Man On Wire : விமர்சனம்

6236இத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம்.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப் பற்றியோ, அதன் பின்னணி பற்றியோ ஏதும் பேசாமல் முடிவுறும் தருவாயிலிருந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கம்பி கட்டி நடந்த ஒருவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் படம் பரவசமூட்டுகிறது.

1974ல் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே நடந்த நிகழ்ச்சி எப்படி சாத்தியமாயிற்று, என்னென்ன சிக்கல்கள் இருந்தன என்பதையெல்லாம் உரையாடல்கள் வழியே திரும்பிப் பார்க்கிறார் நாயகன்.

இளமையிலேயே கழைக்கூத்தாடி போல நீளமான குச்சியுடன் விறைப்பாய்க் கட்டியிருக்கும் கம்பியின் மீதும் கடிற்றின் மீதும் நடந்து திரிவது நாயகனின் பொழுது போக்கு.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க வர்த்தகக் கட்டிடத்தைக் குறித்த செய்தியைப் பத்திரிகையில் படித்தவுடன் அதில் ஏறுவதே வாழ்க்கை இலட்சியம் என்றாகிவிட்டது.

அதை எப்படி நிறைவேற்றினார் என்பதை படபடப்புடன் பதிவுசெய்திருக்கின்றனர்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், கருப்பு வெள்ளை வழியே பயணிக்கும் பழைய நிகழ்ச்சிகள் திடீர் திடீரென நிகழ்காலத்துக்குத் தாவி உரையாடல் அறைக்கு வருகிறது.

அங்கிருந்து மீண்டும் பழைய காலத்துக்குள் புகுந்து விடுகிறது. இப்படி மாறி மாறி பயணிக்கும் இடங்கள் வெகு சிரத்தையாக, சற்றும் தொய்வின்றி அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.

அன்றைய நியூயார்க் தெருக்கள், பல நூறு பவுண்ட் எடையுள்ள பொருட்களை WTC யின் உச்சிக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிரமம், பாதுகாவலர்களின் கண்களின் மண்ணைத் தூவ எடுத்துக் கொள்ளும் பொறுமை என வெகு நேர்த்தியாய் நகர்கிறது படம். ஆறு வருடமாய் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது இந்த நடைபயணம் என்பது சிலிர்ப்பூட்டுகிறது!

நியூயார்க் நகரின் அச்சுறுத்தும் அதிகாலைக் குளிர், ஆளையே தூக்கி வீசும் காற்று, ஐந்தடிக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதையே கணிக்க முடியாத மேக மூட்டம் என அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் படபடப்பை ஏகத்துக்கு எகிற வைக்கிறது.

ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொண்டு மறு கட்டிடத்துக்கு கயிறைக் கொண்டு செல்ல அம்பில் தூண்டில் நூலைச் சுற்றி அடுத்த கட்டிடத்துக்கு எய்வது, அதை எதிர் கட்டிடத்தில் காணாமல் நிர்வாணமாய் மாடி முழுக்க அலைவது (நூல் உடலில் பட்டால் உணர வேண்டும் என்பதற்காக ), கட்டிடத்தின் நுனியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அம்பைத் தேடி எடுப்பது என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத காட்சிகள் தொடர்கின்றன.

கடைசியில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டினால் அது வளைந்து தொங்குகிறது ! இத்தனை வருட உழைப்பு, திட்டமிடல் எல்லாம் வீணா என வினாடி நேரம் திகைத்துப் போகின்றனர். எனினும், இலட்சியம் வெல்கிறது

ஒரு வழியாக எல்லாம் சரியாக முடிய, காலை 7 மணி கடந்தவுடன் கயிற்றில் காலை வைத்து நடக்கத் துவங்குகிறார்.

பயம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். “இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால்..அ து எத்துணை இனிமையான மரணம். இலட்சியத்தின் உச்சியில் இருக்கும் போது உதிர்வதில் எத்தனை ஆனந்தம்” என்பதே நாயகனின் கருத்து.

நாற்பத்து ஐந்து நிமிடங்கள் கயிற்றின் மேல் எட்டு முறை அங்கும் இங்கும் நடந்து, நடனமாடி, கம்பியின் அமர்ந்து, படுத்து என நாயகனின் செயல்கள் வீதியில் கவனிக்கத் தொடங்கிய கூட்டத்தினரையும், மாடியில் அவரைக் கைது செய்யக் காத்திருந்த காவலரையும் ஸ்தம்பிக்க வைக்கிறது !

இலட்சியம் நிறைவேற ஒரு வழியாய் காவல்துறையால் கைதுசெய்யப்படுகிறார் நாயகன்.

அறுபது வயது கடந்த நிலையில் இன்றும் கம்பியில் நடப்பதை நிறுத்தாத மனிதராய் அவரைக் காட்டி முடிகிறது படம். தொய்வின்றி இயக்கியதற்காக இயக்குனர் James Marsh அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். !

வாய்ப்புக் கிடைத்தால் தவற விடாதீர்கள்.

 

mow

8 comments on “Man On Wire : விமர்சனம்

  1. /உங்கள் விமர்சனம் படிக்கும் போதே படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது.//

    நன்றி ஜெயங்கொண்டான் 🙂

    Like

  2. உங்கள் விமர்சனம் படிக்கும் போதே படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.