காஞ்சிவரம் : எனது பார்வையில்

kanchivaram-2

காஞ்சிவரம். ஒரு தொழிலாளியின் இயலாமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் காவியம். ஏழையாய்ப் பிறந்தவன் இந்த உலகில் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட கொண்டிருக்கக் கூடாதா ? என நெஞ்சில் ஈட்டிக் கேள்விகளை இறக்கி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்சன்.

வாழ்நாள் முழுதும் உழைத்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடியாத ஒரு நெசவாளியின் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும், அந்த இயலாமையின் உச்சமும், மகள் மீதான நேசத்தின் உச்சமும் சேர்ந்து வேங்கடம் எனும் திறமையான தொழிலாளியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன என்பதை கனக்கக் கனக்க திரைப்படமாய் தந்திருக்கிறார் பிரியதர்ஷன்.

1948ம் ஆண்டு சிறையிலிருந்து முகம் முழுக்க கனமான சோகத்துடன் ஒரு மழையிரவில் அழைத்து வரப்படும் நாயகன், பிரகாஷ்ராஜ், தனது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வருகிறார்.

திருமணம், அழகான மனைவி, மிகவும் அழகான குழந்தை, பாசமான வாழ்க்கை என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளினூடே வலியைக் கலந்து செல்லும் நாயகன் வேங்கடத்தின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுர நெசவாளர்களின் பட்டுப் போன வாழ்க்கையின் இழைகளை நெய்திருக்கிறது.

மகளுக்குப் பட்டு வாங்க வைத்திருந்த பணம் சகோதரியின் கணவனுக்கு வரதட்சணையாய் சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை வாயில் நுழைத்துத் திருடி வந்து, சேமித்து, பட்டு நெய்யத் துவங்கும் வேங்கடம் திசை தெரியாத பறவையின் அழுகுரலாய் மனதுக்குள் சலனமேற்படுத்துகிறார்.

மோட்டார் வாகனத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முன்னால் கொஞ்சம் கூட வேகம் குறைக்க விரும்பாக கர்வம் கொண்ட முதலாளியின் வேகப் பயணம், கூலியைக் கூட்டிக் கொடுக்க மறுத்து மைசூரிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் முதலாளித்துவ ஆணவம், மகளின் திருமணத்துக்காக எப்படியாவது தனது போராட்டத்தை தானே நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் இயலாமையின் கைப்பிள்ளையான நாயகன் என நெய்யப்பட்ட காட்சிகள் காஞ்சிவரத்தை வலுவடைய வைக்கின்றன.

தன் ஆயுள் காலம் முழுதும் உழைத்தும் பிரிய மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் போன ஒரு நெசவாளியின் கனவுகள் மனதை சலனப்படுத்துகின்றன.

உயிரை மட்டும் சுமந்து நகரமுடியாத ஒரு பொம்மையாய் கிடக்கும் மகளுக்கு உதவ யாருமே இல்லாமல் போக, உருகி உருகி, கண்களிலும் முகத்திலும் ஏக்கத்தைக் காட்டி, வேறு வழியின்றி சோறூட்டி மகிழ்ந்த மகளுக்கு விஷமூட்டி கருணைக் கொலை செய்கிறார் நாயகன் என படத்தை முடிக்கும் போது திகைத்துப் போகிறது மனசு.

பிரகாஷ்ராஜ் இயல்பாகச் செய்திருக்கிறார். அவரை விட பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.

மழைநேர வாகனப் பயணத்தை இருட்டில் படமாக்கியிருக்கும் திருவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. கூடவே இருட்டான படப்பிடிப்பு என்பது 1948ம் ஆண்டைய சூழலை சிரமப்படுத்தாமல் கொண்டு வர இயக்குனர் கைக்கொண்டிருக்கும் உத்தி எனவும் கொள்ளலாம். எனினும் சாபுசிரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இளையராஜா. அவர் இல்லாமல் போன குறை படம் முழுக்க தெரிகிறது. சோகமான காட்சிகளில் ஒலிக்க வேண்டிய இசை மலையாளச் சாயலில் வலுவிழந்து போனது ஒரு குறை. ஒரு பாடலில், ஒரு மௌனத்தில், ஒரு இசைக் கோர்வையில் அழ வைக்க வேண்டிய காட்சிகள் ஏராளம் இருந்தும் இசையின் வலிமை குறைவினால் அது இயலாமல் போகிறது.

முன்பெல்லாம் பிரியதர்ஷனின் மலையாளப் படங்களெனில் எந்த விதமான விமர்சனங்களும் எதிர்பார்க்காமல் செல்வதுண்டு. அதிலும் மோகன்லாலுடன் இணைந்து பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் எல்லாமே குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம். அந்தப் படங்களின் எந்த சாயலுமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் கலையும் இயக்குனருக்கு இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்திருக்கிறது.

காஞ்சிவரம், நிஜமாய் இருக்கக் கூடாதே என பதை பதைக்க வைக்கும் ஒரு தமிழ்க்காவியம்.

7 comments on “காஞ்சிவரம் : எனது பார்வையில்

  1. //இந்தத் திரைப்படத்தைப் பார்த்த போது, “இது உண்மையாக இருந்து விடக் கூடாது..” என்றே மனம் நினைக்கிறது… மிகவும் கொடுமை!…
    பிரகாஷ்ராஜ் நடிப்பில் யதார்த்தம்… திருடிய நூலை அவர் தம் வாய்க்குள் அடைந்து மறைப்பதைப் பார்க்கும் போது எமக்கே தப்பு செய்வதைப்போல் நெஞ்சு “திக் திக்” என அடித்துக் கொள்கிறது… நடிப்பிலும் அவர் பிரகாசிக்கும் ஒரு ராஜா தான். நன்றி சேவியர்.//

    உண்மை ரெஜி.. வருகைக்கு நன்றி.

    Like

  2. இந்தத் திரைப்படத்தைப் பார்த்த போது, “இது உண்மையாக இருந்து விடக் கூடாது..” என்றே மனம் நினைக்கிறது… மிகவும் கொடுமை!…
    பிரகாஷ்ராஜ் நடிப்பில் யதார்த்தம்… திருடிய நூலை அவர் தம் வாய்க்குள் அடைந்து மறைப்பதைப் பார்க்கும் போது எமக்கே தப்பு செய்வதைப்போல் நெஞ்சு “திக் திக்” என அடித்துக் கொள்கிறது… நடிப்பிலும் அவர் பிரகாசிக்கும் ஒரு ராஜா தான். நன்றி சேவியர்.

    Like

  3. //இந்த விமர்சனம் படித்த பிறகு ஆடை அசிங்கமென்றும் நிர்வானம் மேல் என்றும் தோன்றுகிறது…//

    ஜெயமோகனை ரொம்ப படிக்கிறீங்களோ 😀

    Like

  4. இந்த விமர்சனம் படித்த பிறகு ஆடை அசிங்கமென்றும் நிர்வானம் மேல் என்றும் தோன்றுகிறது…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.