கவிதை : மாறாதவைகள்…

 

எடைகள் எப்போதும்
நியாயமாய் இருந்ததில்லை
எனினும்
‘நியாய விலைக் கடை’கள்
பெயர் மாற்றிக் கொள்ளவில்லை.

பாதி அளவுக்கே இருக்கிறது
நீதி,
ஆனாலும் நீதிபதிகள்
நீதிபாதிகள்
என அழைக்கப்படவில்லை.

ஜனங்களை விட அதிகமாய்
இருக்கைகளைப் பற்றியே
இருக்கின்றன அரசுகள்,
ஆனாலும்
சாசனங்கள் பெயர்மாறி
ஆசனங்கள் ஆகவில்லை.

பிடுங்கல்களைக் கூட
‘தட்சணை’கள் என்றே
வரன் வீட்டுச்
சவரன்கள் வாயாரச் சொல்கின்றன.

என்ன சொல்வது ?
மரணத்தைக் கூட
மறுவீட்டுப் பிரவேசம் என்று
அன்போடழைத்தே
பழக்கப் பட்டவர்கள் நாம்.

பெயர்களில் என்ன இருக்கிறது
வேர்களில்
வித்யாசம் இல்லா ஊர்களில் ?

12 comments on “கவிதை : மாறாதவைகள்…

  1. //எத் தருணத்திலும் எம்மை நாமே
    சமாதானப்படுத்திக் கொள்ளும் இயலாமை”யும் ஒன்று!
    இயலாமை களையப்பட்டால்…(?)… பேதங்கள் தலைதூக்க வாய்ப்பில்லை//

    சூப்பர் ஷாமா.. நன்றி 🙂

    Like

  2. கவிதை: 2020ல் தமிழக அரசு

    ஆம்… அதையும்தான்…
    அரசாங்கமே நடத்துகிறது…
    நம்ப முடியவில்லையா…

    ஊரெங்கும் மளிகைக் கடைகளை
    அரசாங்கமே நடத்துகிறது,
    ரேஷன் கடைகள் என்கிறீர்கள்

    சாராயம் கூட அரசே விற்கிறது
    டாஸ்மாக் என்று
    பெயரிட்டு அழைக்கிறீர்கள்

    மட சனங்களே,
    இதை மட்டும் ஏன்
    நம்ப மறுத்துத்
    தொலைக்கிறீர்கள்!

    சொல்ல மறந்துவிட்டேன்,
    கோபுரச் சின்ன முத்திரையுள்ள
    அனுமதிச் சீட்டுடன்
    ஆணுறையும் கொடுத்தனுப்புகிறது

    [இடைத்தேர்தல்கள் வரும்போது கோபுர முத்திரையுள்ள அனுமதிச் சீட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்படுமா படாதா என்பது விரைவில் அறிவிக்கப்படும்.]

    Like

  3. //பெயர்களில் என்ன இருக்கிறது
    வேர்களில் வித்யாசம் இல்லா ஊர்களில் ?//

    ஆழமிக்க கூற்று, சேவியர்!!…..

    மாறும் உலகில் மாறாதிருப்பவைகளில்,
    “எத் தருணத்திலும் எம்மை நாமே
    சமாதானப்படுத்திக் கொள்ளும் இயலாமை”யும் ஒன்று!
    இயலாமை களையப்பட்டால்…(?)… பேதங்கள் தலைதூக்க வாய்ப்பில்லை!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.