ரோபோவுடன் ……..!

 

 Robo6 

 உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.

டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.

ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.

வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.

போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை ! தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் !

இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.

ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.

நன்றி : ஆனந்த விகடன்

6 comments on “ரோபோவுடன் ……..!

  1. Pingback: ரோபோவுடன் செக்ஸ் ! « SEASONSNIDUR

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.