12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !

12-angry-men-1-800“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை.

ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம்.

வினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன்கள் புதிது புதிதாய் இருக்கவேண்டும் இல்லையேல் பார்வையாளனுக்குப் போரடிக்கும் என்றெல்லாம் சொல்லப்படும் இலக்கணங்களை உடைத்துக் காட்டும் பல திரைப்படங்கள் மேலை நாடுகளில் தான் பிறப்பெடுக்கின்றன என்றே கருதுகிறேன். போன்பூத் – சில வருடங்களுக்கு முன்பு அந்த வகையில் பிரமிப்பூட்டிய படங்களில் ஒன்று.

சரி, 12 Angry Men படத்தின் கதை தான் என்ன ?

தந்தையைக் கொலை செய்து விட்டான் எனும் குற்றச் சாட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான் சேரியில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் கொலை செய்திருக்கிறான் என்பதை நம்பி விடுகிறது நீதி மன்றம்.

நேரில் பார்த்த பெண்ணின் சாட்சியம், கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, கேட்ட சத்தங்கள், இளைஞன் அறையிலிருந்து ஓடி வருவதைப் பார்த்த முதியவர் என சாட்சியங்கள் எல்லாம் இளைஞன் குற்றவாளி என அடித்துச் சொல்கின்றன.

போதாக்குறைக்கு அந்த நேரத்தில் படம் பார்க்கப் போனேன் எனச் சொல்லும் இளைஞனுக்கு அந்த படத்தின் பெயரோ, கதையோ, கதாபாத்திரங்களோ எதுவும் நினைவில் இல்லை. பட்ட காலிலேயே படும் என்பது போல அவனிடமிருந்த கத்தியும் அந்த இரவில் காணாமல் போய்விடுகிறது.tn2_12_angry_men_4

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்பா – நீ குற்றவாளிதான் என நீதிமன்றம் ஏறக்குறைய முடிவெடுத்து விடுகிறது.

இனி இந்த வழக்கைக் கவனித்து வரும் 12 நடுவர்கள் இவன் தான் குற்றவாளி அல்லது நிரபராதி என்று ஒரு தீர்ப்பை எழுதவேண்டும் அவ்வளவு தான் பாக்கி. இந்தப் பன்னிரண்டு பேருமே ஒத்த முடிவுடன் இந்த முடிவை எடுக்கவேண்டும் என்பது தான் சட்டம்.

அந்த பன்னிரண்டு பேரும் முன்பின் அறிமுகமற்றவர்கள். புழுக்கமாய் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்து, “சரி சரி.. இவன் குற்றவாளி தானே. சீக்கிரம் முடிவெடுத்து விட்டு இடத்தைக் காலி செய்வோம்” என அமர்ந்தால், ஒருவர் மட்டும் (கதாநாயகன் ஹென்ரி பாண்டா ) இவன் நிரபராதியாய் கூட இருக்கலாமே என ஒரு வாதத்தை முன்வைக்கிறான்.

ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போலவும், தீண்டத்தகாதவனைப் போலவும் மற்ற பதினோரு பேரும் அவனைப் பார்க்கிறார்கள். “சரி.. என்ன தான் சொல்ல வரே ?” என அலட்சியமாய் கேட்கும் அவர்களிடம் “இது ஒரு இளைஞனுடைய வாழ்க்கைப் பிரச்சனை. எனவே இதைப் பற்றி நாம் கொஞ்ச நேரம் விவாதிப்போம்” என்கிறான்.

இளைஞன் கொலையாளி என்பதை சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நம்பும் பதினோரு பேருமாக கதாநாயகனை ஒத்துக் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கி, கடைசியில் எல்லோருமே இளைஞன் நிரபராதியாய் இருக்கலாம் என  படம் நிறைவுறுகிறது.

அந்த விவாதக் களமே முழு திரைப்படமும். கொலையோ, கொலை நிகழ்ந்த இடங்களோ, நபர்களோ யாருமே காட்சிகளாய் காட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கதை வசனமே கதையை விளக்குவதும், நகர்வதும், நிற்பதும், ஓடுவதும், அழுவதும் என எல்லா வேலைகளையும் செய்கிறது.

ஒரு அறைக்குள் விவாதிக்கும்போது தெரியவரும் சங்கதிகளும், சந்தேகங்களும் ஏன் உண்மையான வழக்கு விசாரணையில் எழவில்லை எனும் நியாயமான கேள்விக்குப் பதிலாகத் தான் அந்த இளைஞன் சேரியில் வசிப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்பது நுட்பமான இழை.

பன்னிரண்டு வேறுபட்ட குணாதிசயமுடைய நபர்களின் இயல்புகளையும், அவர்களுடைய சிந்தனை ஓட்டங்களையும், சிக்கல்களையும், சண்டைகளையும் சற்றும் போரடிக்காமல் ஒன்றரை மணி நேரம் வார்த்தைகளாலேயே படமாக்கியிருக்கும் இயக்குனர் சிட்னி லூமெட் பிரமிக்க வைக்கிறார்.

இந்தத் திரைப்படம் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் இதன் அசாத்தியத் தாக்கம் காரணமாக திரைப்படமாக வெளியிடப்பட்டதாம் ( இதை எழுதும் போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி திரை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்த டூயல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது )

1957ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் தாண்டிய இன்றைய நவீன திரைப்படங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கிறது என்றால் மிகையல்ல.

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்

12 comments on “12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !

  1. //vd market-il kidaikkutha,
    yaarvathu ithu pol nalla padangalai tamil-il dub panni release pannalame

    //
    டிவிடி கிடைக்கிறது. தமிழில் டப் பண்ண முயன்றார்கள், தமன்னா கால்ஷீட் கிடைக்கலயாம். ( தமன்னா எதுக்கு என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் 🙂 )

    Like

  2. நானும் இந்த படத்தினைப் பார்த்து அதிசயத்திருக்கின்றேன். திரும்பவும் ஒரு முறை பார்க்க வேண்டும் !!!!!!

    Like

  3. dvd market-il kidaikkutha,
    yaarvathu ithu pol nalla padangalai tamil-il dub panni release pannalame

    Like

  4. அருமையான பதிவு…உங்கள் பதிவு இந்த திரை படத்தை பார்க்க தூண்டுகிறது

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.