக்கு உடலும் மனமும் இளமையாக இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். கவலைகளற்ற, அல்லது தேவையற்ற கவலைகளை மூட்டைகளைப் போல முதுகில் தூக்கிச் சுமக்காத மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது உற்சாகப் பயணமே.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது.

மனம் திறந்த சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்தக் குழாய்கள் சீராக இயங்க உதவுகின்றன, இதன் மூலம் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது என இதற்கு மருத்துவ விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் மைக்கேல் மில்லர். ஆய்வில் ஈடுபடுத்தப் பட்ட இதய நோயாளிகள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இலகுவாய் ஆனந்தமாய், சிரிப்புடன் கொண்டாடாதவர்களே. !

மனதை மட்டுமற்றி உடலையும் வலுவாக்குகிறது சிரிப்பு. சிரிக்கும் போது உடலிலுள்ள அனைத்து பாகங்களும் இயங்குகின்றன, இரத்த ஓட்டம் அதிகமாகிறது, மூளைக்கு உயிர்வளி அதிகம் செலுத்தப்பட்டு மூளை சுறுசுறுப்படைகிறது, உடல் தசைகள், முக தசைகள் எல்லாம் அதிக இயக்கமடைந்து உற்சாகம் பெறுகின்றன. எல்லாவற்றையும் விட, உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது சிரிப்பு என்பது சிறப்புச் செய்தி !

சிரிக்கும் போது உடலில் லிம்ப் திரவம் வேகமாகப் பரவுகிறது. நமது உள் உடல் உறுப்புகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்த திரவங்களை இது வெளியேற்றி சுத்தமாக்கி விடுகிறது. கூடவே நமது செரிமானக் கோளாறுகளையும் சரி செய்து விடுகின்றன.

சிரிக்கும் போது நமது உடலில் ஏராளம் உயிர்வழியும் பரவுகின்றது. இந்த உயிர் வழி உடலை புத்துணர்ச்சியாக்குகிறது. உடலுக்குள் உயிர் வழி நிரம்பி வழியும்போது பல பாக்டீரியாக்கள், மற்றும் உயிரைக் கொல்லும் புற்று நோய் கிருமிகளெல்லாம் வெளிYயேறத் துவங்குகின்றன. நுரையீரல் தனக்குள் தேங்கிக் கிடக்கும் கரியமில வாயுவை முழுமையாய் வெளியேற்றி உயிர்வழியைக் கொண்டு நிரப்புகிறது. யோகாசனத்தில் பயிற்றுவிக்கப்படும் மூச்சுப் பயிற்சியைப் போல சிரிப்பும் உடலுக்குள் பிராணவாயுவை நிரப்பி உடலை வலுவாக்குகிறது.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மக்கள் உயிர்வழி நிலையங்களுக்குச் சென்று சுத்தமான உயிர்வழியை டாலர்கள் செலுத்தி சுவாசிக்கின்றனர். அந்த உயிர்வழி நிலையங்கள் தரும் பலனை மனம் விட்ட சிரிப்பு தரும் என்பதை அறியும்போது சிரிக்கத் தோன்றுகிறதல்லவா ?
சரி வெறுமனே உடலுக்கு உற்சாகம் தருவது தான் சிரிப்பா என நினைக்கிறீர்களா ? விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

சிலர் வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மனம் விட்டுச் சிரிப்பார்கள். சிலருக்கு சிரிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. இப்படி சிரிப்பே வராதவர்கள் இப்போதெல்லாம் சிரிப்பு நிலையங்களுக்குச் சென்று செயற்கையாய் சிரித்து வைக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட செயற்கைச் சிரிப்பினால் அதிக பயன் இல்லை என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆனந்தமான சூழல், இலகுவான மனநிலை, இயல்பான பீறிட்டுக் கிளம்பும் சிரிப்பு, வாழ்க்கையை நேர்மனதுடன் அணுகும் நிலை இவையெல்லாம் கலந்த சிரிப்பே முழுமையானது என்பது அவர்களுடைய விளக்கம்

பத்து நிமிட நேரங்கள் உடற்பயிற்சி கூடத்தில் வியர்க்க விறுவிறுக்க ஓடுவதும், ஒரு நிமிடம் ஆனந்தமாய் சிரிப்பதும் ஒரே பயன் தரக் கூடியது என கூறி வியக்க வைக்கிறார் சிரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வில்லியம் பிரை என்பவர்.

மேலை நாடுகளில் பிரபலமாய் இருக்கும் “கிச்சு கிச்சு மூட்டும்” நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் மென்பொருள் துறை உட்பட பல்வேறு துறைகளில் மிகப் பிரபலம். இதற்கென்றே சிறப்புக் குழுக்கள் இயங்குகின்றன. இவர்களுடைய ஒரே வேலை நகைச்சுவைகளை அடுக்கடுக்காய் சொல்லி பார்வையாளர்களைச் வாய்விட்டுச் சிரிக்க வைப்பது தான்.
இதற்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய்கள் !

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். 

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரிந்த நண்பர்களில் எப்போதும் உற்சாகமும், சிரிப்புமாய் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் ஓரிருவராவது இருப்பார்கள். அவர்களுக்கு கடைசியாய் எப்போது ஜலதோஷம் வந்தது என நினைத்துப் பாருங்கள் வியப்படைவீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். காரணம் சிரிப்பும், களிப்புமாய் இருக்கும் உற்சாகவாதிகளை இந்த ஜலதோஷம் அடிக்கடி தொந்தரவு செய்வதில்லையாம் !

இன்னொரு வியப்பூட்டும் ஆராய்ச்சியும் சிரிப்பைக் குறித்து வெளியாகியிருக்கிறது. அதாவது பாலூட்டும் தாய்மார்கள் உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருந்தால் அவர்களுடைய குழந்தை நோய்நொடியின்றி ஆரோக்கியமாய் இருக்குமாம். அதிலும் குறிப்பாக தாய்மை நிலையிலிருக்கும்போதே உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருந்தால் மழலைக்கு இன்னும் அதிக பலனாம். காரணம் உற்சாகமாய் சிரித்து வாழும் தாய்மார்களிளுக்கு பாலில் இம்யூனோகுளோபுலின் எ அதிகமாய் இருப்பது தான் என மருத்துவம் குறித்து வைத்திருக்கிறது.

இன்னோர் மருத்துவ அறிக்கை உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸைக் கூட சிரிப்பு துரத்தும் எனக் கூறி அசர வைக்கிறது. அதாவது எயிட்ஸ் கிருமிகளுடன் போராடும் டி- அணுக்களை சிரிப்பு வலிமைப் படுத்துகிறதாம் !
மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது. கிபி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஹென்றி டி மோண்டிவிலி, அறுவை சிகிச்சைக் காயத்தை சிரிப்பு விரைவில் குணப்படுத்திவிடும் எனவும், எதிர்மறை உணர்வுகள் காயத்தை அதிகப்படுத்தும் எனவும் கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.
 
சிரிப்பு குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், நுரையீரலை வலிமையாக்கும், இதயத்தைப் பாதுகாக்கும், உடலுக்கும் மனதுக்கும் தேவையான பயிற்சியை அளிக்கும், மன அழுத்தத்தைத் துரத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மூளையை வலிமையாக்கும் என மருத்துவ உலகம் சிரிப்பின் பயன்களைப் பட்டியலிடும்போது விழிகள் விரிய, உதடுகள் மலர வியக்க வேண்டியிருக்கிறது.
 
ஆனால், இன்றைய அழுத்தமான வாழ்க்கை முறை அடுத்த வீட்டு நபரின் பெயரைக் கூட அறிந்து கொள்ளாத மனிதர்களைத் தான் வீதிகள் தோறும் உருவாக்கியிருக்கிறது. அலுவலகங்கள் தங்கள் கண்ணாடி அறைகளை கணினியை விரல்களால் விசாரிக்கும் மனித ரோபோக்களால் நிரப்பியிருக்கின்றன. மனிதர்கள் சிரிக்க மறந்து விட்டார்களோ என ஐயப்படத் தோன்றுகிறது.

சிரிப்பு வரவில்லையேல் நல்ல நகைச்சுவை நூல்கள் வாசிக்கலாம், திரைப்படங்கள் பார்க்கலாம், நண்பர்களுடன் உரையாடலாம் என்றெல்லாம் யோசனைகள் சொல்கின்றனர் மருத்துவர்கள். அப்படியும் சிரிப்பு வரவில்லையா ? அனைத்தையும் மறந்து ஒரு குழந்தையிடம் உங்களை ஒப்படையுங்கள். குழந்தையின் தேசத்துக்குச் சென்று வாருங்கள். சிரிப்பு உங்களை சிறையெடுக்கும்.

அது ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான், வாழ்க்கையை ஆனந்தத்துடன் அணுகுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், சரியானதை உண்ணுங்கள் கூடவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வஞ்சகம் பாராமல் வாய்விட்டுச் சிரியுங்கள்.

பெண்ணே நீ – இதழில் வெளியான கட்டுரை.

Advertisements

8 comments on “வாங்க சிரிக்கலாம்…

 1. பயனுள்ள பதிவு. சேவியர்.

  நலமா..??

  சினிமா பற்றிய எனது வலைப்பூ பார்க்கவும். நிறை / குறை சொல்லவும் ..

  உரிமையுடன்

  சூர்யா

  Like

 2. சொல்றது எல்லாமே சரி அண்ணா.ஒத்துக்கிறேன்.உண்மையாவே ஆயுளை நீட்டிக்கொள்ளவும் சந்தோஷமாகவும் இருக்க நல்ல வழி சிரிப்பு.ஆனா சிரிப்பு வரணுமே.அந்தச் சூழ்நிலையும் மனநிலையும் அமையணுமே.அதுக்கு என்ன வழி?

  Like

 3. அண்ணா நீங்க சொல்லிட்டீங்கன்னு தனியா சிரிக்க முடியுமா? அப்புறம் என்னை எல்லாரும் எப்படி பார்ப்பாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.
  நிறைய பேருக்கு சிரிச்சாலே எதோ அது வேலையில்லாதவங்க செய்யக்கூடிய செயல் மாதிரி தான் பார்க்கிறார்கள். எப்பவும் சதா எதையாவது யோசனை செய்து கொண்டே , அவங்க வேலைய பார்ப்பது தான் கடமை என்றும் நினைக்கிறார்கள்.
  நம்மளாவது ஏதாவது ஜோக் சொல்லி சிரிக்க வைக்கலாம் என்றால், ஒரு அசட்டு சிரிப்பு செய்து நம்மை கூட கொஞ்சம் வெறுபேத்துகிறார்கள்.
  நான் இப்படி புலம்புறதிலேயிருந்து எவ்வளவு பாதிக்கபட்டிருக்கிறேன் உங்களுக்கே புரியும்.

  Like

 4. நன்றி குந்தவை 🙂 உண்மையிலேயே உங்க புலம்பலைப் பார்த்து எனக்கு சிரிப்பு வருது 😀

  Like

 5. Hi anna

  இப்ப தான் புரியுது… அதனாலதான் நீங்க போட்டோல எப்பவும் சிரிச்சுட்டே இருக்குறீங்களோ…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s