( வெற்றிமணி – ஜெர்மனி, இதழில் வெளியான கட்டுரை )
அலுவலக காண்டீனில்
சந்தித்துக் கொள்கிறோம்,
தளும்பத் தளும்ப
தேனீர் நிறைத்து
ஒரே மேஜையில் வந்தமர்கிறோம்.
உன்
செல்போனும்,
என்
செல்போனும் கிணுகிணுக்கின்றன.
தொலைபேசியில் யாருடனோ
பேசிப் பேசி
தேனீரை முடித்துவிட்டு
விடைபெற்றுக் கொள்கிறோம்.
இன்னும்
நீடிக்கிறது நம் நட்பு
ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு நிலமை இன்னும் மோசம் என்பதே உறைக்கும் உண்மையாகும்.
கையில் ஆறாவது விரலைப் போல தான் இன்றைக்கு செல்போன் எல்லோரிடமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. செல்போனை ஒருவேளை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தால் பார்க்க வேண்டுமே. ஏதோ வாழ்க்கையையே தொலைத்து விட்டதைப் போலப் பதட்டப் படுவார்கள். சட்டென தனிமைத் தீவிலே மாட்டிக் கொண்டது போல பதறித் தவிப்பார்கள்.
செல்போன் வந்த காலத்தில் அது ஒரு அந்தஸ்தின் அடையாளம். இன்றைக்கு அது உணவு, உடை, உறைவிடம், செல்போன் என முதன்மைப் பட்டியலுக்கு முன்னேறி விட்டது. இழப்பது எதுவென்றே தெரியாமல் இந்த செல்போன் எனும் சுருக்குக் கயிறுக்குள் நாம் விரும்பியே சுருக்குப் போட்டுக் கொண்டோம் என்பது தான் வேதனையான விஷயம். காரணம் இப்போது மொபைல் என்பது பேசுவதற்கானது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. அது இணையத்தை தன்னுள் இறுக்கி ஒரு குட்டிக் கணினியாய் தான் எல்லோரிடமும் இருக்கிறது.
இன்றைக்கு எந்த ஒரு நண்பருடனாவது நேரில் ஒரு மணிநேரம் தொடர்ந்து உரையாட முடியுமா ? நினைத்துப் பாருங்கள். அந்தப் பேச்சுக்கு இடையில் நான்கு எஸ்.எம்.எஸ் கள் வந்து கவனத்தைச் சிதைக்கும். அல்லது ஒரு ரெண்டு போன்கால் வரும். அல்லது ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என ஏதோ ஒரு ஆப்ளிகேஷன் “ட்வைங்” என மண்டையில் மணியடிக்கும். அல்லது சும்மாவாச்சும் மொபைலில் விரல்கள் எதையோ நோண்டிக்கொண்டிருக்கும். சரிதானே ? இப்போ சொல்லுங்கள். கடைசியாய் எப்போது மொபைலின் தொந்தரவோ, நினைப்போ இல்லாமல் நண்பருடன் சில மணி நேரங்களைச் சுவாரஸ்யமாய்ச் செலவிட்டீர்கள் ?
இது ஒரு சின்ன டெஸ்ட் தான். ஆனால் நாம் இழப்பது எது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது இல்லையா ? தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, தினமும் ஊரில் இருக்கும் அம்மாவிடம் பேசலாம், வீட்டில் நினைத்த நேரத்தில் குழந்தைகளுடன் ஸ்கைப்பலாம் எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவை ஒரு வகையில் தூரங்களால் பிரிந்தவர்களை இணைக்கிறது. ஆனால் அருகிலேயே இருப்பவர்களை விலக்கியும் வைக்கிறது இல்லையா ?
எப்போது உங்கள் எதிர் தெரு நபரை நேரில் சென்று பார்த்துப் பேசினீர்கள் ? எப்போது உங்கள் உறவினர் ஒருவரை நேரில் போய் பார்த்து “சும்மா பாக்கலாம்ன்னு வந்தேன்” என்றீர்கள் ? கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ நேரில் சென்று சந்தித்தீர்கள் ? நேரிலேயே பார்த்தால் கூட “ஹே… ஐ வில் கால் யூ” என்று சொல்லி விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் தானே அதிகம் ? இல்லையா ?
ரயில் ஸ்னேகம் எனும் வார்த்தையே இன்றைக்கு அன்னியமாகிவிட்டதா இல்லையா ? தொலை தூர ரயில் பயணம் என்றால் முன்பெல்லாம் பயணம் முடியும் போது நான்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு தொடரவும் செய்யும். அல்லது பயணங்கள் குடும்பத்தினர் சந்தோஷமாய் பேசி மகிழ ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கும். இப்போது நிலமை என்ன ? மகன் ஒரு புறம் போனில் ஃபேஸ்புக்கில் இருப்பான், மகள் இன்னொரு புறம் எஸ்.எம்.எஸ் ல் சிரிப்பாள், சின்னப் பிள்ளைகள் கேம்ஸ் ல் இருப்பார்கள். அவ்வளவு தான். நள்ளிரவு வரை மொபைலை நோண்டிவிட்டு தூங்கிப் போவார்கள். இணைந்தே இருக்கிறோம், ஆனால் தனித் தனியாக இல்லையா !?
இதனால் குடும்ப உறவுகள் பலவீனப்பட்டிருக்கின்றன என்பதையே ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 33% மொபைல் பயன்பாட்டாளர்கள் ‘தாம்பத்ய’ உறவை விட அதிகமாய் மொபைலை நேசிக்கிறார்களாம். தென்கொரிய அரசு சமீபத்தில் மாணவர்களிடம் எழுந்துள்ள செல்போன் அடிமைத்தனத்தைக் குறித்துக் கவலைப்பட்டதும், அதற்கான தீர்வுகளை நோக்கி திட்டமிடுவதும் இது ஒரு சர்வதேச பிரச்சினை என்பதைப் புரிய வைக்கிறது.
உடல் ஆரோக்கியத்தைக் கூட இது பாதிக்கிறது. கண்ணுக்கு அதிக அழுத்தம். மனதுக்கு அதிக வேலை. தூக்கம் நிச்சயமாய் குறைகிறது. காரணம் தொடர்ந்து மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் எனும் வேதியல் பொருள் உடலில் வெகுவாகக் குறைத்து தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தும் ! தூக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், வேலையில் சோர்வு, விபத்துகள் என பட்டர்ஃப்ளை தியரி போல விளைவுகள் தொடர்கதையாகும்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 95% மக்கள் தூங்குவதற்கு முன் மொபைலில் இணையத்தில் சுற்றுவதையோ, சமூக வலைத்தளங்கள் மேய்வதையோ, மெசேஜ் அனுப்புவதையோ வழக்கமாகக் கொண்டிருப்பதாய் தெரியவந்தது. 90 சதவீதம் இளசுகள் மொபைலை படுக்கையிலேயே வைத்திருக்கிறார்களாம். ஒரு செல்ல பொம்மை போல !
மொபைலை அதிகம் பயன்படுத்தும் இளசுகளுக்கு செல்போன் அடிக்ஷன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதென்ன மொபைல் அடிக்ஷன். நைட்ல எப்போ எழும்பினாலும் உடனே மொபைலை செக் பண்ணுவது, கொஞ்ச நேரம் மெசேஜ், அழைப்புகள் எதுவும் வராவிட்டால் போனில் ஏதாச்சும் பிரச்சினையோ என நினைப்பது, போன் கையில் இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல பரிதவிப்பது, செல்போன் கனெக்ஷன் போனால் பதறித் தவிப்பது, குடும்ப உறவுகளுடன் ஆனந்தமாய் இருக்கும் போது கூட செல்போனை நோண்டுவது, வண்டி ஓட்டும்போது கூட மெசேஜ் அனுப்புவது இப்படிப்பட்ட விஷயங்கள் உங்களிடம் இருந்தால் கொஞ்சம் உஷாராகி விடுங்கள் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
சமீபத்தில் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஒரு மிகப்பெரிய விஷயத்தை நமக்குப் புரிய வைக்கிறது. இதுவரை மனித வாழ்க்கையின் மையமாக அம்மாவோ, அப்பாவோ அல்லது ஏதோ ஒரு உறவோ தான் இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தை மொபைல் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது என அது அச்சுறுத்துகிறது. ஒரு புற்று நோய் போல அதன் பாதிப்புகள் குடும்ப உறவுகளை அசைக்கத் துவங்கியிருக்கின்றன.
கடிதத்தைக் கைப்பட எழுதும் பழக்கம் எப்படி காலாவதியாகி, அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டதோ, அதே போல நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் பார்த்துப் பேசும் விஷயம் கூட மருகி மருகி ஏறக்குறைய இல்லாத நிலைக்குச் சென்று விடும் அபாயம் உண்டு. அதை விட்டு தப்பிக்க வேண்டுமெனில் செல்போனை மிக மிகத் தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது, செல்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை அழிப்பது, மற்றவர்களுடன் நேரடியாகப் பேசும்போது செல்போனை அணைத்தோ, சைலன்ட்லோ வைப்பது என பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானதும், வலிமையானதும் பிறருடன் கொள்ளும் நேரடியான உறவே என்பதை மீண்டும் ஒரு முறை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். அம்மாவின் கைகளை வருடி விடும் அன்னியோன்யத்தையும், உணர்வு பூர்வமான அன்பையும் ஆயிரம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் தந்து விட முடியாது என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
கருவிகளை அடிமையாய் வைத்திருப்போம், கருவிகளுக்கு அடிமையாய் அல்ல !.
ஃ
சேவியர்
நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி.
உண்மைகள்…
முடிவில் உள்ள பத்தி அனைவரும் ‘உணர’ வேண்டும்…
வாழ்த்துக்கள்…
LikeLike