கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

 rock

மலைகளே…
பூமிப் பந்தின்
கர்வக் கிரீடங்களே,

மலைகளே,
மலைப்பின்
மறு பெயர்களே.

உங்கள்
தலை துடைக்க
மென்மையின் மேன்மையான
மேகத் துகள்.

உங்கள் உள்ளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
ஓராயிரம்
ஒய்யாரச் சிற்பங்கள்.

காற்றுக்கும் கதிரவனுக்கும்
கலங்காத
கருங்கல்  இதயம்
உனக்கு.,

உன்னை
எப்படிப் புகழ்வது ?

நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்
வீரத்துக்கா,
சில செடிகளுக்கு
வேர் விட வழி விடும்
ஈரத்துக்கா ?

உன் மர்மப் பிரதேச
மரக்கிளைகளில்
தான்
உண்மைச் சங்கீதம்
உறங்கியே கிடக்கிறது.

சங்கீதத்தை
இரைச்சல்களிலிருந்து
இழுத்தெடுத்து
இதயம் வலிக்கும் போதெல்லாம்
மௌனத்துள் கரைந்து
இசைக்கச் சொன்னது
உன் மௌனம் தான்.

நாடுகளுக்கும்
காடுகளுக்கும்
நீ
வேலியாய் விளைந்தவன்.

சிங்கங்களின் சோர்வகற்ற
உன்னைப் போல உறுதியான
குகைகள்
குடைந்தவன்.

சில நேரம்
பரவசங்களின் பதுங்கு குழி
உயரமான உன்
முதுகு தான்.

நாங்கள்
உன்னைப் பார்த்து
ஆச்சரிய மூச்சு விடும்போது
நீ
பள்ளங்களைப் பார்த்து
பெருமூச்சு விடுகிறாயா ?
தெரியவில்லை.

ஆயிரம் தான் சொல்,
கல்லாய் நடக்கும்
மனிதர்களை விட,
கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே.

12 comments on “கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

  1. //உங்கள் தலை துடைக்க
    மென்மையின் மேன்மையான மேகத் துகள்.//

    உங்கள் கவிதை ம(லை)ழை அழகோ அழகு!…. கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது… அழகாய் நனைகிறேன்!!… எல்லா வரிகளுமே அழகு!!
    சிறுவயதில் இயற்கைக் காட்சி வரையச் சொன்னால், அங்கே மலைக் காட்ச்சிக்கு முக்கிய இடம் இருக்கும் என்னுடைய drawings-இல்….
    மணிக்கணக்கில் இயற்கையை ரசிப்பதுண்டு… மலையும் அதில் ஒ(ருவர்)ன்று!….

    //ஆயிரம் தான் சொல்,
    கல்லாய் நடக்கும் மனிதர்களை விட,
    கல்லாய் கிடக்கும் கல் மேன்மையானதே.//

    வாவ்…. இது தான் கவிதையின் High light!… உண்மையான வரிகள்!!!…….
    கவிதை ம(லை)ழையில் நனைய வைத்தமைக்காக நன்றி சேவியர்!

    Like

  2. //பஸ்சிலோ, ரயில்வண்டியிலோ என்னை கடந்து போகும் மலைகளைப்பார்த்து மயங்கியதுண்டு. அதன்பிறகு மலைகள் பற்றிய இந்த கவிதை வரிகளைக்கண்டு
    வியந்திருக்கிறேன். எல்லா வரிகளும் சிறப்பாக இருக்கும்பொழுது எந்த வரிகளை அடிக்குறியிடுவது, பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே,மலைப்பின்
    மறு பெயர்களே, இப்படி போய்க்கொண்டே இருக்கலாம். பாராட்டுக்கள்//

    மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙂

    Like

  3. //உயரத்தில்தான்.உங்கள் கவிதைகளும் மலைகள் போலத்தான்.மாலைகள் குவியட்டும்.//

    நன்றி ஹேமா 🙂

    Like

  4. அண்ணா எந்த வரிகளைப் புகழ்ந்து எந்த வரிகளை இகழ முடிகிறது.அத்தனையும் மலைகள் போலவே உயரத்தில்தான்.உங்கள் கவிதைகளும் மலைகள் போலத்தான்.மாலைகள் குவியட்டும்.

    Like

  5. பஸ்சிலோ, ரயில்வண்டியிலோ என்னை கடந்து போகும் மலைகளைப்பார்த்து மயங்கியதுண்டு. அதன்பிறகு மலைகள் பற்றிய இந்த கவிதை வரிகளைக்கண்டு
    வியந்திருக்கிறேன். எல்லா வரிகளும் சிறப்பாக இருக்கும்பொழுது எந்த வரிகளை அடிக்குறியிடுவது, பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே,மலைப்பின்
    மறு பெயர்களே, இப்படி போய்க்கொண்டே இருக்கலாம். பாராட்டுக்கள்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.