நிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?

 earthquake1
சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவு தான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம் எனும் ராட்சஸன். சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. இந்தியாவை சட்டென சுனாமி பீதி தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.

நிலநடுக்கங்களை எதிர்கொள்வது குறித்து போதுமான அறிவு மக்களிடம் இல்லை. அது தான் இழப்புகள் அதிகமாகக் காரணம் என்கின்றன ஆய்வுகள். நில நடுக்கம் குறித்த விழிப்புணர்வும், என்ன செய்யவேண்டும் எனும் தெளிவும் இருந்தால் நிலநடுக்கத்தை மன நடுக்கமில்லாமல் எதிர்கொள்ளலாம்.
நிலநடுக்கம் வரும் முன் கவனிக்க வேண்டியவை.

• நில நடுக்கம் போன்ற ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனும் எண்ணம் இருக்க வேண்டும். அப்போது தான் திடீர் பதட்டங்களும், அதிர்ச்சிகளும் தவிர்க்க முடியும்.

• வீட்டை இன்சூர் செய்து விடுங்கள்.

• கண்ணாடிப் பொருட்களையும், கனமான பொருட்களையும் அலமாராக்களின் கீழ் அறைகளில் வையுங்கள். கிரைண்டரைத் தூக்கி பரணில் வைக்கும் விபரீதங்கள் வேண்டாம்

• வீட்டிலுள்ள அலமாராக்கள், கபோடுகள் இவற்றையெல்லாம் பூட்டியே வைத்திருங்கள். நிலநடுக்கம் அலமாராக்களைத் திறந்து உள்ளிருப்பதையெல்லாம் வெளியே எறியும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சமையலறை கபோடுகள் ரொம்ப வழவழப்பில்லாததாய் இருந்தால் நல்லது. சிறு அதிர்வுகளுக்கெல்லாம் பொருட்கள் கீழே விழாமல் இருக்கும்.

• ஒரு பெட்டியில் முக்கியமான ஆவணங்களைப் பத்திரமாய் வையுங்கள். பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்ட், அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பேப்பர்ஸ், மருத்துவ ரிப்போர்ட் போன்றவை அதில் இருக்கட்டும். முக்கியமாக எளிதில் எடுக்கக் கூடிய இடத்தில் இதை வையுங்கள்.

• ஒரு முதலுதவிப் பெட்டியும் தயாராய் இருக்கட்டும். டார்ச் லைட், பாட்டரி ரேடியோ, முதலுதவிப் பொருட்கள், போர்வை போன்றவை அதன் குறைந்த பட்சத் தேவைகள்.

• படுக்கையின் அருகிலோ, அமரும் இடங்களின் மேலேயோ கனமான புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எதையும் வைக்காதீர்கள்.

• செல்போன்களை சார்ஜ் செய்து, அதற்குரிய இடத்திலேயே வைத்திருங்கள். அவசர நேரத்தில் எங்கே வைத்தோம் என பதற வேண்டி வராது. அதே போல வீட்டுச் சாவிகளையும் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருங்கள். அவசர நிமிடத்தில் வாசல் சாவியை எங்கே வைத்தோம் என தேடும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

• அவசர உதவி எண்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். குறிப்பாக டாக்டர், போலீஸ், தீயணைப்பு , மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றுக்கான எண்கள்.

• வாட்டர் ஹீட்டர், புத்தக அலமாரி போன்றவை சரியாய் மாட்டப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெட்ரோல், மண்ணெண்ணை போன்ற எரிபொருட்களையெல்லாம் நெருப்புக்கு வெகு தூரத்தில் வையுங்கள்.

• நிலநடுக்கம் வந்தால் வீட்டுக்கு வெளியே எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே வீட்டில் கலந்துரையாடுங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்த பட்ச முதலுதவி வழிகளையும் சொல்லிக் கொடுங்கள். அதே போல நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

நிலநடுக்கம் நிகழும் போது கவனிக்க வேண்டியவை.

• நிலநடுக்கம் வந்து விட்டது, வீடு ஆடுகிறது எனில் பதட்டப்படாதீர்கள். தைரியம் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியேறுவதை விட வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பானது.

• நல்ல கனமான மேஜை, பெஞ்ச், கட்டில், கிச்சன் மேடை என ஏதாவது ஒன்றின் அடியில் பதுங்கிக் கொள்ளுங்கள். சன்னலருகேயோ, கதவின் அருகேயோ நிற்காதீர்கள். கண்ணாடிகள் உடைந்து சிதறி காயம் ஏற்படலாம்.

• வீட்டை விட்டு வெளியேறுவது அதிகபட்ச பாதுகாப்பு என உறுதியாகத் தெரிந்தால் வெளியேறலாம். வெளியேறும் போது கண்களையும் பின்னந்தலையையும் பாதுகாப்பாய்ப் பிடித்துக் கொள்வது அவசியம். இல்லையேல் பறந்து கொண்டிருக்கும் ஏதேனும் பொருள் பட்டு காயம் ஏற்படலாம்.

• எப்படியானாலும் நிலநடுக்கம் நடந்து கொண்டே இருக்கும் போது, அதாவது வீடு ஆடிக்கொண்டே இருக்கும் போது ஓடவே ஓடாதீர்கள். ஒரே இடத்தில் இருங்கள். அங்கும் இங்கும் ஓடுவதால் தான் அதிக காயங்கள் ஏற்படுவதாய் ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன

• சமைத்துக் கொண்டிருக்கிறீர்களெனில் உடனடியாக அடுப்பை அணைத்துவிடுங்கள்.

• நில நடுக்க காலத்தில் எக்காரணம் கொண்டும் லிப்டைப் பயன்படுத்தாதீர்கள்.

• வீட்டுக்கு வெளியே வந்துவிட்டீர்களெனில், வெட்ட வெளியில் நில்லுங்கள். அருகில் கட்டிடம், மரங்கள்,டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

• ஒரு வேளை நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களெனில், உடனடியாக பாதுகாப்பான இடத்தில் வண்டியை நிறுத்துங்கள். எஞ்சினை அணைத்து விட்டு வண்டிக்குள்ளேயே அமைதியாய் இருங்கள். எலக்ட்ரிக் கம்பங்கள், பாலங்கள், போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்.

• வீட்டில் செல்லப்பிராணி இருந்தால் அதைக் கையில் வைத்திருக்கவேண்டாம். விலங்குகள் பயந்து போய் கடித்து விட வாய்ப்பு அதிகம்.  

நிலநடுக்கம் முடிந்த பின் கவனிக்க வேண்டியவை.

• யாருக்கேனும் காயம் பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். தேவையான முதலுதவி செய்வது அவசியம். படுகாயம் அடைந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அடிக்கடி இடம் மாற்றாதீர்கள். காயமும், விளைவுகளும் விபரீதமாகிவிடக் கூடும்.

• முதியோர்களையும், குழந்தைகளையும் கவனியுங்கள். அவர்களுக்கு தெம்பூட்டுங்கள்.

• நிலநடுக்கம் மீண்டும் வரக் கூடும் எனும் எண்ணம் இருக்கட்டும். அவசரப்பட்டு வீட்டுக்குள் நுழைந்துவிடாதீர்கள். இரண்டாவது நடுக்கத்தில் வீடுகள் விரைவாய் உடையக் கூடும்.

• ஷூவோ, செருப்போ அணிந்து கொள்ளுங்கள். கண்ணாடி, கம்பி, கல் போன்றவை குத்தி காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

• இடிபாடுகளைச் சுற்றி வேடிக்கைக் கூட்டம் போடுவது, சாலைகளை அடைத்துக் கொண்டு கும்பல் சேர்வது இவற்றை தவிருங்கள். மீட்பு பணிகள் தாமதமாகக் கூடும்.

• மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாலும் கவனமாய் இருங்கள். கீறல்கள் இருக்கிறதா என கவனியுங்கள். வீட்டிலுள்ள பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம். அதிலும் கபோடுகள் திறக்கும் போது இரட்டைக் கவனம் தேவை.

• நெருப்பு பற்ற வைக்காதீர்கள், காஸ் எங்கிருந்தாவது கசியலாம். எரிபொருட்கள் சிதறிக் கிடக்கலாம் ! கவனம் தேவை.

• மின் வயர்களைத் தொடுவதோ, மின் சுவிட்களைப் போடுவதோ, வேண்டாம்.

• ஒருவேளை நீங்கள் இடிபாடுகளிடையே மாட்டிக் கொண்டு விட்டால் பயப்படாதீர்கள். அவசரப்பட்டு வெளியே வர முயலாதீர்கள். அது ஆபத்தை அதிகரிக்கும். மிரண்டு போய் கத்தாதீர்கள். கத்தினால் நச்சுவாயுவைச் சுவாசிக்கவும், இருக்கும் சக்தியை இழக்கவும் அது காரணமாகிவிடும். அருகிலிருக்கும் சுவரில் கைகளால் தட்டி ஒலி எழுப்புங்கள். கையில் ஒருவேளை விசில் இருந்தால் நல்லது ! ஊதுங்கள் !

• ஒருவேளை நீங்கள் கடற்கரை அருகில் இருந்தால் கவனம் தேவை. பெரிய அலை வரக்கூடும்

• மிக முக்கியமாக விஷயம். எதையும் ஊதிப் பெருசாக்கி பரபரப்பையும், கிலியையும் மக்களிடையே கிளப்பி விடாதீர்கள் !

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டால், பெரிய பெரிய நடுக்கங்களைக் கூட தைரியமாய் எதிர்கொள்ளலாம்.

தமிழிஷில் வாக்களிக்க…

9 comments on “நிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?

  1. இனிய நண்பருக்கு,

    கருத்தாளமிக்க, அனைவரும் கவரத்தக்க விழிப்புணர்வு கட்டுரை இது. அனைவரும் நகலெடுத்து பத்திரமாய் பாதுகாக்கும் பயனுள்ள கட்டுரை பாராட்டுக்கள் கட்டுரைக்கு மட்டுமல்ல தமிழ்மனத்தில் இந்த வார நட்சத்திரம் ஆனதுக்கும் தான்

    Like

  2. /ஹாய் சேவியர், எப்படி இருக்கீங்க…முதலில் வாழ்த்துகள் தமிழ்மணத்தில் நட்சத்திரமானதுக்கு.

    நல்ல பதிவு. மீண்டும் வாழ்த்துகள்
    //

    நன்றி நாஞ்சில் சார் !

    Like

  3. சேவியர்!,
    சமூகநலனில் நீங்கள் காட்டும் அக்கறைக்கு உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

    உங்களைப்போல் எல்லோரும் இருந்துவிட்டால், பூமிப்பந்து மகிழ்வுடன் சுழலும்…
    அன்பு வற்றிவிட்டதால் தான் உலகெங்கும் யுத்தங்களும் கொலைகளும் ஓசோனின் உடைவும்… இது போதாதென்று இயற்கையின் சீற்றம் வேறு!

    //சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. //

    இங்கு ஒரு சிறிய திருத்தத்தைக் கூற என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்….

    சில நாட்களுக்கு முன் அதாவது, 11.08.2009 இல் அந்தமான் தீவுகளிலும் அதே நாள் சில நிமிடங்கள் கழித்து ஜப்பானிலும் வந்த நிலநடுக்கம் சுமார் 6.5 என்ற ரிக்டர் அளவில் தான் ஏற்பட்டது.
    2004 இல் சுனாமியின் (ஆழிப் பேரலை) போதுதான் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    (ரிக்டர் அளவு 6 என்பது ரிக்டர் அளவு 5 ஐப்போல பத்து மடங்கு பெரியது.
    ரிக்டர் அளவு 7 என்பது ரிக்டர் அளவு 6 ஐப்போல பத்து மடங்கு பெரியது;
    ரிக்டர் அளவு 5 ஐப்போல 100 மடங்கு பெரியது)

    எனவே இந்த நில நடுக்கமானது 2004 இல் வந்த நில நடுக்கத்தில் சுமார் ஆயிரத்தில், “ஒரு” பங்காக இருந்ததால் தான் உயிர்ச்சேதங்கள், பொருள் சேதங்கள் என்பன தற்போதைய நிலநடுக்கத்தில் ஏற்படவில்லை.
    (தவறிருந்தால் மன்னித்துத் திருத்தவும்.)

    சமுதாயத்துக்குப் பயன்தரும் உங்கள் பதிவுக்காகத் திரும்பவும் என் நன்றிகளும் வாழ்த்துகளும் சேவியர்!.

    Like

  4. ஹாய் சேவியர், எப்படி இருக்கீங்க…முதலில் வாழ்த்துகள் தமிழ்மணத்தில் நட்சத்திரமானதுக்கு.

    நல்ல பதிவு. மீண்டும் வாழ்த்துகள்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.