சிறுகதை : அண்டி ஆபீஸ்

c1சுமதிக்கு உடல் முழுதும் மண் புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருந்தது. இப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே கூசியது அவளுக்கு.

குடிசை போன்ற தனது வீட்டின் உள் அறையில் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்து அழுது கொண்டிருந்தாள். உலகமே இருட்டானதுபோல் இருந்தது அவளுக்கு. நிமிர்ந்து பார்த்தாள்.

கூரை தனது சக்தியையும் மீறி உழைத்ததன் அடையாளமாக நைந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய காற்றோ, ஒரு சிறிய மழையோ அழித்து விடக் கூடிய நிலையில் பரிதாபமாய் பல்லிளித்தது அது.

மொத்தமே ஒரு வராண்டாவும், இரண்டு அறைகளும் கொண்ட குடிசை அது. இன்னும் கலாச்சாரம் இற்றுப் போகவில்லை என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு திண்ணை. அதுவும் சாணம் மெழுகப்பட்டிருந்த திண்ணை. திண்ணையை ஒட்டியிருந்த சுவற்றில் பலகைகள் இல்லாத ஒரு சன்னல். வறுமையின் நிலையை உடைந்து போன துணுக்குகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அது.

தரை சாணத்தினால் மெழுகப்பட்டிருந்தது. குண்டும் குழியுமாக கிடந்தாலும் ஒரு அதீத சுத்தம் அந்த வராண்டாவில் இருந்தது. வராண்டாவிலிருந்து வீட்டுக்கு வெளியே இறங்கினால் படியாகப் ஒரு கருங்கல். அதைத் தாண்டி வலது புறம் இருந்த தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த கருப்பு நிற ஆடு மட்டும் தான் அவர்களுடைய ஒரே சொத்து.

வீட்டின் இடது புறமும் வலது புறமும் மூன்றடியோ நான்கடியோ இடம் உண்டு. பின் பக்கம் பள்ளத் தாக்கு, முன்பக்கம் மண் சாலை இரண்டுக்கும் இடையில் கிடக்கும் நிலம் இது. பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்பதனால் எப்போது இடிக்கப்பட்டு நிராயுதபாணியாய் நிற்க வேண்டிவருமோ என பயத்துடனே வாழ வேண்டிய கட்டாயம்.

அம்மா இன்னும் வரவில்லை. ஏமானின் வயலில் களை பிடுங்க போயிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும் ? மகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா ? பொத்திப் பொத்தி சிறகின் கீழே இரண்டு பெண்களையும், ஒரு பையனையும் வளர்ப்பவர்கள் அவர்கள்.

“நமக்கு எதுக்கு மோளே சொத்து ? நம்மளுக்கு கடவுள் உண்டு, எனக்கு நீங்க உண்டு, உங்களுக்கு நான் உண்டு. வேற என்ன வேணும் ? ஏதெங்கிலும் காச்சி பறக்கி குடிச்சோண்டு சந்தோசமா இருக்கணும்” வறுமையின் உக்கிரம் உலுக்கினாலும் தாய் இதைத் தான் அடிக்கடி சொல்வாள்.

குழந்தைகளை மிகப்பெரிய சொத்தாக பாவிக்கும் ஒரு அதீத பாசமுள்ள தாய் அவள். சுமதிக்குத் தெரிந்து அம்மா அழுததில்லை. பட்டினியாய் கிடந்ததுண்டு, பக்கத்து வீடுகளில் கடன் கேட்கப் போய் அவமானப் பட்டதுண்டு, கிழிந்த துணியை மட்டுமே உடுத்தி நடந்ததுண்டு. ஆனால் அழுததில்லை.

பிள்ளைகள் யாரும் சுமதியின் தாய் கனகம் அழுததைப் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. இருப்பதைப் பிள்ளைகளுக்குக் உண்ணக் கொடுத்துவிட்டு. எல்லோரும் அயர்ந்து தூங்கியபின் விடிய விடிய விழித்திருந்து அவள் அழுத தினங்களே அனேகம்.

முந்திரி ஆலையில் மேஸ்திரி பணி செய்து கொண்டிருந்தவனுடைய வலையில் விழுந்து, அவனை நம்பி வாழ்க்கைப் பட்டதும். அந்த வாழ்க்கை பட்டுப் போனதும் அவளுடைய நினைவுகளின் அழியாமல் கனன்று கொண்டிருப்பதை அவளுடைய அழுகை அவ்வப்போது அறிவிக்கும்.

கனகத்தின் இளமைக் காலத்தில் சந்தையில் கனகத்துக்காகவே துணி வாங்கி, வளையல் வாங்கி, வாட்ச் வாங்கி தனிக்கவனம் எடுப்பதாய் பாவித்து அவளை வசீகரித்தவன் தங்கன். தன்னை ஒரு ஆண் நன்றாகக் கவனித்துக் கொள்கிறானே, இவனே கணவனாய் அமைந்து காலம் முழுதும் குடும்பத்தை இப்படியே கவனித்துக் கொண்டால் எத்தனை நன்றாய் இருக்கும் என எல்லா பெண்களையும் போலவே கனகமும் நினைத்தாள். திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்பு ஆரம்பித்த வாழ்க்கையும் துவக்க வருடங்களில் அழகாய் தான் இருந்தது. ஆனால் நீடிக்கவில்லை.

அவனுடைய தேவை வனப்பான அவளது உடல் என்பது அவளுக்கு விரைவிலேயே புரிந்து போய் விட்டது. பேசவும், கவனிக்கவும், சோகத்தைப் பகிரவும் துணையாய் வருவான் என நினைத்தவன் சுமதி பிறந்தபின் நிறம் மாறித் தான் போனான். ஆலையில் பணி செய்யும் பெண்களிடம் சில்மிஷம் என்றும், வேறோரு பெண்ணை வைத்திருப்பதாகவும் வதந்திகள் வரும்போதெல்லாம் கனகம் அடுப்படியில் நின்று அழுவாள். பெருங்காற்றில் சிதறடிக்கப்படும் நாய் குடை போல சிதறுவாள்.

மூன்றாவது பையன் பிறந்த கையோடு தலை முழுகிப் போனவன் தான். தெக்கேக்கரை வாழைத் தோப்புக்கு அருகே ஒரு குடிசை கட்டி பொன்னம்மா என்பவளோடு வாழ்க்கை நடத்துவதாய் பேசிக் கொண்டார்கள். இந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை அவன்.

கனகம் உறுதியான மனசுக்காரி. எத்தனை அழுத்தமான சோகமான சூழல் எனினும் அதை பிள்ளைகளிடம் காட்டாமல் ஆனந்தமாய் இருப்பதாய் பாவிப்பாள். பொருளாதாரமா எல்லாம் ? ஒரு பிள்ளையின் சிரிப்பை ஒரு கோடி ரூபாய் தருமா என்பாள்.

பிள்ளைகளின் முன்னால் கனகம் அழுததில்லை என்றாலும், ஏறக்குறைய அழுகையின் விளிம்புக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வைத்து நன்றாகப் படித்துக் கொண்டிருந்த சுமதியை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல் படிப்பை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்த போது கனகம் கண்ணீர் விட்டாள். மகளின் முன் ஒரு குழந்தையாய் அவள் அழுதாள்.

“பத்தாங்கிளாஸ் படிக்கணுன்னா மருதங்கோடு போணும் மோளே. யூனிபாஃம் வேணும், புக் வேணும், பஸ்ஸுக்கு காசு வேணும்… அதெல்லாம் எப்படி மக்கா ? “ கனகம் கண்ணீர் விட்டதை சுமதி அன்று தான் பார்த்தாள்.

“வேண்டாம்மா… நான் பள்ளிக்கு போவல்ல… அண்டி ஆபீஸ் போறேன்” சுமதி சொன்னாள். அவளுடைய கண்களில் கல்வி கிடைக்காமல் போகிறதே எனும் ஆதங்கம் ஆழமரமாய் கிளர்ந்திருந்தது.

“அண்டி ஆபீஸா … அங்கேயெல்லாம் போவண்டாம். நான் பாக்கட்டு. ஏதெங்கிலும் வழி உண்டெங்கி உன்னை படிக்க வெப்பேன்” கனகம் சொன்னாள்.

அண்டி ஆஃபீஸ் என்பது முந்திரி ஆலைக்கு அந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் பெயர். ஏழைப் பெண்களின் உழைப்பை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுக்கும் இடம் என்று சொல்லலாம். பெரும்பாலும் மலையாள முதலாளிகளால் நடத்தப்படும் இந்த முந்திரி ஆலைகள் உழைப்பாளிகளை ஏளனப் பொருளாகவே பார்க்கிறது என்பதை கிராம மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் பிழைப்புக்கு வழியற்ற நிலையில் ஏதோ ஒரு கொழு கொம்பில் எட்டிப் பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டனர்.c2

உழைப்புக்கேற்ற ஊதியம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. பொதுவாக வாரம் ஐம்பது ரூபாய் முதல் முன்னூறு ரூபாய்கள் வரை கிடைக்கும். பாதியிலேயே படிப்பை விட்ட பெண்களுக்கும், குடிகாரக் கணவனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், வாய்ப்பு தருவது போல உழைப்பைச் சுரண்டுவது தான் பெரும்பாலும் இந்த முந்திரி ஆலைகளின் ஒரே நோக்கம்.

கேரளாவில் இப்படிப்பட்ட சுரண்டல்கள் நடந்தால் உடனே சிவப்புக் கொடிகளை ஆலைகளின் முன்னே நட்டு ஊர் மக்கள் போராட்டங்களில் இறங்கிவிடுவார்கள் என்பதால் கேட்பாரற்ற தமிழகத்தின் குமரிக் கரையில் கடை விரித்திருப்பவர்கள் தான் இந்த முந்திரி ஆலை முதலாளிகள். தமிழ் பெண்களின் உழைப்பை மலையாளக் கரைக்குக் கடத்தும் முதலாளிகள் என்றும் சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக மலையாளக் கரையை ஒட்டிய குமரி எல்லைகளில் வரிசையாக ஆலைகள் வைத்து ஏழைகளை ஏறக்குறைய நிரந்தர அடிமைகளாகவே ஆக்கி வைத்திருக்கின்றனர் இவர்கள்.

பண விஷயம் என்றில்லை. தொன்னூறு விழுக்காடும் பெண்களே இருக்கும் இந்த ஆலைகளில் நடக்கும் கலாச்சார அத்துமீறல்களும், பாலியல் தொந்தரவுகளும் வெளியே தெரிய வருவதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டு தான், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் எருமைத் தோலோடு வாழவேண்டும் என்னும் நிலமை தான் இங்கே வேலை செய்யும் தமிழகப் பெண்களுக்கு.

இது தான் சுமதி முந்திரி ஆலைக்குச் செல்வதாகச் சொன்னபோது கனகம் சட்டென மறுக்கக் காரணம். அவளுக்கும் கசப்பான அனுபவங்கள் முந்திரி ஆலையில் தானே ஏற்பட்டன. தங்கனை தனக்கு அறிமுகம் செய்து வைத்த முந்திரி ஆலை அல்லவா அது ! அதுவே பிற்காலத்தில் அவளுக்கு முந்திரி ஆலை மீது வெறுப்பு ஏற்படவும் காரணமாயிற்று.

வயலில் களை எடுப்பதும், நாற்று நடுவதும் என கனகத்தின் வாழ்க்கை திசை மாறிப் போனதற்கும் அவனே காரணம். களை எடுக்குமிடமும் ஒன்றும் பரிசுத்தமானதில்லை தான். வயலில் குனிந்து குனிந்தே வாழ்க்கையைப் போல முதுகும் மிகப்பெரிய கேள்விக்குறியாய் மாறிப் போகும்.

ஏமான் – என்றழைக்கும் முதலாளிகளின் வயலில் முதுகொடிய வேலை செய்தால் கிடைப்பது மதிய கஞ்சியும், இருபத்தெட்டு ரூபாயும். அதுவும் சமீப காலமாகத்தான் இருபத்தெட்டு ரூபாய். முன்பெல்லாம் ஆறு ரூபாய், எட்டு ரூபாய் என்று தான் சம்பளமே.

கஞ்சிக்காக ஏமானுடைய வீட்டுக்குப் போக வேண்டும். ஆனால் வீட்டுக்குள் நுழையக் கூடாது. வீட்டுக் கொல்லையில் வரிசையாய் அமர்ந்து தரையில் ஒரு பள்ளம் தோண்டவேண்டும். அந்தப் பள்ளத்தின் மேல் கையோடு கொண்டு வந்திருக்கும் வாழை இலையை வைக்க வேண்டும். அந்த வாழையிலை மீது கஞ்சி ஊற்றுவார்கள். பள்ளத்தில் சற்றே அமுங்கி சிறு பாத்திரம் போல இலை மாறிவிடும். நன்றாகப் பழுத்த பலா இலை ஒன்றை எடுத்து, எடுத்து வாகாய் வளைத்து ஈக்கில் ஒன்றைச் சொருகிமுடித்தால் கரண்டி ரெடி.

பனை ஓலையை பாத்திரம் போல வளைத்துக் கட்டி அதில் கஞ்சி ஊற்றிக் கொடுக்கும் ஏமான்களும் உண்டு. அதை கோட்டு பாளை என்று அழைப்பார்கள். ஏமான்களின் வீட்டுப் பாத்திரம் எதையும் உழைப்பாளிகள் தொட அனுமதி இல்லை. உழைப்பாளிகளின் வியர்வையோ, நிழலோ, சுவடோ, சுவாசமோ எதுவுமே ஏமான்களின் வீட்டுப்படியைக் கூட தீண்டக் கூடாது என்பதில் ஏமான்களும், முதலாளிகளும் எல்லாருமே ஒன்றாகவே இருந்தார்கள்.

பெண்கள் மேலாடையே போடக் கூடாது என்று இருந்த இடமல்லவா குமரி மாவட்டம். எத்தனை பெரிய போராட்டத்துக்குப் பின் அந்த அவமானங்கள் துடைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அவமானத்தின் தலைமுறையான தமிழ் பெண்களுக்கு இன்னும் மிச்சமிருக்கும் தாழ்வு மனப்பான்மை அவர்களுடைய தலைமுறை மரபணுக்களிலிருந்து வந்திருக்கக் கூடும். அப்படியே, முதலாளிகளின் கர்வமும் முந்தைய தலைமுறையினரிடமிருந்து வந்த மரபணுவின் வேலையாய் தான் இருக்க வேண்டும்.

கனகம் ஒரு பிடிவாதத்துக்காய் மகளை முந்திரி ஆலைக்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்னாலும் அதிலிருக்கும் நடைமுறை சாத்தியமின்மை அவளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. மூத்த மகள். அவள் மட்டுமாவது படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு தான் அவளை படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கனகம். ஊரில் இருந்த பள்ளிக் கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையே இருந்தது. அதனால் அதுவரை சுமதியைப் படிக்க வைப்பதில் வெற்றி கண்டிருந்தாள் கனகம்.

பத்தாம் வகுப்பு பெரிய படிப்பு. அதற்கு ஏதேதோ அரசு அங்கீகாரங்கள் வேண்டும் என்றெல்லாம் காரணம் காட்டி கிராமத்து பள்ளியில் பத்தாம் வகுப்பே இல்லாமல் போயிருந்தது. படிக்க வேண்டுமெனில் பக்கத்து கிராமத்துக்குச் செல்ல வேண்டும். அதற்குச் செலவாகும். அந்தச் செலவை எப்படித் தாங்குவது ? வயிறு பசித்துக் கதறும் போது அதை அடக்கவே திராணியற்றுக் கிடக்கும் போது மகளை எப்படிப் படிக்க வைப்பது ? கனகத்தின் மனதுக்குள் மிகப்பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

வழக்கம் போலவே, வயிறு வென்று, வாழ்க்கை தோற்றது.

சுமதி முந்திரி ஆலைக்குச் செல்லத் துவங்கினாள்.

தொன்னூறு விழுக்காடு பெண்களால் நிரம்பியவையே முந்திரி ஆலைகள். முதலில் வறுப்பு எனப்படும் முந்திரிகளை வறுக்கும் இடம். இந்த இடத்தில் தான் தோட்டங்களிலிருந்து பெறப்படும் முழு முந்திரிகளை சரியான பக்குவத்தில் வறுப்பார்கள். சற்று உடல் உழைப்பு தேவைப்படும் வேலை இது. எனவே இந்த வேலைக்கு ஓரிரு ஆண்கள் மட்டுமே நிற்பார்கள்.

c3வறுப்புக்குப் பின் முந்திரிகள் “கல்லடி” எனும் பிரிவுக்கு கொண்டு வரப்படும். இங்கே முழுக்க முழுக்க பெண்கள் வரிசையாக அமர்ந்து முந்திரிகளை கல்லில் வைத்து ஒவ்வொன்றாய்த் தல்லி உடைப்பார்கள். உடைத்து உள்ளே இருக்கும் முந்திரிப் பருப்பை தனியே எடுத்து வைக்க வேண்டும். இதுவே அவர்களுடைய பணி.

முந்திரியில் இருக்கும் அமிலம் கைகளிலும், தரையிலும் படாமல் இருப்பதற்காக வெள்ளை மண்ணைக் கொண்டு முந்திரியை புரட்டுவார்கள். கைகளில் இந்த அமிலம் படாமல் இருக்க எண்ணையும், சுண்ணாம்பு பொடியையும் கைகளில் தேய்ப்பார்கள்.

இதையெல்லாம் தாண்டியும் இந்தப் பெண்களின் கைகள் முந்திரியிலிருந்து வரும் அமிலம் பட்டுப் பட்டு தோலுரிந்து, கறுத்து, பார்க்கவே பரிதாபமாக, ஒரு தொழுநோயாளியின் கையைப் போல துயரத்தின் சின்னமாய் இருக்கும். ஒரு பெண் அண்டி ஆபீஸ் போகிறாளா என்பதை அவளுடைய கையை வைத்துத் தான் கண்டு கொள்வார்கள். இந்தப் பெண்களின் கைகள் சொல்லும் துயரக் கதைகளில் இரத்தமும், வலியும் கசிந்து கொண்டே இருக்கும்.

ஒரு கிலோ முந்திரியைத் தல்லி உடைத்துக் கொடுத்தால் ஆறு ரூபாய் ஐம்பது காசுகள் கிடைக்கும். திறமைக்கும், கைப் பழக்கத்துக்கும், லாவகத்துக்கும், வேகத்துக்கும் தல்லும் அளவு வேறுபடும். இரண்டு கிலோ முதல் ஏழெட்டு கிலோ வரை தல்லுவார்கள். முதுகு வலிக்க கவனம் சிதறாமல் தொடர்ந்து உடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் இவர்களுடைய ஒரே பணி.

பணி செய்யும் பெண்களைக் கண்காணிக்க எல்லா பிரிவுகளிலும் ஒரு ஆண் மேஸ்திரி இருப்பான். தல்லு பிரிவிலுள்ள ஆணை ‘தல்லு மேஸ்திரி’ என்பார்கள். மேஸ்திரி என்பது அவர்களைப் பொறுத்த வரை பெரிய பணி. மேற்பார்வையாளர் அவர் தான். மேஸ்திரிகள் பெரும்பாலும் கேரள இளைஞர்களாக இருப்பார்கள். அவர்கள் வேலை செய்யும் பெண்களை இளக்காரமாய் பார்த்தே பழகிப் போனவர்கள், அமர்ந்திருக்கும் பெண்களை நோட்டம் விடுவதே அவர்களுடைய முக்கியமான வேலை.

பெண்கள் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டாலோ, சற்று ஓய்வாய் இருந்தாலோ உடனே திட்டு விழும், அதுவும் அசிங்கமாக. யாரேனும் ஆசைப்பட்டு ஒரு முந்திரிப்பருப்பை வாயில் போட்டுவிட்டால் அவ்வளவு தான் வசவும், திட்டும், அவமானவும், வெளியேற்றமும் நடக்கும். தல்லி உடைக்கும் போது முந்திரிப் பருப்பு உடைந்து விடக் கூடாது, சிதைந்து விடக் கூடாது, அப்படி தவறுகள் நடக்கும் போதெல்லாம் திட்டு சரமாரியாய் விழுந்து கொண்டே இருக்கும். எனவே மேஸ்திரி என்றாலே பெண்கள் பயந்து நடுங்கி அமைதியாய் அமர்ந்திருப்பார்கள்.

இந்த மேஸ்திரிகளின் பார்வை பெரும்பாலும் பெண்களின் மேனியை வருடி அவர்களுக்கு அவஸ்தையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதுவும் வனப்பான ஒரு பெண் வந்துவிட்டால் அவ்வளவு தான். இரட்டை அர்த்த வசனங்களும், அங்கங்களை நோட்டம் விடுதலும் என அவர்களுடைய பொழுது கழியும்.c4

இங்கிருந்து சேகரிக்கப்படும் முந்திரிப் பருப்பை மீண்டும் ஒருமுறை வறுப்பார்கள். அதை போர்மை என்பார்கள். இந்த வறுப்பு எதற்கென்றால் முந்திரிப் பருப்பின் மீது இருக்கும் மெல்லிய தோல் எளிதாக கழன்று வருவதற்காக !

அந்த மெல்லிய தோலை அகற்றும் பிரிவை பீலிங் என்பார்கள். இங்கே நல்ல உடையாத பருப்பு, உடைந்தது என்றெல்லாம் தரம் பிரித்தலும் நடக்கும்.

அதன் பின் பாசிங் எனப்படும் பிரிவுக்குச் செல்லும் இந்த முந்திரிகள். அங்கே கடைசி கட்ட தரம் பிரித்தல் நடைபெறும். முந்திரியின் வெளித் தோலை தல்லும் இடத்திலிருந்து, பீலிங், பாசிங் போன்ற இடங்களுக்கு முன்னேறுதல் வேலை செய்யும் பெண்களைப் பொறுத்த வரை ஒரு பதவி உயர்வு. ஏனெனில் சில ரூபாய்கள் அதிகமாய் சம்பாதிக்க இந்த மாற்றம் உதவும். அங்கெல்லாம் மேஸ்திரிகளின் “சிறப்புக் கவனத்தைப்” பெற்ற பெண்களே இடம் பெறுவார்கள்.

அந்தப் பிரிவுகளெல்லாம் கல்லடி பிரிவை விட்டு தனியே மறைவாகவே இருக்கும். அங்கே மேஸ்திரிகள் நடந்து கொள்வது வெளியே தெரிய வராது. தல்லு பிரிவில் உள்ள பெண்களில் நம்பிக்கைக்குரியவர்களும், நீண்ட நாள் பணி புரிபவர்களும், அல்லது நல்ல வனப்பான – மேஸ்திரிகளின் காமப் பார்வையை தீப்பிடிக்க வைப்பவர்களும் இந்த பிரிவுகளுக்குச் செல்வார்கள்.

இதைத் தவிர எல்லா வேலைகளும் முடிந்தபின் முந்திரிகளை எடை போடுவது, ஆலையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்யும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள் அவர்களை மெக்காடுகள் என்பார்கள். அவர்களுக்கு ஒரு நாள் பதினைந்து ரூபாய் அதிகம் கிடைக்கும். எனவே அந்த சில மணி நேர வேலைக்காக பலரும் முனைவார்கள்.

சுமதி, கடந்த மாதம் வரை ஒரு சிட்டுக் குருவியாய் பள்ளிக்கூடத்திற்கு பறந்து திரிந்தவள். இப்போது முந்திரி ஆலைக்கு வரவேண்டிய கட்டாயம். அவளுடைய தோழி லீலா தான் அவளை முந்திரி ஆலைக்குக் கூட்டிக் கொண்டு வந்து மேஸ்திரியிடம் அறிமுகப் படுத்தி வைத்தாள்.

மேஸ்திரிக்கு சுமதியைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. வனப்பான தேகம், பள்ளி மாணவியாகவே வளர்ந்ததால் தெளிவான, அனுபவமற்ற , கள்ளம் கபடமற்ற கண்கள். இவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மேஸ்திரி உள்ளுக்குள் கருதிக் கொண்டான்.

சுமதி கல்லடி பிரிவுக்குள் தள்ளப்பட்டாள். நாட்கள் நகர்ந்தன. சுமதி தனது சுவாரஸ்யமான வாழ்க்கையை முந்திரி ஆலைக்குள் இழக்கத் துவங்கினாள். காலை முதல் இரவு வரை அமர்ந்து முந்திரி தல்லித் தல்லி அவளுடைய விரல்களெல்லாம் தோலுரிந்து பரிதாபமாய் இருந்தன.

கையில் பூசிக்கொள்ள அவளுக்கு வெள்ளை நிற மண்ணைக் கொடுத்தார்கள். அதை அவ்வப்போது கைகளில் பூசிக்கொண்டு வேலை செய்தாள் அவள். அடிக்கடி அவளுடைய கண்களில் கண்ணீர் வழியும். பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடம் படிப்பதாகவும், வீட்டுப் பாடம் செய்வதாகவும், முதல் மாணவியாக வந்ததை வயல் வரப்பினூடே ஓடிச் சென்று அம்மாவிடம் காட்டுவதாகவும் பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும்.

“என்ன சுமதி… அனுபவம் இல்ல அல்லே… ஸ்பீடு கொறவாணு… ஞான் டிரெயினிங் எடுக்கணோ ? “ பாலு மேஸ்திரியின் இரட்டை அர்த்த வசனங்கள் சுமதியின் காதுகளுக்குள் ஈயமாய் பாய்ந்தன. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

முந்திரிகளை வகை பிரிக்கும் பகுதியிலுள்ள மேஸ்திரி அவன், பால கிருஷ்ணன். பாலு மேஸ்திரி என்று தான் அவனை அழைப்பார்கள். அவனுக்கு சுமதியைப் பார்த்ததிலிருந்தே உள்ளுக்குள் ஒரு வெறி. சுமதி எதுவும் பேசவில்லை. கண்கள் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து விட்டு குனிந்து தனது வேலையைத் தொடர்ந்தாள்.

“சுமதி.. நல்ல குட்டியாணு. சுமதிக்கு எந்தெங்கிலும் ஆவஸ்யம் உண்டெங்கில் சோதிக்கணே..” பாலு மேஸ்திரி குறும்புப் பார்வையுடன் சுமதியிடம் சொன்னான். கூடியிருந்த பெண்களில் சிலர் நமுட்டுச் சிரிப்புடனும், சிலர் கவலையுடனும் சுமதியைப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியும் மேஸ்திரிகளின் பேச்சும் அதன் உள் அர்த்தமும்.

சுமதி அவமானமாய் உணர்ந்தாள். ஆனாலும் எதுவும் பேசவில்லை. அவளுடைய மனதுக்குள் எப்போதுமே அம்மா வந்து போவாள். அதன்பின் தங்கை, பின் தம்பி.. வரிசையாய் வந்து போவார்கள். தம்பியையாவது படிக்க வைக்க வேண்டும். அவன் படித்து பெரிய ஆள் ஆனபின் சினிமா கதா நாயகன் போல வந்து இந்த மேஸ்திரியைப் புரட்டி எடுக்க வேண்டும். உள்ளுக்குள் சுமதிக்கு எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

நாட்கள் ஓடின. ஒருநாள் சுமதியை தல்லு பிரிவிலிருந்து முந்திரிகளை வகை பிரிக்கும் பிரிவுக்கு மாற்றினார்கள். சுமதி அதிர்ந்தாள். இந்த மாற்றம் அவளுக்குப் பிடிக்கவில்லை. இது பாலு மேஸ்திரியின் வேலை தான் என்பது சுமதிக்கும், கூடியிருந்த பெண்களுக்குப் புரிந்தது. அவன் இவளை வளைப்பதற்காகத் தான் அங்கே இழுக்கிறான் என பெண்கள் கிசு கிசுத்தார்கள்.

சுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேசாமல் வேலையை விட்டு விடலாமா ? அப்படி விட்டு விட்டால் குடும்பம் மீண்டும் தவிக்குமா ? அவளுடைய மனதுக்குள் பாறையாய் சோகம் வந்தமர்ந்தது. வேறு வழியில்லை, தரும் வேலையைச் செய்து தான் ஆகவேண்டும்.

இன்னும் வாரக் கடைசி ஆகவில்லை. இந்த வாரம் வேலை அனுபவம் மோசமாய் இருந்தால் வாரக் கடைசியில் பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிட வேண்டியது தான். வேறு ஏதேனும் வேலை தேடலாம். டவுணில் சென்று துணிக்கடைகளிலோ எங்கேனும் ஒரு வேலை கிடைக்குமா என பார்க்கலாம். சுமதி மனதுக்குள் நினைத்தாள்.

முதல் நாள் சுமதிக்கு நன்றாகவே சென்றது. பாலு மேஸ்திரி வளைய வளைய வந்தாலும் ஏதும் தொந்தரவு தரவில்லை. அடிக்கடி ஓரக் கண்ணால் பார்ப்பதும். அருகில் நெருங்கி வந்து சில்மிஷப் பார்வை ஒன்றை வீசுவதும் என அலைந்து கொண்டிருந்தான்.

மறு நாள் அவனுடைய சுய ரூபம் தெரிய ஆரம்பித்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த சுமதியிடம் வந்து பாலு குழைந்தான். அங்கே சுமதியைத் தவிர இரண்டு பெண்களும் இருந்தார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்ப்பவர்கள்.

“எந்தா சுமதி… ஒந்நும் சம்சாரிக்காறில்லே … ?” பாலு கேட்டான். சுமதி பதில் பேசவில்லை.

“சுமதி நல்ல குட்டியாயிட்டு இருந்நால் ஞான் நின்னே வலிய ஆளாக்கும்… “ பாலு தொடர்ந்தான். அருகில் இருந்த இரண்டு பெண்களுக்கும் பாலுவின் பேச்சு புரிந்து போயிற்று எதிர்த்துப் பேச முடியாத நிலையில் அவர்கள் ஏதும் கேட்காதது போல அமைதியாய் இருந்தார்கள்.

“ஒரு திவசம் எனிக்கு நல்ல ஊணு தரணே… “ பாலு சொல்லிக் கொண்டே சுமதியின் அருகே வந்தமர்ந்து அவளுடைய கண்களை உற்றுப் பார்த்தான்.

ஒரு நாள் நல்ல சாப்பாடு போடு எனும் அர்த்தம் என்னவென்பதை சுமதியும் விளங்கிக் கொண்டாள். சட்டென அவளுக்குள் அமுங்கியிருந்த கோபம் வெளிப்பட்டது.

“போடா மயிரே…. “ சுமதியின் கோபம் வார்த்தையாய் தெறித்தது. பாலு சட்டென திடுக்கிட்டுப் பின்வாங்கினான். அவளுடைய கோபத்தைக் கண்ட அருகில் இருந்த பெண்களும் திடுக்கிட்டனர். உள்ளுக்குள் அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் என்ன நடக்குமோ என பயந்தனர்.

பாலு அவமானமாய் உணர்ந்தான். இரண்டு பெண்களுக்கு முன்னால் வைத்து தன்னை இப்படிப் பேசி விட்டாளே என கூனிக் குறுகினான். ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை.

“செரி.. செரி.. ஞான் போகாம். நீ ஜோலி செய்…” சொல்லி விட்டு வெளியே போனான் பாலு.

அவமானப் பட்ட பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஏதும் நிகழாத பாவத்தில் வேலையைத் தொடர வேண்டும் என்பது தான் அந்த முந்திரி ஆலையின் விதி. ஆனால் பாதிக்கப்பட்ட ஆண் அப்படி இருக்க மாட்டான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது மறு நாள்.

மறு நாள் மாலை.

சுமதி வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள். அப்போது பாலு வந்தான். கூடவே தலைமை மேஸ்திரி ஒருவர்.

“சேட்டா… இதாணு பெண்ணு. பயங்கர மோஷணம். திவசமும் அண்டி மோஷ்டிச்சு கொண்டு போகயா… நல்ல குட்டியல்லேந்நு இவிட ஜோலி குடுத்தா இதாணு அவளுடே பணி” பாலு சொன்னான்.

சுமதி அதிர்ந்தாள். என்னது நான் முந்திரி திருடுகிறேனா ? எத்தனை கொடூரனாய் இருக்கிறான் இவன். இப்படி பழி போடுகிறானே ! அவனுடைய காமத்துக்கு இடம் கொடுக்கவில்லையெனில் என்னைத் திருடி என்பானா ? சுமதி தளர்ந்தாள்.

பாலு அருகில் நின்றிருந்த இரண்டு பெண்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டு சுமதியைப் பார்த்தான்..

பாலுவும், தலைமை மேஸ்திரியும், சுமதியும் மட்டுமே அந்த பிரிவில் நின்றிருந்தனர்.

“நான் திருடல்ல. என்னை விடுங்க.. கள்ளம் சொல்ல மாட்டேன்” சுமதி மெலிதாய் சொன்னாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை அவளுடைய மனம் சொல்லிற்று. கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இதற்குள் வெளியே சென்ற மற்ற இரண்டு பெண்களும் விஷயத்தை மற்ற பெண்களின் காதுகளில் போட அவர்கள் ஆங்காங்கே மறைந்திருந்து இவளுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நின்னே எனிக்கு விஸ்வாசமில்ல… நின்னே ஞான் செர்ச் செய்யணும் “ பாலு சொன்னான்.

c5என்ன சோதனையா ? சுமதி உள்ளுக்குள் பயந்து போய் பின் வாங்கினாள்.

“நீ கள்ளியில்லங்கில் பின்னே பேடி எந்தினா குட்டி ? செர்ச் செய்யட்டே..” தலைமை மேஸ்திரி சொன்னான்.

“செர்ச் செய்யுங்க பிரச்சனை இல்ல. ஏதெங்கிலும் பெண்ணுங்க செர்ச் செய்யட்டு…நீங்க என்ன தொடாதீங்க….” சுமதி கெஞ்சினாள்.

பாலு எதையும் காதில் வாங்கவில்லை. அவளுடைய தோளில் இருந்த தாவணியை உருவி உதறினான்.

சுமதி அதிர்ச்சியின் உச்சத்தில் விழுந்தாள். தாவணி இல்லாத நிலையில் நிர்வாணமாய் உணர்ந்தாள். இப்படி ஒரு நிகழ்வை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. கைகள் இரண்டையும் நெஞ்சுக்குக் கவசமாய் போர்த்திக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்தாள்.

பாலு விடவில்லை. முந்திரி இருக்கிறதா என சோதனையிடும் சாக்கில் அவளுடைய மேனியில் கைகளை ஓட்டினான். சுமதி கத்தினாள். திமிறிக் கொண்டு எழுந்து கீழே கிடந்த தாவணியையும் எடுத்துப் போர்த்திக் கொண்டே ஓடினாள்.

வெளியே ஓடும் போதுதான் கவனித்தாள். பெண்கள் ஆங்காங்கே நின்று வெறுமனே வேடிக்கை பார்ப்பதை. யாரும் தனக்கு உதவாமல் தன்னை அவமானச் சின்னமாகப் பார்ப்பதை. அதைக் கண்ட சுமதியின் அழுகை இன்னும் அதிகரித்தது.

அவளைத் தொடர்ந்து வெளியே ஓடி வந்த பாலுவும் சட்டென கவனித்தான், ஆலையிலுள்ள பெண்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் மறைந்து நின்று கவனிப்பதை. சட்டென வேகம் குறைத்து உரக்கச் சொன்னான்.

“அண்டி கள்ளீ… பிடி கிட்டியதும் ஓடுந்நு… ஓடு… நினிக்கி இனி இவிடே ஜோலி இல்ல கேட்டோ.. அண்டிக் கள்ளி… “ பாலு அவளுக்கு திருடிப் பட்டம் சூட்டினான்.

ஆனால் கூடியிருந்த பெண்கள் உண்மை அறிந்தவர்கள் ஆனால் எதுவும் எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்கள். அமைதியாய் கலைந்தனர். தன்னைத் திட்டியவளைப் பழிவாங்கிய திருப்தியில் பாலு மேஸ்திரி எனும் மிருகம் உள்ளே சென்றது.

சுமதிக்கு உடல் முழுதும் மண் புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருந்தது. இப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே கூசியது அவளுக்கு.

இந்த அவமானம் இனிமேல் ஊரில் பரவி விடுமே என அவளுக்குள் திரும்பத் திரும்ப குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. என்ன செய்ய முடியும் நம்மால் ? மேஸ்திரிகளுக்கு எதிராய் பேசும் குரலும் இல்லை, பணமும் இல்லை. இந்த அவமானங்கள் தான் வாழ்க்கையா ? சுமதி அழுது கொண்டிருந்தாள்.

அம்மா இன்னும் வரவில்லை. அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை சுமதிக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன என தோன்றியது சுமதிக்கு.

பேசாமல் செத்துப் போயிடலாமா ?

“சுமதீ…. “ அம்மாவின் குரல் அந்தக் கிராமத்தையே உலுக்கி எடுத்தது.

“பொத்தி பொத்தி வளத்தேனே மோளே.. என்னை விட்டோண்டு போனியே.. எனக்கோட ஒரு வாக்கு கூட சொல்லாம போனியே மோளே… கெட்டினவன் பாதில தள்ளுனான். நீயும் இப்படி பாதில கரைய வெச்சிட்டு போனியே … நீ இல்லாத நான் என்ன செய்வேன்… கடவுளே… என் பொன்னே… உன்னை கஷ்டப்பட்டு வளத்தது இப்படி காலனுக்கு குடுக்கவா ?” அம்மாவின் குரல் ஊரையே உலுக்கியது.

“அக்கா… என் செல்ல அக்கா… ஏன்க்கா இப்படி செய்தே ? எங்களுக்கோட இருக்க பிடிக்கலியா ? ஏன்க்கா ? இப்படி செய்தே… நீ இல்லாத எங்களுக்கு விளையாட கூட ஆளில்லியேக்கா ? ” தங்கை கதறினாள்.

“ஐயோ அக்கா… எப்பவும் சிரிச்சிட்டு என்னை கொஞ்சுவியே.. இப்போ ஏன்க்கா பேசாம கிடக்குதே… “ தம்பியின் குரலும் கதறியது.

அழுகையும், ஒப்பாரியும் அந்த வீட்டை அடர்த்தியாய் ஆக்கிரமித்தபோது சுமதியின் தோள் தொட்டு உலுக்கினாள் அம்மா.

“சுமதி… ஏய் சுமதி ”

சட்டென விழித்துக் கொண்டாள் சுமதி. தான் சாகவில்லை என்பதும், சும்மா கற்பனை செய்து தான் பார்த்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ளவே சுமதிக்கு கொஞ்ச நேரம் பிடித்தது.

“அம்மா….அண்டி ஆபீஸ்ல…” சுமதியின் குரல் பிசிறடித்தது.

“லீலா எல்லாத்தையும் சொன்னா… “ அம்மாவின் குரல் இறுக்கமாய் இருந்தது. பெருமூச்சு ஒன்று ஆழமாக வெளிவந்தது.

“நீ கிறுக்குத் தனமா ஏதெங்கிலும் செய்யக் கூடாதேன்னு தான் அரக்கப் பரக்க ஓடி வந்தேன்… “ அம்மா தொடர்ந்தாள்.

சுமதி அம்மாவையே பார்த்தாள்.

“நீ.. எனக்க மோளாக்கும். நீ அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்னு நினைச்சேன். எங்கிலும் வந்து சேரோக்குள்ள கும்பி கலங்கி போச்சு. கள்ளி வெட்டி சாரியோண்டு போன பயலுவ எப்பிடியெங்கிலும் நம்மள கொல்ல பாப்பினும். சாவருது மோளே.. சாவருது. நான் பட்ட கஷ்டம் உனக்கு அறிஞ்சு கூடாம். என்ன விட்டோண்டு உனக்க அப்பன் ஓடும்போ நீங்க கொஞ்சு பிள்ளிய. உங்களை வளத்தோக்கு நான் பட்ட கஷ்டமும் மானக் கேடும் கொறச்சொண்ணும் இல்லா… ஆனா நான் சாவல்ல…. சாவருது மக்களே சாவருது. நாம என்ன சாவோக்கு பொறந்தவியளா ? வாளணும். எல்லா பயலுவளுக்கும் மின்னே நாம நிமிந்து வாளணும்” அம்மா இறுக்கம் கலைக்காமல் சொன்னாள்.

“அம்மா… எல்லாரும் பாத்தோண்டு நிந்நினும். அந்த தொட்டி பய … எனக்கு பயங்கர மானக்கேடா இருந்து… “ சுமதி அழ ஆரம்பித்தாள்.

“நீ எதுக்கு மோளே கரையுதே ? ஒரு வாயில மண்ணு விளுந்தோண்டு போன மேஸ்திரி உன்னை கள்ளீன்னு சொன்னா நீ கள்ளியாவியா ? செல்லு மோளே. நமக்க ஜீவிதம் இப்பிடி தான். இனி நம்ம கொச்சு பய தலையெடுத்து வரணும். அதுவர நம்மளை இவனுவ எல்லாம் நல்லா மானங் கெடுத்த பாப்பினும். ஒந்நுக்கும் பேடிச்சரு. பேடிச்சல்லங்கி பேய் கூட அடிச்சாது. பின்னயாக்கும் இந்த கிறுக்கு பயலுவ” அம்மா சொல்லச் சொல்ல சுமதியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம் விழ ஆரம்பித்தது.

அம்மா அழவில்லை. நடந்திருப்பதை ஒரு அவமானமாய் உணரவில்லை. அம்மா வாழ்க்கையில் அடிபட்டிருக்கிறார்கள். கணவனால், சமூகத்தால், உறவினர்களால். தானும் அம்மாவுக்கு ஒரு சோகத்தைக் கொடுக்க நினைத்தேனே என நினைக்கும் போதே சுமதிக்கு அழுகை வந்தது. அம்மா வாழ்க்கையில் எத்தனை பெரிய துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்பதையும், அதன் வலியின் ஆழம் எவ்வளவு என்பதையும் இப்போது சுமதியால் தெளிவாக உணர முடிந்தது. அம்மாவின் உறுதி இவளுடைய சோகங்களையெல்லாம் துடைத்தெறிந்தது போல் தோன்றியது. அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மொகங் களுவியோண்டு வா… சோறு தின்னுலாம்.” அம்மா சுமதியின் தோள் தொட்டு எழுப்பினாள்.

“அம்மா.. இனி நான் அந்த அண்டி ஆபீசுக்கு போவ மாட்டேன்” சுமதி சொன்னாள்.

“நீ அங்க போகண்டாம் மோளே. ஒரு கதவு மூடினா ஒம்பது கதவு தொறக்கும். பேடிச்சாத. எல்லாத்துக்கும் வழி உண்டாவும். யாரும் நம்மள விழுங்க மாட்டினும்.” அம்மா சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

சுமதியின் மன பாரம் குறைந்தது போலிருந்தது. எத்தனையோ துயரங்களையும், அவமானங்களையும், கொடுமைகளையும் அந்தப் பகுதியிலுள்ள ஏழைப் பெண்களின் மேல் மூட்டை மூட்டையாய் சுமத்தும் முந்திரி ஆலைகள் எது குறித்த கவலையும் இன்றி இருளுக்குள் மூழ்கத் துவங்கின.

0

தமிழிஷில் வாக்களிக்க…

19 comments on “சிறுகதை : அண்டி ஆபீஸ்

  1. /பெண்களுக்கு இன்னமும் இச்சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கவலையளிக்கவே செய்கிறது.//

    உண்மை .. உழவன்.. 🙂

    Like

  2. பெண்களுக்கு இன்னமும் இச்சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கவலையளிக்கவே செய்கிறது.

    Like

  3. //இயல்பு நடைக் கதை. கொஞ்சம் நீட்டித்ததை சுறுக்கமாகச் சொல்லியிருக்கலாமோ ? என்பது என் எண்ணம்//

    உண்மை தான் 🙂 பொறுமையாய் படித்தமைக்கு நன்றிகள் பல 🙂

    Like

  4. /Nice one sir, the way to explained about the work of andi office is excellent//

    நன்றி முரளி. ஆமாம். முழுக்க முழுக்க உணர்ந்து எழுதியது தான் 🙂

    Like

  5. சேவியர்,
    பல நாட்களாக நீங்கள் எழுதிய பதிவு எதுவும் வரவில்லையே என்று நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் நட்சத்திர பதிவராகியதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். அண்டி ஆபீஸ் நம்ம ஊரில் அதிகமாக புழங்கும் வார்த்தை 🙂

    Like

  6. Nice one sir, the way to explained about the work of andi office is excellent. I thought ur native is from that side…..

    Like

  7. Hi,
    I am from KK Dist only but mostly brought up in Nagercoil town, so I was not much aware of the andi factories.

    The flow of the story was very nice. congrats and keep the good work.

    Like

  8. இயல்பு நடைக் கதை. கொஞ்சம் நீட்டித்ததை சுறுக்கமாகச் சொல்லியிருக்கலாமோ ? என்பது என் எண்ணம்.

    Like

  9. இந்த சிறுகதைக்கு ஒரு விமர்சனமேனும் வரவேண்டுமே என நினைத்துக் கொண்டிருந்தேன். “ஐரேணிபுரத்திலிருந்து” வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் அந்த சூழலை அறிந்தவர் என்பதால் பாராட்டு அதிக நிறைவளிக்கிறது. நன்றி நண்பரே 🙂

    Like

  10. குமரிமாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்று அண்டி ஆபீஸ்.அங்கு வேலை செய்யும் பெண்களின் சோகங்களை, பாலியல் பலாத்காரங்களை, கொடுமைகளை இத்தனை அழகாக, விரிவாக சிறுகதைக்குள் கொண்டுவந்து இதயங்களை தொட வைத்திருக்கிறது அண்டி ஆபீஸ் சிறுகதை. பெண்ணினத்தின் மீது ஆணினத்தின் அடக்குமுறைகள் கதை முழுக்க அடர்ந்திருந்தன. மண்சார்ந்து மனதைத்தொட்ட சற்றே நீளமான கதை. பாராட்டுக்கள்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.