கவிதை : மருதாணிக் கனவுகள்

old

அத்தனை குதிரைகளும்
விடுப்பில் இருந்தாலும்
காலத் தேர்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.

என் வீட்டின்
மெழுகிய திண்ணை
சிமின்ட் பூசப்பட்டு,
இப்போது
கம்பி வேலைப்பாடுகளுக்குள்
கைதியாய்,

பின்பக்கம் இருந்த
சாம்பல் கூடும்,
சருகுக் குழியும்
ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய்,

ஓட்டை வெறித்துப் பார்க்கும்
என்
படுக்கையறைக் கட்டில்
இப்போது
பாதி வழியில்
காங்கிரீட் தட்டினால்
தடுத்து நிறுத்தப்படுகிறது,

அந்த
நடு அறையின்
பலகை அலமாரி தந்த
வேப்பெண்ணை வாசம்
இப்போதெல்லாம் வீசவில்லை

விட்டில்கள்
தட்டி விளையாடும்
புட்டிகள்,

கைபொத்திக் காப்பாற்றும்
மண்ணெண்ணை விளக்கு,

படுக்கையாய்
அப்பா உபயோகித்த
மரப் பத்தாயம்,
எதுவும் இந்த
மெத்தை உலகில் மீதமில்லை.

எல்லாம்
மாறினாலும்,
இப்போதும் மாறாமல்
அப்படியே இருக்கிறது.

புகைப்படத்தில் சிரிக்கும்
தாத்தாவின்
வெற்றிலைப் புன்னகை.

தமிழிஷில் வாக்களிக்க…

10 comments on “கவிதை : மருதாணிக் கனவுகள்

  1. மரப்பத்தாயத்துக்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி சேவியர்… புதிதாக ஒன்றைத் இன்று தெரிந்து கொண்டேன்…

    மீண்டும் கவிதை தொடரட்டும்… வாழ்த்துகள்!

    Like

  2. மிக்க நன்றி ஷாமா. “மரப்பத்தாயம்” என்பது நெல்லைப் போட்டு பூட்டி வைக்கப் பயன்படும் மெகா சைஸ் மரப்பெட்டி.

    Like

  3. //எல்லாம் மாறினாலும்,
    இப்போதும் மாறாமல்
    அப்படியே இருக்கிறது.
    புகைப்படத்தில் சிரிக்கும்
    தாத்தாவின் வெற்றிலைப் புன்னகை.//

    மாறும் உலகில் மாறாதிருப்பது
    அந்தநாள் நினைவுகள் மட்டும் தான்!
    புகைப்படத்தில் தாத்தாவின் புன்னகையைப் போல!…
    அழகிய கவிதை…
    ஓவியமும் அழகு…
    அவரது முகச் சுருக்கங்களில்
    பதுங்கிக் கிடக்கின்றன வாழ்வின் அநுபவங்கள்!

    ஒரு சிறு சந்தேகம் கேட்கலாமா?….
    “மரப் பத்தாயம்” என்றால் என்ன சேவியர்?… நன்றி!

    Like

  4. //எல்லாவற்றையும் சொல்லிவிட்டு எங்கே மரப்பத்தாயத்தை விட்டுவிடுவீர்களோ என்று பயந்துகொண்டே படித்தேன். நீங்களாவது விடுவதாவது, கிராமத்து வீட்டிற்க்குள் பின்னோக்கி இழுக்கிறது இந்த கவிதை வரிகள்.பல்லாங்குழி ஆடிய இடங்கள்,தள்ளும் பிள்ளும், ஓணப்பந்து விளையாடிய இடங்கள் தேடிப்பார்த்தால் கட்டிடங்களாய் எழும்பி நிற்கிறது.//

    😀 உங்கள் வார்த்தைகள் என்னையும் பின்னோக்கி இழுக்குது !

    Like

  5. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு எங்கே மரப்பத்தாயத்தை விட்டுவிடுவீர்களோ என்று பயந்துகொண்டே படித்தேன். நீங்களாவது விடுவதாவது, கிராமத்து வீட்டிற்க்குள் பின்னோக்கி இழுக்கிறது இந்த கவிதை வரிகள்.பல்லாங்குழி ஆடிய இடங்கள்,தள்ளும் பிள்ளும், ஓணப்பந்து விளையாடிய இடங்கள் தேடிப்பார்த்தால் கட்டிடங்களாய் எழும்பி நிற்கிறது.

    Like

  6. //ஏன், கேட்கிறேன் என்றால், இங்கே நீங்கள் கையாண்ட மையக்கருத்து மிகப் பழைமையானது//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள். உண்மை தான் இந்தக் கவிதை பல வருடங்களுக்கு முன் வெளிவந்த எனது “மனவிளிம்புகள்” நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது.

    Like

  7. கவித்துவம் எழுதிய வரிகளில் உள்ளது உணர்வாகிறது. உங்களுக்கு கவிதை வருகிறது – என்பது தெரிந்த்ததுதான் என்றாலும், எனக்கு இதுவே முதல்முறையாக உங்கள் கவிதையைப் படி்ப்பதால் நேரடியாக தெரிகிறது.

    கவிதை எழுத்துகள் மட்டும் ஒரு கவிதையின் சிறப்பை நல்குமா?

    ஏன், கேட்கிறேன் என்றால், இங்கே நீங்கள் கையாண்ட மையக்கருத்து மிகப் பழைமையானது.

    அதில் தவறொன்றுமில்லை. ஆனால், அதைப்புதுமையாக சொல்ல்வேண்டும். இல்லையென்றால், எதற்கு படிக்கவேண்டும்?

    எனக்கொன்றும் நீஙக்ள் சொன்னவிதம் புதுமையாகயில்லை.

    வீட்டில் உள்ள பொருட்கள் கால்மாற்றங்களில் உருக்குலைந்து செல்லாதவவையாகிவிட்டன. ஆனால், ஒரு கிழவனின் சிரிப்பு மாறவில்லை.

    மனிதனின் அடிப்படையுணர்வுகள் மாறுவதில்லை என்பது உங்கள் கருத்து.

    இதை இன்னும் சிறப்பாக சொல்லும் கவிதை படிக்கச்சுவைதரும்.

    அது நிற்க.

    சிறப்பாக சொற்சுவையுடன் எழுதத்தெரிந்த நீங்கள், அத்திறமையை வைத்து, ஆழமான கருத்துகளை கவிதைகளில் சொல்லுங்கள்.

    இல்லையெனின், you will always remain a juvenile poet, or a budding poet who wants to show off his skill with words!

    Like

  8. //அத்தனை குதிரைகளும்
    விடுப்பில் இருந்தாலும்
    காலத் தேர்
    ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.//

    சூப்பர் தலைவா!
    அருமையான வரிகள்..

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.